பண்ணாராய்ச்சி வித்தகர்
குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914 - 09. 06.1981)
“பண்ணாராய்ச்சி வித்தகர்” எனவும் “ஏழிசைத் தலைமகன்” எனவும் “திருமுறைச்
செல்வர்” எனவும் போற்றப்பட்ட குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப்பணி தமிழ் இலக்கிய வரலாற்றில் போதிய அளவில்
இடம்பெறாமை ஒரு குறையே ஆகும். பரிபாடல், சிலப்பதிகாரம், பன்னிரு திருமுறைகள், நாலாயிரப் பனுவல், சிற்றிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள
இசைநுட்பங்களைப் பாடி எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவராகக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் விளங்கினார்கள். தமிழகத்தின் பல
ஊர்களில் வாழ்ந்த தமிழன்பர்கள் இப்பெருமகனாரின் இசையார்வம் அறிந்து இயன்ற வகையில் துணைநின்றுள்ளனர்.
ஆயினும் இப்பெருமகனாரின் முழுத்திறனையும் எதிர்காலத் தமிழ்க் குமுகம்
முற்றாக அறியும் வண்ணம் இவர் நூல்கள் பாதுகாக்கப்படாமல் போனமையும் தமிழிசை உரைகள் காற்றில்
கரைந்தமையும் நம் போகூழ் என்றே சொல்ல வேண்டும்.
“தமிழுக்குத் தொண்டு செய்தோன்
சாவதில்லை” என்ற கூற்றுக்கு ஏற்பத் தமிழிசை பரப்பிய
இப்பெருமகனாரின் சிறப்புகளை உலகம் வாழ் தமிழர்கள் அறியும் வண்ணம் நினைவுகூரவும்,
ஆவணப்படுத்தவும் தமிழன்பர்கள் சிலரின் துணையுடன் பண்ணாராய்ச்சி வித்தகர்
குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவினை நடத்த முடிவுசெய்துள்ளோம்.
உலக அளவில் இதற்கான ஓர் ஆய்வறிஞர் குழுவும்,
கருத்துரை வழங்கும் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதுவையிலும் தமிழகத்திலும் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதுடன் தமிழர்கள் நிறைந்து வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், அமெரிக்கா, கனடா, குவைத்,
பிரான்சு உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடுவதற்குத் தமிழர்கள் முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். குடந்தை
ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும்படித் தமிழ் அமைப்புகளை அன்புடன் வேண்டிக்கொள்வதுடன்,
தமிழக அரசு குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடவும் நூல்களை நாட்டுடைமை
ஆக்கவும் தமிழிசை ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம். மேலும் நூற்றாண்டு நினைவாக
இசைக்கல்லூரி ஒன்றிற்குக் குடந்தை ப. சுந்தரேசனாரின் பெயரை வைக்கும்படியும் அன்புடன்
கேட்டுக்கொள்கின்றோம்.
குடந்தை
ப.சுந்தரேசனார் பற்றிய குறிப்புகள்
தஞ்சாவூர் மாவட்டம் குடந்தையில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின்
மகனாக 28.05.1914 இல் பிறந்தவர்.
திருவநந்தபுரம் இலக்குமணபிள்ளை அவர்களிடம் தமக்கிருந்த
இசையீடுபாட்டைச் சொல்லி இசை கற்பிக்கும்படி வேண்டினார். ப.சுந்தரேசனாரின் இசை
ஈடுபாட்டைப் பாராட்டிய இலக்குமணபிள்ளை அவர்கள் அங்குத் தங்கிப்படிக்க
வாய்ப்பின்மையைச் சொல்லிக் குடந்தைக்கு அனுப்பி வைத்தார்.
ப.சுந்தரேசனார் முதன்முதல் (பிடில்)கந்தசாமி தேசிகர்
என்பவரிடம் இசைபயின்றார். பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சிலகாலம்
இசைபயின்றார். அதன்பின்னர் 1935
முதல் ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாகக் குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் அவர்களிடம் செவ்விசை
பயின்றுள்ளார்.
ப.சுந்தரேசனார் அவர்கள் 1944 இல் திருவாட்டி சொர்ணத்தம்மாளை மணந்தார்.
ப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் ஈடுபாடுகொண்ட அன்பர்களால் ஆடுதுறையில் 1946
இல் அப்பர் அருள்நெறிக்கழகம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர்
இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. ஆடுதுறை திரு.வைத்தியலிங்கம் அவர்கள் இப்பணியில்
முன்னின்றார். நாகைப்பட்டனத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர்கோ கோவை.இளஞ்சேரன்
அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத் தமிழ்ச்சங்கத்தில் ப.சுந்தரேசனார்
சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை
மக்களிடம் ஏற்படுத்தினார். திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருத்தவத்துறையில் இலால்குடி) ப.சு.நாடுகாண் குழு செயல்படுகின்றது.
1949
முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில்
புலவர் வகுப்பு இசையாசிரியராகவும், 1952சூலை முதல் 1955
வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும்
பணிபுரிந்துள்ளார்.
அருட்செல்வர் நா.மகாலிங்கனார், நீதியரசர்
செங்கோட்டுவேலனார் முதலானவர்கள் ப.சுந்தரேசனார் இசையில் திளைத்தனர். இவர்தம் அருமை
அந்நாள் முதலமைச்சர்கர்களாக விளங்கிய கலைஞர் மு. கருணாநிதி.
ம.கோ.இராமச்சந்திரனார்(எம்.ஜி.ஆர்) முதலானவர்களுக்குத்
தெரிவிக்கப்பட்டதும் இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன.
ம.கோ.இராமச்சந்திரனார் வள்ளுவர்கோட்டத்தில் இவர்தம்
பாடலைக்கேட்டு வியப்புற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர்
வ.சுப.மாணிக்கனார் அவர்களால் சிலகாலம் தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
ப.சுந்தரேசனார் அவர்களுக்கு விபுலானந்தரின் தொடர்பு
கிடைத்ததும் சிலப்பதிகார இசையாய்வில் தோய்ந்தார். குடவாசல் என்னும் ஊருக்கு
அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர்(திருக்களம்பூர்) என்ற ஊரில் 1947 இல் நடைபெற்ற
விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் அடிகளார் வியந்து போற்றும் வண்ணம்
ப.சுந்தரேசனார் அரியவகையில் யாழ்நூலின் சிறப்பினை விளக்கியபொழுது அடிகளார் வியந்து
பாராட்டினார்.
இவர் பஞ்சமரபு(1975)
நூலுக்கு உரைவரைந்தமையும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
ப.சுந்தரேசனார் அவர்களின் வழிவழி வாரிசுகளாகச் சிலரை
உருவாக்கியுள்ளார் அவர்களுள் திரு.வைத்தியலிங்கம், திரு.கோடிலிங்கம் குறிக்கத்தக்கவர்கள்.
குடந்தைக்
கதிர். தமிழ்வாணன் அவர்கள் ப.சுந்தரேசனாரின் புகழை நினைவுகூர்ந்தவர்களில் முதன்மையானவர்.
குடந்தை.சுந்தரேசனாரின்
தமிழ்க்கொடை:
1.இசைத்தமிழ்ப்பயிற்சி நூல்(1971) திருப்பத்தூர்(முகவை)த்
தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு
2.முதல் ஐந்திசைப்பண்கள்(1956) பாரி நிலையம்,
3.முதல் ஐந்திசை நிரல்,
4.முதல் ஆறிசை நிரல்,
5.
முதல் ஏழிசை நிரல்
முதலான நூல்களை எழுதியவர்.
மேலும் ஓரேழ்பாலை,
இரண்டாம் ஐந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல்,
பரிபாடல் இசைமுறை, பாணர்கள் பயிற்றுவித்த
இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ்
அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம், சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமையக்குரவர்கள்
கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள், தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய
இசைத்தமிழ்க்குறிப்புகள், இசைத்தமிழ்-தமிழிசைப்பாடல்கள்,
இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின.
தமிழிசை குறித்த ப.சுந்தரேசனார் அவர்களின் முடிவுகள் :
1.தமிழ்மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.
2.முல்லை நில மக்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவிகளையும்
கண்டுபிடித்தனர்.
3.முதலில் குழல்கருவி ஐந்து துளைகளைக்கொண்டிருந்தது. அதுபோல் ஐந்து
நரம்புகள் கொண்ட யாழ் பயன்படுத்தப்பட்டது.
4.ஐந்து துளைகளின் வழியாக எழுந்த ஐந்து இசைகளே ஆதி இசையாகும்.
5.குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை
வளர்ச்சியுற்றது.
6.இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.
7.முதல் ஐந்திசைபண்ணின் இசைநிரல் முதலியன 1.தாரம்,
2.குரல், 3.துத்தம், 4.உழை,
5.இளி என்பன
8.முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம்
எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று
மோகனம் என்று வழங்கப்படுகின்றது.
9.இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி,
செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி
எனப்படுகிறது.
10.மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம், வடுகு எனப் பண்டு
பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.
11.நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.
12.ஐந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.
13.தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்தமிழகத்தில்
வழங்கப்பட்ட இசையேயாகும்.
14.பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும், திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன.
நன்றி:
பாவாணர்
தமிழ்க்குடும்பம்(நெய்வேலி)
பேராசிரியர்
சிவக்குமார்(குடந்தை)
நினைவில்
நிற்கும் குடந்தைக் கதிர். தமிழ்வாணன்
திரு.ஆ.பிழைபொறுத்தான்(மேலமுடிமண்)
மேலும் விரிவுக்கு என் பழைய கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.
Thank you for sharing this great article. I have recommended to dedicate 2014 FeTNA Vizha to Kudanthai Pa. Sundrasanar. Mostly it will happen.
பதிலளிநீக்குRegards
Naanjil Peter