ஞாயிறு, 9 மே, 2010

இராசராசன் தஞ்சைக்கோயில் கல்வெட்டு


தஞ்சைப் பெரியகோயில்

தஞ்சாவூர் பெரியகோயிலில் வடபுறச்சுவரில் இராசராசனின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் திருப்பதியம் விண்ணப்பம் செய்வோர்க்கு ஏற்படுத்தப்பட்ட நிவந்தங்களைப் பற்றிய குறிப்புகளைத் தரும் கல்வெட்டு உள்ளது.இதன் காலம் கி.பி.1014 ஆகும்.

கல்வெட்டால் அறியப்படும் செய்திகள்

முதலாம் இராசராச சோழன் தஞ்சை இராசராசேச்சரமுடையார்க்குத் திருப்பதியம் விண்ணப்பம் செயவதற்குப் பிடாரர்கள் நாற்பத்தெண்மரகொட்டிமத்தளம் வாசிபார் ஒருவர்,உடுக்கை வாசிப்பார் ஒருவர் ஆக ஐம்பதின்மரை நியமித்து அவர்களுக்கு நாள்தோறும் ஆள் ஒன்றுக்கு இராசகேசரியோடொக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் முக்குறுணி நெல் உள்ளூர்ப் பண்டாரத்தில் கொடுக்குமாறு ஏற்பாடு செய்திருந்தான்.

திருப்பதியம் விண்ணப்பம் செய்வார்க்கு ஏற்படுத்தப்பட்ட விதிகள்

திருப்பதியம் விண்ணப்பம் செய்தவர்களில் இறந்தவருக்கும்,வேற்றுத் தேசங்களுக்குப் போனவர்க்கும் பதிலாக,அவ்வவர்க்கு நெருங்கிய உறவினராய் இருப்பார் அந்நெல்லு பெற்றுத் திருப்பதியம் விண்ணப்பம் செய்வதென்றும்,அவ்வாறு நெருங்கிய உறவினர் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யத்தகுதியுடையாராய் இல்லாவிடில்,அவர்களே யோக்கியராய் இருப்பாரை அமர்த்தி,திருப்பதியம் விண்ணப்பம் செய்வித்து அந்நெல்லைப் பெறுவதென்றும்,அவ்வவர்க்கு நெருங்கிய உறவினர் இல்லையானால்,அந்தத் தொழில் செய்பவர்களே தகுதியுடையராய் இருப்போரைத் திருப்பதியம் விண்ணப்பம் செய்யத் தேர்ந்தெடுப்பதோடு, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவரே நெல்லு பெறுவதென்றும் விதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

திருப்பதியம் என்பதில் பதியம் என்பது பத்துப்பாடல்களைக் குறிக்கும்.பதிகம் என்பது இலக்கண வழக்கில் ஆளப்படுவது. தேவராப்பாடல்களை இங்குப் பதிகம் என்னும் சொல் குறிக்கிறது.

திருப்பதியம் விண்ணப்பம் செய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்த நாற்பத்தெண்மர்களின் பெயர்கள் விவரம்:


1.பாலன் திருவாஞ்சியத்தடிகளான ராஜராஜப் பிச்சனான சதாசிவன்
2.திருவெண்ணாவல் செம்பொற் சோதியான தக்ஷிணமேரு விடங்கப் பிச்சனான ஞானசிவன்
3.பட்டாலகன் அம்பலத்தாடியான மனோத்தம சிவன்
4.பட்டாலகன் சீருடைக் கழலனான் பூர்வசிவன்
5.பொற்சுவரன் திருநாவுக்கரையனான பூர்வ சிவன்
6.மாதேவன் திருஞான சம்பந்தனான ஞானசிவன்
7.கயிலாயன் ஆரூரான தர்மசிவன்
8.செட்டி எடுத்த பாதமான கவச சிவன்
9.இராமன் சம்பந்தனான சத்திய சிவன்
10.அம்பலவன் பக்தர்கள் -- -- வாம சிவன்
11.கம்பன் திருநாவுக்கரையனான சதாசிவன்
12.நக்கன் சீராளனான வாம சிவன்
13.அப்பி திருநாவுக்கரையான நேத்திர சிவன்
14.சிவக்கொழுந்து சீராளனான தர்ம சிவன்
15.ஐந்நூற்றுவன் வெண்காடனான சதாசிவன்
16.அரையன் அணுக்கனான திருமறைக் காடனான தர்மசிவன்
17.அரையன் அம்பலக் கூத்தனான ஓங்கார சிவன்
18.ஆரூரன் திருநாவுக்கரையனான ஞானசிவன்
19.கூத்தன் மழலைச் சிலம்பனான பூர்வ சிவன்
20.ஐந்நூற்றுவன் சீ ஆரூரனான தத்புருஷ சிவன்
21.சம்பந்தன் ஆரூரனான வாமசிவன்
22.அரையன் பிச்சனான தர்ம சிவன்
23.காஸ்யபன் எடுத்த பாதப் பிச்சனான உருத்திரசிவன்
24.சுப்பிரமணிய ஆச்சனான தர்ம சிவன்
25.கூத்தன் அமர புஜங்கனான சதாசிவன்
26.வெண்காடனான அகோர சிவன்
27.மாதேவன் திருநாவுக்கரையான விஞ்ஞான சிவன்
28.கூத்தன் வெண்காடனான உருத்திரசிவன்
29.ஐந்நூற்றுவன் திருவாய்மூரனான அகோரசிவன்
30.திருமலைக் கூத்தனான வாம சிவன்
31.ஐந்நூற்றுவன் எடுத்த பாதமான தர்ம சிவன்
32.அரையன் தில்லைக் கரசான பூர்வ சிவன்
33.காளி சம்பந்தனான தர்ம சிவன்
34.காபாலிக வாலியான ஞான சிவன்
35.வெண்காடன் நமசிவாயமான உருத்திர சிவன்
36.சிவன் அனந்தனான யோக சிவன்
37.சிவக்கொழுந்து சம்பந்தனான அகோர சிவன்
38.இராமன் கணவதியான ஞான சிவன்
39.பிச்சன் வெண்காடனான அகோர சிவன்
40.மறைக்காடன் நம்பி ஆருரனான ஞான சிவன்
41.சோமன் சம்பந்தனான ஞான சிவன்
42.சத்தி திருநாவுக்கரையனான ஈசான சிவன்
43.பொற்சுவரன் நம்பி ஆரூரனான தர்ம சிவன்
44.ஆச்சன் திருநாவுக்கரையனான நேத்திர சிவன்
45.ஐயாறன் பெண் ஓர் பாகனான ஹிருதய சிவன்
46.ராஜாதித்தன் அம்பலத்தாடியான சிகா சிவன்
47.செல்வன் கணபதி தெம்பனான தர்ம சிவன்
48.கூத்தன் தில்லைக் கூத்தனான ஞான சிவன்




உடுக்கை வாசித்தவனின் பெயர்
துவைத கோம புரத்து தத்ய கிரமவித்தன் மகன் சூரிய தேவக கிரமவித்தன் ஆன ஆலாலவிடங்க உடுக்கை விஜ்ஜாத்திரனான சோமசிவன்


கொட்டி மத்தளம் வாசித்தவனின் பெயர்.
குணப்புகழ் மருதனான சிகா சிவன்

இக்கல்வெட்டில் இருக்கும் பெயர்களுள் முதலில் இருப்பன இயற்பெயர்களாகும்.பின் சிலருக்கு இருப்பன பட்டப்பெயர்கள்.இறுதியில் இருப்பன சிவ தீட்சை பெற்ற பெயர்கள்(தீட்சா நாமம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக