கவிஞர் தங்க. வேல்முருகன்
சிங்கப்பூர் குறித்த உரையாடல் நடக்கும்பொழுது
என் உயிர்த்தோழர் முனைவர்
இரத்தின. புகழேந்தி அடிக்கடி ஒலிக்கும் பெயர்கள் கவிஞர் தங்க. வேல்முருகன், கவிஞர் தியாக. இரமேஷ் என்பனவாகும். சிங்கப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றிற்குச்
சென்றபொழுது முதன்முதல் இவர்களைச் சந்தித்துள்ளேன். முதல்சந்திப்பு ஒரு தென்றல் தழுவி
விலகியதுபோல் இருந்தது. அடுத்தடுத்த சிங்கப்பூர்ப் பயணங்களிலும் தங்க. வேல்முருகன்,
தியாக. இரமேஷ் ஆகியோருடன் அவசர சந்திப்புகள் நிகழும். அதுவும் மின்னல்போல் மின்னும்.
நின்றுபேச நேரம் இருக்காது. நான் தமிழகம் திரும்பியபிறகு செல்பேசி உரையாடலுக்குப் பஞ்சம்
இருக்காது.
சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றபொழுது,
நான் தங்கியிருந்த விடுதிக்கு அந்திப்பொழுதொன்றில் கவிஞர் தங்க. வேல்முருகன் ஆர்வமுடன்
வந்து சந்தித்தார். அமர்ந்தும், நின்றும், நடந்தும் நிறைய நேரம் பேசினோம். அப்பொழுது
கையுறையாக அவரின் நினைப்பதற்கு நேரமில்லை என்ற கவிதை நூலை வழங்கியபொழுது மிகவும் மகிழ்ந்தேன்.
இந்த நூல்வெளியீட்டு நிகழ்வுகளை முகநூலில் பார்த்ததால் நானும் இந்த நூலைப் பெறுவதில் ஆர்வமாக இருந்தேன்.
விடுதியிலிருந்து விடுபட்டு, நண்பர்களுடன் சிங்கப்பூர் நகரின் சாலைகளில் காலார நடந்தவாறு
பல்வேறு இலக்கிய நிகழ்வுகளைப் பேசித் திளைத்தோம்.
தங்க. வேல்முருகன் தற்பொழுது சிங்கப்பூரில் உள்ள
எச்.இ.சி மின்சாரம், கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். தம் வருமானத்திற்காக
மின்பணிகளில் நாளும் கவனம் செலுத்தினாலும்
அடிப்படையில் இவர் ஒரு கவிதையுள்ளம் கொண்ட கலைஞர். செய்நேர்த்தியுடன் எதனையும் செய்துபார்க்கும்
இயல்பினர். தமிழிலக்கியம் பயின்ற இவரைத் தமிழ்நாட்டுக் கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ளாத
பொழுது, சிங்கப்பூர் நாடு செவிலித்தாயாக மாறி, அரவணைத்துக்கொண்டது. சிங்கப்பூரின் மண்மணம்
கமழும் பல கவிதைகளை நாளும் வடித்துவரும் தங்க. வேல்முருகனின் படைப்புகள் தனித்து ஆய்வு
செய்யும் தரமுடையன.
தங்க. வேல்முருகன் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
வட்டம் மருங்கூரில் மு.தங்கராசு, த.நாகாயாள் அம்மாள் ஆகியோரின் நான்காவது பிள்ளையாகப்
பிறந்தவர் (07.04.1972). இவருடன் இரண்டு அக்காள், ஓர் அண்ணன், ஒரு தம்பி உடன்பிறந்தவர்கள்.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அருகிலுள்ள சி. கீரனூரிலும், உயர்நிலைக்
கல்வியை கருவேப்பிலங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை விருத்தாசலம்
அரசு ஆண்கள் பள்ளியிலும் படித்தவர்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில்
தமிழ் இலக்கியம் பயின்று இளங்கலை, முதுகலை, இளம் முனைவர்ப் பட்டங்களைப் பெற்றவர். அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தின் வழியாக முதுகலை கணினிப் பட்டயப் படிப்பும் பயின்றவர். குங்குமம்
கிழமை இதழில் சிலகாலம் பணிசெய்தவர். கவிதைத் துறையில் கவனம் செலுத்தும் இவர் தற்பொழுது
புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தங்க.
வேல்முருகனின் நினைப்பதற்கு நேரமில்லை கவிதைநூல் 57 கவிதைகளைக் கொண்டுள்ளது. மணிமுத்தாற்றங்கரை
நினைவுகளையும் இப்பொழுது வாழும் சிங்கப்பூர் நினைவுகளையும் இந்த நூலில் கவிஞர் சிறப்பாக
வடித்துள்ளார். சிங்கைத் தாய் என்ற தலைப்பில் அமையும் வேல்முருகனின் கவிதை என் விழியை
நிறுத்திப் படிக்க வைத்தது.
"எல்லாமே
புள்ளியில்தான்
தொடங்குகிற
தென்பதற்கு
- நீ
உதாரணம்...
உன்வளைவு
நெளிவுகளில்கூடத்
தூய்மை
துள்ளுகிறது...
சாக்கடையும்
பேசும்
சந்தன
மொழி
...
என்
விதி நீட்டிக்கச்
சாலைவிதி
மதிக்கச்
சொன்னாய்...
சட்டங்கள்
கடுமையாக்கிக்
குற்றங்கள்
குறைத்தாய்...
உழைக்கும்
வியர்வைக்கே
உயர்
மதிப்பளித்தாய்..."
என்று
சிங்கப்பூரின் சிறப்புகளை நம் கவிஞர் பாடியுள்ளார். தமிழகத்தார் சிங்கப்பூர் நாட்டுக்குச்
சென்று பார்த்தால் இந்தக் கவிதை வரிகள் எவ்வளவு உண்மையானவை என்று உணர்ந்துகொள்ளமுடியும்.
சிங்கப்பூரின் தேசத் தந்தை லீக்குவான் யூ அவர்கள்
நாட்டுக்கு உழைத்த அவர்தம் தியாகத்தைச் சொல்லி, உலகத் தந்தை என்ற தலைப்பில் எழுதியுள்ள
கவிதை சிங்கப்பூரை நேசிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்தையும் மயிலிறகால் வருடுவதுபோல் உள்ளது.
தாய்நாட்டு நினைவுகளை வடித்துள்ள தங்க. வேலுமுருகனுக்கு
இங்குள்ள மக்களின் அவல வாழ்க்கையும், அரசியல்காரர்களின் சூழ்ச்சியில் சிக்கிச் சீரழியும்
நிலையும்தான் மனக்கண்ணில் தோன்றி, கவிதைப் பதிவுகளாக வெளிப்பட்டுள்ளன.
"இலஞ்சம்
வாங்கி
வாக்கைப்
போட்டாய்!
பஞ்சம்
வந்தால்
யாரைக்
கேட்பாய்!" (பக்கம் 41) என்கின்றார்.
"நட்ட
நடவெல்லாம் நீரில்லாக் காயுது தம்பீ
பட்ட
கடனையும் அடைக்க முடியாது போல
விவசாயத்த
நம்பி...
சுட்ட
கல்லும் சுவராகாமல் கிடக்குது தம்பி
வாங்கி
வந்து வாசலில் கிடக்குது துருப்பிடித்த
கம்பி.."
என்று
எழுதியுள்ளதில் தெரிகின்றது தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் அவல வாழ்வு.
தாத்தா என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதையில் இந்தியத்
தலைநகரில் உழவர்கள் நடத்திய போராட்டத்தைப் பதிவுசெய்துள்ளார். சமகாலப் பதிவாக நிற்கும்
சான்றுக் கவிதை இதுதான்:
"அய்யாக்கண்ணு
- நீ
அரை
நிர்வாணமாய்த்
தேசத்தின்
தலையில் நின்று...
எலிக்கறி
தின்றாய்
எங்கள்
பசி உணர்ந்து..." ( பக்கம் 52)
உழவனுக்குதான் தெரியும் உழுதொழிலின் வலி. உழைத்து,
உலகுக்குச் சோறூட்டும் உழவர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உழவுத்தொழிலில் முன்னேர்
ஓட்டியதால் தங்க. வேலுமுருகனுக்குப் புரிகின்றது அய்யாக்கண்ணுவின் போராட்ட வலி. வளமான
வாழ்க்கையின் வாயில்படியில் நின்றாலும் தம் மக்கள் போராட்டத்தின் ஓர் உறுப்பினராக நின்று
தங்க. வேல்முருகன் எழுத்தாயுதம் கொண்டு இப்புதுக்கவிதையைப் புவியினுக்கு வழங்கியுள்ளார்.
சிற்றூர்ப்புற நினைவுகள், நிகழ்வுகள், தழை, செடி,
கொடி, வாய்க்கால் வரப்புகள் எனத் தமிழர்களின் கருப்பொருள்களைச் சுமந்து நிற்கும் நினைப்பதற்கு
நேரம் இல்லை என்ற முதல் தொகுப்பிலேயே தங்க. வேல்முருகன் தம் தடத்தைப் பதிவுசெய்துள்ளார்.
அடுத்த தொகுப்புகளும் அடுக்கடுக்காக அணிவகுக்கட்டும்.
மணிமுத்தாற்று
மணலின் அளவாய்
வாழ்வுசிறக்கட்டும்
வேல்முருக!
வாழ்த்துகளுடன்
மு.இளங்கோவன்
17.12.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக