வியாழன், 7 ஜூலை, 2016

மேலப்பாதியில் அமைந்துள்ள திரு. வி. க. நூல் நிலையம்



திரு. வி. . நூல் நிலையம் பற்றி நான் ஆய்வு மாணவனாக இருந்த நாள்முதல் அறிவேன். அந்த நூல் நிலையத்தின் சிறப்பைப் பாராட்டி நான் எழுதிய மடல்களும், அந்த மடல்களுக்கு நூல் நிலையத்தின் நிறுவுநர் திரு. சு. பாலகிருட்டினன் எழுதிய மடல்களும் கணக்கில் அடங்காமல் இருக்கும். பலவாண்டுகள் மடல் வரவு செலவுகள் இருந்தாலும் அங்கு நேரில் செல்வதற்குரிய வாய்ப்பு இல்லாமல் இருந்தது. பூம்புகார், மயிலாடுதுறைக்கு எத்தனையோ முறை சென்றிருந்தாலும் அருகில் உள்ள மேலப்பாதிக்குச் செல்ல உரிய பொழுது கிடைக்காமல் இருந்தது.

இந்த முறை பூம்புகாருக்குச் சென்று, பணிமுடித்ததும் மேலப்பாதி செல்லத் திட்டமிட்டிருந்தேன். பகலுணவு வரை பூம்புகாரில் படப்படிப்பு; அதனை முடித்துக்கொண்டு செம்பனார்கோயிலுக்குப் பகலுணவுக்குப் புறப்பட்டோம். புலவர் நா. தியாகராசன் அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றதால் பாதைகள் குறித்த குழப்பம் இல்லாமல் மகிழ்வுந்து முன்னேறியது. செம்பனார்கோயில் உணவகத்தில் தஞ்சை மாவட்டத்தின் வளம்காட்டும் வாழையிலையில் இன்சுவை உணவு. வயிறார உண்டுமுடித்தோம். பிற்பகல் மூன்று மணியளவில் மேலப்பாதி திருவிநூல் நிலையம் அடைந்தோம்.

அழகிய மாடியின் முதல் தளத்தில் திருவிநூல் நிலையம் அமைந்திருந்தது. அகவை முதிர்ந்த பெரியவரான திரு. சு. பாலகிருட்டினன் ஐயா நாற்காலியில் அமர்ந்து ஏதோ இதழ்களைப் படித்துக்கொண்டிருந்தார்; அருகில் பல்வேறு கோப்புகள் சூழ்ந்திருந்தன. ஐயாவிடம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். நேற்றே தொலைபேசியில் பேசிய விவரம் சொன்னோம். அவை சு.பா. ஐயாவுக்கு நினைவில் இல்லை. அவ்வாறு இருக்க இருபதாண்டுகளுக்கு முந்திய என் மடல் புராணம் அவருக்கு நினைவிலிருக்க வாய்ப்பு இல்லை. அகவை தொண்ணூறைக் கடந்த பிறகும் நூல்களைத் திரட்டுவது, பாதுகாப்பது, பயன்படுத்துவது என்று தளராமல் இயங்கிக்கொண்டுள்ளார். அகவை முதிர்ச்சி உடல் தோற்றத்தில் தெரிகிறது. என்றாலும் நூல்மேல்கொண்ட பற்றினைச் செயலில் கண்டேன்.

சு.பாலகிருட்டினன்

மேலப்பாதியில் பிறந்தவர் சு.பாலகிருட்டினன். தாம் பிறந்த ஊரில் இருந்த இந்து உதவி தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்றவர்; தாம் பயின்ற பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

தமிழ்த்தென்றல் திரு. வி. . அவர்கள் அக்காலத்தில் ஆக்கூர் பள்ளிக்குப் பேச வந்தபொழுது, அவரைச் சந்தித்த சு. பாலகிருட்டினனும் நண்பர்களும் திரு. வி. . பெயரில் நூல் நிலையம் அமைக்க விரும்பியதைச் சொல்லித், திரு.வி.. அவர்களின் அன்பையும் வாழ்த்தையும் பெற்றனர்.

இந்து உயர்நிலைப் பள்ளி அக்காலத்தில் எளியநிலையில் இயங்கியது. அப் பள்ளியின் அருகில் இருந்த தம் வீட்டில், தமிழ்த்தென்றல் திரு. வி.. வின் பெயரில் 15.11.1946 இல் நூலகம் தோற்றம் பெற்றது.

மேலப்பாதியைச் சேர்ந்த சு. பாலகிருட்டினன், . மாரியப்பன், . கோவிந்தராசு ஆகியோரின் முயற்சியால் 46 நூல்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த நூலகம் இன்று பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு சிறப்புடன் விளங்குகின்றது. இங்கு உள்ள நூல்கள் யாவும் நூலாசிரியர்கள், நூல்களை வெளியிடுவோர், அறக்கட்டளைகள், வெளிநாட்டுத் தூதுவர்திருப்பனந்தாள், தருமபுரம், திருவாவடுதுறை உள்ளிட்ட திருமடங்களின் தலைவர்கள் அளித்த நூல்களாகும். நூல்கள் விலைக்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், .வி. மெய்யப்பச் செட்டியார், திருமதி அ. சிவசங்கரி, கோலாலம்பூர்  .ஆறுமுகம் பிள்ளை, எம்..எம். இராமசாமி செட்டியார் உள்ளிட்ட சான்றோர் பெருமக்கள் அவ்வப்பொழுது இந்த நூல்நிலையத்துக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.

தமிழ்நாடு காந்தி நினைவு நிதியின் உதவியால் மதுரையிலிருந்து நூல்கள் பெறப்பட்டுள்ளன.

கல்கத்தாவில் இயங்கும் இராசாராம்  மோகன்ராய் நூலக அறக்கட்டளை சார்பாக நூலகத்திற்குத் தேவையான மரப்பொருள்கள், இருக்கைகள் வாங்கப்பட்டுள்ளன.

இந்து உயர்நிலைப் பள்ளியின் ஓட்டுக் கட்டடத்தில் பல ஆண்டுகளாக இந்த நூல் நிலையம் இயங்கியது. மேலப்பாதி ஊரினைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியன் அவர்கள் இந்து உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகத்தை ஏற்றபொழுது, பள்ளிக்கு ஒரு கட்டடம் கட்டினார். அந்தப் பள்ளிக்கட்டடத்தின் முதல் மாடியில் நூலகம் அமைத்துக்கொள்ள இசைவு தந்தார். அதனால் திருவிநூல் நிலையம் அழகிய மாடிக் கட்டடத்தில் இப்பொழுது இயங்குகின்றது.
திரு. வி. க. நூல் நிலையம், மேலப்பாதி (நாகை மாவட்டம்)

இந்த நூலகத்தில் திரு.வி.. நூல்கள், குன்றக்குடி அடிகளார் நூல்கள், தென்னிந்திய குலங்களும் குடிகளும் உள்ளிட்ட அரிய நூல்கள் உள்ளன. அமுதசுரபி, கலைமகள், ஓம்சக்தி, தினமணி, விடுதலை, இராகிருஷ்ண விஜயம், கலைக்கதிர், ஞானசம்பந்தம், குமரகுருபரர், மெய்கண்டார், அச்சமில்லை, தர்மசக்கரம் உள்ளிட்ட பல்வேறு இதழ்கள் படிக்கக் கிடைக்கின்றன.

திருவிநூல் நிலையம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உரிய அரிய நூல்கள் பலவற்றைக் கொண்டுள்ளதால் ஆய்வு மாணவர்கள் இந்த நூலகத்தின் நூல்களைப் பயன்படுத்தி, ஆய்வுப் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

சு. பாலகிருட்டினன் அவர்கள் தம் ஓய்வுக்காலத்தில் கிடைத்த பணப்பயன் அனைத்தையும் நூலக வளர்ச்சிக்கு அளித்துவிட்டார். 1947 முதல் நூலகராகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். நூலக வளர்ச்சிக்கும், செலவுக்கும் தம் குடும்பத்தார் பெரும் ஒத்துழைப்பு வழங்கியதை நன்றியுடன் நினைவுகூர்கின்றார்.

திருவிநூல் நிலையத்தில் நான் பார்த்து வியந்த காட்சிகள் பல உண்டு. இந்த நூல் நிலையத்திற்குக் கொடை வழங்கியவர்களின் செயல்கள் நின்று நிலவும் வண்ணம் கொடுத்தவர்களின் பெயர், கொடைப்பொருள்களில் பதிவாகியுள்ளன. அக்காலத்தில் 65 உருவா கொடுத்த கொடையாளியின் பெயர் அக்கொடையால் வாங்கப்பெற்ற நிலைப்பேழையில் இருப்பதைத் தடவித் தடவிப் பார்த்தேன். நூலகத்திற்கு வந்த நூல்கள், மடல்கள், அறிஞர்களின் பட்டியல் யாவும் முறையாகப் பதிவாகியுள்ளன. அதுபோல் அயல்நாட்டிலிருந்தும் தொடர்ந்து நிதி உதவியைப் பலர் வழங்கி நூலக வளர்ச்சிக்குத் துணைசெய்து வருகின்றனர்.

திருவிநூல் நிலையம் முறைப்படி பதிவுசெய்யப்பெற்று, கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நூல்நிலையத்திற்கு வழங்கும் தொகைக்கு வருவாய்வரி விலக்கு உண்டு. இந்த நூலகத்தின் வாழ்நாள் உறுப்பினனாக என்னை இணைத்துக்கொள்ளும்படி சு.பா. ஐயாவிடம் கூறி, அதற்குரிய தொகையையும் அளித்தேன். உரிய பற்றுமுறிச்சீட்டை அப்பொழுதே அளித்தார்.


சிற்றூர்ப் புறத்தில் அறிவுத் திருக்கோயிலை எடுத்து, பாதுகாத்துவரும் திரு. பாலகிருட்டினன் போன்ற தொண்டுணர்வு நிறைந்த பெருமக்களால்தான் உலகம் இயங்கிக்கொண்டுள்ளது. சு. பாலகிருட்டினன் அவர்களின் தொண்டினைப் பாராட்ட இவரை அழைத்து, மன்னிக்கவும் இவர் தவ வாழ்வு வாழ்ந்துவரும் நூலகத்துக்குச் சென்று, விழா எடுத்துப் பெருமைசெய்வதே இவரின் வாழ்நாள் பணிக்கு நாம் செய்யும் உரிய சிறப்பாக இருக்கும்.
நூல் பார்வையிடும் சு.பாலகிருட்டினன்
மு.இ, சு.பாலகிருட்டினன், புலவர் நா.தியாகராசன்

சு.பாலகிருட்டினன் அவர்களிடம் நூலகம் குறித்து நேர்காணல்(மு.இ)

முகவரி:
திரு.வி.க. நூல் நிலையம்,
மேலப்பாதி(அஞ்சல்),தரங்கம்பாடி (வட்டம்),
நாகை(மாவட்டம்), தமிழ்நாடு

காணொளியைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு: இக்குறிப்புகளை எடுத்தாளும் அன்பர்கள் எடுத்த இடம் சுட்டுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக