செவ்வாய், 14 அக்டோபர், 2008

மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரித் தமிழ் இணையப் பயிலரங்கம் படக்காட்சிகள்...


வரவேற்புக் குழுவினர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கு நேற்று(13.10.2008) நடைபெற்றது.காலை பத்தரை மணியளவில் தொடங்கிய தொடக்கவிழாவில் கல்லூரியின் தாளாளர் சு.பழனியாண்டி அவர்கள் தலைமையுரையாற்றினார்.வேலூர் அரிமா சங்கப் பட்டயத் தலைவர் வழக்கறிஞர் ஏ.பி.காமராசு அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் இணையம் வளர்ந்த வரலாறு பற்றி அறிமுகவுரையாற்றி மாணவர்களுக்குப் பயிற்சியளித்தார்.அயல்நாடுகளுக்குப் பணிபுரியச் சென்ற தமிழர்கள் தாயக மக்களுடன் தொடர்பு கொள்வதற்கு இணையம் என்ற கருவி மிகுதியாகப் பயன்பட்டதையும் அதில் இருந்த எழுத்துச்சிக்கல் வரலாற்றையும் எடுத்துரைத்தார்.எழுத்துச் சிக்கல் தீர யுனிகோடு என்ற ஒருங்குகுறி எழுத்துக்கு உரிய தமிழ் மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் எழுத்துருச் சிக்கல் தீர்ந்தது என்றார்.

எழுத்துருச் சிக்கலைத் தீர்க்க மலேசியாவில் பணிபுரிந்த சேந்தமங்கலம் பொறியாளர் முகுந்தராசு உருவாக்கிய இ.கலப்பை என்ற மென்பொருளின் சிறப்பை விளக்கினார்.இந்த மென்பொருளை நம் கணிப்பொறியில் இலவசமாக இறக்கி உள்ளிட்டால் தமிழ் எழுத்துருச் சிக்கல் இல்லாமல் தட்டச்சிட முடியும் என்று விளக்கினார்.மேலும் மாணவர்கள் பேராசிரியர்கள் தமிழ்த் தட்டச்சுப் பழக தட்டச்சுப் பயிலகங்களுக்குச் செல்லவேண்டிய தேவையில்லை.தமிழ் 99 என்ற விசைப்பலகை அமைப்பைப் புரிந்துகொண்டால் மிக எளிதாக தமிழைத் தட்டச்சிட முடியும் என்று மு.இளங்கோவன் பேசினார். இந்தத் தட்டச்சு விசைப்பலகை தமிழ் இலக்கண அமைப்பின்படி உருவாக்கப்பட்டுள்ள தன்மையை செயல்விளக்கம் மூலம் விளக்கினார்.

மேலும் தமிழில் வெளிவரும் தினமலர்,தினமணி,தினகரன்,தமிழ் முரசு உள்ளிட்ட மின்னிதழ்கள் பற்றியும் திண்ணை,கீற்று,பதிவு,புதினம் பற்றிய இதழ்களையும் அரங்கிற்கு அறிமுகம் செய்தார்.

தமிழ்மணம் என்ற இணையத்தளம் உலகம் முழுவதும் எழுதப்படும் வலைப்பதிவுகளைத் திரட்டித் தரும் பாங்கையும் செயல்விளக்கம் வழி எடுத்துரைத்தார். கொரியாவில் வாழும் கண்ணன் உருவாக்கிய தமிழ்மரபு அறக்கட்டளை,சுவிசர்லாந்தில் வாழும் கல்யாணசுந்தரம் உருவாக்கிய மதுரை தமிழ் இலக்கிய மின்திட்டம்,தமிழ் இணையப்பல்கலைக்கழக இணையத் தளம்.விக்கிபீடியா என்னும் கட்டற்றக் கலைக்களஞ்சிம் பற்றி விரிவாகப் பேசினார். செயல் விளக்கம் மூலம் அனைத்துத் தளங்களும் பார்வையாளர்களுக்குக் காட்டப்பட்டு செய்திகள் விளக்கப்பட்டதால் பார்வையாளர்கள் மகிழ்ந்தனர்.

மின்னஞ்சலைத் தமிழில் அனுப்புவது,தமிழில் உரையாடல்(ஜாட்) செய்வது முதலியனவும் மு.இளங்கோவனால் செய்துகாட்டப்பட்டன.அரங்கிலிருந்துபடி கொரியாவில் இருந்த கண்ணன் அவர்களுடனும் ஐதராபாத்திலிருந்த கோபி அவர்களுடன் உரையாடிதைக் கண்ட பார்வையா ளர்கள் தமிழால் இவ்வாறு அனைத்துச்செயல்களையும் செய்ய முடியுமா என வியந்தனர். தமிழ்மொழி மட்டும் எழுத,படிக்கத் தெரிந்தால் ஒருவர் கணிப்பொறியை,இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று எடுத்துரைத்தார்.

இவற்றைப் பயன்படுத்த ஆங்கிலம் கட்டாயம் தேவை என்ற நிலை இன்று இல்லை.அனைத்து வசதிகளும் தமிழில் உள்ளன என்று தன்னம்பிக்கை ஊட்டினார்.

பிற்பகல் அமர்வில் தமிழா டாட்காம் நிறுவனத்தைச் சேர்ந்த முகுந்தராசு மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம், வலைப்பூ உருவாக்கம் பற்றி விரிவாக விளக்கினார்.ஒருவருக்கு மின்னஞ்சல் கணக்குத் தொடங்கி வலைப்பூ ஒன்றும் உருவாக்கப்பட்டது.அதில் நாம் விரும்பும் படம்,ஓவியம்,ஒலி,ஒளிக்காட்சிகளை இணைக்க முடியும் என்று செயல்வழி விளக்கம் அமைந்தது.

தருமபுரி செல்வமுரளி தம் தமிழ்வணிகம் தளம் பற்றியும் இணையத்தின் பன்முகப் பயன் பற்றியும் விளக்கினார்.கணியத்தமிழ் நிறவனத்தின் வெ.யுவராசு வலைப்பூவில் ஒலி இணைப்புப் பற்றி விளக்கினார் கணியத்தமிழ் நிறுவன சபரி அவர்கள் வரியுருமா மென் பொருள் பற்றி செயல்விளக்கம் காட்டி, எழுத்துருச் சிக்கலுக்கு வரியுருமாவின் பணிகளை விளக்கினார்.முருகையன் தாம் வடிவமைத்த தமிழ்க்காவல்,தெளிதமிழ் இணையத்
தளங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் மாணவர்களின் கலந்துரையாடல் அமைந்தது. நாமக்கல் ,சேலம்,தருமபுரி மாவட்டம் சார்ந்த பார்வையாளர்கள்,மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.மாலை 5 மணியளவில் பயிலரங்க விழா நிறைவுற்றது.


தாளாளர் திரு.பழனியாண்டி அவர்கள் குத்து விளக்கேற்றல்


பொறியாளர் அறவாழி அவர்கள் குத்துவிளக்கேற்றல்


தமிழ்மணம் வரவேற்புப் பதாகை


வழக்கறிஞர் ஏ.பி.காமராசு உரை


மு.இளங்கோவன் உரை


தமிழ்மணம் சிறப்பை மு.இ விளக்குதல்


பார்வையாளர்கள் ஒருபகுதியினர்


பார்வையாளர்கள் ஒரு பகுதியினர்


செல்வமுரளி சிறப்பிக்கப்படுதல்


முகுந்து சிறப்பிக்கப்படுதல்

6 கருத்துகள்:

  1. இணையம் வழி இணைந்தோம்,
    இனிக்கும் தமிழ் அறிந்தோம்,
    அதுவே நீ என உணர்ந்தோம்,
    இனியும் தமிழ் வளருமென நினைந்தோம்,
    சிறக்கும் நின் பணி கண்டோம்,
    சிறப்பாய் நீ வழியவென உளம் மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
  2. ஐயா,வணக்கம்.
    பின்னூட்டத்திற்கு நன்றி.
    மு.இ

    பதிலளிநீக்கு
  3. \\ கணியத்தமிழ் நிறுவனத்தின் வெ.யுவராசு வலைப்பூவில் ஒலி இணைப்புப் பற்றி விளக்கினார் \\

    வெ.யுவராசு அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.

    இணையத் தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவனார் அவர்களுடைய வலைப்பதிவில் முதன்முதலாக ஒலி இணைப்பை இன்று ( 2008.10.14 ) கொடுத்துள்ளார். இணையப் பயிலரங்குகள் மூலம் பல விடயங்களை இணையத் தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவனார் அறிந்துகொள்வதற்கு உதவியமைக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. \\ கணியத்தமிழ் நிறுவனத்தின் வெ.யுவராசு வலைப்பூவில் ஒலி இணைப்புப் பற்றி விளக்கினார் \\

    வெ.யுவராசு அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.

    இணையத் தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவனார் அவர்களுடைய வலைப்பதிவில் முதன்முதலாக ஒலி இணைப்பை இன்று ( 2008.10.14 ) கொடுத்துள்ளார். இணையப் பயிலரங்குகள் மூலம் பல விடயங்களை இணையத் தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவனார் அறிந்துகொள்வதற்கு உதவியமைக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பின்னூட்டத்திற்கு நன்றி.
    மு.இ

    பதிலளிநீக்கு
  6. உங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்களும், வணக்கங்களும்..

    செல்வமுரளி இந்நிகழ்ச்சியைப் பற்றி நேற்று தான் கூறினார்.

    பள்ளிப்படிப்புடன் தமிழுக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான இளைஞர்களுக்கு இம்முயற்சி தமிழில் தொடர்ந்து ஈடுபடுத்திட வழிவகுக்கும்...

    வாழ்க தமிழுடன்,
    நிலவன்.

    http://eerththathil.blogspot.com

    பதிலளிநீக்கு