புதன், 29 மே, 2019

சிங்கப்பூர் "எழுத்துச் செம்மல்" ஏ. பி. சண்முகம்





ஏ. பி. சண்முகம்

     முனைவர் க. ப. அறவாணனார் அவர்களின் அன்பிற்குரிய மாணவர்களுள் ஒருவனாக விளங்கியதிலிருந்தே (1992-1993) அயல்நாட்டுத் தொடர்புகள் தொடங்கிவிட்டன. மலேசியாவில் வாழ்ந்த குறிஞ்சிக்குமரனார், கனடாவில் வாழ்ந்த ஈழத்துப்பூராடனார் என அறிஞர்களின் தொடர்புப் பட்டியல் நீளத்தொடங்கியது.

     திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த பொழுது (1993 -1994) சிங்கப்பூர் எழுத்தாளர், எழுத்துச் செம்மல் ஏ.பி. சண்முகம் ஐயாவின் தொடர்பு, புலவர் பாளை. எழிலேந்தி அவர்கள் வழியாக அமைந்தது. ஏ.பி. சண்முகம் அவர்கள் அமைதியும், அன்பும் ஒருங்கே வாய்த்த பெருமகனார். ஏ.பி. சண்முகம் அவர்களை நூல்கள் வழியாக அறிந்த நான், நேரிலும் பழகும் வாய்ப்பு அமைந்தது. அவரின் நாச்சியார்கோவில் ஊரில் அமைந்த இல்லத்திற்குச் சென்று உரையாடியமை நினைவுக்கு வருகின்றது.

     ஆத்திக்குளம் பக்கிரிசாமி சண்முகம் என்பது இவரின் பெயர் விரிவாகும். 07.11.1929 இல் தமிழகத்தில் ஆத்திகுளத்தில் பிறந்தவர். பின்னர் மலேசியா, சிங்கப்பூரில் வாழ்ந்தவர். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பினராக இருந்தவர்.

     நாடக நூல்களையும் உரை நடை நூல்களையும் கவிதை நூல்களையும் படைத்தவர். ஏ.பி. சண்முகம் அவர்களின் சங்கநாதம் நூலுக்கு அணிந்துரை ஒன்று 25.04.1994 இல் எழுதியுள்ளேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியமை நினைவுக்கு வந்தது. பழைய நூல்களைப் புரட்டியபொழுது இந்த அணிந்துரை என் கண்ணில் தென்பட்டது. நண்பர்களின் பார்வைக்கு எழுத்தாளர் ஏ.பி. சண்முகம் அவர்களின் நினைவைப் பகிர்வதில் மகிழ்கின்றேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக