பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டு
உலகெங்கும் தோன்றிய தொடக்க கால இலக்கியங்கள் தொன்மைக் கதைகளையும் கற்பனைக் கதைகளையும் உள்ளடக்கங்களாகக் கொண்டு விளங்க, தமிழில் தோன்றிய சங்க இலக்கியங்கள் தமிழ் மக்களின் வாழ்வியலை விளக்கும் இலக்கியமாக வளர்ந்து நிற்பது நம் இலக்கியத்தின் தனித் தன்மையை அறிவிக்கும் சான்றாக உள்ளது. இத்தகு பெருமையான மரபிற்கு உரிமையு டையவர்களாக நாம் இருந்தும் உலக அரங்கில் நம் சிறப்பு முற்றாக இன்னும் அறியப்படா மலேயே உள்ளது. எனவேதான் நாம் போராடி நம் சிறப்பை நிலை நாட்ட வேண்டியுள்ளது.
ஆம்.
உலகத்து அறிஞர்கள் எல்லாம் தமிழ் செம்மொழி என ஒத்துக்கொண்ட பொழுதும் நம் இந்தியாவில் வாழும் பிற மொழியினர் தமிழைச் செம்மொழி என அறிவிக்க முன்வரவில்லை. நூற்றாண்டுப் போராட்டத்திற்கு இடையே நம் மொழியைச் செம்மொழி என அறிவிக்க முடிந்தது. அறிவித்த உடன் இந்தியாவில் வாழும் பிறமொழியினரும் தங்கள் மொழியைச் செம்மொழி என அறிவிக்க கோரினர். கோரி வருகின்றனர். இது புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாகும்.
உலகின் பிற இலக்கியங்கள் செழுமையடைவதற்கு முன்னரே தமிழ் இலக்கியங்கள் செழுமை யடைந்துவிட்டன. இதன் சிறப்புக் கூறுகள் பல பிராகிருத மொழி வழியாகச் சமற்கிருத மொழிக்குச் சென்றுள்ளது என அறுதியிட்டுக் கூறியவர் அமெரிக்காவில் வாழும் பன்மொழி அறிஞர் ஜார்ஜ் ஹார்ட்டு அவர்கள் ஆவார்.
அறிஞர் ஜார்ஜ் ஹார்ட்டு அவர்கள் சமற்கிருத மொழியை நன்கு கற்று அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் சமற்கிருதப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். சமற்கிருத மொழியை முன்பே அமெரிக்காவில் கற்றாலும் இந்தியா வந்து சேஷாத்திரிநாதன் என்ற சமற்கிருத அறிஞரிடமும் கற்றவர். அதுபோல் தமிழ் மொழியை இராம.சுப்பிரமணியம் அவர்களிடம் முறையாகக் கற்றவர். இராம.சுப்பிரமணியம் அவர்கள் தமிழில் மிகச்சிறந்த புலமையுடையவர். வடமொழி யும் அறிவார். பிழையின்றி நூல் பதிப்பிப்பதில் வல்லவர். இத்தகு பின்புலம் உடைய ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களின் வாழ்க்கையை அறிவோம்.
பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டு
ஜார்ஜ் ஹார்ட்டு அவர்கள் அமெரிக்காவில் பிறந்தவர். இளம் அகவையில் வாஷிங்டனில் படித்தவர்.இவர் தந்தையார் அந்நாட்டு அரசின் உச்ச நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணிபுரிந்தவர். ஜார்ஜ் ஹார்ட்டு அவர்கள் ஒரே ஆண் பிள்ளை.செல்வ வளம் உடைய குடும்பம். உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற பொழுதே இவருக்குப் பிற மொழிகளின் மேல் ஈடுபாடு வந்தது. உருசிய மொழியைக் கற்றார். அதற்கு முன்னதாகவே இலத்தீன் மொழி படித்திருந்தார்.
ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களின் ஆசிரியர் ஜார்ஜ் காப்றிற் செசுகி அவர்கள் மிகச்சிறந்த செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் உருசியர். இவர் உருசியப்படையில் பணிபுரிந்தவர். இவருக்குப் பல மொழிகள் தெரியும்.இவர் வழியாக உருசிய கவிதைகளை ஜார்ஜ் ஹார்ட்டு கற்றார். இவருடன் உருசிமொழியில் உரையாடும் வாய்ப்பைப் பெற்றார்.
ஜார்ஜ் ஹார்ட்டு அவர்கள் ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்து இயற்பியல் வேதியியல் உள்ளிட்டவற்றைப் படிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மூன்றாம் ஆண்டு படிக்கும்பொழுது இவரின் அறை நண்பர் ஒருவரின் வழியாகச் சமற்கிருத மொழி வகுப்புக்குச் சென்றார். அம்மொழி உருசிமொழிபோல் உள்ளது எண்ணி வியந்தார். அன்றுமுதல் சமற்கிருதம் படிக்கும் விருப்பினர் ஆனார். பின்னர் நாள்கள் உருண்டோடின. இந்தியாவில் வழங்கும் செம்மொழி ஒன்றையும் கற்கும் வாய்ப்பு ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களுக்கு அமைந்தது.
ஆம்.
இந்தியாவில் வழங்கும் மொழிகளில் தமிழ்மொழி முதன்மையானது. அதனைக் கற்ற ஜார்ஜ் ஹார்ட்டுஅவர்களுக்கு ஓர் உண்மை புரியத் தொடங்கியது. இந்தோ ஐரோப்பியன் குடும்பத்தில் இல்லாத மொழியாகத் தமிழ் மொழி தெரிந்தது. இந்தோ- ஐரோப்பியன் மொழிகளான உருசியன், பிரெஞ்சு, செர்மன், இலத்தீன், கிரேக்க மொழிகளில் தேர்ச்சிபெற்றிருந்த அவருக்குத் தமிழ் மொழியின் அமைப்பு புதியதாகத் தெரிந்தது. பரந்த இலக்கியப் பரப்பு கொண்ட, இந்தோ-ஐரோப்பியன் அல்லாத ஒரு மொழியைக் கற்பதில் இயற்கையாகவே அவருக்கு ஆர்வம் உருவானது.
1965ஆம் ஆண்டு விசுகான்சின் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கச் சென்றபொழுது. அவருக்கு ஏ.கே. இராமானுசன் அவர்கள் தமிழ் தொடக்க வகுப்பைக் கற்பித்தார். இராமானுசம் அவர்கள் தமிழ் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டார். ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களுக்குப் புறநானூறு கற்பித்தவர் ஏ.கே.இராமானுசம்.
ஜார்ஜ் ஹார்ட்டு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வடமொழி படித்துப் பட்டம் பெற்றவர். 1969 முதல் 1975 வரை அமெரிக்காவில் மேடிசன் நகரில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் (University of Wisconsin) வட மொழிப் பேராசிரியராக இருந்தவர். 1963இல் தொடங்கி வடமொழி இலக்கியங்களை விரிவாகக் கற்று வந்தவர். மகாகவி காளிதாசன் படைப்புகள், பவாரி, சிறீஃகர்சா (Sri Harsha) போன்றோர் படைப்பின் மூலத்தையும் ஆழ்ந்து படித்தவர். ரிக் வேதத்தின் ஐந்தாவது பகுதி, பெரும்பாலான உபநிடதங்கள் ஆகியவற்றை அவற்றின் மூலமொழியிலேயே கற்றவர். மலையாளம், தெலுங்கு மொழிகளை நன்கு அறிந்தவர்.அம்மொழி இலக்கியங்களை நன்கு அறிவார்.துளசி, கபீர், மகாதேவ வர்மா நூல்களை ஆழமாகப் பயின்றவர்.
பெர்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் தெற்கு, தென் கிழக்கு ஆசிய ஆய்வுப் புலத்தின் தலைவராகவும் இப்பொழுது பணிபுரிகின்றார். உலகில் இன்று வாழும் அறிஞர்களில் பதினெட்டு மொழிகளை அறிந்தவர் நம் ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களே ஆவார். இவ்வளவு மொழிகள் கற்றிருந்தும் பணிவும் அடக்கமும் மிகுந்தவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். மாணவர்களை நல்வழிப்படுத்தி வளர்ப்பதில் தணியாத ஆர்வம் உடையவர். பதவி நாட்டம் இல்லாதவர். பண நாட்டம் இல்லாதவர். இவர் நினைத்திருப்பின் அமெரிக்காவின் சொகுசு வாழ்க்கையில் சுவை கண்டிருக்கலாம். ஆனால் அவற்றை விடுத்து மொழி கற்பதிலும் இலக்கிய, மொழி ஆராய்ச்சிகளிலும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.
இவர்தம் அறிவாற்றலும், பேரறிவும் அறிந்த மாணவர்கள் இவரிடம் படிப்பதைப் பெரும்பேறாக நினைக்கின்றனர். இவர் முயற்சியில் மிகப்பெரும் தொகை திரட்டப்பட்டுத் தமிழ் ஆய்விருக்கை இவர் பணிபுரியும் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்தம் முயற்சியால் அமெரிக்காவில் தமிழ்க்கல்வி நிலைபெற்றுள்ளது என்றால் மிகையில்லை. அமெரிக்காவில் தமிழ் இலக்கியம், தமிழ்மொழி ஆகியவற்றைப் படிக்கவும் அறியவும் இந்த ஆய்வு இருக்கை செயலாற்றுகிறது. இந்த ஆய்வு இருக்கை வழங்கும் நிதியுதவியின் மூலமாகத் தமிழ்க் கல்விக்கு உதவுவது இயலுகின்றது. இந்தியாவிலிருந்து தமிழறிஞர்களை அழைத்து மாணவர்க ளுடன் கருத்துப் பரிமாறவும் இந்த இருக்கையின் நிதியுதவி பயன்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் தமிழ்விழாவுக்கும் இந்த இருக்கை வழியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழ் பயிலும் சூழல் அறிய இவ்விழாக்கள் உதவுகின்றன.
அமெரிக்கா சென்ற நம் நாட்டுக்கணிப்பொறி வல்லுநர்கள் தனித்தமிழ் நடைமுறைக்கு உதவாது எனவும் பிறமொழி கலவாமல் பேச முடியாது எனவும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த பொழுது ஜார்ஜ் ஹார்ட்டு அவர்கள் ஒன்றரை மணிநேரம் தனித்தமிழில் உரையாற்றி அவர்களின் வாயடைத்தவர். அதன் பிறகே நம் கணிப்பொறிப் புலிகளுக்குத் தமிழின் சிறப்புத் தெரியலாயிற்று. அயல் நாட்டு அறிஞர்கள் தமிழ் கற்றாலும் சிலர் வடமொழிக்கு வால்பிடிப்பவர்கள் உண்டு. ஆனால் ஜார்ஜ் ஹார்ட்டு அவர்கள் சமற்கிருத மொழியை நன்கு கற்றுப் பேராசிரியராகப் பணிபுரிந்தாலும் நடுநிலை பிறழாமல் நின்று தமிழ்ச் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர்.
சங்க இலக்கியங்களை நன்கு கற்றஜார்ஜ் ஹார்ட்டு அவர்கள் பழந்தமிழ்ச்சமூக அமைப்பை நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். பழந்தமிழ மக்களின்கல்வி, அரசாட்சி, பழக்கவழக்கம், மன உணர்வு, பண்பாடு பற்றிய பல தெளிந்த செய்திகளை முன்வைத்துள்ளார். புறநானூற்றைப் பற்றி உரைக்குமிடத்து நாற்பதாண்டுகளாகப் புறநானூற்றைப் படிப்பதாகவும் ஒவ்வொரு முறை கற்கும் பொழுதும் புதுப்புது உண்மைகள் புலப்படுகின்றன என்றும் கூறுபவர்.
கனடாவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட ஜார்ஜ்ஹார்ட்டு அவர்கள் புறநானூற்றில் இடம்பெறும் "நாடா கொன்றோ"எனத் தொடங்கும் பாடலை எடுத்துக்காட்டிப் பேசியபொழுது அவை மயங்கிக் கிடந்ததாக அறியமுடிகிறது. புறநானூறு பாடம் சொல்ல ஜார்ஜ்ஹார்ட்டு வல்லவர். அறிஞர்கள் சிலர் ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களின் கருத்துகள் சிலவற்றில் முரண்படுவதும் உண்டு.
இந்தியாவின் புகழ்பெற்ற சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனக் குறிப்பிட்ட ஜார்ஜ் ஹார்ட்டு அவர்கள் ஆரியநாகரிகம் என்றவர்கள் அடங்கும்படியாக ஆணித்தரமாக எழுதியவர். இவர் மிகச்சிறந்த தமிழ்ப்பற்று உடையவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் பேரிடுபாடும் பற்றும் கொண்டவர்.
The Poems of The Tamil Anthologies (1979) எனும் இவரின் மொழிபெயர்ப்பு நூல் அமெரிக்காவின் The American Book Award மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெருமைக்குரியது. இவர்தம் கைவண்ணத்தில் புறநானூறு ஆங்கிலத்தில் The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru (1999) என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்புக்குத் தென்னாசிய மையத்தின் ஏ.கே.ராமானுஜன் பரிசு கிடைத்தது. மேலும் கனடா இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தென்னாசிய மையமும் இணைந்து வழங்கும் இயல் விருதினை 2005 ஆம் ஆண்டிற்கு இவர் பெற்றுள்ளார்.
அதுபோல் கம்பராமாயணத்திலும் ஜார்ஜ் ஹார்ட்டு அவர்கள் ஈடுபாடு உடையவர். தமிழின் பிற காப்பியங்களைவிடக் கம்பராமாயணம் உயர்வு என்பவர். ஆரண்ய காண்டத்தை ஆங்கிலத்தில் The Forest Book of the Ramayana of Kampan என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர். அரைச் சம்பள விடுப்பெடுத்துக்கொண்டு மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுப்பட்டவர். பணியில் நேர்மையுடையவர் என்பது இதனால் விளங்கும். பதிற்றுப்பத்து நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டுள்ளார்.
இவை தவிர ஜார்ஜ் ஹார்ட்டு அவர்கள் தமிழ் சமற்கிருத இலக்கியங்கள், மொழி குறித்த பல நூல்களை கட்டுரைகளை எழுதியுள்ளார். கணிப்பொறியில் தமிழை எழுத மென்பொருள் கண்டுபிடித்த தொடக்க கால மென்பொருளாளர் இவர். அதுபோல் தமிழ ஒருங்குகுறி வடிவ எழுத்துக்கு அறிஞர்களை அமெரிக்காவிற்கு அழைத்துக் கலந்துரையாடிய பெருமைக்கு உரியவர்.
தமிழ் செம்மொழி ஆகும் தகுதி உடையது என்று இவர் 2004 இல் எழுதிய மடல் வடிவக் கட்டுரை தமிழகத்திலும் இந்திய அளவிலும் மதிப்பிற்குரியதாக அமைந்து இந்திய நடுவண் அரசு தமிழ் செம்மொழித் தகுதியுடையது என அறிவித்து உலகப்புகழ்பெற்றது. அக்கட்டுரையில் ஜார்ஜ் ஹார்ட்டு அவர்கள் தமிழ்மொழி இலக்கியம் பற்றி எழுதிய சிலவரிகள் இதோ:
"தமிழ் ஒரு செம்மொழி என நிறுவ நான் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருப்பது எனக்கு விந்தையாக இருக்கிறது. இது இந்தியா ஒரு நாடு என்பதையும் இந்து மதம் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்று என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்பதுபோல் இருக்கிறது. ("It seems strange to me that I should have to write an essay such as this claiming that the Tamil is a Classical Language - It is akin to claiming that India is a great country or Hindustan is one of the world's great religions)"
உலகின் பெருமை வாய்ந்த செவ்வியல் மொழி தமிழ் என்பது இத்துறையில் ஞானம் உள்ளவர்கட்கு ஐயம் திரிபற வெளிப்படை. தமிழின் செம்மொழித் தகுதியைப் புறக்கணிப்பது இந்தியப் பண்பாட்டுப் பெருமையின் அதன் வளத்தின் சக்தி வாய்ந்ததும் மையமெனத் தக்கதுமான சிறப்பை இழப்பதுமாகும். (The Status of Tamil as one of the great classical languages of the world is something that patently obvious to any one who knows the subject. To deny that Tamil is a classical Language is to deny a vital and central part of the greatness and richness of Indian Culture.")
இந்திய மண்ணின் மணம் கமழும் இலக்கியப் பாரம்பரியமாக, வடமொழித் தொடர்பில்லாது தோன்றிச் செழித்தது தமிழ் மட்டுமேயாகும். வடமொழியின் தாக்கம் தெற்கே பரவி வலுப் பெறுவதற்கு மிக முன்னதாகத் தோன்றியவை தமிழ் இலக்கியங்கள்.அவை பண்பில் தரத்தில் வடமொழி, பிற இந்திய மொழி இலக்கியங்களிலிருந்து வேறுபட்டு நிற்க்கின்றன. தனக்கே உரிய செய்யுள் அமைப்பு முறைகள், இலக்கணப் பாரம்பரியம், தமிழ் மண்ணில் தோன்றிய நுண்ணறிவியலின் எழில், தன்னேரில்லாது பரந்து விரிந்து இலக்கியச் செழிப்பும், தனித்தன் மையும் கொண்டது " எனத் தமிழின் பன்முகச் சிறப்பை வலிமையான சான்றுகள் வழியாக எடுத்துரைத்தவர்.
ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களின் மனைவியார் கௌசல்யா ஹார்ட்டு ஆவார். இவர் தமிழகத்தின் மதுரைப்பகுதியைச் சேர்ந்தவர்.இவரும் பெர்கிலியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.
இதனால்தான் பேராசிரியர் மறைமலை அவர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்தபொழுது அவருக்கு விடைதரு விழாவாகவும் ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களின் புறநானூறு மொழிபெயர்ப்புப் பணியின் பாராட்டு விழாவாகவும் நடைபெற்ற விழாவில் ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களின் வாழ்வியல் சித்திரத்தை ஈரடியில் பின்வருமாறு பதிவுசெய்தார்.
"சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை
செந்தமிழர் வீட்டு மாப்பிள்ளை
கோமான் ஜார்ஜ் பண்பின் எல்லை
கொண்ட கல்விக்கோ எல்லை இல்லை"
இது உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை.
நனி நன்றி:
தமிழ் ஓசை, களஞ்சியம் பகுதி, அயலகத் தமிழறிஞர்கள் வரிசை 6, சென்னை
(02.11.2008)
பேராசிரியர் சி. இ. மறைமலை
முனைவர் பொற்கோ
முனைவர் சுப. திண்ணப்பன்
திரு.அ. முத்துலிங்கம்
திரு.மணி.மு.மணிவண்ணன்
திரு.நா.கண்ணன்(கொரியா)
திரு.ஆல்பர்ட் பெர்னான்டோ
ஜார்ஜ் ஹர்ட் பற்றிய தங்களின் இடுகையைப் படித்தேன். பாராட்டத் தக்கதாக இருந்தது. தமிழ் செம்மொழி என்று தெரிவிக்க ஒரு அயலார் தேவைப்படுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது. ஆயினும் அப்பெருமகனாருக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். உங்களுக்கும் கூட.
பதிலளிநீக்குபேராசிரியர் கே.துரையரசன்
கும்பகோணம்.
ஜார்ஜ் ஹர்ட் பற்றிய தங்களின் இடுகையைப் படித்தேன். பாராட்டத் தக்கதாக இருந்தது. தமிழ் செம்மொழி என்று தெரிவிக்க ஒரு அயலார் தேவைப்படுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது. ஆயினும் அப்பெருமகனாருக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். உங்களுக்கும் கூட.
பதிலளிநீக்குduraiarasan
ஜார்ஜ் ஹர்ட் தமிழ் செம்மொழிப் பரிந்துரைக்காக எழுதிய கட்டுரையைப் படித்திருகின்றேன்.....இருந்தும் இங்கே அவரைப் பற்றி பல பயனுள்ள செய்திகளி தெரிந்து கொண்ட்டேன்......அவருக்கு என்றென்றும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம்..........
பதிலளிநீக்குஉங்களுடைய தமிழ்ச் சேவைக்கு என்னுடைய பாராட்டுக்கள்!!!!!