செவ்வாய், 2 நவம்பர், 2010

திருவரங்கம்,செண்பகத் தமிழ் அரங்கு ஆயிரமாவது கூட்ட நிறைவு விழா



திருச்சிராப்பள்ளி, திருவரங்கம் பகுதியில் இயங்கிவரும் செண்பகத் தமிழ் அரங்கு தமிழ்ப்பணிகளை அமைதியாகச் செய்து வருகின்றது. தமிழ் அறிஞர்களின் உரைகளைத் திருச்சிராப்பள்ளிப் பகுதி மக்கள் கேட்டுப் பயன்பெற இந்த அமைப்பு உதவுகின்றது. பலதுறை அறிஞர்கள் இங்கு வந்து உரையாற்றியுள்ளனர்.

என் பேராசிரியர் முனைவர் எழில்முதல்வன் அவர்கள் சிலப்பதிகாரம் தொடர்பில் தொடர்ந்து உரையாற்றியமை இங்குக் குறிப்பிடத்தகுந்தது. இந்த அரங்கின் ஆயிரமாவது கூட்ட நிறைவு விழா 20.11.2010 காரி (சனி)க் கிழமை முற்பகல் 09.30 மணிமுதல் ஒரு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

இடம்: எசு.என்.திருமண மாளிகை (காவிரிக்கரை அம்மா மண்டபம் அருகில்), திருவரங்கம், திருச்சிராப்பள்ளி.

அல்லூர் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவுநர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில் விழா நடைபெற உள்ளது. மாண்பமை அமைச்சர் சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள் தொடக்கவுரையாற்ற உள்ளார். பெரும்புலவர் ப.அரங்கசாமி, முனைவர் அ.ஆறுமுகனார், முனைவர் இ.சுந்தரமூர்த்தி, பேராசிரியர் எழில்முதல்வன், முனைவர் கு.திருமாறன், மருத்துவர் இரா.கலைக்கோவன், கவிஞர் சிற்பி, முனைவர் பிரேமா நந்தகுமார், இரா.பாலகங்காதரன் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

வழக்கறிஞர் க. இராசவேலு அவர்கள் தம் மனைவி செண்பகம் அம்மாள் அவர்களின் மேல் கொண்ட அன்பின் காரணமாக இத்தகு தமிழ் நிகழ்வைத் தொடர்ந்து நடத்தி வருகின்றார்.அவர் உலகத் தமிழர்களால் போற்றத்தகுந்த அறிஞராவார்.

தொடர்புக்கு: வழக்கறிஞர் இராசவேலு செண்பகவல்லி
இல்லம் +91 431 2432476

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக