திங்கள், 28 பிப்ரவரி, 2022

மொழியியல் அறிஞர் க. பாலசுப்பிரமணியன்

பேராசிரியர் க. பாலசுப்பிரமணியன் 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறை மிகச் சிறந்த மொழியியல் அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கியுள்ளது. அத்துறையில் பயின்றும், பணியாற்றியும் தமிழாய்வுத்துறைக்குப் பெருமைசேர்த்துவரும் பேராசிரியர் . பாலசுப்பிரமணியன் அவர்கள் தொல்காப்பிய ஆய்வில் தோய்ந்தவர்.  அகராதியியல் துறையிலும் பொருண்மை ஆய்விலும் துறைபோகிய சான்றோர் ஆவார். இவரின் பல்லாண்டு உழைப்பில் வெளிவந்துள்ள தொல்காப்பியச் சொற்பொருளடைவு (தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு) பேராசிரியரின் கடும் உழைப்புக்குச் சான்று பகரும். அதுபோல் தொல்காப்பியத்தின் ஒருமையும் முழுமையும் என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூல் தொல்காப்பியம் குறித்து மேல்நாட்டு அறிஞர்களும் தமிழகத்தாரும் முன்வைக்கும் பிழைபட்ட கருத்துகளை அறிவுக்கண்கொண்டு, அலசி ஆராய்ந்துள்ளது. 

தொல்காப்பியத்தின் விளக்க இலக்கணம் (A Descriptive Grammar of Tolkappiyam (Phonology, Morphophonemic, Morphology) என்னும் தலைப்பில் அமைந்த க.பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆய்வேடு தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களையும் மொழியியல் கொள்கைகளின் அடிப்படையில் ஆராய்ந்து தொல்காப்பியத்தின் மொழியமைப்பை வெளிப்படுத்தியுள்ளது. தொல்காப்பியத்தின் ஒலியன் அல்லது எழுத்தமைப்பு, உருபொலியனியல் அல்லது புணர்ச்சி அமைப்பு, சொல்லமைப்பு  ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று அதிகாரங்களின் மொழியமைப்பும் ஒரே தன்மையானது என்பதைச் சான்றுகளுடன் விளக்கியுள்ளது. ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்ல பேராசிரியர் அவர்களுக்குத் தெலுங்கு மொழியிலும் புலமையுண்டு. இவர்தம் பெருமைமிகு வாழ்க்கையினைத் தமிழுலகின் பார்வைக்குக் கொண்டுவருவதில் மகிழ்கின்றேன். 

பேராசிரியர் க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 1939 ஆம் ஆண்டு, மே மாதம் 27 ஆம் நாள் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் பா. கல்யாணசுந்தரம், இராஜம் ஆகும். திருவையாறு சீனுவாசராவ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வித்துவான் பட்டம் பெற்றவர்(1958). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். பட்டம் பெற்றவர். 1964 ஆம் ஆண்டில் முதுகலை மொழியியல் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று, பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1982 ஆம் ஆண்டில் A Descriptive Grammar of Tolkappiyam (Phonology, Morphophonemic, Morphology) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். தெலுங்கு மொழியைக் கற்றுப் பட்டயச்சான்று பெற்றவர். 

பணியனுபவம் 

காரைக்குடி முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி (1958-1959), பிறகு சின்னாளப்பட்டி, தேவாங்கர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். அண்ணாமலைப்  பல்கலைக்கழகத்தின், மொழியியல் துறையில் ஆய்வாளராக இருந்தவர். அங்கு விரிவுரையாளர் பணியைத்  தொடங்கியவர் (1967-1983). தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில்  இணைப்பேராசிரியராக  (1983-1985 இல்) பணியாற்றியவர். பிறகு அண்ணாமலைப்  பல்கலைக்கழகம், மொழியியல் உயர்ஆய்வு மையத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஐதராபாத்            தெலுங்குப் பல்கலைக்கழகத்தில் அகராதியியல் துறையில்   பேராசிரியர்  மற்றும்  துறைத்தலைவராகவும் பணியாற்றியவர் (1988 -1991)  மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் உயர் ஆய்வு மையத்தில் பேராசிரியராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர். 

ஆய்வுத்துறைகள் 

1.மொழிப் பொருண்மையியல், 2. அகராதியியல், 3. தொல்காப்பிய இலக்கணக் கோட்பாடு,  4. இந்திய இலக்கணக் கோட்பாடு, 5. தமிழ் மொழி வரலாறு ஆகிய துறைகளில் மிகுதியான ஆய்வுகளை நிகழ்த்தியவர். தொல்காப்பியத்தை மொழியியல் கண்ணோட்டத்துடன் அணுகி, நுட்பங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவர். 

சிறப்புப் பயிற்சிகள் 

பேராசிரியர் க. பாலசுப்பிரமணியன் அவர்கள் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்களிடம் துறைசார்ந்த பயிற்சிகளைப் பெற்றவர். மொழிப்பொருண்மையியல் குறித்தும் அகராதியியல் குறித்தும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றவர். 

1. மொழிப்பொருண்மையியல் பேராசிரியர் ஸ்டீஃபன் உல்மன் (லீட்ஸ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து) அவர்களுடைய சிறப்புச் சொற்பொழிவுகள், பூனே டெக்கான் கல்லூரி, 1966இல் பங்குபெற்றுள்ளார். 

2. அகராதியியல் அறிஞர் லாடிஸ்லாவ் ஜுகுஸ்தா (இல்லினாய்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர், அமெரிக்கா) அவர்களிடம் ஹைதராபாத் ஆங்கில மற்றும் வெளிநாட்டு மொழிகளின் மத்திய நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளார் (1976).

3. பொருண்மையியல் பயன்பாட்டியல் என்னும் பணிப்பட்டறையில் ஜெ.டி.மக்காலெ (சிக்காகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் அமெரிக்கா) அவர்களிடம் ஆங்கில மற்றும் வெளிநாட்டு மொழிகளின் மத்திய நிறுவனம் (CIEFL) ஹைதராபாத் (17 – 26 ஆகஸ்டு1982) இல் பயிற்சி பெற்றுள்ளார். 

நூல்கள் - எழுதியவை: 

பேராசிரியர் க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தொல்காப்பியம் குறித்து அரிய நூல்களை எழுதியவர். தொல்காப்பியத்தை மொழியியல் கண்ணோட்டத்தில் நுணுகி ஆராய்ந்தவர். தொல்காப்பியம் குறித்து மேல்நாட்டு அறிஞர்களும் தமிழகத்து அறிஞர்களும் எழுதியிருந்த மாற்றுக் கருத்துகளை மறுத்து எழுதித் தொல்காப்பியத்தின் தனிச்சிறப்பை நிலைநாட்டியவர். இவர்தம் நூல்களில் கடுமையான உழைப்பும் ஆராய்ச்சித்திறனும் மேம்பட்டு விளங்கும். இவர் எழுதித், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியச் சொற்பொருளடைவு நூல் நாற்பத்தெட்டாண்டுகளுக்கு மேலான உழைப்பினைக் கொண்ட நூலாகும்.              

1.       Studies in Tolkappiyam, Annamalai University, Annamalainagar  2001. 

2.       தொல்காப்பியத்தின் ஒருமையும் முழுமையும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்சென்னை, 2015.

3.       தொல்காப்பியச் சொற்பொருளடைவு (An Index of Tolkappiyam with Grammatical      Indications and meanings in Tamil and English), தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர்,2016.

4. தொல்காப்பிய இலக்கண மரபு, அரிமா நோக்கு வெளியீடு, சென்னை 2017. 

நூல்கள் - பதிப்பித்தவை:   

1. இலக்கண    ஆய்வுக் கட்டுரைகள்-1,அகத்தியலிங்கம், . & பாலசுப்பிரமணியன்(பதி.), அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,     அண்ணாமலைநகர், 1974.    

2. இலக்கணக் கட்டுரைகள் (துறையிடை ஆய்வுக் கருத்தரங்கம்) அண்ணாமலைப்         பல்கலைக் கழகம்,     அண்ணாமலைநகர், 2001.     

கட்டுரைகள்செம்மொழி பற்றியவை - 22  

தமிழாய்வுப் பங்களிப்பு : 

ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து தொல்காப்பிய ஆய்வில் ஈடுபட்டு வருபவர். 

1. ஆய்தம் பற்றி ஒலிநிலை, ஒலியன்நிலை, வரலாற்று நிலைகளில் நிறுவியது. 

2. தொல்காப்பியச் சொற்பொருளடைவு தமிழ்-ஆங்கில இருமொழி அகராதியாக உருவாக்கியது

3.   செம்மொழிகளான கிரேக்க, உரோம, வடமொழி இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டுத் தொல்காப்பியத்தின் தனித்தன்மையை நிறுவியது

4.   தொல்காப்பியம் வடமொழிப் பாணினீயத்தின் தழுவல் என்ற கருத்தை ஆதாரங்களுடன் மறுத்து, அதன் தனித்தன்மையை நிறுவியது

5. தொல்காப்பியம் ஒருவரால் செய்யப்பட்டது அல்ல; ஒரு காலத்தில் செய்யப்பட்டதும் அல்ல; தொல்காப்பியத்தில் தொல்காப்பிய விதிகளுக்கு முரணான வழக்குகள் உள்ளன என்பன போன்ற நம் நாட்டு மேனாட்டு ஆய்வாளர்களிடையே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து சான்றுகளுடன் மறுத்து தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களும் காட்டும் மொழியமைப்பு அடிப்படையிலும் மூன்று அதிகாரம் பேசும் செய்திகளுக்கு இடையே உள்ள கருத்துத் தொடர்பின் அடிப்படையிலும் ஓர் ஆசிரியரால் ஒரு காலத்தில் திட்டமிட்டு இயற்றப்பட்ட ஒருமையும் முழுமையும் உடைய நூல் என்பதை நிறுவித் தொல்காப்பிய ஆய்வுக்கு வலிமைசேர்த்தவர். தொல்காப்பிய மூன்று அதிகாரங்களும் காட்டும் ஒருங்கிணைந்த மொழி அமைப்புக் கொள்கையை வரையறுத்ததில் பேராசிரியர் க.பாலசுப்பிரமணியன் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. 

6. தொல்காப்பியப் பொருளதிகாரம் பேசுவது வாழ்வியல் இலக்கணமோ, இலக்கிய இலக்கணமோ அல்ல; பழந்தமிழின் பொருண்மை அமைப்பே என நிறுவி அது இன்றைய மொழியியலுக்குத் தொல்காப்பியத்தின் பங்களிப்பு என்ற கருத்தை முன்வைத்தது

7. புவியியல், வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில், தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கு மிக முந்தையது என நிறுவியது.   

செம்மொழித் தமிழில் மிகப் பழைய நூலான தொல்காப்பியத்தை 50 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆராய்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்கள் வெளியிட்டது மட்டுமன்றி, பல்கலைக்கழகங்கள், மத்திய ஆய்வு நிறுவனங்கள் நடத்தும் பணிப்பட்டறைகள், கருத்தரங்குகள், மாநாடுகளில் பயிற்சி வகுப்புகள், ஆய்வுக்கட்டுரைகள்,ஆய்வுச் சொற்பொழிவுகள் நிகழ்த்திவருவது

இவர்தம் மாணாக்கர் பலர் மொழியியல்துறையில் வல்லுநர்களாகவும், அகராதியியல் அறிஞர்களாகவும் வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 

பேராசிரியர் க.பாலசுப்பிரமணியன் அவர்கள் சிதம்பரம் அண்ணாமலை நகரில் ஆய்வு வாழ்வும் ஆன்மீக வாழ்வும் மேற்கொண்டுவருகின்றார். அவர்தம் வாழ்வும் பணிகளும் காணொலிகளாக விரைந்துவெளிவர உள்ளன.

 

              பேராசிரியர் கபாலசுப்பிரமணியன் அவர்களுடன் மு. இளங்கோவன்





நன்றி:

பேராசிரியர் க. இராமசாமி அவர்கள்(அரியலூர்)
மருத்துவர் முத்துராமன் அவர்கள்(சென்னை)
மருத்துவர் செந்தில்குமார் அவர்கள்(கயானா)

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக