சொற்குவைத் திட்டத்தின் கலந்துரையாடலுக்கு வருகைபுரிந்த
அறிஞர் பெருமக்கள், பல்துறை வல்லுநர்கள்
மொழிஞாயிறு ஞா. தேவநேயப்
பாவாணர் அவர்களை இயக்குநராகக் கொண்டு,
தமிழ்நாட்டு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகரமுதலித் திட்ட இயக்ககத்தை நிறுவி(08.05.1974),
கடந்த நாற்பதாண்டுகளாக அரும்பெரும் அகரமுதலிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இதுவரை 31 மடலங்களாக அகரமுதலிகள் வெளிவந்துள்ளமை
தமிழுக்கு மிகப்பெரும் ஆக்கமாகும்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட
இயக்ககம் மேலும் பல திட்டங்களின் வழியாகத் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் அகரமுதலிகளை
உருவாக்கி வருகின்றது. இவ்வியக்ககத்தின் இயக்குநராகத் திருவாளர் தங்க. காமராசு அவர்கள்
அமர்த்தப்பெற்ற பிறகு இயக்ககம் மிகச் சிறந்த பாய்ச்சலுடன் பணிகளை முன்னெடுத்துள்ளது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட
இயக்ககத்தின் சார்பில் சொற்குவைத் (Word Corpus) திட்டம் என்ற பெயரில் தமிழில் உள்ள
சொற்களைத் தொகுக்கவும், கலைச்சொற்களை உருவாக்கி இணைக்கவுமான பெரும்பணியைச் செய்வதற்கு
இத்துறை ஆர்வலர்களும், அறிஞர்களும் கலந்துகொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று
25.02.2019 காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை, சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு
நூலக அரங்கின் தரைத்தளத்தில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்துறை
அறிஞர்கள் வருகைபுரிந்து, தத்தம் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
சொற்குவைத் திட்டத்தில் பேரீடுபாடுகொண்ட மாண்புமிகு
தமிழ் வளர்ச்சி (ம) பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு. க. பாண்டியராசனார் அவர்கள் கலந்துகொண்டு,
அறிஞர்கள் ஒவ்வொருவருடனும் உரையாடி, அவர்களின் தமிழ்ப்பணிகளை அறிந்ததுடன், சொல் தொகுப்புக்குரிய
நெறிகாட்டல்களைக் கேட்டுப் பெற்றமை அரங்கில் இருந்த அறிஞர் பெருமக்களுக்குப் பெரு மகிழ்வாக
இருந்தது. தமிழ் வளர்ச்சிக்குத் தாம் எண்ணியுள்ள எண்ணங்களை எல்லாம் எடுத்துரைத்ததுடன்
சொற்குவையை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களையும் அறிஞர்களிடம் அமைச்சர் அவர்கள் வேண்டினார்கள்.
தமிழில் உள்ள எல்லாச் சொற்களையும் தொகுப்பது,
தமிழைப் பேசுபவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாக அறிவது, இலக்கிய வளம் சார்ந்த ஆவணங்களைப்
பாதுகாத்தல், யுனெசுகோவில் மொழிபெயர்க்கும் தகுதிபெறும் மொழியாகத் தமிழை நிலைப்படுத்த
வழிவகைசெய்தல், சொல்லாக்கப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பன போன்ற விருப்பங்களை
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எடுத்துரைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அறிஞர்கள் தெ. ஞானசுந்தரம்,
ந. தெய்வசுந்தரம், ப. மருதநாயகம், கு. அரசேந்திரன், கோமதிநாயகம், கு.மோகனராசு, இரேணுகாதேவி,
ப.கிருஷ்ணன், ந. வெற்றியழகன், இ. சூசை, பாலசுப்பிரமணியன், ப.க.நடராசன், அருப்புக்கோட்டை
சரவணன், அப்துல் சபார், புலவர் பதுமனார், சேதுமணி மணியம், பிரேம்குமார்(மைசூர்), மதன்கார்க்கி,
"கவிக்கோ’ ஞானச்செல்வன், மருத்துவர் அ.செந்தில், மருத்துவர் மு. குமரேசன், தஞ்சை
இறையரசன், கிருங்கை சேதுபதி, மு.பழநியப்பன், பெ.இளையாப்பிள்ளை, உல. பாலசுப்பிரமணியன்,
வழக்கறிஞர் அ. மதிவாணன், மு.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட
இயக்ககம் சார்ந்த தங்க. காமராசு அவர்களின் வரவேற்புரையும், இணைப்புரையும், நிகழ்ச்சியை
நெறிப்படுத்திய பாங்கும் வருகைபுரிந்த அறிஞர் பெருமக்களால் பெரிதும் போற்றப்பட்டது.
இயக்ககத்தில் பணிபுரியும் அலுவலர்களும் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
கலந்துரையாடலில் பங்கேற்றோர்
கலந்துரையாடலில் பங்கேற்றோர்
கலந்துரையாடலில் பங்கேற்றோர்
மாண்புமிகு அமைச்சர் க.பாண்டியராசனார் அவர்களிடம், டென்மார்க்கிலிருந்து வருகைபுரிந்த இராமச்சந்திரமூர்த்தி அவர்கள் தம் அமைப்பினர் வெளியிட உள்ள ஆத்திசூடி டேனிசு மொழிபெயர்ப்பு குறித்து உரையாடல்.
படங்கள் உதவி: நேதாஜி பாபு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக