பேராசிரியர் க. இராமசாமி அவர்கள்
செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக
விளங்கும் முனைவர் க. இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில்
10.10.09.1948 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்
கந்தசாமி- வள்ளியம்மாள் ஆவர். தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் அவர்கள் வழியாகத் தமிழ்
உணர்வுபெற்ற முனைவர் க. இராமசாமி அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக இளம் அறிவியலில்
பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம்
பெற்றவர். ஆய்வு செய்து மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். ஆங்கிலம், இந்தி,
வங்களாம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளை அறிந்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு
மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் இருந்தவர். 1983 முதல் 2003 வரை மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (CIIL) துணை இயக்குநராகப்
பணியாற்றியவர். மைசூரில் பணியாற்றிய காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களை ஊக்குவிக்கும்
வகையில் பல தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர். தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பலவகையில்
பாடுபட்டுள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் நல்ல ஈடுபாடுகொண்ட
பேராசிரியர் க. இராமசாமி அவர்கள் சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் “புரட்சி செய்” என்ற
தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் வாச்பாய்
அவர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்.
இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய
நிறுவனம் சென்னையில் தொடங்கப்பெற்றதும் அதன் பொறுப்பு அலுவலராக இருந்து நிறுவன வளர்ச்சிக்கு
ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர்.
முனைவர் க. இராமசாமி அவர்களின் முயற்சியில் தொல்காப்பியம் முற்றோதல், பத்துப்பாட்டு முற்றோதல், பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழியில் படித்தல் உள்ளிட்ட குறுவட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. செம்மொழி விருது வழங்கல், ஆய்வுத்திட்டங்களுக்கு நிதிநல்கை, நூலக உருவாக்கம், ஆய்வறிஞர்கள் பணியமர்த்தம், கருத்தரங்குகள் தமிழகமெங்கும் நடத்த ஆவன செய்தமை என்று பல பணிகள் நடைபெற்றன. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணிகள் பலவற்றிற்குக் கால்கோள் இட்ட பெருமை முனைவர் க. இராமசாமி அவர்களுக்கு உண்டு.
முனைவர் க.இராமசாமி அவர்களின் தகவல்களுக்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்கு(10.10.09.1948 கவனிக்கவும்...)