ஞாயிறு, 20 டிசம்பர், 2020

மாந்தநேயத்தின் மறுவடிவம் தியாகி மு. அப்துல் மஜீத் மறைவு!

 

                        
தியாகி மு. அப்துல் மஜீத்

  புதுச்சேரியின் புகழ்மிக்க பெருமக்களுள் ஒருவராக விளங்கிய தியாகி மு. அப்துல் மஜீத் ஐயா அவர்கள்  தம் தொண்ணூற்று மூன்றாம் அகவையில் இன்று (20.12.2020) இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயர் உற்றேன். கடந்த பதினைந்து ஆண்டுகளாக அவருடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளேன். புதுச்சேரியில் நாங்கள் ஏற்பாடு செய்யும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு, எங்கள் முயற்சியை ஊக்கப்படுத்துவார். ஈகைக்குணமும், தமிழ்ப்பற்றும் கொண்ட அவரை எம் புதுமனையினைத் திறந்து வைக்க ஈராண்டுக்கு முன் அழைத்தோம். தம் நண்பர் புலவர் கோ. கலியபெருமாள் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் வருகைதந்து வாழ்த்தி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் அமெரிக்காவிலிருந்து அறிவியல் அறிஞர் நா.க. நிதி அவர்களும் திருக்குறள் தொண்டர் இராம. மாணிக்கம் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 சமய நல்லிணக்கம் கொண்டவர்களைப் பட்டியலிட்டால் தியாகி மு. அப்துல் மஜீத் ஐயா அவர்களின் பெயர் கட்டாயம் இடம்பெறும். காஞ்சிபுரம் தவத்திரு. சங்கராச்சாரியார் சுவாமிகள் அவர்களிடத்துப் பெரும் மதிப்புடையவர். அதுபோல் அருட்தந்தை. அந்தோணிசாமி அடிகளாரின் அன்பையும், மயிலம் தவத்திரு. சிவஞான பாலய சுவாமிகளின் பேரன்பையும் பெற்றவர். மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டவர். தம் ஓய்வூதியப் பணத்தினைப் பல்வேறு அறச்செயல்களுக்கு மாதந்தோறும் வழங்கிவருவதை நான் அறிவேன். நண்பர்களின் குடும்ப நிகழ்வுகளிலும், இலக்கிய ஒன்றுகூடலிலும் முன்னின்று அனைவரையும் வரவேற்பது இவர்தம் இயல்பு.

 மு.அப்துல் மஜீத் அவர்கள் ஆங்கிலோ- பிரெஞ்சு ஆலையில் (AFT) எழுத்தராகவும், பின்னர் பிரெஞ்சியர் ஆட்சியில் அவர்கள் நடத்திய சமுதாய முன்னேற்றப் பள்ளியில் (சொசைட்டி பிராக்ரஸ்) ஆசிரியராகவும் பணியாற்றியவர். புதுவையின் முன்னணித் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

  மு.அப்துல் மஜீது அவர்கள் தமிழில் மரபுப்பாடல் புனைவதில் வல்லவர். எனவே “மரபு மாமணி” என்று மதிக்கப்பெற்றவர். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர். ’வள்ளுவரின் செவ்வியலும் கம்பனின் புனைதிறனும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். பாவலர் பயிற்சிப் பட்டறை என்னும் இலக்கிய அமைப்பின் தூணொத்து விளங்கியவர். புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சியிலும், கம்பன் கழகத்தின் பணிகளிலும் ஆர்வமுடன் உழைத்தவர். எளிமையும், தன்னடக்கமும் கொண்டவர். மற்றவர்களுக்கு உதவுவது தம் வாழ்வின் நோக்கம் என்று வாழ்ந்தவர்.

  புதுவைக்குப் புகழ்சேர்த்த நன்மகனாரின் மறைவு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் உரியதாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக