வெள்ளி, 7 டிசம்பர், 2012

அறிஞர் கி.செம்பியன் அவர்களின் தமிழ் வாழ்க்கை…




அறிஞர் கி.செம்பியன் அவர்கள்

 என் உயிர்த்தோழர் முனைவர் சு. தமிழ்வேலு (தமிழ்ப் பேராசிரியர், ஏ.வி.சி.. கல்லூரி, மன்னம்பந்தல்) அவர்களின் வழியாக அறிஞர் கி.செம்பியன் ஐயா அவர்களைப் பற்றி பலவாண்டுகளுக்கு முன்பாகவே அறிவேன். முனைவர் கி.செம்பியன் அவர்கள் இலக்கணத்தில் பேரீடுபாடுகொண்டவர்கள் என்பதை அவர்களின் நூல்கள் வழியாகவும் கட்டுரை வழியாகவும் அறிந்தேன். அவர்களின் க்,ச்,த்,ப் மிகுதலும் மிகாமையும் என்ற நூல் முன்பே எனக்கு அறிமுகம்.

 அண்மைக்காலமாக அறிஞர் செம்பியன் அவர்களைச் சந்தித்து உரையாடும் பேறுபெற்றேன். அறிஞர் செம்பியன் அவர்கள் அண்மையில் அனுப்பி வைத்த தமிழில் ஒருமை- பன்மை விளக்கமும் ஒற்றுமிகுதலும் என்னும் நூலைக் கற்றபிறகு அவர்களின்மேல் எனக்கு அளவுகடந்த மதிப்பு ஏற்பட்டது.

 தமிழில் இடர்ப்படும் இலக்கணப் பகுதிகளை விளக்கும் வகையில் அந்த நூல் அமைந்திருந்தாலும் அதனை நுணுகிக் கற்கும்பொழுது அறிஞர் செம்பியனாரின் திருக்குறள் புலமை, பரிமேலழகர் உரையில் அவருக்குள்ள ஆழ்ந்த பயிற்சி, தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களில் உள்ள பயிற்சி, தமிழண்ணல், அ.கி.பரந்தாமனார் போன்ற தமிழறிஞர்களின் இலக்கணக்கருத்துகளில் அமைந்த பற்று, இன்றைய நடப்பியல் அறிவு யாவும் கண்டு மலைத்துப்போனேன்.

இவரிடம் மாணாக்கனாக இருந்து படிக்கும் வாய்ப்பு இல்லையே என்று கவலைகொண்டேன். பெருமைக்குரிய அறிஞரின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

அறிஞர் கி.செம்பியனாரின் தமிழ் வாழ்க்கை:

 அறிஞர் கி.செம்பியனார் அவர்கள்  நாகை மாவட்டம், செம்பியன் மாதேவி என்னும் ஊரில் 27.05.1947 இல் பிறந்தவர். பெற்றோர் முருகம்மாள்- கிருட்டினமூர்த்தி ஆவர்.

 அண்ணாமலைப் பல்கலைக்கழகமத்தில் கல்வி பயின்ற பெருமைக்குரியவர்.

 முனைவர் பாஸ்கரன், முனைவர் .சுப.மாணிக்கம்புலவர் வெள்ளைவாரணார், மகாவித்துவான் .தண்டபாணி தேசிகர்முனைவர் சொ.சிங்காரவேலன் (ஆய்வு நெறியாளர்) ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து நெறிப்படுத்தியவர்கள்.

கல்வித் தகுதி            :            எம்.., தமிழ இலக்கியம் (..கழகம்)
                                         :               பிஎச்.டி., (சென்னைப் பல்கலைக்கழகம்)

ஆய்வுத் தலைப்பு      :     கண்ணதாசன் கவிதைகளில்
                                                 பாரதி பாரதிதாசனின்         தாக்கம்

பணியாற்றிய கல்வி நிறுவனங்கள்:
 1972 - 1973 பயிற்றுநர்,  அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1973முதல்2005வரை : விரிவுரையாளர், தமிழ்த்துறைத் தலைவர், ஏவிசி கல்லூரி(தன்.), மன்னன்பந்தல்மயிலாடுதுறை.

படைத்துள்ள நூல்கள்

1. 1981 - பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறம் - ஒப்பாய்வு
               
                பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களைப் பாரதி பாரதிதாசனோடு ஒப்பிட்டு அமைந்த ஒப்பாய்வு நூல், இதில்பாரதியின் தாக்கமும் பட்டுக்கோட்டையின் ஆக்கமும்”, “பாவேந்தரின் புரட்சியும் பட்டுக்கோட்டையின் மலர்ச்சியும்என்னும் இரண்டு பெரிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இலங்கைத் தமிழறிஞர் .கைலாசபதியின் அணிந்துரையும், முனைவர் பொற்கோ அவர்களின் சிறப்புரையும்  இந்நூலுக்குக் கிட்டியுள்ளன. மொத்தப் பக்கங்கள் 208 (கிரெளன் அளவு )

2. 1998 -  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தனித்தன்மைகள்

                இந்நூல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை 11, 12, 13 – 04-1990 ஆகிய நாள்களில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அறக்கட்டளைக்காக எடுத்த விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் ஆக்கமாகும். இதனுள், 1. பட்டுக்கோட்டையார் - ஒரு நன்னம்பிக்கையாளர் 2. வாழ்க்கைச் சித்திரம், 3. பட்டுக்கோட்டையின் தனித்துவம் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலுக்கு முனைவர் மா.இராமலிங்கம் (எழில் முதல்வன்) அணிந்துரை வழங்கியுள்ளார். மொத்தப் பக்கங்கள் - 86 (டெமி அளவு)

3. 2000 - கண்ணதாசன் விதைகளில் பாரதி பாரதிதாசனின் தாக்கம்


                இஃது ஆசிரியரின் முனைவர்ப்பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவமாகும். இதனுள், 1. பாரதி - பாரதிதாசன் - கண்ணதாசன் வாழ்க்கை ஒப்பீடு - ஒரு திறனாய்வுப் பார்வை. 2. பாரதியின் முன்னோடித் திறம். 3. பாரதிதாசனின் முன்னோடித் திறம். 4. கண்ணதாசன் கவிதைகளில் பாரதியின் தாக்கம். 5. கண்ணதாசன் கவிதைகளில் பாரதிதாசனின் தாக்கம். 6. பாடல் ஒன்று கூடல் இரண்டு என்னும் ஆறு தலைப்புக்களில் ஆய்வுக் கருத்துக்கள் உண்டு. இதற்கு முனைவர் அருகோ (எழுகதிர் ஆசிரியர்), முனைவர் ..சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் அணிந்துரைகள் எழுதியுள்ளனர். மொத்தப் பக்கங்கள்  ‡ 672 (டெமி அளவு)

இலக்கண நூல்கள்

4. 1998 - க்,ச்,த்,ப் - மிகுதலும் மிகாமையும்

                ஒற்றெழுத்து மிகுதலும் மிகாமையும் குறித்துத் தொல்காப்பிய நன்னூல் விதிகளுக்கு உட்பட்டு அறிவியல் நோக்கில் ஒழுங்குமுறைப்படி உருவாக்கப்பட்ட நூலாகும். மொத்தப் பக்கங்கள் - 88 (கிரெளன் அளவு)

5. 2002 - தொகைகள்

                வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, பண்புத்தொகை, அன்மொழித்தொகை ஆகிய ஆறு தொகைகள் குறித்துப் புதிய புதிய எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கப்பட்ட நூலாகும். மொத்தப் பக்கங்கள் - 78 (கிரெளன் அளவு)

6. 2004 - ஒருமை பன்மை

                இன்றைய தமிழில் எங்கும் தவறு எதிலும் தவறு என்னும் நிலை உருவாகியுள்ளது. பத்திரிகைத் தமிழில், வானொலிப் பேச்சில், தொலைக்காட்சி உரையில், பல்கலைக்கழக ஆய்வேடுகளில் என்று எல்லாநிலைகளிலும் ஒருமை பன்மைத் தவறுகள் மிகுதியோ மிகுதி! இக்குறையைத் தவிர்த்துக்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சியின் விளைவே இந்நூலாகும். மொத்தப் பக்கங்கள் ‡ 71 (கிரெளன் அளவு)

திருக்குறள் பொருக்கு ஒரு புதிய முயற்சி

7.2008 - வணக்கம் வள்ளுவரே

                ஓர் இருபத்தைந்து குறட்பாக்களுக்கு மட்டும் சில புதிய விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. சில குறளுக்கு அறிவியல் முறையில் விளக்கந்தர முனைந்துள்ளது இந்நூல். சொல்லும் முறை புதிது; நடை புதிது; எண்ணம் புதிது இந்நூலுக்கு முனைவர் தங்க.மணியன், முனைவர் கி.இரா.சங்கரன் ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர். மொத்தப் பக்கங்கள் ‡ 224 (கிரெளன் அளவு)

                மேற்கண்ட ஏழு நூல்களும் பின்வரும் முகவரியில் உள்ள பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

                திங்கள் பதிப்பகம், 1/165, முதன்மைச் சாலை, செம்பனார்கோவில், தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம், தமிழ்நாடு -609 309. செல்லிடப்பேசி : 9443526213.

                இப்பொழுது, க்,ச்,த்,ப் - மிகுதலும் மிகாமையும் என்னும் நூலையும், ஒருமை பன்மை என்னும் நூலையும் சேர்த்து ஒரே நூலாகத் தமிழில் ஒருமை பன்மை விளக்கமும் ஒற்றுமிகுதலும் என்னும் பெயரில் மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அதன் முகவரி.





                மணிமேகலைப்பிரசுரம், தபால் பெட்டி எண் : 1447, 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை - 17. தொலைப்பேசி : 24342926, 24346082.

பல்கலைக்கழகக் கல்லூரிப் பாடத்திட்டத்தில் புது முயற்சி :

                மயிலாடுதுறை, மன்னன்பந்தல், ஏவிசி கல்லூரியின் எம்.., தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் செய்முறைத் தேர்வு என்னும் புதிய தாளினை (அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு உள்ளதைப் போல) அறிமுகப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார். இன்றும் இம்முறை தொடர்கின்றது. இஃது எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லாதது. தமிழ்நாட்டிற்கே இது புது முயற்சி!

தமிழ்ப்பணிகள்

                ().  நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் மேலப்பாதி என்னும் சிற்றூரில் திரு.வி.. நூல் நிலையம் என்னும் பெயரில் ஒரு நூலகம் இயங்கி வருகின்றது. இதில் ஐம்பதாயிரம் நூல்கள் உள்ளன. இந்நூலகத்தின் மதிப்புறு தலைவராகப் பொறுப்பில் உள்ளார்.

                (). 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப்போரில் மயிலாடுதுறை, மன்னன்பந்தல் ஏவிசி கல்லூரியில் பயின்று வந்த சாரங்கபாணி என்னும் பெயருடைய மாணவன் தனக்குத்தானே உடலுக்குத் தீ வைத்துக்கொண்டு உயிர் துறந்தான் அந்தத் தமிழ் ஈகிக்கு நினைவுத்தூண் அமைக்க, ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு ரூ.85/- ஆயிரம் செலவில் நினைவுத்தூண் நாட்டப்பட்டது.

                (). பொதுமக்களுக்குத் தமிழ் இலக்கிய ஈர்ப்பினை உண்டாக்கவும், தமிழை இயக்கமாக ஆக்கவுமசெந்தமிழ் நாடுஎன்னும் பெயரில் மயிலாடுதுறையில் ஓர் இயக்கத்தினை ஏற்படுத்தி, அந்த அமைப்பிற்குத் தலைவராக இருந்து செயல்படுகிறார்.

இப்போதுதொல்காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினிய உரை எடுத்துக்காட்டுக்களின் பகுப்புமுறைஎன்னும் தலைப்பில் ஒரு நூலினை உருவாக்கியுள்ளார். இது தொல்காப்பியம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், பயிலும் மாணவர்களுக்கும் மிகுந்த பயனைத் தரும். எழுத்ததிகாரப் புரிதலை மிக மிக எளிமையாக்கும்; இலக்கண அச்சத்தைப் போக்கும். இன்னும் ஒரு திங்களில் (சனவரி - 2013) வெளியாகும்.

முனைவர் கி.செம்பியன் அவர்களின் முகவரி:

முனைவர் கி.செம்பியன்
1/ 165, முதன்மைச்சாலை,
செம்பனார்கோவில், தரங்கம்பாடி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம், 609 3009
செல்பேசி: 9443526213



               





                                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக