புதுவை சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ.சபாபதி அவர்கள் நூலை வெளியிடப் புலவர் சீனு.இராமச்சந்திரன் பெற்றுக்கொள்ளுதல்
இந்திய நீராவிக்கப்பல் முயற்சிகள், 1836-1910 (INDIAN STEAMSHIP VENTURES , 1836-1910) என்னும் ஆங்கில நூலின் வெளியீட்டு நிகழ்வு புதுச்சேரி சட்டப்பேரவைத்
தலைவர் அலுவலகத்தில் இன்று(21.12.2012) முற்பகல் 11.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
பிரெஞ்சு நாட்டு வரலாற்றுப் பேராசிரியர்
மொரே (J.B.P.MORE) அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய இந்திய நீராவிக்கப்பல் முயற்சிகள்,
1836-1910 என்ற ஆங்கில நூலினைப் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ.சபாபதி (எ) கோதண்டராமன் அவர்கள் வெளியிடப் புதுவைப்
புலவர் சீனு.இராமச்சந்திரன் அவர்கள் முதற்படியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து
முனைவர் மு.இளங்கோவன், திரு. வீரமதுரகவி, திரு.குலசேகரன், கலைமாமணி வேலவதாசன் ஆகியோர் நூலின் படிகளை மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இந்திய நீராவிக்கப்பல் முயற்சிகள்,1836-1910என்ற நூலில் புதுச்சேரியைச் சேர்ந்த
தருமநாதன் புருஷாந்தி அவர்கள் கப்பல் ஓட்டிய வரலாறு விளக்கப்பட்டுள்ளது. வங்காளத்தைச்
சேர்ந்த துவார்கநாத் தாகூர் அவர்கள் இந்திய
நீராவிக் கப்பல் துறையில் முதலில் ஈடுபட்டவர் என்று இந்த நூல் விளக்குகின்றது.
புச்சேரியைச் சேர்ந்த தருமநாதன் புருஷாந்தி
பிரெஞ்சு இந்தோ சீனாவில்(வியட்நாம் - சைக்கோனில்) நீராவிக் கப்பலை 1891 இல் இயக்கினார் என்ற குறிப்பு
கப்பல் வரலாற்றில் குறிக்கத்தக்க ஒன்றாகும். கம்போடியாவிலிருந்து கொச்சின் சைனா(தெற்கு
வியட்நாம்) வரை ஓடிய மெக்காங்(Mekong) ஆற்றில்
அலெக்சாண்டர், புருஷாந்தி என்னும் பெயரில் இரண்டு கப்பல்களை 1891 இல் தருமநாதன் புருஷாந்தி இயக்கியமை வரலாற்றில் பதியப்படவேண்டிய
செய்தியாகும்.
1895 இல் கடல் வழியாகப் பயணிகள் கப்பல் இயக்குவதற்கு அனுமதி வேண்டினார் எனவும் இந்தியர் - தமிழர் கப்பல் இயக்குவதுற்கு விதி இல்லை என்ற காரணத்தால் பிரெஞ்சு அரசால் அனுமதி மறுக்கப்பட்டது எனவும் விவரங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன(பக்கம்
44 முதல் 49 வரை).
கடல் வழியாகப் பயணிகள் கப்பல் சைக்கோனிலிருந்து
பேங்காக் வரை செலுத்தியவர் தருமநாதன் புருஷாந்தி அவர்களே என்று இந்த நூலில் நூலாசிரியர்
பதிவுசெய்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக நீராவிக் கப்பல் விடுவதற்கு முயற்சி செய்தவர்கள்
சி.வா. கம்பெனியைச் சேர்ந்தவர்கள் ஆவர். பின்னர் வ.உ.சி. தூத்துக்குடியில் இந்திய சுதேசி
கம்பெனியைத் தொடங்கினார். இந்த நிறுவனம்தான் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கப்பல்
விட்டது. உலகில் நடைபெற்ற கப்பல் இயக்கும் முயற்சிகளும், இந்தியாவில் நடைபெற்ற கப்பல்
இயக்கும் முயற்சிகளும் இந்த நூலில் பதிவாகியுள்ளன.
முனைவர் மு.இளங்கோவன் நூலின் படியை மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுதல்
இந்திய நீராவிக்கப்பல் முயற்சிகள், 1836-1910
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக