சிங்கப்பூரில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகளுள்
புதுமைத்தேனீ மா. அன்பழகன் அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். இலக்கியப் படைப்பாளியாகவும்,
இலக்கியம் படைப்போரை ஊக்குவிக்கும் சிறந்த தமிழ்த்தொண்டராகவும் விளங்குபவர். சிங்கப்பூர்
செல்லும் யாவரையும் அன்புடன் வரவேற்று, மேடையமைத்து உரையாற்றச்செய்யும் பேருள்ளம்கொண்டவர்.
சிங்கப்பூர் இளைஞர்களைத் தம் ஆற்றல்மிகும் செயல்திறனால் அரவணைத்துப் போற்றும் நல்லுள்ளம்
கொண்டவர். இவர் பணிகளைக் கண்டும் கேட்டும் வியப்புற்று, இவர் பற்றி ஒரு முடிவுக்கு வந்தவர்கள் கடைசியாக நம்பமுடியாமல்
திகைக்கும் இடம் ஒன்று உண்டு. அது மா. அன்பழகன் அவர்களின் தோற்றமும் அதற்குப் பொருந்திவராத
அகவையும் யாராலும் நம்பமுடியாது. ஆனால் நம்பிதான் ஆகவேண்டும். இவரின் இளமைத்தோற்றம்,
அகவை குறித்த விவாதம் சிங்கப்பூர் நண்பர்களின் உரையாடல்களில் அவ்வப்பொழுது கட்டாயம் இடம்பெறும்.
மா. அன்பழகன் அவர்கள் கவிதை, கட்டுரை, புதினம்,
சிறுகதை, சிறுவர் இலக்கியம், திரை இலக்கியம், கடித இலக்கியம், மேடைப்பேச்சு என அனைத்துத்
துறைகளிலும் ஆற்றலுடன் விளங்குபவர். திரைத்துறையில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும்
இருந்து பணிபுரிந்தவர்.
மா. அன்பழகன் அவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம்
வட்டம் ஆயக்காரன்புலம் என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர்கள் மாசிலாமணி, செல்லம்மாள்
ஆகியோரின் பதின்பிள்ளைகளுள் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர். பிறந்த ஊரில் பள்ளிப்படிப்பும்,
அதிராம்பட்டினம், கும்பகோணம், சென்னையில் மருத்துவக்கல்லூரியில் படித்திருந்தாலும்
இவர்தம் பட்டப்படிப்பு முற்றுப்பெறாமல் போனது.
1971 ஆம் ஆண்டு மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்
அவர்களின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டவர். இவரின் இல்லறத் துணைவியார் திருவாட்டி
திலகவதியார் ஆவார். இவர்களின் இல்லறப் பயனாகச் செல்வம், இராமையா என்னும் ஆண்மக்களைப்
பெற்றனர். இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களிடம் பதினைந்து படங்களுக்கு மேல் துணை இயக்குநராகப்
பணிபுரிந்த பெருமைக்குரியவர். பாத பூஜை, புது செருப்பு கடிக்கும் உள்ளிட்ட படங்களைத்
தயாரித்தவர்.
மாண்புமிகு தமிழக
முதல்வராக இன்று விளங்கும் ஜெ. ஜெயலலிதா அவர்கள்
திரைத்துறையில் புகழுடன் விளங்கிய சூழலில் அவரை நாயகியாக வைத்துக் குறும்புக்காரி எனும் படத்தைத் தயாரித்து, பாதியிலேயே படத்தை
நிறுத்தவேண்டிய சூழ்நிலை அக்காலத்தில் ஏற்பட்டுவிட்டது. எனினும் புரட்சித் தலைவி அவர்கள்
தம் நூறாவது பட விழாவின்போது, படமெடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்கிற முறையில் நினைவுப் பரிசு வழங்கி இவரைப் பாராட்டியுள்ளார்.
1994 ஆம்
ஆண்டு முதல் சிங்கப்பூரில் தங்கி வணிகம் செய்யத் தொடங்கினார். இப்பொழுது முழுநேர இலக்கியப்பணியாற்றி
வருகின்றார்.
கவிமாலை என்னும் இலக்கிய அமைப்பை
ஏற்படுத்தி, சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்க்கலைக்கும் தொண்டாற்றி வருபவர்.
மா.அன்பழகன் அவ்வர்களின் கவிதை
ஈடுபாட்டை அறிந்த உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் இவருக்கு 1990
இல் கிருட்டினகிரியில் நடைபெற்ற உலகக் கவிஞர் மன்றத்தின் சார்பில் இவருக்குக் "கவிமாமணி" பட்டம்
வழங்கிச் சிறப்பித்தார்.
மா.அன்பழகன் அவர்களின் நூல்கள்
சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் தமிழகத்தின் பல்வேறு
கல்லூரிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவர்தம் படைப்புகளை ஆய்ந்து பலர் பட்டம்பெற்றுள்ளனர்.
ப.சு.ஆவணப்பட விழாவை ஒருங்கிணைத்து வெளியிட்ட
கவிமாலை மா. அன்பழகன் அவர்கள்
இவர் எதனையும் புதுமையாகவும் மக்கள் ஏற்கும் வண்ணமும்
செய்வதால் இவருடைய 60 ஆம் ஆண்டின் நிறைவு விழாவின்போது "புதுமைத்தேனீ"
என அன்போடு அழைக்கப்பட்டார். அதுவே அவருடைய செயற்பாட்டால் இன்றும் நிலைத்து நிற்கிறது. வாழ்வில் நேர்மையையும் சிந்தனையில் புதுமையையும், செயலில் உண்மையான உழைப்பையும், கொண்டவர். மக்களுக்குப் பயன்படும் பொதுநலச் சேவையும், அன்பான மனித நேயப் பண்புகளும் இவருடைய இனிய குணங்கள்.
மா. அன்பழகன் அவர்களின் தமிழ்க்கொடை:
சமுதாயச் சந்தையிலே.... .....கட்டுரை - 1985
அலைதரும் காற்று..............கவிதை
ஜூனியர் பொன்னி.............புதினம்
மடிமீது விளையாடி..............புதினம்
இதில் என்ன தப்பு...............திரைக்கதை
அந்தப் பார்வையில்...............புதினம் -
1987
பழமும் பிஞ்சும்.....................சிறுவர் இலக்கியம்
ஒன்றில் ஒன்று.....................கவிதை(ஆங்கில மொழிமாற்றத்துடன் ) 2003
இப்படிக்கு நான் ...................படச்சுவடி
விடியல் விளக்குகள்............. சிறுகதைகள் 2005
உடன்படுசொல் ....................மேடைப் பேச்சு
2006
இன்னும் கேட்கிற சத்தம்
பதிவு(உரை வீச்சு) 2007
ஆயபுலம் ............................புதினம் 2009
என்பா நூறு .......................வெண்பா
BUBBLES OF FEELINGs...சிறுகதைகள்
என் வானம் நான் மேகம் ........சிறுகதைகள் 2010
BEYOND THE
REALM..........சிறுகதைகள் 2011
கவித்தொகை ........................கவிதை - 2012
திரையலையில் ஓர் இலை .......கட்டுரை
கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம் - 2014
புதுமைத்தேனீ கவிமாலை மா. அன்பழகனாரின் தமிழ்ப்பணி
தொடர்வதாகுக!
திரு மா.அன்பழகன் அவர்களுடைய பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வழக்கம் போல தங்களின் அறிமுகங்கள் அனைவரும் எங்களுக்கு பிரமிப்பைக் கொடுக்கின்றனர். பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்கு