வெள்ளி, 3 ஜூலை, 2020

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை (பெட்னா) விழா- 2020!




வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, ஆண்டுதோறும் பேரவையின் ஆண்டு விழாவை அமெரிக்காவின் மாநகர் ஒன்றில் சூலைத் திங்களின் முதல் கிழமையில் நடத்துவது வழக்கம். அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ் மக்கள் ஆர்வமுடன் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொள்வார்கள். தாயகத்திலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் பல்துறை அறிஞர்கள், கலைஞர்கள் அழைக்கப்பெற்று, விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு “கொரானா” நோய்த்தொற்று காரணமாக இணையம் வழியாக விழாவை நடத்தவேண்டிய சூழல் பேரவைக்கு அமைந்துவிட்டது. எனினும் இருந்த இடத்திலிருந்தே பேரவையின் விழாவை நாம்  கண்டுகளிக்கும் வகையில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 2020 ஆம் ஆண்டுக்கான பேரவை விழா சூலை 3 முதல் சூலை 5 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு)  இணையம் வழியாக நடைபெறுகின்றது.

தொழில் முனைவோர் உரையரங்கம், சிறப்புப் பொழிவுகள், மக்களிசை, தமிழிசை, மெல்லிசை, மரபிசை, பட்டிமன்றம், கவியரங்கம், இளையோர் அமர்வு, சங்கங்களின் கூடல் என்றவாறு பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தமிழகத் திரை நட்சத்திரங்களும், பேச்சாளர்களும் இணைய வழியாகப் பங்கேற்க உள்ளனர். வாய்ப்பும் நேரமும் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்ணுறுங்கள். அமெரிக்க மண்ணில் நம் உறவுகள் முன்னெடுக்கும் தமிழ்ப்பணிகளுக்குத் துணை நிற்போம். நிகழ்ச்சி சிறப்புடன் அமைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

நிகழ்ச்சி நிரல் அறிவதற்குப் பேரவையின் இணையதளம் செல்லுங்கள்.

நேரலையில் நிகழ்வைக் கண்டுகளிக்க யூடியூப் இணையதளத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக