சனி, 23 மே, 2026

பொம்மலாட்டக் கலைஞர், கலைமாமணி மு. கலைவாணன் மறைவு!

 

கலைமாமணி மு. கலைவாணன்  

    புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் . மா. முத்துக்கூத்தன் அவர்களின் மகனும் மிகச் சிறந்த பொம்மலாட்டக் கலைஞருமான கலைமாமணி மு. கலைவாணன் அவர்கள் 22. 05. 2026 இரவு 11 மணியளவில் சென்னையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயர் உற்றேன். சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருந்துகளை உட்கொண்டு வந்தவர். எனினும் தாம் கற்ற பொம்மலாட்டக் கலையை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பொம்மலாட்டப் பயிலரங்கம் நடத்திக்கொண்டிருந்தபோது மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, இயற்கை எய்தியுள்ளார். 

    மு. கலைவாணன் அவர்கள் கலைமாமணி . மா. முத்துக்கூத்தன், மு. மரகதம் ஆகியோரின் அருமைப் புதல்வராக 20.11.1957 இல் பிறந்தவர். "கலைவாணர்" என் எசு.கிருட்டினன் அவர்களின்மேல்கொண்ட மதிப்பின் காரணமாகத்  தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார் தந்தையார் முத்துக்கூத்தனார்

     மு. கலைவாணன் கோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர். இளமை முதல் தந்தையாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். மு.கலைவாணன் - தமயந்தி திருமணம் 10.10.1982 இல் நடைபெற்றது. இவர்களுக்கு முத்தரசன், பகலவன் என்ற இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்

     மு. கலைவாணன் இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பொம்மலாட்டக் கலை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். அத்தனை நிகழ்வுகளிலும் பகுத்தறிவுக் கருத்துகளும், சுற்றுச்சூழல் சிந்தனைகளும், தமிழ் மரபு போற்றும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும். பொம்மலாட்டத்தில் வழக்கமாக இடம்பெறும் புராணக் கருத்துகளை இவர் பின்பற்றாமல் மக்களும் மாணவர்களும் அறிவுத்தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கில் தம் பொம்மலாட்ட நிகழ்வை நடத்துவது சிறப்பிற்குரிய ஒன்றாகும்

     சென்னை பொதிகை தொலைக்காட்சிக்காக இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், "கலை மாமா" என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சியில் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், வசந்து தொலைக்காட்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். ஆசிரியர்களுக்கு இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், குழந்தைகளுக்கு இதுவரை அறுநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், பெற்றோருக்கான பயிற்சி வகுப்புகள் 54 ஐயும் நிகழ்த்தியுள்ளார். மூன்று திரைப்படங்களிலும், இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சப்பான் முதலிய நாடுகளிலும் தம் கலைப்பணியைச் செய்தவர். 

அறிவாளுமை மிக்க கலைமாமணி மு. கலைவாணனை இழந்து, தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

குறிப்பு: 

கலைமாமணி மு. கலைவாணனின் பணிகளை மேலும் அறிய என் பழைய பதிவைப் படிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக