சாமி.பழனியப்பன்
பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரும், திரைப்பா
ஆசிரியர் திரு. பழநிபாரதி அவர்களின் தந்தையாருமான ஐயா சாமி.பழனியப்பன் அவர்கள் நேற்று
(20.07.2013) சனிக்கிழமை இரவு தம் 82 ஆம் அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து
ஆழ்ந்த துயருற்றேன். 16, 17 – 08 - 1993 இல் இருமுறை ஐயா சாமி பழனியப்பன் அவர்களை உவமைக்கவிஞர்
சுரதா அவர்களுடன் சென்னையில் அவர் இல்லம் சென்று சந்தித்துள்ளேன். பழகுதற்கு இனிய பண்பாளர்.
ஊற்றமான கொள்கைப்பிடிப்பாளர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,
கலைஞர், தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழகத்துப் பெரியோர்களுடன் நல்ல தொடர்பில்
இருந்தவர்.
பொன்னி இதழில் அமைதிகொள்வாய் என்ற தலைப்பில்
இவர் எழுதிய பாடல் (1947, நவம்பர்) இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.
இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி இதழில் இவர் துணையாசிரியராகப் பணியாற்றியவர்.
சாமி.பழனியப்பன் அவர்களின் தந்தையார் உ.வே.சாமிநாதன்
அவர்கள் தீவிரமான சுயமரியாதைக்காரர். எனவே சாமி. பழனியப்பனுக்கு இளமையிலிருந்து சுயமரியாதை
உணர்வு சிறப்பாக அமைய வாய்ப்பு ஏற்பட்டது.
சாமி. பழனியப்பன் அவர்கள் மேலைச்சிவபுரி
கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். இவர்தம் இளம் வகுப்புத் தோழர்களாக
முடியரசன், தமிழண்ணல், மெ. சுந்தரம் முதலானவர்கள் விளங்கினார்கள். பள்ளி, கல்லூரிகளில்
பயின்றபொழுதே இலக்கிய மன்றங்களில் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டவர். இளமையில் கரந்தைக்
கவியரசு இரா. வேங்கடாசலம் பிள்ளையின் தலைமையில்
“நான் விரும்பும் கவிஞர்” என்னும் தலைப்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைப் பற்றிச்
சொற்பொழிவாற்றிய பெருமைக்குரியவர். இவர் குமரன், பொன்னி, வீரகேசரி, திராவிடநாடு, வாரச்செய்தி(காரைக்குடி), தென்றல் முதலான இதழ்களில் எழுதியவர்.
“சிரிக்கும் வையம்” என்ற தலைப்பில் இவர்
இயற்றிய இந்தி எதிர்ப்புப்பாடல் அடங்கிய நூல் வெளிவந்துள்ளது. பாரதிதாசனுடன் இரண்டாண்டுகள்
தங்கி அவர் உதவியாளராகவும், திருக்குறள் புரட்சி உரை அச்சுப்பணி பொறுப்பாளராகவும் செயல்பட்டவர்.
இவர் பாவேந்தர்மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதற்கு அடையாளமாகப் பாரதியாரையும்
பாரதிதாசனையும் ஒப்பிட்டு 1953 இல் “பாரதியும் பாரதிதாசனும்” என்ற தலைப்பில் சிறிய நூலை வெளியிட்டவர்.
சாமி.பழனியப்பன் கவிதைகள் என்ற இவர்தம் நூல் இவர் மிகச்சிறந்த கவிஞர் என்பதை மெய்ப்பிக்கும்
சான்றாக உள்ளது.
பொன்னியில் வெளிவந்த சாமி. பழனியப்பன் கவிதை
அமைதிகொள்வாய்!
அலைகடலே! இவ்வுலகின் பெரும்பகுதி தன்னை
ஆளுகிறோ மென்கின்ற ஆணவத்தி னாலா
நிலைகெட்டுச் சினக்கின்றாய்? உன்னா லிந்த
நீணிலத்திற் கெள்ளளவும் நன்மை யுண்டா?
அலைகளைநீ அடுக்கடுக்கா யனுப்பு கின்றாய்,
அன்னவையோ மடிந்துபடும் ஒவ்வொன் றாக,
நிலைமறந்தே, உயர்வானைப் பிடிக்க ஏனோ
நினைக்கின்றாய்! மறந்துவிடு! அமைதி கொள்வாய்!
வறுமைமிகு தொழிலாள ருணர்வு பெற்று,
வஞ்சகரின் நெஞ்சுகளில் வாள்பு குத்தப்
புறப்பட்டா ரெனக்கூறும் வகையில் நீயும்
பொங்குகின்றா யென்றாலும் மறுக ணத்தில்
இறந்துவிடு கின்றனையே! புறப்பட்டோரின்
இறுதிநிலை யுணர்த்துவதா யெண்ணம் போலும்!
மறந்துவிடு! தொழிலாளர் புரட்சி தன்னை
மாய்க்கவொணா திவ்வையம்! அமைதி கொள்வாய்!
மணித்துளிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சென்று
மடிதலுக்கோர் எடுத்துக்காட் டாய்வி ளங்கும்
அணிவகுத்துச் சென்றழியும் அலைகள் யாவும்!
ஆர்ந்துள்ள இவ்வுலகில் பெண்ணொ ருத்தி,
கணிகையென ஆகின்றாள் சிலரைச் சேர்ந்தால்!
காரிகைகள் பல்லோரை ஒருவன் சேர்ந்தால்
கணிகனென அன்னவனைக் கழற மாட்டார்!
கடலே! அத்துணிவாலா நீயு மிந்நாள்,
திங்களினைக் கண்டதுமே மேலெழும்பித்
தீராத காதலினைத் தீர்க்க எண்ணிப்,
பொங்குகின்றாய்? அதனாலே பயனென் கண்டாய்?
புன்மைக்கும் அன்னவளோ ஒப்ப வில்லை.
மங்காத காதல்கொண்ட அல்லி என்னும்
மலர்வனிதை தனைக்கலந்த பின்னர் வேறு
நங்கையினைக் காதலித்தல் தவறாமென்று
நகைத்தலினைக் கண்டிடுவாய், அமைதி கொள்வாய்!
பொன்னி 1: 10, நவம்பர்,1947, பக்கம்
84,85
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக