செவ்வாய், 14 மார்ச், 2023

மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீடு


 


படத்தில்: பேராசிரியர் உலகநாயகி பழனி, புதுவை வழக்கறிஞர் இராம முனுசாமி, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், மயிலம் சிவஞான பாலய சுவாமிகள், முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன், நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவன், பொறியாளர் சிங்கை இளங்கோ, வலைத்தமிழ் பார்த்தசாரதி, அறிஞர் பாலசுப்பிரமணியம்

புதுவைப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் எழுதிய இசைத்தமிழ்க் கலைஞர்கள் நோக்கீட்டு நூல் என்னும் நூலின் வெளியீட்டு விழா 11.03.2023 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குச் சென்னையில் நடைபெற்றது. சென்னை, கிண்டி, கத்திபாரா சந்திப்புக்கு அருகில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மன்ற அரங்கில் (AUTEAA / AUAC), இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொழிலதிபர் முனைவர் வி. ஜி. சந்தோஷம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் . இராசேந்திரன் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூலினை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார். நூலின் முதல் படியைப் புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ப. இராம முனுசாமி பெற்றுக்கொண்டார். மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் எழுந்தருளி ஆசியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இன்னிசையேந்தல் திருபுவனம் குரு. ஆத்மநாதன்பேராசிரியர் உலகநாயகி பழனிமுனைவர் வா. மு. சே. ஆண்டவர்புதுவை அருங்காட்சியக இயக்குநர் அ. அறிவன்பொறியாளர் தமிழ் இயலன்,  வலைத்தமிழ் இணைய இதழாசிரியர் . பார்த்தசாரதி, பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். பொறியாளர் சிங்கை இளங்கோ வரவேற்புரையாற்ற, நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரை வழங்கினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழார்வலர்களும் தமிழறிஞர்களும் இசைத்தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். 

இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் 304 பக்கம் கொண்டது. இந்த நூலின் விலை 350 இந்திய ரூபாய் ஆகும். ஒற்றை வரியில் இசைத்தமிழ்க் கலைஞர்களின் சிறப்புகளை இந்த நூல் அடையாளப்படுத்துகின்றது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நோர்வே, டென்மார்க்கு, பர்மா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள 5800 இசைத்தமிழ்க் கலைஞர்களின் பணிகளை இந்த நூலின் வழியாக அறிந்துகொள்ள முடியும். வாய்ப்பாட்டு அறிஞர்கள், கருவியிசை அறிஞர்கள், ஓதுவார்கள், இசையாய்வு அறிஞர்கள், இசைத்தமிழ்ப் புரவலர்கள் குறித்த விவரங்களும் இந்த நூலில் உள்ளன. இசைத்தமிழ்க் கலைஞர்கள் நோக்கீட்டு நூல் தேவைப்படுவோர் muetamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது + 9442029053 என்ற புலன எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம்.

 பேராசிரியர் உலகநாயகி அவர்கள் துணைவேந்தர் ம.இரா. அவர்களிடமிருந்து நூல் பெறுதல்

முனைவர் வி.ஜி. சந்தோஷம் அண்ணாச்சி தலைமையுரை


மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் அவர்கள் சிறப்புரை

தவத்திரு. மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசியுரை


வழக்கறிஞர் இராம முனுசாமி அவர்களும், தவத்திரு சுவாமிகளும் உரையாடுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக