வியாழன், 27 மே, 2010

என் சிங்கைச் செலவு

திரு.கோவலங்கண்ணன், பேரா.சுப.திண்ணப்பன், நான் 

     அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி அவர்கள் சிங்கப்பூரில் கலைஞன் பதிப்பகம் சார்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்றும் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் ஓர் அன்பு வேண்டுகோள் வைத்தார். நானும் வழக்குச் சொல்லகராதி-அறிமுகம் என்ற தலைப்பில் புலவர் தமிழகன் அவர்களின் அரிய நூலொன்றைக் குறித்து ஒரு கட்டுரை வரைந்து அனுப்பினேன். என்னுடன் புதுவைப் புலவர் வி.திருவேங்கடம் அவர்களும் வருவதாக இருந்தது. அவர் கட்டளைக் கலித்துறைக்கு இலக்கணம் என்ற பொருளில் ஒரு கட்டுரை வரைந்து விடுத்தார். எங்கள் கடவுச்சீட்டுகள், செலவுத்தொகை, கட்டுரை யாவும் கலைஞன் பதிப்பக முகவரிக்குச் சென்றன. 

    புலவர் வி.திருவேங்கடம் அவர்களின் கடவுச்சீட்டு இன்னும் 4 திங்களில் புதுப்பிக்க வேண்டியிருந்ததால் புதிய கடவுச்சீட்டு பெற்று அதன் பிறகே செல்ல முடியும் என்று அவரின் பழைய கடவுச்சீட்டைச் செலவு ஏற்பாட்டாளர்கள் திருப்பினர். புலவர் அவர்கள் புதுவை முகவர்களிடம் கலந்தாய்வு செய்து கடவுச்சீட்டைப் புதுப்பிக்க சில ஆயிரம் செலவு செய்து ஏமாற்றம் கண்டார். நானும் அவருக்கு உதவமுடியாதபடி என் நிலைமை அமைந்துவிட்டது. நான் ஒரு பல்கலைக்கழகத்துக்குப் பாடம் எழுதி வழங்கவேண்டிய கடப்பாட்டில் இருந்தேன். அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து காலையிலும் மாலையிலும் தொடர்புகொண்டு பாடம் உடனடியாக வேண்டும், மாணவர்களுக்கு மிக விரைந்து தேர்வு நடக்க உள்ளது என்று என்னை அழுத்தம்கொடுத்து வலியுறுத்தினர். நானும் ஒரு கிழமை கடுமையாக உழைத்துப் பாடப் பகுதிகளை உருவாக்கி அனுப்பிவைத்தேன். இதனிடையே யான் அரசு ஊழியன் என்பதால் அரசிடமிருந்து முறையான இசைவு பெற்று வெளிநாடு செல்ல வேண்டும் என்பதால் அதற்குரிய முயற்சிகளிலும் ஈடுபட்டேன். வெளிநாடு செல்வதற்கு முதல்நாள்தான் அரசின் இசைவைப் பெற முடிந்தது. பல நண்பர்கள் இதற்கு உதவினர். \

    என் செலவுக்குரிய பொருட்களை எடுத்துக்கொண்டு 14.05.2010 காலை 7.மணிக்குப் புறப்பட ஆயத்தமானேன். புலவர் திருவேங்கடம் ஐயா அவர்கள் என் இல்லம் வந்து வாழ்த்துரைத்துப் பேருந்து நிலை வரை வந்து, பேருந்தில் ஏற்றிவிட்டுத் திரும்பினார்.புதுவையில் எனக்கு வாய்த்து உற்ற தோழர்களுள் புலவர் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நம் மழலைச் செலவங்கள் மீது அளவற்ற அன்புடையவர்கள். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் பல்வேறு தமிழ்ப்பணிகளுக்கு முன்னின்று உதவுபவர். எனக்கு வாய்த்த அவரின் நட்பு பெரியாரைத் துணைக்கோடல் என்ற வள்ளுவ வாக்கிற்குப் பொருத்தமானதாகும். அவர்களை அடுத்தமுறை செல்லும்பொழுது அழைத்துப் போகவேண்டும் என்ற மன உறுதியுடன் சென்னை நோக்கி விரைந்தேன். 

     ஆயிடை எங்கள் அன்னையார் முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்கள் செல்பேசியில் அழைத்து, இன்றைய புதிய தலைமுறையில் என்னைப் பற்றிய நேர்காணல் வந்துள்ளதாகவும் ஐயா உடனடியாக வாழ்த்துரைக்கச் சொன்னதாகவும் குறிப்பிட்டார்கள். மிக மகிழ்ச்சியுற்றேன். அதனிடையே வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்கள் அவர்களின் துணைவியார் மருத்துவர் பத்மா சமரசம் அவர்களின் அறிவுறுத்தலின்படி புதியதலைமுறை கண்டு வாழ்த்துரைத்தார். என் வெளிநாட்டுச்செலவு பற்றி சொன்னவுடன் மகிழ்ந்து அவர்களின் உறவினர் மலேசியாவில் பினாங்கில் இருப்பதாகவும் கண்டு பேசும்படியும் அன்புவேண்டுகோள் வைத்தார். உரிய தொலைபேசி எண்ணைக் குறுஞ்செய்தியாக அனுப்பினார். பேருந்து இரைச்சலில் சரியாகப் பேசமுடியவில்லை. சென்னை சென்று பேசுவதாக ஐயாவிடம் விடைபெற்றேன். அதனிடையே புதிய தலைமுறை நேர்காணல் பற்றித் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நம் அன்பர்கள் உசாவியும் வாழ்த்துரைத்தும் மகிழ்ந்தார்கள். அதில் கோபிச்செட்டிப்பாளையத்தில் தாய்த்தமிழ்ப்பள்ளி நிறுவிய திரு.தமிழரசு அவர்கள் தாம் புதுவை வந்து என்னைப் பார்க்க விரும்புவதாகவும் எனக்கு உரியவர்கள் வழியாகத் தெரிவித்தார்கள். 

    இதனிடையை என் கையில் இருந்த மூன்று பைகளுடன் சென்னைத் திருவான்மியூரில் இறங்கினேன். உடன் வந்த ஒருவரின் உதவியுடன் வேறு பேருந்துக்கு மாறினேன். சைதாப்பேட்டையில் உள்ள திரு.இசாக்(தமிழலை ஊடக உலகம்) அவர்களின் இல்லத்தில் என் உடைமைகளை வைத்துவிட்டுக் கலைஞன் பதிப்பகத்தார் குறிப்பிட்ட ஆந்திர சபாவில் என் கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு, கருத்தரங்க ஆய்வுக்கோவைகளைப் பெற்றுக்கொண்டு செலவு விவரங்களை அறிந்தேன். இரவு 9 மணிக்கு மீனம்பாக்கம் வானூர்தி நிலையத்தில் ஒன்றுகூட வேண்டும் எனவும் இரவு 12.45 மணிக்கு வானூர்தி எனவும் குறிப்பிட்டனர். இதனிடையே தமிழன்பர் திரு. உதயகுமார் அவர்கள் என்னைக் காண ஆந்திரசபா வந்திருந்தார். நண்பர் திருமுதுகுன்றம் புகழேந்தி, உதயகுமார், நான் மூவரும் பகலுணவு உண்டோம். 

    புகழ் முன்கூட்டியே இலங்கை வானூர்தியில் புறப்பட வேண்டும் என்பதால் எங்களிடம் விடைபெற்றுத் திரும்பினார். நானும் திரு.உதயகுமார் அவர்களும் புதிய தலைமுறை அலுவலகம் சென்று ஆசிரியர் திரு.மாலன் அவர்களுக்கு நேர்காணல் வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்தோம். வெளிநாட்டுச் செலவு குறித்துக் குறிப்பிட்டு ஒரு வாழ்த்தும் பெற்றோம். அங்குள்ள சில எழுத்துலக நண்பர்களிடம் உரையாடி மகிழ்ந்தோம். உதயகுமார் அவர்கள் இடையில் விடைபெற்று அவர் அலுவலகம் சென்றார். திரு.இசாக் அவர்களின் அறைக்கு நான் வரும்பொழுது மாலை மணி ஆறு இருக்கும். அங்குச் சிறிது உரையாடி, சில சிறு பணிகள் முடித்ததும் இசாக் அவர்கள் வழக்கம்போல் உணவு முடித்துச் செல்ல வேண்டினார். உணவு உண்டு தானி பிடித்து மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் அடைந்தேன். அங்குப் புதுப்பிக்கும் பணிகள் நடப்பதால் இடிப்பதும் கட்டுவதுமான பணிகள் நடக்கின்றன. எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாதபடி கூட்டம் திரண்டிருந்தது. ஒரு வழியாக நுழைவு வாயிலை அடைந்தேன். 

     அங்குப் பேராசிரியர் அரங்க.பாரி தலைமையில் பேராசிரியர்கள் கூட்டமாகத் திரண்டிருந்தனர். அவர்களுடன் இணைந்து எங்கள் உடைமகளை ஆய்வுக்கு உட்படுத்தினோம்.என்னிடம் நூல்கள் சில இருந்தன.கூடுதல் சுமை என்றால் தொகை கட்ட வேண்டியிருக்குமே என அஞ்சினேன். எடை குறைவாக இருந்ததால் எந்த இடர்ப்பாடும் இல்லாமல் சென்றேன். 12 மணிக்கு உள்ளே காத்திருந்தோம். 12.40 மணிக்கு வானூர்தியில் ஏறி அமர்ந்தோம். 12.45 மணிக்கு ஏர் இந்தியா வானூர்தி எங்களைச் சுமந்தபடி சென்றது. பலருக்கு இது முதல் செலவு என்பதால் அச்சத்துடன் மருண்டபடி அமர்ந்திருந்தனர். நான் முன்னமே வானூர்தியில் பலமுறை சென்றுள்ளதால் எனக்கு எவ்வகையான அச்சமும் இல்லை. நம் ஊர் நேரப்படி விடியற்காலை 4.30 மணியளவில் வானூர்தி தரையிறங்கியது. 

    சிங்கப்பூர் வானூர்தி நிலையம் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். உலகின் பல பகுதிகளிலிருந்தும் வானூர்திகள் வருவதும் போவதுமாக இருக்கும்.நான் சிங்கப்பூர் வருவது முன்பே மின்னஞ்சல் வழியாக என் பதிவுலக நண்பர்களுக்குத் தெரியும் என்பதால் திரு.குழலி, திரு.கோவி கண்ணன் ஆகிய தோழர்கள் வானூர்தி நிலையத்தில் என்னை வரவேற்கக் காத்திருந்தனர்.அவர்களை இதற்குமுன் பார்க்கவில்லை. ஆனால் முன்பின் கண்டு பழகியவர்கள் போல் உரிமையுடன் பழகினோம். காரணம் இவர்கள் பதிவுகள் வழியாக நன்கு அறிமுகமானவர்களேயாகும். இவர்களுடன் படம் எடுத்துகொண்டேன். எங்கள் குழுவினரிடம் என்னைச் செல்லும் படியாக இவர்கள் விடைகொடுத்து மீண்டும் சந்திப்பதாகச் சொல்லிச் சென்றனர். எங்கள் குழு நேரே தங்குமிடம் செல்லும் என்று நினைத்தோம். ஆனால் செலவு ஏற்பாட்டாளர்கள் ஒரு விடுதியில் குளிக்க, பல்துலக்க மட்டுமாக இசைவுபெற்று எங்களை அப்பணிகளை முடித்துக்கொண்டு உடன் வருமாறு தெரிவித்தனர். அதன்படி அனைவரும் உடனடி புறப்பாட்டுக்கு ஆயத்தம் ஆனோம். அனைவரும் பல்துலக்கிக் காலை உணவு உண்டோம். பின்னர் அரங்கம் அடைந்தோம். கருத்தரங்கத் தொடக்க விழா நடந்தது. 

     தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சிங்கப்பூர் பேராசிரியர் வேல்முருகன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினார். முனைவர் சிவகுமாரன், முனைவர் தியாகராசன்,அரங்க.பாரி, முனைவர் இராசா ஆகியோர் உரையாற்றினர். முனைவர் அபிதா சபாபதி அவர்களுக்கு இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த்தில் பெரும் பங்குண்டு. அவர்களே அனைவருக்குமான செலவு ஏற்பாடு உள்ளிட்ட அனைத்தையும் கவனித்தார். கலைஞன் பதிப்பக உரிமையாளர் திரு.மா.நந்தன் அவர்கள் எளிமையாக அனைவரிடமும் பழகி அனைவரின் மதிப்பையும் பெற்றார். 

     பிற்பகலில் கருத்தரங்கம் தொடங்கியது.என்னைக் காணவும் என் கட்டுரை கேட்கவும் திரு. கோவலங்கண்ணனார் வந்திருந்தார். கட்டுரை படித்தபிறகு இருவரும் ஓர் உந்து வண்டியில் அவர் அலுவலகம் சென்றோம். திரு.கோவலங்கண்ணனார் அவர்கள் ஒரு கணக்காளர். ஆனால் அவர் அலுவலகத்தில் மிகுதியாகத் தமிழ்நூல்கள் நூலகம்போல் காட்சி தரும் வனப்பைக் கண்டு மகிழ்ந்தேன். பாவாணர் கொள்கைகளில் ஐயாவுக்கு மிகுதியான ஈடுபாடு உண்டு.அதனால் பாவாணர் அன்பர்கள்பால் அவருக்குத் தனி அன்பு உண்டு.நான் இரண்டு நூல்களைத் திரு. கோவலங்கண்ணனார் அவர்களுக்குப் படையலிட்டவன்.நூல்படையலிடுவதற்கு முன்பு அவரை நான் பார்த்தறியேன். அவர் பணி மட்டும் அறிவேன்.பாவாணருக்கு அவர் உதவி செய்ததால் அவர்மேல் எனக்குத் தனி மதிப்பு ஏற்பட்டது.அவ்வகையில் தொடர்ந்து நட்பு மடல்கள் வழியாக மலர்ந்தது. பின்னர் என் இசைப்பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்கு ஓர் அறக்கட்டளை ஐயா நிறுவியதால் மதிப்பு மேலும் உயர்ந்தது. கோவலங்கண்ணனார் தமிழகம் வந்தால் ஒரிரு மணித்துளிகள் சந்திப்பு இருக்கும். இந்தமுறை சிங்கப்பூரில் ஐயாவுடன் பல மணிநேரம் ஒன்றாகத் தங்கி உரையாடும் பேறுபெற்றேன். இருவரும் கடைக்குச் சென்று சில பொருட்களை வாங்கிக்கொண்டு ஐயாவிடம் விடைபெற்று அறைக்குத் திரும்பினேன். இரவு 10 மணியளவில் விடுதிக்கு வந்தேன். முதலில் உணவு.அதன்பிறகு உரிய அறைக்குச் சென்றேன். 

    என் அறையில் வேறொரு அன்பர் தங்கியிருந்தார். அவரை வெளியேற்றினால்தான் நான் தங்கமுடியும். என்னறையில் இருவர் தங்கும்படி சொன்னார்கள். அதன் அடிப்படையில் என்னுடன் தங்குபவரிடம் நான் கடைத்தெரு சென்று சிறிது காலத்தாழ்ச்சியாக வருவேன் என்று கூறிச் சென்றேன். காலம் தாழ்ந்ததும் வேறொரு விடுதியில் இருந்த அன்பரை என் அறைத்தோழர் அழைத்துத் தங்க வைத்துவிட்டார். என் நிலை மிக இரங்கத்தக்கதாக இருந்தது. தங்கியிருப்பவரை வெளியேறும்படி சொல்ல நான் தயங்கினேன். அதே நேரம் நான் எங்குத் தங்குவது? நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் தொடர்பு எண் விடுதியிலும் இல்லை. என்னிடமும் இல்லை. வேறு யாரிடமும் இல்லை. விடுதியில் உணவு பரிமாறும் தஞ்சாவூர் அன்பரை வினவி, என் நிலையை எடுத்துரைத்தேன். அவர் முயற்சியால் அறையில், புறம்பாகத் தங்கியிருந்த அன்பர் அவருக்கு உரிய அறைக்கு அனுப்பப்பட்டார். அப்படா! பெருமூச்சு விட்டபடி அறை கிடைத்த மகிழ்ச்சியில் என் பையை எடுக்க வரவேற்பறைக்குச் சென்றேன். 

    இரண்டு பைகளில் ஒரு பை மட்டும் இருந்தது. இன்னொரு பையைக் காணவில்லை. எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல்போன பையில்தான் என் உடுப்புகள் இருந்தன. விடுதிக் காவலரிடம் என் பை காணவில்லை என்று கூறி, என் அறை எண், முகவரி, தொலைபேசி எண் வழங்கி ஒரு பையுடன்மட்டும் அறைக்கு வந்து உடுத்திய உடையுடன் களைத்துப் படுத்தேன். சிறிது நேரத்தில் விடுதிக்காவலர் தொலைபேசியில் அழைத்தார்.என் பை கிடைத்து விட்டதாகவும் எங்கள் குழுவில் வந்த ஒருவர் அவரின் கறுப்புவண்ணப் பையை வைத்துவிட்டுத் தவறுதலாக என் கருநீல நிறப் பையை எடுத்துச்சென்றதாகத் தெரிவித்தார். ஒருவழியாக என் சிங்கப்பூரின் முதல்நாள் தங்கல் இன்னலுக்கு இடையே கழிந்தது. 

     மறுநாள் 16.05.2010 காலையில் குளித்துமுடித்து, உண்டு, கருத்தரங்கம் நடக்கும் இடத்திற்குச் சென்றேன். பகலுணவு வரை கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரையாளர்களின் உரை கேட்டு மகிழ்ந்தேன். திரு.கோவலங்கண்ணன் அவர்கள் என்னைக் காணத் தம் உந்து வண்டியில் வந்தார். இருவரும் சிங்கப்பூர்ப் பேராசிரியர் திண்ணப்பன் அவர்களின் இல்லம் சென்றோம். அண்மையில்தான் பேராசிரியருக்குப் பவளவிழா சிங்கப்பூர் அதிபர் தலைமையில் நடைபெற்றிருந்தது. அதற்கு வாழ்த்துரைக்கவும் பேராசிரியரிடம் வாழ்த்துப் பெறவுமாக நாங்கள் சென்றோம். பேராசிரியர் அவர்களை இதற்கு முன் பல கருத்தரங்குகளில் கண்டு உரையாடியுள்ளேன். என் நாட்டுப்புற இசையில் பேராசிரியருக்குத் தனி ஈடுபாடு உண்டு. அயலகத் தமிழறிஞர்கள் என்ற என் நூலில் பேராசிரியர் பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருந்தேன். சில நூற்படிகளை அவர்கள் கேட்டிருந்தார்கள். வழங்கினேன். ஆச்சி அவர்களும் அவர்களின் மகனும் எங்களுடன் அன்புடன் உரையாடினார்கள். பேராசிரியர் அவர்களிடம் தமிழிலக்கியப் போக்கு, எழுத்துச்சீர்திருத்தம் பற்றி உரையாடினோம். அவர்களின் பவள விழா மலர் பெற்றுக்கொண்டு நானும் கோவலங்கண்ணன் அவர்களும் அவர்களின் மருதப்பர் உணவகம் வந்தோம். உணவு முடித்து அவர்களின் அலுவலகம் சென்றோம். 

     அலுவலகத்திற்குக் குழலி உள்ளிட்ட அன்பர்கள் வந்து சேர்ந்தனர். மாலையில் அவர்களின் மருதப்பர் உணவகத்தின் மேல் தளத்தில் உள்ள பாவாணர் அரங்கில் வலைப்பதிவர் சந்திப்புக்கும், இலக்கியக் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாவாணர் படைப்புகள் இணையத்திற்கு வர ஒரு வலைப்பூ உருவாக்கினேன். முன்பே இருந்த கட்டுரைகளை ஒருங்கு குறிக்கு மாற்றிப் பதிவாக வெளியிட திரு. கவின் அவர்களுக்குப் பயிற்சி வழங்கினேன். 5.30 மணிக்குப் புறப்பட்டுப் பாவாணர் அரங்கம் வந்தோம். ஓரிரு அன்பர்கள் வந்து காத்திருந்தனர். பின்னர் படிப்படியே பலர் வந்து இணைந்துகொண்டனர். பதிவர் சந்திப்பு தொடங்கியது. குழலி வரவேற்றார். கோவி.கண்ணன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பதிவர்கள் வந்தனர். என் பதிவு பட்டறிவுகளைக் கேட்டனர். ஒருமணி நேரம் அனைவரும் உரையாடினோம். இலக்கியக் கலந்துரையாடலுக்கு வந்த அன்பர்களும் பதிவுலகப் பட்டறிவுகளில் கலந்துகொண்டனர்.


வரவேற்கும் கோவலங்கண்ணன் 

 6.30 மணிக்கு இலக்கியக் கலந்துரையாடல் தொடங்கியது. திரு. கோவலங்கண்ணன் அன்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். திரு.பழனியப்பன் (சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் உடனடி மொழிபெயர்ப்பாளர்) வந்திருந்தார். அன்புடன் உரையாடினோம். பேராசிரியர்கள் இரத்தின. வேங்கடேசன்.ஆ.இரா.சிவகுமாரன் உள்ளிட்ட அறிஞர்களும், புகழ்பெற்ற பதிவர்களும், எங்கள் ஊரை அடுத்த கண்டியங்கொல்லை திரு.சிவக்குமார் உள்ளிட்ட அன்பர்களும் வந்து கேட்டனர். நான் தமிழ் இலக்கியம், நாட்டுப்புறப்பாடல்கள்,இணைய வளர்ச்சி பற்றி கலப்பாக என் உரையை அமைத்துக்கொண்டேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் என் உரை நீண்டது. அதனை அடுத்து கலந்துரையாடல் என்ற அமைப்பில் ஒன்றரை மணி நேரம் அனைவரும் உரையாடினோம்.

     எழுத்துச்சீர்திருத்தம்,தமிழ் இலக்கணம் பற்றியெல்லாம் எங்கள் பேச்சு நீண்டது. அனைவரிடமும் விடைபெற்று அறைக்குத் திரும்பியபொழுது இரவு 10.30 மணியிருக்கும். என் அறைக்குச் சென்று என்னிடம் இருந்த திறவியை உள்ளிட்டுத் திறந்தேன். திறக்கவில்லை. பிறகு மணியை அழுத்திப் பார்த்தேன். திறக்கவில்லை.பிறகு மெதுவாக அஞ்சியபடி ஒரு குரல் யார்? என்றது. நேற்றுத் தங்கியிருந்த அன்பரின் குரலாக அது இல்லை.புதிய குரல்.இன்றும் தங்குவதில் ஏதோ சிக்கல் உள்ளது என்று நினைத்தேன். கருத்த, பருத்த ஓர் உருவம் கதவைத் திறந்ததும் நான் அஞ்சியபடியே புதியதாக ஆள் தெரிகின்றாரே என்று பார்த்தேன்.அதுபோல் அவரும் அஞ்சிபடியே திறந்தார். தன் பெயர் இசக்கியப்பன் எனவும், திருநெல்வேலி ஊரினர் எனவும் இந்த அறையில் தங்கியிருந்தவர் வேறு விடுதிக்குச் சென்றதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தம்மை இங்குத் தங்கும்படி கூறியதாகவும் சொன்னார். நல்ல மாந்தர். இசக்கியப்பன் அவர்களுடன் உரையாடியபடி இரவு 12 மணியளவில் கண்ணயர்ந்தேன். 

     17.05.2010 காலையில் அனைவரும் உணவு முடித்துச் சிங்கப்பூர் நகர்வலத்துக்குப் புறப்பட்டோம். பல இடங்களைச் சுற்றிக்காட்டினர். செந்தோசா என்ற கடலடிப் பகுதி அனைவரும் பார்க்க வேண்டிய பகுதி. சிங்கப்பூர் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றிருந்தாலும் கடந்த காலத்தில் காடாகவும், மேடாகவும் கிடந்த பகுதிதான் இந்த அளவு மாற்றம் பெற்றிருக்கிறது என்பதை மகிச்சிறப்பாகக் காட்சியகமாக வைத்துள்ளார்கள். உலக அளவில் புகழ்பெற்ற இந்த இடங்களை அனைவரும் பார்க்க வேண்டும்.தமிழர்,சீனர்,மலாய்க்காரர்களின் கூட்டு உழைப்பால் இந்த நாடு கண்ட முன்னேற்றத்தை நாம் அங்குக் காணமுடிகிறது.பகலுணவு முடித்து அங்கும் இங்குமாகக் காட்சிகளைப் பார்த்தோம். நண்பர் இரத்தின.புகழேந்தி என்னுடன் இணைந்துகொண்டு பல படங்களை எடுத்து உதவினார்.  டால்பின் மீன் விளையாட்டும் மிகச்சிறப்பாக இருந்தது. 

     இரவு கடலில் ஒலி-ஒளிக்காட்சிகள் கண்டு மகிழ்ந்தோம்.அனைவரும் இரவு 9.45 மணிக்குப் பொருள்கள் வாங்க முசுதபா கடைக்கு வந்தோம்.மீண்டும் 11.45 மணிக்கு ஒன்று கூட வேண்டும் என்ற குறிப்பைப் பெற்றுகொண்டு அங்குமிங்குமாக எங்கள் குழுவினர் பிரிந்து பொருள்கள் வாங்கச்சென்றனர். நானும் என் பங்குக்குச் சில எழுபொருட்கள், இனிப்புகள் வாங்கினேன். இரவு 11.40 மணிக்கு ஐயா கோவலங்கண்ணன் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுடன் எங்கள் குழுவினர் இருந்த இடத்தை அடைந்தேன். ஐயாவின் தமிழன்பில் மூன்று நாளாகத் திளைத்தமை என் வாழ்வில் மறக்க இயலாத வாழ்நாளாகும். ஐயாவிடம் விடைபெற்றுக்கொண்டேன். பின்னர் விடுதிக்கு வந்து எங்கள் உடைமைகளை எடுத்துகொண்டு மலேசியாவுக்கு எங்கள் குழு அடங்கிய பேருந்து புறப்பட்டது. அமைதியும், ஒழுங்கும், சட்டத்தை மதிக்கும் மக்களுமாக நிறைந்த சிங்கப்பூர் நகரம் எங்கள் செலவைக் கவனித்துக்கொண்டு அமைதியாகத் துயில்கொண்டிருந்தது...


குழலி,பேரா.சிவகுமாரன்,பேரா.வெங்கடேசன்

நானும் கோவலங்கண்ணன் அவர்களும்

திரு.பழனியப்பன் அவர்களுடன் நான்
இலக்கியக் கலந்துரையாடல் - பார்வையாளர்கள்

திரு.ம.சிவக்குமார் உள்ளிட்ட தமிழார்வலர்கள்
என் உரையை உற்று நோக்கும் பார்வையாளர்கள்

குழலி உள்ளிட்ட பதிவர்கள்
என் உரை கேட்கும் அறிஞர்கள்
கோவி.கண்ணன் உள்ளிட்ட பதிவர்கள்
நான் உரையாற்றும் காட்சி
டால்பின் விளையாட்டு
செந்தோசா கடலடிக் காட்சியகத்தில் நான்
நண்பர் புகழேந்தியுடன்
சிங்கப்பூர் நினைவுச்சின்னம் அருகில்

5 கருத்துகள்:

  1. அன்பின் முனைவர் மு.இ,

    தங்கள் சிங்கை பயன நிகழ்வுகள் குறித்த கட்டுரை அருமை.

    இந்தக் கட்டுரை பொதுவான வலைப்பதிவு நடையில் இன்றி உரைநடையில் அமைந்தது கண்டு, பள்ளி வயதில் "கோடை விடுமுறைக்கு சென்ற ஒரு சுற்றுலா தலம் குறித்து ஒரு நெடுங்கட்டுரை வரைக" என்ற கேள்விக்கு நான் விடையளித்த நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
  2. டால்பின் என்பதன் பழைய தமிழ்ப் பெயர் ’ஓங்கில்’. டுடாங்கோ( dudango, sea cow) என்பதன் தமிழ்ப் பெயர் 'ஆவுள்’ (அ) ‘ஆவுளி’. ஓங்கி மற்றும் ஆவுளியா இன்றும் மீனவர் பயன்படுத்தும் சொல். ஓங்கியையும், ஆவுளியையும் ஒன்றை மற்றொன்றாய் மயங்கி எழுதுவோர் உண்டு.

    ஆவுளியை கடல்பசு, கடல்பன்னி என்றும் அழைப்பதுண்டு.

    பார்க்க பி. எல். சாமி.

    பயணம் சிறப்பாய் அமைந்தது பற்றி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு. இயல்பான நற்றமிழில் எழுதியிருக்கும் உங்கள் நடையின் பாங்கைக் கண்டு மகிழ்ந்தேன். டா'ல்ஃவின் என்னும் விலங்கைத் தமிழர்கள் ஓங்கில் என்று அழைத்ததாக பி.எல்.சாமி அவர்களின் சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் என்னும் நூலில் எழுதியுள்ளார். ஆனால் dolphin fish என முற்றிலும் வேறான பிறிதொரு மீன் உண்டு, அதனைத் தமிழர்கள் பறளா என்று அழைத்தனர். இந்த பறளா என்னும் மீனை (நீர்வாழ் பாலூட்டியாகிய ஓங்கில் அல்ல), அவாய்த் தீவு மொழியில் மாஃகி-மாஃகி (Mahi-mahi) என்பர். பறளாவின் உயிரியற் பெயர் Coryphaena hippurus (கோரிஃவீனா ஃகிப்பாரசு). இது ஓங்கிலைப் போலவே வெளிர்சாம்பல் நிறத்தில் இருக்கும் என்கிறார்கள்.

    செல்வா
    வாட்டர்லூ, கனடா

    பதிலளிநீக்கு
  4. கோபியின் பாராட்டுக்கும், நா.கணேசனார்,பேரா.செல்வா விளக்கத்துக்கும் நன்றியன்.
    மு.இளங்கோவன்

    பதிலளிநீக்கு
  5. கோர்வையாக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு