திங்கள், 29 ஜனவரி, 2018

தகடூர் கோபியின் மறைவு! தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பு!



தகடூர் கோபி

 தமிழ்க் கணிமைத்துறைக்குப் பெருந்தொண்டாற்றியவரும் என் அருமை நண்பருமான தகடூர் கோபி என அழைக்கப்பெற்ற த. கோபாலகிருட்டினன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியை அறிந்து மிகுந்த துயருற்றேன். கடந்த பத்தாண்டுகளாக யானும் கோபியும் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளோம். 14.09.2008 இல் தருமபுரியில் மருத்துவர் கூத்தரசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தமிழ் இணையப் பயிலரங்கில் யானும் கோபியும், முகுந்துவும் இணைந்து உரையாற்றிய நிகழ்வுகள் யாவும் என் மனக்கண்ணில் விரிகின்றன. 

தருமபுரி இணையப் பயிலரங்கில் கோபி உரையாற்றுதல்(கோப்புப்படம்)

  கோவை இணைய மாநாடு, சிங்கப்பூர் இணைய மாநாடு என்று பல்வேறு மாநாடுகளில் கலந்துகொண்டு, பேசி மகிழ்ந்துள்ளோம். கோபியின் இணையப் பணியை ஒரு நேர்காணலாக்கி, அவரின் பணிகளைத் தமிழ் ஓசை நாளிதழ் வழியாகத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்தேன்(11.01.2009). இணையம் கற்போம் என்ற என் நூலிலும் அந்த நேர்காணல் உள்ளது. இதனை மாணவர்கள் பாடமாகப் படிக்கின்றனர். 

  இணையத்தில் எனக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்கியும், தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை உடனுக்குடன் செய்தும் மகிழ்பவர். அண்மையில் சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக கோபியைச் சந்திக்க விரும்பினேன். அவர் சிங்கையிலிருந்து விடுபட்டு, இந்தியா வந்த செய்தியைச் சொன்னார். மீண்டும் சந்திக்க ஆர்வமுடன் இருந்த நிலையில் கோபியின் மறைவு மிகப்பெரிய இழப்பாக எனக்கு அமைந்துவிட்டது. 

 கோபி அவர்கள் மிகச் சிறந்த மொழிப்பற்றாளர். அவர் உருவாக்கிய மென்பொருள்களுக்கு அதியமான், ஔவை, தகடூர் என்று பெயர் வைத்தமை ஒன்றே அவரின் மொழிப்பற்றையும் ஊர்ப்பற்றையும் வெளிப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகளாகும்.

 என் அருமை நண்பர் கோபியை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்களின் துயரில் நானும் பங்குகொள்கின்றேன். தமிழ் இணையத்துறை உள்ளவரை கோபியின் பணிகள் என்றும் நினைவுகூரப்படும்.

கோபி, முகுந்து, மு.இ, மருத்துவர் கூத்தரசன்

கோபி குறித்த என் பழைய பதிவுகள்:

  1. தகடூர் கோபி நேர்காணல்
  2. தருமபுரி இணையப் பயிலரங்கம்
  3. கோபியின் இணையதளம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக