பூம்புகாரில் வாழ்ந்த பெரும்புலவர் நா. தியாகராசனார் அவர்களைப் பலவாண்டுகளுக்கு முன்னர் யான் சந்தித்து, உரையாடிய இனிய பொழுதுகளைத் தம் ஊரினருக்கும் உறவினருக்கும் பகிர்ந்துகொள்வதைப் புலவர் அவர்கள் வழக்கமாக வைத்திருந்தார். என்னை அவர்தம் மகன்மாருள் ஒருவராக நினைத்து, அன்புகாட்டியதைக் கண்ணீருடன் ஈண்டு நினைத்துப் பார்க்கின்றேன். ப. சுந்தரேசனார் ஆவணப்படம் உருவாக்கம், சிலப்பதிகார ஆராய்ச்சி, பூம்புகார் காணொலிகளுக்காக அவரைப் பூம்புகார் இல்லத்தில் பலமுறை சந்தித்து மகிழ்ந்தமை நினைவில் நிற்கின்றன. பேச்சுவாக்கில் புலவர் அவர்கள் தம் உறவினரான முனைவர் கி. பாண்டியன் ஐயாவிடம் என் முயற்சிகளை அறிமுகம் செய்துள்ளார்கள். இணையத்தில் அறிஞர்களின் வாழ்வியலைப் பதிவுசெய்துள்ள என் பணிகளைக் கண்ணுற்ற கி. பாண்டியன் கச்சிராயர் அவர்கள் தொலைபேசியில் ஒரு நாள் பேசி அறிமுகம் ஆனார்கள்.
தாம் தமிழாசிரியராகப் பணியாற்றிவிட்டு, துறையூர் ஓங்காரக் குடிலில் மக்கள் தொண்டாற்றிவிட்டு, தற்பொழுது துறையூரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் பொழுதைச் செலவிட்டு வருவதாகவும் உரைத்ததுடன், இதுவரை இணையத்தில் நான் பதிந்துள்ள காணொலி முயற்சிகள் அனைத்தையும் கண்டுகளித்து, வாயாரப் புகழ்ந்து, நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.
தங்கள் பெயரை அடுத்துக் கச்சிராயர் என்று பெயரின் பின்னொட்டு உள்ளமைக்கான விளக்கத்தை ஐயாவிடம் கேட்டேன். காஞ்சிபுரம் அருகில் வாழ்ந்த சிற்றரசர்கள் கச்சிராயர்கள் எனப்பட்டனர் என்ற விளக்கத்தைப் புலவர் அவர்கள் குறிப்பிட்டார்கள். கச்சிராயர் என்ற பின்னொட்டின் விவரத்தை நான் விரும்பிக் கேட்டதற்குக் காரணம் என் தாய்மாமன் உறவுடையவர்கள் கச்சிராயர்கள் என்ற பட்டப்பெயர் தாங்கியவர்கள். இவர்கள் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அருகில் உள்ள பெரியநற்குணம் ஊரினர். எங்கள் உறவினர்களின் பெயர்ப் பின்னொட்டுகள் சேதுவராயர், பல்லவராயர், வீர வில்விசயனார், காலக்குழையார், கொண்டியார் என்று இருக்கும். எங்கள் பங்காளிமார்கள் நரசிங்கராயர் என்று குறிக்கப்பெறுவர். திருமண உறவுகளின்பொழுது ஒரே குடும்பத்தில் பெண் எடுப்பதைத் தடுப்பதற்காக உதவும் இந்தப் பின்னொட்டுகளின் வழியாக அக்காலத்துச் சிற்றரசர்களாகவோ, அல்லது சிற்றரசர்களின் படை மறவர்களாகவோ இருந்த மக்களின் பண்பாட்டு வேர்மூலங்களை அறியமுடிகின்றது. இது நிற்க.
முனைவர் கி. பாண்டியன் கச்சிராயர் அவர்களின் வாழ்வியலையும், தமிழ்ப்பணிகளையும் அறிந்த நான் அவற்றைத் தமிழ்ப்பெருங்குடி மக்களிடத்துப் பகிர்ந்துகொள்ள விரும்பி நாளும் உரையாடிப் பல விவரங்களைப் பெற்றேன்.
முனைவர் கி. பாண்டியன் அவர்கள் தம் அறிவுக்கொடையாக இரண்டு ஆய்வு நூல்களை உருவாக்கியுள்ளார்கள். இந்த நூல்கள் விரைவில் வெளியீடு காண உள்ளன. அவை 1. சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள், 2. சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள் என்பன. தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களின் வாழ்வியலையும் பணிகளையும் அறிவுலகிற்குத் தர உள்ள தமிழ் அறிஞர் கி.பாண்டியன் கச்சிராயர் அவர்களின் வாழ்க்கையைப் பதிந்துவைப்பதில் மகிழ்கின்றேன்.
முனைவர் கி. பாண்டியன் அவர்களின் தமிழ் வாழ்க்கை:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம், ஆண்டிமடம் அடுத்துள்ள விளந்தை என்னும் ஊரில் அ. கு. கிருஷ்ணசாமி கச்சிராயர் காமாட்சி அம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாக கி. பாண்டியன் அவர்கள் 01.04.1954 ஆம் நாள் பிறந்தார். ஒன்று முதல் ஆறு வகுப்பு வரை ஆண்டிமடத்தின் ஒரு பகுதியாக விளங்கும் விளந்தையில் கல்வி கற்றார். 1966-1971 ஆண்டுகளில் ஏழாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை சேத்தியாதோப்பு அருளானந்தா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1971-1972ஆம் ஆண்டில் புகுமுக வகுப்பினை நேரு நினைவுக் கல்லூரி புத்தனாம்பட்டியில் படித்தார். 1972-1975 ஆம் ஆண்டுகளில் பூண்டி புட்பம் கல்லூரியில் இயற்பியல் இளம் அறிவியல் முடித்தார். 1975-1976 ஓராண்டு தன் ஊரில் இலவசமாக எழுபத்தைந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். 1976-1977 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை அரசினர் கல்வியியல் கல்லூரியில் இளம் கல்வியல் பட்டம் பெற்றார். 1977-1979 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பயின்றார்.
1979-1980 ஆண்டுகளில் இராசபாளையம், சென்னை இரண்டு ஆகிய இடங்களில் ஆங்கில வழித் தனியார் பள்ளிகளில் பணி செய்தார். 1980 அக்டோபர் மாதம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பொறுப்பேற்றுத் தமிழ்ப் பாடம் கற்பித்து வந்தார்.
1985-1986இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் முதுநிலைக் கல்வியியல் பட்டம் பெற்றார். 1987-1989 இரண்டு ஆண்டுகளில் பகுதி நேரமாக திருச்சிராப்பள்ளி பிசப் ஈபர் கல்லூரியில் மெய்யியல் முதுவர் பட்டம் பெற்றார். 1990-1997 காலத்தில் பகுதி நேரமாக நேரு நினைவுக் கல்லூரியில், முனைவர் அ.இராமரத்தினம் அவர்களின் மேற்பார்வையில், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் தமிழக ஆளுநர் பாத்திமா பீபி அவர்களின் கரங்களால் முனைவர் பட்டம் பெற்றார்.
இக்காலத்தில் திருச்சிராப்பள்ளியில் புலவர் கா. திருமாவளவன் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளராகக் கொண்டு இயங்கிய தமிழ் நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தில் இணைந்து பணி செய்தார். அக்கழகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்று, நற்பணிகளை நன்கு செய்தவர். முப்பத்திரண்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாற்பது ஆண்டுகளாக ஆன்மீகத் துறையில் ஈடுபாடு கொண்டவர். ஆன்மீக உரைகளை நன்கு ஆற்றுவார். சன்மார்க்க நெறியே தன் வாழ்வாக எண்ணுபவர்.
கல்வி கற்ற காலத்தில் தன் பேராசிரியர்களின் அன்பைப் பெற்றவர். பேராசிரியர் செ. பொன்னுசாமி அவர்கள் கூறியபடி திருக்குறள் முதல் அதிகாரத்தை வகுப்பு அறையில் ஓத வேண்டும் என்பதனை 1979 முதல் 2012 வரை தனது மாணவர்களுக்கு ஒவ்வொரு வகுப்பறையின் பாடத் தொடக்கத்தின் முன், ஒவ்வொரு மாணவர்களும் வரிசைப்படி ஒரு நாளைக்கு ஒரு மாணவர் பத்து திருக்குறள்களையும் கூறிய பின், ஓம் திருவள்ளுவ தேவாயநம என்று திருவள்ளுவரை அனைவரும் வணங்கச் செய்த பின்னரே தமிழ்ப் பாடம் நடத்தும் இயல்பு கொண்டவர் என்பது தனிச் சிறப்பு. வகுப்பு முடிவுற்ற போதும் மீண்டும் திருவள்ளுவரை மாணவர்கள் வணங்கச் செய்து மகிழ்ந்தவர், 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார்.
1983ஆம் ஆண்டு தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்களை கொல்லிமலை அடிவாரம் புளியஞ்சோலையில், சித்தர் வழிபாட்டு நிகழ்ச்சியில் முதன் முதலில் சந்தித்தார். அப்பொழுது சுவாமிகள் மௌனத்தில் இருந்ததால்,எழுதுப் பலகை யில் எழுதி ஓங்காகரக்குடிலுக்கு வரச்சொல்லியதால், அவ்விடம் சென்று சந்தித்தார். அப்பொழுது ஏற்பட்டத் தொடர்பு நாளது வரையில் தொடர்கிறது. 2009 வரை அதாவது இருபத்தாறு ஆண்டுகள் அக்குடில் பணிக்குத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். உடல்நலம் கருதி பதினான்கு ஆண்டுகள் உடலால் ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். நாற்பது ஆண்டுகள் ஓடின. சித்தர் இலக்கியத்தில் முழு ஈடுபாடு கொண்டதால் சித்தர்களின் வழிபாட்டின் சிறப்புகளையும் சித்தர்களின் பெருமைகளையும் பிறருக்கு எடுத்துக் கூறி வருகின்றார்.
1987 ஆம் ஆண்டில் பூம்புகார் மேலப்பெரும்பள்ளம் இராசதுரை விசயலெட்சுமி அவர்களின் மகள் பத்மாவதி அவர்களை மணந்து கொண்டார். இவர்களுக்கு அகத்தியா, அபிநயா இரு மகள்கள் உள்ளனர். மக்கள் செல்வங்கள் இருவரையும் பொறியியல் (எம்.இ,.) படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தார். பேரப்பிள்ளைகளுடன் இனிதான இல்லறம் மேற்கொண்டொழுகுகிறார்.
பள்ளியில் தான் பணிசெய்த காலத்தில் சமுதாய நலங்கருதி, பள்ளியின் நிருவாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட சிக்கல்களில் முன்னின்று போராட்ட வாழ்க்கைக்குரிய நிலையை அடைந்தார். 1988 முதல் 2012வரை இருபத்தினான்கு ஆண்டுகள் நெருக்கடி நிலையில் வாழ்க்கையை மேற்கொண்டார். இக்காலத்தில் மூன்று ஆசிரியர்கள் உட்பட தற்காலப் பணி நீக்கம் செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தடையாணையைப் பெற்று ஆசிரியர் பணியை நிறைவுடன் செவ்வையாய் மேற்கொண்டு வந்தவர்.
தன்னிடம் படிக்கும் மாணவர்கள் பசி என்று சொன்னால், உடனே அவர்களுக்கு உணவு கிடைக்க வழி கோலியவர். எல்லா மாணவ மாணவிகளுக்கும் நன்னெறிகளைச் சுட்டிக் காட்டி, பல மாணவர்களுக்கு உதவியவர். ஆசிரியர்களுக்கு உதவியாகச் சங்கம் வைத்துக் கூடி வாழ்ந்தவர். பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என்று அனைவரிடத்திலும் அன்பு காட்டியவர். இன்றும் அத்தொடர்பில் இருந்து வருகிறார்.
பள்ளியில் நூலகப் பொறுப்பாளராகச் சில ஆண்டுகள் இருந்தவர். மாதம் நாற்பது நூல்களைப் படிக்கும் ஆற்றல் பெற்றவர். பன்னிரு திருமுறைகள் 18179 பாடல்களை ஓதியவர். திருக்குறளைக் கணிப்பொறியில் ஒளிஅச்சு செய்தவர். கொங்கணர் கடைகண்டம் 500 என்னும் நூலினைத் தன் கையால் எழுதி மனம் குளிர்ந்தவர். பொது வாழ்வில் அறச் சிந்தனையுடன் நற்செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
முனைவர்
கி. பாண்டியன் கச்சிராயர் அவர்கள் நீடு வாழ்ந்து தமிழ்ப்பணியாற்றிட என் நெஞ்சார்ந்த
வாழ்த்துகளைப் பணிந்து தெரிவிக்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக