செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

உலகை வலம் வந்த தமிழரிமா முனைவர் ச.அகத்தியலிங்கம்...


முனைவர் ச.அகத்தியலிங்கனார்

சற்றொப்ப இருபதாண்டுகளுக்கு முன் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் இளங்கலைத் தமிழிலக்கியம் பயின்றபொழுது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிற்கு என் பேராசிரியர் முனைவர் துரை. உலகநாதன் அவர்கள் என்னை அழைத்துச் சென்றிருந்தார். அன்றைய நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்த முனைவர்.ச. அகத்தியலிங்கம் அவர்களைக் கண்டும் அவர்கள் உரைகேட்டும் அறிஞர் அவையில் முந்தியிருக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அது முதல் ச.அகத்தியலிங்கனாரைப் பல கருத்தரங்குகளில் கண்டு உரையாடியுள்ளேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்த பொழுதும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுதும் பேராசிரியருடன் கலந்து பழகும் வாய்ப்பு எனக்கு மிகுதியாக இருந்தது.

சிங்கப்பூரில் 2001 ஆம் ஆண்டு நடந்த உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் பழையன புகுதலும் என்னும் தலைப்பில் கட்டுரை படிக்க அவையில் நின்றேன். அவையை வணங்கி, என் கட்டுரை கடைசியாக அமையும் கட்டுரை என்றேன். உடன் குறுக்கிட்டு ச.அகத்தியலிங்கனார் நிறைவாக அமையும் கட்டுரை எனத் திருத்தம் சொன்னார்கள். அவர்களும் முனைவர் திண்ணப்பன் அவர்களும் நானும் சிங்கப்பூர் அரசு அளித்த ஒரு விருந்தில் கலந்துகொண்டு நெடுநாழிகை உரையாடியமை வாழ்வில் மறக்க இயலா ஒன்றாகும். அதுபொழுது எடுக்கப்பெற்ற படம் வேறு ஒரு பதிவில் உள்ளது.காண்க.

பல கருத்தரங்குகள், மேடைகளில் ச.அகத்தியலிங்கனாரை நான் கண்டு அவர்களின் தமிழ்ப்பற்று, உணர்வு, வீறு கண்டு மகிழ்ந்துள்ளேன்.மேடை என்று சொன்னால் அரிமா போலப் பெருங்குரலில் பேசுவார்கள். நண்பர்களிடம் அன்பொழுகப் பேசுவார்கள். தன் கருத்தைத் தானாட்டித் தனாது நிறுத்துவார்கள். உலக மொழிகள் பற்றி மிகச் சிறந்த விளக்கம் தருவார்கள்.

அமெரிக்க மண்ணில் ஆங்கிலேயர்களுக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்து அவர்கள் உள்ளதில் படிந்திருந்த சமற்கிருத மாயையை அடித்து நொறுக்கித் தமிழின்பால் அவர்களின் கவனத்தை இழுத்தவர் நம் ஐயா அவர்கள். தொல்காப்பியம் சங்க இலக்கிய மாண்புகள், தமிழின் சிறப்புகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள சிறந்த பகுதிகளை உள்ளம் ஒன்றி விளக்கும் காட்சிகள் நம் மனக்கண்ணில் என்றும் நின்று நிலவும்.

இப்பெருமைக்கு உரிய தமிழரிமா ச.அகத்தியலிங்கனார் 04.08.2008 புதுச்சேரிக்கு அருகில் உள்ள கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் மகிழ்வுந்தில் வந்துகொண்டிருந்தபொழுது மகிழ்வுந்தின் மேல் சரக்குந்து மோதி நேர்ச்சிக்குள்ளாகி மறைவுற்ற செய்தி நண்பர் தி.நெடுஞ்செழியனார் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் வழி அறிந்து வருந்தினேன். என் பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி (புதுவைப் பல்கலைக்கழகம்) அவர்களிடம் நடந்தவற்றை விளக்கமாக அறிந்துகொண்டேன்.

இணையம் வழியாக இச்செய்தியை உலகம் முழுவதும் உடன் தெரிவித்தேன். என் செய்தி தாட்சுதமிழ், A.O.L ,தமிழ்மணம் வழியாக உலகத் தமிழர்களைச் சென்றடைந்தது. தினமணி இதழின் விழுப்புரம் செய்தியாளர் திரு.செயப்பிரகாசு உள்ளிட்ட செய்தியாளர்களுக்கு என் வழியாகச் ச.அகத்தியலிங்கனார் பற்றிய செய்திகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி சார்ந்த தமிழ் உணர்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் இச் செய்தியைத் தெரிவித்தேன்.

என் இணையப் பக்கம் வழியாகச் செய்தி அறிந்த மறைமலை ஐயா, ஆ.இரா.சிவக்குமாரன் (சிங்கப்பூர்), சிவகுருநாதப் பிள்ளை (இலண்டன்), நா.கணேசன் (நாசா விண்வெளி ஆய்வு மையம்,அமெரிக்கா) உள்ளிட்ட அன்பர்கள் பலரும் என்னுடன் துன்பத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இரவு சிப்மர் மருத்துவமனை சென்று துணைவேந்தரின் உடலைக் கண்டு வருத்தமுற்று நின்றேன். முனைவர் செ.வை. சண்முகம்.முனைவர் அரங்க பாரி உள்ளிட்ட பேராசிரியர்களையும் ச.அகத்தியலிங்கனாரின் குடும்பத்தினரையும் கண்டு ஆறுதல் கூறி மீண்டேன். இன்று காலை என் அலுவல்களை முடித்துக்கொண்டு சிப்மர் மருத்துவமனைக்குச் சென்றேன்.5 நிமைய இடைவெளியில் துணைவேந்தரின் உடலை எடுத்துக்கொண்டு உறவினர்கள், அறிஞர்கள் சிதம்பரம் சென்றதாக அறிந்தேன். மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் அகத்தியலிங்கனாரின் பெயர்த்தி அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் பற்றி வினவியும் அவர்களைக் கண்டும் மீண்டேன்.

துணைவேந்தரின் உடல் 1.50 மணிக்குச் சிதம்பரம் மாரியப்பா நகர் சென்றடைந்தது. அவரின் உடலைக் கண்டு வணக்கம் செலுத்த அவரின் மாணவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குவிந்திருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன். பதிவாளர் முனைவர் இரத்தினசபாபதி, தமிழ்த்துறைப் பேராசிரியர் அரங்க. பாரி உள்ளிட்ட பேராசிரியப் பெருமக்கள், மொழியியல் துறை சார்ந்த பேராசிரியர்கள் மிகுதியான அளவில் திரண்டிருந்தனர்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் இன்று விடுமுறை அறிவிக்கப்பெற்றுத், துணைவேந்தரின் இறப்பிற்கு சிறப்புச் செய்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம.இராசேந்திரன், பல்துறைப் பேராசிரியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் வந்திருந்தனர்.

முனைவர் பொற்கோ,முனைவர் கி.அரங்கன், முனைவர் செ.வை.சண்முகம், முனைவர் இராதா செல்லப்பன்.முனைவர் ஒப்பிலா மதிவாணன், முனைவர் கி.கருணாகரன், முனைவர் இரா.சாரங்கபாணி, முனைவர் காமாட்சிநாதன் உள்ளிட்ட அறிஞர்கள் துணைவேந்தர் உடலுக்கு வணக்கம் செலுத்தினர்.

05.08.2008 இரவு ஏழரை மணிக்கு மாரியப்பா நகருக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் துணைவேந்தரின் உடல் எரியூட்டப்பட்டது. உலகம் முழுவதும் சென்று தமிழுக்குக் குரல் கொடுத்த தமிழ் அரிமா முனைவர் ச.அகத்தியலிங்கனார் இனி அவர்களின் செயலால் என்றும் நினைவுகூரப்படுவார்.

9 கருத்துகள்:

  1. ஆ.இரா.சிவகுமாரன் மடல்...

    பேரறிஞர் டாக்டர் ச அகத்தியலிகம் அவர்கள் மறைவுச் செய்தி என்னைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த 12 ஏப்ரல் 2008 அன்று சிங்கப்பூர் அருள்மிகு முனீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர்கள் ஆற்றிய உரை என்னைப் போன்ற சிங்கப்பூர்த் தமிழர்களின் காதுகளிலிருந்து நீங்குவதற்குள் அவரின் மறைவுச்செய்தி எங்களை நிலைகுலைய வைத்துள்ளது. டாக்டர் அகஸ்தியலிங்ம் அவர்களின் விளக்கங்களுக்குப் பின்னரே மொழியியல் அறிஞர்களுக்கும் இலக்கிய அறிஞர்களுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. மொழியியலால் தமிழிலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் பெருமை செய்ய முடியும் என்பதை அவர் நிலைநாட்டியவர். அன்னாரின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகத்திற்குப் பேரிழப்பாகும்.

    டாக்டர் ஆ ரா சிவகுமாரன், சிங்கப்பூர்

    பதிலளிநீக்கு
  2. தங்கள் அன்பான மடலுக்கு நன்றி.
    மு.இ

    பதிலளிநீக்கு
  3. அன்பான தம்பி அவர்களுக்கு,
    வணக்கம்.
    என் மொழியியல் ஆசிரியர் முனைவர் ஐயா அவர்களின் மறைவை இதை விடவும் யார் சிறப்பாக இடுகை புரிதல் இயலும்!
    அன்புடன்,
    தேவமைந்தன்

    பதிலளிநீக்கு
  4. தங்கள் பக்கம் கண்டேன்.
    பாராட்டுகள்.
    -தனம்,புதுச்சேரி

    பதிலளிநீக்கு
  5. ஆழ்ந்த அனுதாபங்கள், தமிழறிஞர்களை இழக்கும் போதெல்லாம் அது ஈடு செய்யவே முடியாத இழப்பாகவே அது அமைகின்றது......

    பதிலளிநீக்கு
  6. அனைவரின் பதிவிற்கும் நன்றி.
    மு.இ

    பதிலளிநீக்கு
  7. ஆழ்ந்த அனுதாபங்கள். தொலைக்காட்சியில் இந்த செய்தி பார்த்ததும் அதிர்ச்சியாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. ஆ.சிவகுமாரன்(சிங்கப்பூர்)மின்னஞ்சல் மடல்...

    வணக்கம்,

    பேரறிஞர் அகத்தியலிங்கனார் அவர்களின் விரிவான செய்தியைத் தாங்கி உங்களது பக்கம் உள்ளது. இதபோல் செய்திகளை யாரும் வெளியிட்டிருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். விரிவான செய்திகளை வெயிட்டு அவருக்கு நன்றிக்கடன் ஆற்றிய உங்களது சேவை மகத்தானது. பாராட்டுக்கும் தமிழ்ப்பற்றுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கக்கூடியது.

    நன்றி
    வணக்கம்

    ஆ ரா சிவகுமாரன்

    பதிலளிநீக்கு
  9. இழப்பை தவிர்க்க முடியாதெனினும் இத்தகைய பெருமகனாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். அவர்களின் பணியைத் தொடர்ந்து செய்வதுதான் இத்தகையோர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

    அண்ணாரின் புகழ் ஓங்குக!.

    பதிலளிநீக்கு