முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் என்ற
மூன்று பெயர்களும் இணையத்துறையில் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர்கள்.
இதில் முரசு அஞ்சல் தமிழ்த் தட்டச்சுத்துறையில் பரவலாக அனைவருக்கும் உதவும் மென்பொருளாக
உள்ளது. செல்லினம் கையடக்கக் கருவிகளில் தட்டச்சிட உதவுவோருக்கு மிகப்பெரும் பயன் நல்கும்
மென்பொருள். செல்லியல் என்பது செய்தி ஏடாக இணையத்தில் கோலோச்சுகின்றது.
இம்மூன்றையும் தமிழுலகுக்கு வழங்கியவர் திரு.
முத்து நெடுமாறன் ஆவார். மலேசியாவின் புகழ்பெற்ற பாவலரான முனைவர் முரசு.நெடுமாறன் அவர்களின்
அருமைப் புதல்வர்தான் நம் முத்து அவர்கள். இவர்தம் இயற்பெயர் முத்தெழிலன். திரு. முத்து
அவர்கள் தந்தையார் வழியில் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் நிலையில் தொடர்ந்து சிந்திப்பவர்.
கணினியிலும், கையடக்கக் கருவிகளிலும் தமிழை உள்ளிட்டுத் தமிழர்கள் அனைவரும் தடையின்றித்
தமிழைப் பயன்படுத்த வழிகண்டவர். உலக அளவில் பல முன்னணிக் கணினி நிறுவனங்களுடன் இணைந்து
பணிபுரிபவர். பல நாட்டு அரசுகளின் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுரைஞர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நான் பணிசெய்தபொழுது
திரு. முத்து அவர்களை 1997 இல் முதன் முதல் சந்தித்தேன். அப்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத்தில்
முத்து அவர்கள் பேசியபொழுது முனைவர் பொற்கோ உள்ளிட்ட யாவரும் கேட்டு மகிழ்ந்தோம்.
ஒரு மழைநேரத்து மாலைப்பொழுதில் சென்னை அடையாற்றில்
அவரை ஒரு புகைப்பட நிலையம் அழைத்துச் சென்று படம் எடுத்தேன். அதன்பிறகு தினமணிக்கதிரில்
முத்து அவர்களின் பணிகளை அறிமுகம் செய்து ஒரு கட்டுரை எழுதிய நினைவு வந்து அலைமோதுகின்றது.
பின்னர் மலேசியா சென்றபொழுது அவர்களின் இல்லம் சென்று கண்டு உரையாடினேன்.
சிலவாண்டுகளுக்கு முன் தமிழ்நாடு திறந்தநிலைப்
பல்கலைக்கழகத்தில் அவரின் உரையமைய ஏற்பாடுகள் நடந்தபொழுது அருகிருந்து கண்டு மகிழ்ந்தவன்.
முத்து அவர்களின் தலைமையில் அந்தப் பாடத்திட்டக் குழுவில் இணைந்து பணிபுரிந்தமை வாழ்வில்
நினைக்கத் தகுந்த பொழுதுகள். கையடக்கக் கருவிகளில் தமிழை உள்ளிட அவர் மேற்கொண்ட முயற்சிகளையும்,
அவர்தம் உரையையும் கேட்டு அரங்கில் இருந்த அனைவரும் பாராட்டி மகிழ்ந்தோம்.
கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அவர்தம் பணிகளை
அருகிருந்து கண்டு வியந்துள்ளேன். நண்பர்கள் உரைக்கக் கேட்டும் பூரித்துள்ளேன். முத்து
அவர்களின் பணிகள் இத்தமிழுலகு உள்ளவரை போற்றப்படும். அவரும் அவர்தம் நிறுவனமும் பொன்விழா
கண்டு புவிபோற்ற வளர வாழ்த்துகின்றேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக