அன்புள்ள டாக்டர் மு.இளங்கோவன் அவர்களுக்கு,
நலம். நலமறிய ஆவல். பண்ணாராய்ச்சி
வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் ஆவணப்படம் தொடர்பாக
நம்மிடையே இணக்கம் நேர்ந்து இருப்பதை இனிய அனுபவமாய்க் கருதுகிறேன். தாங்கள் அனுப்பிய ஒளிவட்டுக் கிடைத்தவுடன் அதற்கு இரண்டு
படிகள் எடுத்து ஒன்றினைத் திருச்சி அறிவாளர் பேரவைக்கும், இன்னொன்றைத்
திருச்சி ரசிக ரஞ்சன சபாவுக்கும் அனுப்பி உள்ளேன். சம்பந்தப்பட்டவர்களிடம்
பேசியும் உள்ளேன். அவர்களின் முகவரியும் தொலைபேசி எண்ணும் கீழே
குறிப்பிட்டு உள்ளேன். தாங்கள் தேவைக்கு ஏற்பத் தொடர்புகொள்ளவும்.
….
செண்பகத் தமிழ் அரங்கோடும் முயன்றேன். அந்த நண்பர் இளங்கோவன் உங்கள்
தொடர்பை வியந்து கூறினார். இவர்கள் எல்லோரும் காண்பதற்கு முன்னால்
ஒளிவட்டை நான் காண நேர்ந்தது இறைவன் அருளேயன்றி வேறில்லை அன்றோ? இனி ஒளிவட்டைப் பற்றி சில வார்த்தைகள்.
எடுத்த எடுப்பிலேயே என் இனிய சகோதரர் ரஹ்மத்
பதிப்பக உரிமையாளர் ஹாஜி முஸ்தபா அவர்களைப் பற்றிய குறிப்பைப் பார்த்ததும் குளிர்ந்தது
என் மனம்.
ஒளிவட்டின் ஒவ்வொரு அம்சமும் மிக நேர்த்தியாக
வந்துள்ளன. சிறந்த
ஒலி, ஒளி அமைப்பு, இசைக்கூட்டு,
தேர்ச்சி பெற்ற நடனக் கலைஞர் தேர்வு, இயற்கைக்
காட்சிகள், காவேரியின் பாய்ச்சல் இவை எல்லாமே உங்களுடைய திறமைக்கும்,
தகுதிக்கும் சான்று கூறுபவையாக அமைந்து உள்ளன.
ஆவணப்படம்
நெடுகிலும் கனீர் என்ற குரலில் பாடியிருக்கும் பண்ணாராய்ச்சி வித்தகரின் பாடல்கள் மனதைக் கவர்கின்றன.
சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்தில் தொடங்கிக் கானல்வரி, ஆய்ச்சியர் குரவை முதலிய பாடல் பகுதிகளும், திருவாசகம்,
மற்றும் இன்ன பிற பகுதிகளும் மிகச் சிறப்பாகப் பதிவாகி உள்ளன.
அறிஞர்கள் நட்புமிகு அவ்வை நடராசன், சிலம்பொலி செல்லப்பன்,
இலட்சுமிநாராயணன் இன்னும் பல அறிஞர்கள் கருத்துக்கோர்வைகள் கற்கண்டாய்
இனித்தன. மொத்தத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் பற்றிய ஒளிவட்டு
குடந்தையாரின் தமிழ்ப்பணிக்கு ஒரு மணிமுடி. உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
அருமை நண்பர் முத்துக்குமாரசாமி அவர்களுக்கும்
விவரங்கள் கூறுங்கள்.
பிற பின் என்றும் தங்கள்
அன்பில் இன்புறும்
பி.
யூ. அய்யூப்
14.02.2015
நாளிட்டு எழுதிய மடல்.
தங்களின் அயரா முயற்சிக்குக் கிடைத்தப் பாராட்டு மகிழ்வினை அளிக்கின்றது ஐயா
பதிலளிநீக்கு