இணையம் வழியாகப் பல தமிழன்பர்கள் அவ்வப்பொழுது
புதிது புதிதாக அறிமுகமாவது உண்டு. சிலரின் தொடர்பு வளர்பிறையாக வளர்ந்து ஒளிவிடும்.
சிலரின் தொடர்பு தேய்பிறையாகத் தேய்ந்து நினைவிலிருந்து மறைந்து போவதும் உண்டு. ஏதேனும்
உதவி வேண்டிச் சிலர் தொடர்புகொள்வார்கள். உதவி பெற்ற கையுடன் மறந்துவிடுவார்கள். மறைந்தும்
விடுவார்கள். நம் பணிகளை அறிந்து சிலர் உதவ முன்வருவார்கள். சிலர் இணைந்து பணிபுரிய
அழைப்பார்கள். இவ்வாறு சற்றொப்ப பத்தாண்டுகளாகப் பலரைக் காணமுடிந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தைவான் பாலாசி வேலு
அவர்கள் வலையாபதி என்ற இணைய இதழைப் பார்வைக்கு அனுப்பியிருந்தார். அயலகத்திலிருந்து
தமிழ்ப்பணிபுரியும் அவருடன் அமைந்த நட்பு உயர்வானது. அவர் ஆய்வு மாணவர். படிப்புக்கு
இடையே நேரம் ஒதுக்கித் தமிழைப் போற்றுவது அறிந்து மகிழ்ந்தேன். அவ்வப்பொழுது தொலைபேசியிலும்,
இணையம் வழியும் உரையாடுவோம்.
ப. சுந்தரேசனார் ஆவணப்படப் பணிகள், உலகத்
தொல்காப்பிய மன்றப் பணிகள் குறித்து உரையாடுவோம். தைவான், ஹாங்காங்கில் நடைபெறும் தமிழ்
முயற்சிகள் பற்றி எனக்கு அவர் செய்திகளைக் கூறி மகிழ்வார்.
ஒருமுறை உரையாடிக்கொண்டிருந்தபொழுது ஹாங்காங்கு
வானொலியில் தமிழ் ஒலிபரப்புக்கு நேரம் கிடைத்துள்ளதாகவும், கிழமைதோறும் ஒரு மணி நேரம்
தமிழ் ஒலிபரப்பு இருக்கும் எனவும் குறிப்பிட்டார். அப்பொழுது இந்த முயற்சியில் ஈடுபட்டு
உழைக்கும் நண்பர் இராம் பற்றி கூறினார். ஒருநாள் இராம் அவர்கள் தொலைபேசியில் அழைத்தார்.
தம் நிகழ்ச்சித் தயாரிப்பு குறித்தும், அதில் ஒரு மணிநேரம் தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்
குறித்த நேர்காணலில் பங்கேற்க வேண்டும் எனவும் கூறினார். நண்பர் பாலா அவர்களின் அறிமுகத்தால்
இந்த வாய்ப்பை இராம் எனக்கு வழங்கினார்.
முனைவர் ஔவை நடராசனார், முனைவர் பர்வீன்
சுல்தானா உள்ளிட்டவர்களின் பேச்சுகள் முதலில் ஒலிபரப்பான விவரம் சொல்லி, அதற்கு நிகரான
தரத்தில் நேர்காணல் இருக்க வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பை எனக்குச் சொன்னார்கள்.
இராம் அவர்கள் குறிப்பிட்ட நாளில் உரிய நேரத்தில்
என்னை அவர்கள் செல்பேசியில் அழைப்பதாகவும், அவர்களின் வினாக்களுக்கு விடைதருதல் வேண்டும்
என்றும் முடிவானது. என் வீட்டில் இருந்து பேசினால் செல்பேசி சரியாக இயங்காது. நடுத்தெருவில்
நின்று கத்தினால்தான் மறுமுனைக்குச் செல்லும். செல்பேசிக் கோபுரங்கள் சரியாக இல்லாமல்
என் பேச்சுத் தடைப்படும் என்று உணர்ந்து நான் பணி செய்த பழைய நிறுவனத்தின் வளாகத்திலிருந்து
விடைதரத் திட்டமிட்டேன். காவலரிடம் சொல்லி ஒருமணிநேரம் என் பேச்சின் இடையே தடை வராமல்
ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டேன். ஆர்வமுடன் இராம் அவர்களின் அழைப்புக்குக் காத்திருந்தேன்.
உரிய நேரத்தில் வானொலிப் பதிவுக்காக அழைத்தார்கள்.
தீபா சுவாமிநாதன் அவர்களும் தேவி சதீஷ் அவர்களும்
உரையாடி என்னிடம் செய்திகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர். கோபுரச் சிக்கலால் என் குரல்
ஹாங்காங்கு ஒலிப்பதிவுக்கூடத்தில் துல்லியமாகப் பதிவாகதத் தன்மையைக் குறிப்பிட்டார்கள்.
தரைவழி இணைப்பிலிருந்து உரையாட இயலுமா என்றார்கள். மீண்டும் “வேதாளம் முருங்கை மரத்தில்
ஏறிய கதையாக” வீட்டுக்குத் திரும்பினேன்.
சற்றுமுன் ஆர்வமாக வீட்டிலிருந்து புறப்பட்ட
நான் சற்றுநேரத்தில் பரபரப்புடன் வீடு திரும்பியதைக் கண்டு மனைவியும், மக்களும் ஏதோ
நடந்துள்ளது என்று கவனித்து நிலைமையைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
ஹாங்காங்கு ஒலிப்பதிவுக்கூடத்திலிருந்து
அழைப்புமணி மீண்டும் ஒலித்தபொழுது நம் வீட்டை ஒட்டி ஊர்நாய்கள் எனக்குப் போட்டியாக
ஆர்ப்பாட்டம் செய்வதுபோல் பெருங்குரல் எழுப்பிக் குரைத்தன. அவற்றை விரட்டிவிட்டு, என்
மனைவியைக் காவலுக்கு வைத்து வீட்டில் நுழைந்து கதவைத் தாழிட்டேன். நான் வெளியில் வரும்வரை
கதவு திறக்க வேண்டாம் என்று ஓர் அன்புக்கட்டளை.
நேர்காணல் மீண்டும் தொடங்கியது. நாய்களின்
குரைத்தல் ஒலி சற்று அடங்கியிருந்தது. நான் மெதுவாகப் பேசுவதும், பாடுவதுமாக இருந்தேன்.
பிள்ளைகள் சுவரோரம் பதுங்கி நான் பாடுவதைக் கேட்டார்கள். அக்கம் பக்கம் குடியிருந்தோர்
இடையூறாக நினைத்தல் கூடாது என்று சற்று அடங்கிப் பாடவேண்டியதாயிற்று.
நாட்டுப்புறப் பாடல்கள் என்பவை திறந்த வெளியில்
மகிழ்ச்சியுடன் அமைதியாகப் பாடவேண்டிய பாடல்களாகும். ஆனால் எனக்குப் பல தடைகள் இருந்து
மனத்தடையை உண்டாக்கியது. இருந்தாலும் ஒரு மணிநேரம் என் பேச்சு பதிவு செய்யப்பட்டது.
நெருக்கடிகளில் நடந்த பதிவு எவ்வாறு ஒலிபரப்பாகுமோ
என்ற ஒரு தயக்கம் எனக்கு இருந்தது. பல நாட்டு நண்பர்கள் கேட்கும் பாடல் சிறப்பாக இருந்தால்
மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும், இல்லையேல் குழுக்கூட்டம் நடத்தும் நண்பர்கள்
கூடிவிவாதிக்க வழிசெய்துவிடுமே என்ற ஒரு கவலை இருந்தது.
ஒலிபரப்பு நாள்(08.08.2015) தெரிந்தது. இரவு 9 மணி முதல்
10 மணிவரை என் உரை ஒலிபரப்பாகும் என்று தெரிந்தது. அன்று நான் சென்னையில் இருக்க வேண்டிய
நிலை. எனவே சென்னைப் பணிகளை முடித்துக்கொண்டு நிகழ்ச்சி கேட்க இரவு 9 மணிக்குப் புதுவை
திரும்ப நினைத்திருந்தேன். ஆறு மணிக்குதான் சென்னை திருவான்மியூரில் பேருந்தேறினேன்.
வண்டி இந்த வேகத்தில் சென்றால் ஒன்பதரை மணியாகும். இடையில் உணவுக்கு மரக்காணத்தில்
நின்றால் பத்தாகிவிடும் என்று நினைத்தேன். என் கடிகாரமுள் வேகமாக ஓடுவதாகவும், அமர்ந்து
பயணம் செய்த பேருந்து நகர்வதாகவும் உணர்ந்தேன்.
பத்துமணிக்கு மரக்காணத்தில் வண்டியை
நிறுத்தி ஓட்டுநர் உண்டுமுடித்து, ஒரு பையில் தேவையானவற்றைக் கட்டி வாங்கிக்கொண்டு
வந்தார். வண்டியை அவர் செலுத்திப் புதுவை வந்துபொழுது பத்தே முக்கால் மணி. இல்லம் செல்லும்பொழுது
மணி பதினொன்றாகியிருந்தது. ஹாங்காங்கு வானொலியின் தமிழோசையில் என் குரல் காற்றில் கலந்ததையும்,
அதனை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் கேட்டுள்ளனர் என்பதையும் காலையில் வந்திருந்த
மின்னஞ்சல்கள் உணர்த்தின. நண்பர் திரு. இராம் அவர்கள் மறுநாள் அனுப்பிய இணைப்பில் என்
பதிவினைக் கேட்டு ஆறுதல் பெற்றேன். தமிழ் ஓசை நண்பர்களுக்கு என்றும் நன்றியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக