எங்களூர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள இடைக்கட்டு என்பது. அம்மாவைப் பார்க்கவும் நில புலங்களைப் பார்க்கவும் மாதம் ஒருமுறை புதுச்சேரியிலிருந்து சென்று வருவது வழக்கம்.100 அயிரமாத்திரி(கி.மீ)புதுச்சேரியிலிருந்து எங்கள் ஊர் உள்ளது. நேற்று அவ்வாறு சென்றேன்.
செயங்கொண்டம் குறுக்குச்சாலையில் இறங்கியபொழுது நினைவுக்கு வந்தது. செங்கமேட்டுக் காளி.
ஆம்.
எங்கள் அம்மா நாங்கள் அளவுக்கு அதிகமாக அடம்பிடிக்கும் பொழுது, 'உங்களைச் செங்கமேட்டுக் காளி தூக்கிகிட்டு போவோ' என்று திட்டுவது வழக்கம்.அந்தச் செங்கமேட்டுக் காளியைப் பார்க்க என் மாமா திரு.பி.தியாகராசன் என்பார் பத்தாண்டுகளுக்கு முன் மிதி வண்டியில் ஒருமுறை அழைத்துச் சென்றார்.அவர் வீட்டருகே இருந்த இரெட்டித்தெரு காளியம்மனைப் போலவே செங்கமேட்டுக் காளியும் சிறப்பிற்கு உரியது என்றார்.
இரெட்டித்தெரு காளி பொல்லாதவள் என எம் பகுதி மக்கள் நம்புவார்கள்.எங்கள் உறவினர் ஒருவர் எங்கள் அத்தையின்(அப்பாவின் தங்கை)குடும்பமும் அவர் மகனும் தண்டிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் காளியின் சூளத்தில் கொலைச்சேவல் குத்தியதாக அடிக்கடி சொல்வார்கள்.அந்தக் கொலைச்சேவல் குத்தியவள் இறந்தாள்.எங்கள் அத்தைக் குடும்பம் நல்ல முறையில் வளமாக உள்ளனர் என்பது தனிக்கதை.
அத்தகு நம்பிக்கைக்குக் காரணம் இல்லாமல் இல்லை.இரெட்டித்தெரு காளியின் கடுந்தோற்றமே ஆகும்.இராசேந்திர சோழன் கலிங்க(இன்றைய மேற்கு ஒரிசா) நாட்டின் மேல் படையெடுத்து வெற்றி பெற்ற பொழுது அங்கிருந்த பல சிற்பங்கள்,நினைவு கலைச் சின்னங்களைக் கொண்டு வந்தான்.அவற்றுள் இறைச்சிற்பங்களும் அடங்கும்.அவ்வாறு கொண்டு வந்து எங்கள் ஊரான கங்கைகொண்ட சோழபுரத்தின் நான்கு எல்லையிலும் நான்கு காளிக்கோயில்களை எல்லைக் காவலுக்கு வைத்தான் என்பது வாய்மொழியாகச் சொல்லப்பட்டுவரும் வழக்கு.அவ்வகையில் தெற்கு எல்லையில் இருப்பவள் வீராரெட்டித்தெரு காளியம்மன்.கிழக்கு எல்லையில் இருப்பவள் செங்கமேட்டுக்காளி.
பத்தாண்டுகளுக்கு முன் நான் சென்ற பொழுது செங்கமேட்டுக் காளி எந்த பராமரிப்பும் இல்லாமல் இருந்தாள்.அவளுக்கு வெயில் மழை எல்லாம் ஒன்றுதான்.மழையில் நீராடுவாள்.வெயிலில் குளிர்காய்வாள். ஏறத்தாழப் பல ஆண்டுகளாக அவள் அவ்வாறு இருந்ததால் சிதைவுகள் தெரியத்தொடங்கின.பத்தாண்டுகளில் நான் பார்க்கும் ஓவியர்கள், புகைப்படக்காரர்கள் என அனைவரிடமும் சொல்லிப் பார்த்தேன்.காளியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்த எந்த விடிவும் கிடைக்கவில்லை.ஆனால் தொல்பொருள் ஆய்வுத்துறை பாதுகாக்கப்பட்ட இடம் எனப் பலகை வைத்திருந்தது.
இந்த நிலையில்தான் நேற்று விடுதலைநாள் என்பதால்(15.08.2008) ஊருக்குச்செல்லும் வாய்ப்பில் காளியைப் படம் பிடிக்க முனைந்தேன்.
சென்னை- கும்பகோணம் சாலையில் அணைக்கரை மீன்சுருட்டிக்கு இடையில் உள்ள செயங்கொண்டம் குறுக்குச் சாலையில் இறங்கி, 2 கல் தொலைவு வயல்வெளிகளில் தென்கிழக்கே நடந்துசென்றால் செங்கமேட்டுக் காளியம்மனைக் காணலாம்.ஊர் மக்களிடம் சொன்னால் வழி சொல்வார்கள்.
விடுதலைநாள் விழா என்பதால் பள்ளிக்கூடத்தில் தாய்நாட்டைக் காக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.ஆடிக் கடைவெள்ளி என்பதால் ஊர் இளைஞர்கள் ஒலிபெருக்கியில் அம்மனை வரவழைத்துக் காது கிழிய ஓசையைப் பரவ விட்டனர்.தம்பிகளா!
கொடியேற்றம் நடக்கிறது.எனவே சிறுபொழுது ஒலிபெருக்கியை நிறுத்துங்கள் எனச் சொன்னேன்.அவர்களும் உடன் நிறுத்திவிட்டனர்.
இந்த இடைவெளியில் காளியம்மனைப் பல வகையில் படம்பிடித்துக்கொண்டேன்.
பத்தாண்டுகளுக்குள் பல மாற்றங்களைக் கண்டேன்.நான் முன்பு கண்டபொழுது ஆடையலங்காரம் இல்லாமல் காளி இயல்பாக இருந்தாள்.இப்பொழுது ஆடையலங்காரம். வழிபாடு.பல்வேறு குளிப்புகள் நடைபெறுகின்றன.கல்நார் அட்டையில் கூரைவேயப் பெற்றுப் பாதுகாப்பாக இருந்தாள்.அங்குமிங்கும் சிதறிக் கிடந்த பல சிலைகள் ஓரிடத்தில் நிறுத்தப்பெற்றுப் பாதுகாக்கப்படுகின்றனர்.
தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாக முன்பு அறிவிப்புச் செய்த பலகை இன்றும் உள்ளது.தெற்குப்பகுதியில் ஐந்து சிலைகள் நிரலாக உள்ளன.காளி சிலை மட்டும் தனியே வடக்குப் பகுதியில்உள்ளது.
கலிங்க நாட்டிலிருந்து இராசேந்திரசோழன் காலத்தில் கொண்டுவரப்பெற்ற செந்நிற மணற்கற்களால் ஆன இது கலிங்க நாட்டுக் கலைப்பாணிக்கு எடுத்துக்காட்டு என்ற விவரம்
பெற முடிகிறது.
துர்க்கை,காளி,பைரவர்,பைரவி சிலைகள் கீழே உள்ளன.(இச்சிலைகள் எது எது என அடையாளம் காண எனக்குத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் தெரிவிக்க அதன் அடியில் குறிப்பிடுவேன்.அதுவரை பொதுப்படையாக அரிய சிற்பங்கள் என்ற வகையில் என் பக்கத்தில் காட்சிக்கு வைக்கிறேன்.
(இப்படத்தை,குறிப்புகளைப் பயன்படுத்துவோர் என் பெயர்,என் பக்கம் பற்றிய குறிப்பை வெளியிட வேண்டுகிறேன்)
அன்னையின் அருள் ஒளி மங்காத சிற்பங்கள். வாழ்க உங்கள் பணி
பதிலளிநீக்குதிவாகர்
குவைத்திலிருந்து கொண்டே நம் மண்ணை தொட்டுவிட்ட உணர்வைப் பெற்றேன், நன்றி.
பதிலளிநீக்குதிரு.தமிழ்நாடன்
பதிலளிநீக்குவணக்கம்.
தங்களைப் போல் மண் பற்றும் மக்கள் பற்றும் கொண்ட உணர்வாளர்கள்தான் எங்களுக்குத் தேவை.
மு.இ
அன்பின் இளங்கோவன்,
பதிலளிநீக்குமின் தமிழ் குழுமத்தில் இந்தப் பதிவு பற்றிப் பார்த்தேன்.
அரிய புகைப்படங்கள். இந்தக் காளி கோயில் பற்றிப் படித்திருக்கிறேன்.
தேவி உருவங்கள் யாவும் துர்க்கை வடிவங்கள். வஸ்திரம் தரித்த முதல் இரண்டு சிற்பங்கள் சமீபகாலத்தியன போலத் தோன்றுகின்றன. மற்றவை புராதனமானவை. சிற்ப சாஸ்திரத்தில்
"அஷ்ட புஜா" (எட்டுக் கைகள் கொண்டவள்) என்று குறிக்கப் படும் வடிவம் இது. பெரும்பாலும் நின்ற திருக்கோலத்திலேயே இருக்கும். முதன்முறையாக அமர்ந்த திருக்கோலத்தில் பார்க்கிறேன். தலையணியும், கீரீடமாக இல்லாமல் வித்தியாசமாக கொண்டை போன்று உள்ளது. மிக அழகிய சிற்பம்.
உடுக்கையும், சூலமும், திருவோடும் கொண்டு கபாலமாலை பூண்டு நின்று கொண்டிருப்பது பைரவர். சூலம் மற்றும் கரம் சூலத்தைத் தாங்கியிருக்கும் பாணி தமிழக சிற்பப் பாணி அல்ல, ஹொய்சள / கலிங்க பாணி சிற்பம் இது என்பதில் ஐயமில்லை. மிக அழகிய சிற்பம்.
வலக்கரம் உடைந்து இடக்கரத்தில் உடுக்கை கொண்டிருக்கும் இன்னொரு சிற்பமும் பைரவர் தான். இரண்டு பைரவர் சிற்பங்களிலும் முகம் சாந்தம் தவழ இருக்கிறது, அபூர்வம்.
நன்றி.
-புதிய செய்திகள் எனக்கு.
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடித்த கட்டுரை இது.கலிங்கம் பணிந்த தமிழ்க் காளியின்
சிற்பங்களைத் தூவல் பதிவில் பதிந்து, இல்லக்கணினிக்கு எடுத்துச் செல்கிறேன். இதுபோலும் மக்கள் பண்பாட்டாழத்தைத் தொடும் இடுகைகள்தாம் தங்களைப் பெருமை மிகுவிக்கும். நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
-தேவமைந்தன்
மிகவும் அருமையான தளத்தை இவ்வளவு நாட்களாக பார்வையிடவில்லையென்ற என்ற ஏக்கம் ஏற்படுகிறது. அவ்வளவு அருமையான தகவல்களை வழங்கியுள்ளீர்கள். இந்தத் தகவலை www.eegarai.com என்னும் என் இணையத்தில் பதிவிடுவதில் பெருமையடைகிறேன்.
பதிலளிநீக்குAfter reading about this treasure from some other source, I was looking for the exact location of this place but very minimal and that too very confusing and misguiding information were available in the net. After about 2 hours of (re)search, finally I got your post with the correct information and thanks very much..
பதிலளிநீக்கு