செவ்வாய், 22 ஜூன், 2010

கோவை செம்மொழி மாநாட்டில் நான்...

கோவை செம்மொழி மாநாட்டிற்குக் கட்டுரை உருவாக்கும் பணியில் மூன்று மாதத்துக்கு முன்பே ஈடுபட்டேன்.இடையில் வேறு பல பணிகளும் இடையிட்டதால் நேற்றுவரை கட்டுரைக்குரிய காட்சி விளக்கம் தயாரிப்பில் முனைப்பு காட்டினேன்.பன்னாட்டு அளவில் அறிஞர்பெருமக்கள் வருவதால் என்னளவில் தரமுடன் கட்டுரை உருவாக்கும் எண்ணம் இயல்பாகவே தழைத்திருந்தது.

செம்மொழி மாநாட்டில் 24.06.2010 பகல் 12.00 - 1.30 மணிக்கு நடைபெறும் மாசாத்தியார் அரங்கில் திரு.கிரிகோரி சேம்சு அவர்கள் தலைமையில் தமிழ் மின் அகரமுதலிகள் என்ற தலைப்பில் கட்டுரை படிக்கிறேன்.

மேலும் அன்றே தமிழ் இணைய மாநாட்டிலும் கட்டுரை படிக்கும் வாய்ப்பு அமைகிறது. அதாவது 24.06.2010 பிற்பகல் முரசொலி மாறன் அரங்குவலைப்பதிவர் நிகழ்வுகளில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, (பிரான்சு )அவர்களின் தலைமையில் 2:16-2:45 மணிக்குத் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் கட்டுரை படிக்கின்றேன்.என் இரு உரைகளும் தமிழ் இணையம் சார்ந்து இருப்பதால் தக்கவாறு காட்சி விளக்கத்துடன்(பவர் பாயிண்டு) படைக்க அணியமாயுள்ளேன்.

மேலும் 26.06.2010 மாலை 5.00-6.30 மணிக்கு யாழன் சண்முகலிங்கம் அரங்கில் பத்ரி முன்னிலையில் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா பற்றிய கலந்துரையாடலில் கலந்துகொள்கிறேன்.

இதன்பொருட்டு யான் கோவை செல்ல முடிவெடுத்து, அரசிடம் தகவல் தெரிவித்துவிட்டு, அயல்நாட்டு நண்பர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பாக முதல்நாள் அதாவது (21.06.2010) புதுச்சேரியில் இரவு பேருந்தில் ஏறினேன்.புதுச்சேரியில் இன்று நல்ல மழை இடியுடன் பெய்ததால் பேருந்தைப் பிடிக்க இயலுமா என்ற ஓர் அச்சம இருந்தது.ஆனால் முன்பதிவு செய்திருந்ததால் இனிய செலவு. தூங்கியபடியே செலவு. 22.06.2010 காலை 7 மணிக்குக் கோவை வந்தேன்.எனக்குரிய விடுதியில் தங்கினேன்.அதற்குள் நண்பர் காசி அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு என் செலவு பற்றி வினவினார்.அவர் அலுவலகம் செல்லும் வழியில் நான் தங்கியுள்ள விடுதி இருந்ததால் அறையில் வந்து கண்டு உரையாடினார்.

உணவுக்குப் பிறகு கனடாவிலிருந்து வந்திருந்த திரு. யோகரத்தினம் அம்மா அவர்களைக் காணும் ஆவலில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றேன்.அவர்கள் சற்று உடல்நலம் இல்லாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவரின் அறிவுரை பெற்றுத் திரும்பினேன். அதற்குள் திரு.பாலா பிள்ளை(மலேசியா) மதுரையிலிருந்து கோவைக்கு வரும் செய்தியைச் சொன்னார்கள். பிரான்சிலிருந்து என் மூத்த நண்பர் திரு.விசயரங்கன் அவர்கள், அவர்களின் குடும்ப நண்பர் திரு.முருகையனும்,பெஞ்சமின் லெபோவும் கோவை வந்துள்ள செய்தியைச் சொல்லி என்னைச் சந்திக்கும்படி அறிவுறுத்தினார்.

கோவை மாநாட்டையொட்டித் திருக்குறள் ஒலிப்பதிப்பு செய்த திரு.மதன் அவர்கள் தம் குழுவினருடன் வந்து சந்தித்தார்.அவர்களிடம் விடைபெற்று என் அறைக்கு வந்து பகல் உணவு உண்ணும்பொழுது மணி 3.45 இருக்கும்.உத்தமம் அமைப்பின் செயல் இயக்குநர் திரு.மணியம் அவர்களிடம் நான் கோவை வந்த செய்தியையும் கட்டுரை படிக்க அணியமாக உள்ளதையும் கூறினேன்.மகிழ்ந்தார்.

மலேசியாவிலிருந்து வருகை தரும் திரு.மாரியப்பனார் உள்ளிட்ட தமிழ்நெறிக்கழக அமைப்பினரை வரவேற்கவும் அவர்களைத் தங்க வைக்கவும் காத்துள்ளேன்.இரவு மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டு மகிழ உள்ளளேன்.மாநாட்டு ஏற்பாடுகள் மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடந்துவருகின்றன.

6 கருத்துகள்:

  1. அன்புள்ள முனைவர் மு.இளங்கோவன் அவர்களே தங்களின் ஆக்கபூர்வமான பணிகள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்
    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    பதிலளிநீக்கு
  2. தங்கள் தமிழ் வியக்க வைக்கிறது...பயணம் என்ற வடமொழி சொல்லிற்கு ஈடான செலவு என்ற சொல்லை தங்கள் கட்டுரைனலே அறிந்தேன்...உங்கள் செம்மொழி பணிக்கு என் வாழ்த்துக்க

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள்! திரு இளங்கோவன் அவர்களே,தாங்கள்(சுடச்சுட:) எழுதியுள்ளதை படித்தவுடன் அங்கு வரவில்லையே என்ற ஏக்கம் என்னைப்போன்றவர்களுக்கு ஓரளவு குறையும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து நிகழ்வுகளைத்தாருங்கள்.
    நன்றியுடன்
    மீனாமுத்து

    பதிலளிநீக்கு
  4. தங்களின் பணி இன்று போல் என்றும் தொடர எனதினிய வாழ்த்துக்கள்.

    கவி.செங்குட்டுவன்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் திரு இளங்கோவன் அவர்களே!

    தொடர்ந்து செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளை தாருங்கள்

    மிகவும் நன்றியுடன்
    மீனாமுத்து

    பதிலளிநீக்கு
  6. எங்கள் ஊரில் இருக்கிறீர்கள்.... மகிழ்வாக உணர்கிறேன்... இங்கும் தமிழ்த் திருவிழா நடைபெறுவதால் என்னால் வர இயலவில்லை... எனவே உங்கள் இடுகைகளை எதிர்நோக்குகிறேன்... வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு