திங்கள், 14 மே, 2012

பாவாணர் பற்றாளர் சிங்கப்பூர் கோவலங்கண்ணன் மறைவு


சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன்(10.07.1941- 14.05.2012)





மொழிஞாயிறு பாவாணர்மேல் ஆழ்ந்த பற்றினைக் கொண்டவரும் சிங்கப்பூர் செல்லும் தமிழ் அன்பர்களுக்கு ஒரு சடையப்ப வள்ளலாக இருந்து புரந்தருளியவரும், தணிக்கைத்துறையில் பேரறிவு படைத்தவருமான வெ.கரு.கோவலங்கண்ணன்(கோபாலகிருட்டிணன்) அவர்கள் இன்று(14.05.2012) காலை சிங்கப்பூரில் உடல்நலக்குறைவு கரணியமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து கழிபெருந்துயரடைந்தேன்.

நான் சிங்கப்பூர் செல்லும்பொழுதெல்லாம் தம் வணிக நிறுவனத்திற்கு அன்புடன் அழைத்துத் தம் தமிழார்வம் பற்றி ஐயா அவர்கள் பல மணிநேரம் உரையாடினார்கள். அவர்களின் தமிழ்ப்பணி பற்றி விரிவாகப் பதிந்துவைக்க வேண்டும் என்று நான் செய்திகள் கேட்டபொழுதெல்லாம் தமிழ்பற்றியும், பாவாணர் பற்றியும் எழுதுங்கள் என்றும் தம்மைப் பற்றி எழுதவேண்டாம் என்றும் அன்புடன் மறுத்துவந்தார்கள். அவரின் அலுவலகத்தில் பணிபுரிந்த திரு. கவி ஐயா அவர்கள் ஐயாவின் தமிழ்ப்பணிகளை நிலைநிறுத்தும் முகமாகத் தேவநேயம்.காம் என்னும் இணையதளம் தொடங்கி அதில் பாவாணர் கோவலங்கண்ணன் அவர்களுக்கு எழுதிய மடல்கள், அரிய படங்களையெல்லாம் உள்ளிட்டு ஆவணப்படுத்தியிருந்தார்.

கோவலங்கண்ணன் அவர்கள் பாவாணர் அவர்களை முதன்முதல் காட்டுப்பாடியில் நேரில் கண்டார். பாவாணர் அவர்களின் வறுமைவாழ்வு கண்டு, தாம் அணிந்திருந்த அணிமணிகள் அனைத்தையும் கழற்றிப் பாவாணர் ஐயாவின் தமிழ்ப்பணிக்கு வழங்கிய கொடையுள்ளம் கோவலங்கண்ணன் அவர்களின் கொடையுள்ளமாகும். தம் மகனுக்குப் பொற்கைப்பாண்டியன் எனப் பாவாணரால் பெயர் சூட்டி மகிழ்ந்தவர். பாவாணர் நூல்கள் சிங்கப்பூரில் பரவுவதற்குப் பலவகையில் தமிழன்பர்களுக்குத் துணைநின்றவர். தேவநேயம் என்னும் பெயரில் பாவாணரின் நூல்கள் 5000 பக்கம் வெளிவரவும் உதவியவர். இசைஅறிஞர் வீ.ப.கா.சுந்தரம் பெயரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை நிறுவித் தமிழிசைக்குப் பல்லாயிரம் உருவா வாரி வழங்கிய கொடைமனத்தர் நம் கோவலங்கண்ணன் அவர்கள். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் பாவாணர் அறக்கட்டளை நிறுவிப் பாவாணரின் பெருமையை ஆண்டுதோறும் தமிழறிஞர்கள் நினைவுகூர வழிவகுத்தவர்.

கோபாலகிருட்டிணன் என்னும் இயற்பெயர் கொண்டவரைக் கோவலங்கண்ணன் என்று பாவாணர் மாற்றினார். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் இரணசிங்கபுரம் என்னூம் ஊரில் 10.07.1941 இல் பிறந்தவர். தந்தையார் பெயர் வெள்ளைச்சாமி, தாயார் கருப்பாயம்மை.. பத்து அகவையில் 1951 இல் மலேசியா சென்றார். குளுவான் பகுதியில் 7 ஆம் வகுப்பு வரை படித்தார். 1959 இல் சிங்கப்பூர் சென்றவர். ஒரு பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணியில் இணைந்தார். தாமே கற்று, வணிகவியல், தட்டச்சுப் பள்ளிகளைத் தொடக்கத்தில் நடத்தி மாணவர்களுக்கு அறிவு புகட்டியவர். சிங்கப்பூரில் புகழேந்தி மன்றம் என்னும் அமைப்பை நிறுவித் தமிழ்ப்பணிபுரிந்தார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாடு ஏற்பட்ட பிறகு அனைத்தும் பாவாணருக்குள் அடங்கும் என நினைத்துப் பாவாணர் புகழ் பேசுவது, கேட்பது, எழுதுவது என்று வாழ்ந்துவந்தவர். உடல்நலக்குறைவால் இன்று(14.05.2012) இயற்கை எய்திய திருவாளர் கோவலங்கண்ணன் அவர்களைப் பிரிந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், தனித்தமிழ் ஆர்வலர்களுக்கும், பாவாணர் பற்றாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் உரியதாகட்டும்.

சிங்கபுரி வணிகக் கல்விச்சாலை உரிமை முதல்வர்
உயர்திரு. கோபாலகிருட்டிணனார் மீது நூலாசிரியன்(தமிழ் இலக்கிய வரலாறு)
ஞா. தேவநேயன் பாடிய பாடாண் பதிகம்



அறிவொழுகு கண்ணும் அமர்தமிழின் நோக்கும்
செறிவுடைய நாவும் செழிப்பும் - பொறிநிலவும்
கோவீறு நெஞ்சும்பொற் கோல வளர்வுடம்பும்
கோபால கி(ரு)ட்டிணர் கூறு.

வடமொழியை வாழ்த்தி வழங்குதமிழ் தாழ்த்தும்
திடமுடையர் தென்னாட்டுச் செல்வர் - கடல்கடந்து
சிங்க புரித்தீவிற் சேர்ந்த கிருட்டிணனார்
தங்கு தமிழ்ப்பணிசெய் தார்.

கடையெழு வள்ளலர்பின் கானக் குமணன்
நடையுயர் நல்லியக் கோடன் – கொடைமிகு
சீதக்கா திக்குப்பின் சேது ரகுநாதன்
ஈதற்கின் றோகிருட்டி ணர்.

கால்கடுத்துக் கொப்புளிக்கக் காதம் பலநடந்து
நூல்வடித்துச் சொல்லினும் நொய்தரார் -பாலடுத்து
வேறொருவர் கூறினும் வெண்படத்துங் கண்டிரார்க்கு
மாறிலாதீந் தார்கிருட்டி ணர்.

முன்னாட் கொடையாளர் முந்திப் புகழ்பெற்றார்
செந்நாப் புலவர் செயற்பாவால் - இந்நாளில்
முந்திப் பொருளளித்த முன்பிற் கிருட்டிணர்க்குப்
பிந்திப் புகழ்ந்துரைத்தேன் பேர்ந்து.

கோடிக் கணக்கிற் குவித் திருந்துஞ் செந்தமிழை
நாடித் தனியிதழ்க்கும் நல்காதார் - நாடிதிலே
செந்தமிழ்ச் செல்விக்கும் தென்மொழிக்கும் வாழ்நாட்குத்
தந்தவர் கிருட்டிணனார் தாம்.

அன்னை யெனவே அறிவுடம்பை முன்வளர்த்துப்
பின்னும் பலவாய்ப் பெரிதுதவும் - முன்னை
முகனை மொழித்தாயின் முட்டறுத்த செல்வ
மகனார் கிருட்டிணரே மற்று.


குப்பை யுயர்ந்தது கோபுரந் தாழ்ந்ததெனச்
செப்பா வடமொழி சீர்த்ததெனும் - தப்பறவே
இன்னே யெழுந்தார் இணையில் கிருட்டிணனார்
முன்னோர் மறமானம் மூண்டு.

நாடுங் குலவினமும் நம்பும் மதவகைகோட்
பாடுந் தொழிற்றுறையும் பாராது - நீடும்
தமிழே கருதித் தகுந்தாரைத் தள்ளா
நமரே கிருட்டிண னார்.

கோளாண்மை மிக்குக் குறித்த கலைதேர்ந்து
தாளாண்மை யாற்சொம் தகவீட்டி - வேளாண்மை
செய்யும் நிறைதமிழர் சிங்க புரிவாழும்
செய்ய கிருட்டிணரே சீர்த்து.

திருவாளர் கோவலங்கண்ணன் அவர்களைக் குறித்த வலைப்பூ

5 கருத்துகள்:

  1. தமிழ்ப்பற்றாளர் பாவாணர் அய்யாவின்மேல் பற்றுக்கொண்டு உழைத்த கோவலங்கண்ணாருக்கு குவைத் தமிழர்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் துயரமான தகவல், அவரை ஓரிருமுறை சந்தித்து இருக்கிறேன்.

    ஆழ்ந்த இரங்கல்

    பதிலளிநீக்கு
  3. பாவாணர் பற்றிய நூல்கள் மட்டுமல்ல,பொதுவாகத் தமிழ்மொழிக்கான ஆக்க செயல்களில் ஈடபடும் எவரையும் அவர் சிங்கையில் அன்புடன் ஆதரித்தார் என்று தெரிகிறது..

    பேராசிரியர் இளங்குமரனது கருத்துரைக் கூட்டத்தில் சந்தித்த போது சிறு பையன் போல் எளிமையாக அனைவருடனுப் பழகியது வியப்பாக இருந்தது..

    அவரது ஆன்மா நிலை பெற விழைவோம்.

    பதிலளிநீக்கு
  4. நான் பாவாணர் ஐயா அவர்களின் மூத்த மகன்வழி பேரன், அய்யா அவர்களின் மறைவிற்கு எங்களின் குடும்பதினர் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. நேற்று திரு செந்தில் நாதன் மற்றும் திரு குழலி புருஷோத்தமன் மற்றும் நான் கோவலங்கண்ணன் ஐயாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்று வந்தோம்.

    அய்யாவின் இல்லத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு