ஞாயிறு, 3 ஜனவரி, 2010
பர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்டங்கள்,1952
மேலட்டை
பர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன், சட்டதிட்டங்கள்(1952) என்ற சிறு நூல் எனக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது.திராவிட இயக்கம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்ட மாணவன் என்ற அடிப்படையில் திராவிட இயக்கம் பற்றிய பல ஆவணங்களை வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் பாதுகாத்து வந்தேன்.அந்த நூலின் படி ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் என் பக்கத்தில் வெளியிடுகிறேன்(இந்நூல் குறிப்புகளைப் பயன்படுத்துவோர் என் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது என்ற குறிப்புடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஏனெனில் பல அன்பர்கள் என் கட்டுரைகளை-படங்களைத் தங்கள் பெயரில் வெளியிட்டுக்கொள்வதுடன், என் பணி பற்றிய பொய்யுரைகளைப் பரப்பியும் வருகின்றனர். ஆதலால் இக்குறிப்பு இணைத்தேன்).
தென்னிந்திய நல உரிமைச்சங்கமும்,திராவிடர் கழகமும்,திராவிட முன்னேற்றக்கழகமும் தமிழகத்தின் அரசியல் வரலாற்றிலும்,இலக்கிய வரலாற்றிலும்,மொழி வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க பல பணிகளைச் செய்துள்ளதை நடுநிலை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வர். எடுத்துரைக்கின்றனர்.இவ்வியக்கம் கடல் கடந்த நாடுகளிலும் அந்நாளில் பரவி தழைத்திருந்தது.மலேசியா,இலங்கை,பர்மா,சிங்கப்பூர் நாடுகளில் இன்றும் மூத்த திராவிட இயக்க உணர்வாளர்கள் இருந்து அந்த நாட்டில் இயக்கம் வளர்ந்த வரலாற்றை நினைவுகூர்ந்த வண்ணம் உள்ளனர்.
மலேசியாவில் அறிஞர் அண்ணா அவர்கள் சுறுப்பயணம் செய்த பொழுது இன்றைய மலேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மன்னர் மன்னின் தந்தை அண்ணா அவர்களைக் காண நெருங்கியுள்ளார்.அண்ணாவின் பாதுகாப்புக்குச் சென்றவர் அண்ணாவை நெருங்கவிடவில்லையாம். தாம் மெய்க்காவலர் என்று கூறியவுடன், மன்னர்மன்னனின் தந்தையார், "நான் அண்ணாவின் உயிர்க்காவலன்"என்று கூறியதுடன் தம் பிள்ளைக்கு அண்ணாத்துரை என்று பெயர் வைத்ததை நினைக்கும்பொழுது நமக்கு இயக்கத்தின் மேலும் அறிஞர் அண்ணா அவர்கள் மீதும் மதிப்பும் சிறப்பும் ஏற்படுகிறது.(பாவேந்தர் கவிதைகளில் அதே அன்பர் ஈடுபாடு கொண்டு, பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன் என்ற பொயரைத் தம் மகனுக்கு வைத்துள்ளார்.அவர்தான் இன்று மலேசியப் பல்கலைக்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் மன்னர்மன்னன்).
பர்மாவில் திராவிட இயக்கம் நல்ல நிலையில் வளர்ந்துள்ளது.இயக்க அன்பர்கள் பலர் இருந்துள்ளனர்.
1954 இல் தந்தை பெரியார் அவர்கள் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.
அறிஞர் அண்ணாவின் கொள்கை தாங்கிய பல அன்பர்கள் பர்மாவில் இருந்துள்ளனர்.
1952 இல் "பர்மா திராவிட முன்னேற்றக்கழகம்" என்ற அமைப்பு சட்டதிட்டங்கள் வரையறுத்துச் செயல்படத் தொடங்கியுள்ளது.திராவிட இயகப்பாவலர் நாரா.நாச்சியப்பன் அவர்கள்(பர்மா தி.மு.க.உறுப்பினர் எண்236) இது பற்றி சொல்ல நான் கேட்டுள்ளேன்(1993-95).
பர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்டங்கள் என்ற சிறு நூல் 1952 இல் அச்சிடப்பட்டுள்ளது.நேரு பிரஸ்,205மவுந்தாலே வீதி,இரங்கூன் என்ற முவரியில் அச்சிடப்பட்டுள்ளது.விலை பியா 50 எனும் குறிப்பு உள்ளது.16 பக்கங்களில் 62 இயக்க நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நூலின் சில முதன்மையான பகுதிகள்:
பெயர்
1.இந்த அமைப்பின் பெயர் "பர்மா திராவிட முன்னேற்றக்கழகம்"என்பது."கழகம்" என்ற சொல் இந்த சட்ட திட்ட அமைப்பில் இனிமேல் வரும் இடங்களிலெல்லாம் வேறுபொருளில் குறிப்பிட்டாலன்றி பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதையே குறிக்கும்
2.திராவிடர் எனும் சொல் தமிழ்,தெலுங்கு,மலையாள,கன்னட மக்களைக் குறிக்கும்.
கொள்கைகளும் நோக்கங்களும்
3.சாதி,மத சமுதாயத் துறைகளில் மக்களிடையே நிலவும் அறியாமையையும் குறைபாடுகளையும் நீக்கி அவர்களிடையே முன்னேறக் கருத்துக்கள் தோன்றப் பாடுபடுதல்
4.சமூக,கலாச்சாரத் துறைகளில் சமசந்தர்ப்பம்,முழுப்பாதுகாப்பு உரிமை இவை அனைவருக்கும் கிடைக்கப் பாடுபடுவது.
5.பர்மியருக்கும் திராவிடருக்குமிடையே நெருங்கிய ஒத்துழைப்பும்,கலாச்சார உறவும் ஏற்பட பாடுபடுவது.
6.திராவிடர்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் எந்த இயக்கத்தோடும் ஒத்துழைத்தல்
7.கழகம் அரசியல் தொடர்புள்ள இயக்கமல்ல.
உறுப்பினர்
8.கழகக்கொள்கைகளையும் நோக்கங்களையும் ஏற்று,கழகத்தின் குறிக்கோள்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதிதரும் 18-வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்,பெண் அனைவரும் உறுப்பினராகலாம்.
9.கழகத்தின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் மாறுபாடான வேறு இயக்கங்களில் உறுபினராக உள்ளவர்கள் கழகத்தின் உறுப்பினராக இயலாது. .....
உறுப்பினர் படிவம்
மற்ற விதிமுறைகளை அறிய நூல் பகுதிகளை இணைத்துள்ளேன்.
பின்னட்டை
முதல் பக்கம்
(பக்கம்,1)
(பக்கம்,2)
(பக்கம்,3)
(பக்கம்,4)
(பக்கம்,5)
(பக்கம்,6)
(பக்கம்,7)
(பக்கம்,8)
(பக்கம்,9)
ப(க்கம்,10)
(பக்கம்,11)
(பக்கம்,12)
(பக்கம்,13)
(பக்கம்,14)
(பக்கம்,15)
(பக்கம்,16)
தந்தை பெரியார் அவர்கள் பாபா சாகேப் அம்பெத்கர் அவர்களின் அழைப்பின் பெயரில் பர்மா புத்த மாநாட்டிற்குச் சென்றார்.அங்குள்ள தமிழர்கள் பல நிகழ்ச்சிகள் நடத்தினர்.அதிலே பங்கேற்று இன்றும் அங்கே திராவிடர் கழக,பெரியார் தொண்டராகப் பணியாற்றும் வீரா.முனுசாமி அவர்கட்கு "வீரமணி சமூக நீதி விருது"அங்கே சிறப்பாக விழா எடுத்து மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களும், நானும் 2007 ல் சென்று வழ்ங்கினோம்.
பதிலளிநீக்குமூன்றாவது,நான்காவது தலைமுறையாக அங்கே வாழுந்தமிழ்ர்கள் வள்ளலார்,தி.மு.க,மற்றும் திருக்குறள் மன்றங்கள் வைத்துத் தூய தமிழ் பேசி,தமிழ்ப் பள்ளிகள் நடத்தி தமிழ் வளர்த்து வாழ்வது மிக்கப் பெருமையும்,சிறப்பும் வாய்ந்ததாகும்.
பல தமிழறிஞர்களை அழைத்துப் பாராட்டி ஆண்டு தோரும் விழாக்கள் எடுக்கின்றனர்.அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடினார்கள்.பல மலர்கள் சிறப்பாக வெளியிட்டுள்ளனர்.