திங்கள், 4 ஆகஸ்ட், 2008
மொழியியல் பேரறிஞர் ச.அகத்தியலிங்கம் அவர்கள் சாலை நேர்ச்சியில் மறைவு...
உலகத்தமிழ் உணர்வாளர்களே!...
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும்,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியில் துறையின் முன்னாள் பேராசிரியரும் பல்வேறு ஆராய்ச்சி நூல்களை எழுதித் தமிழின் சிறப்பை உலக அளவில் நிலைநிறுத்தியவருமாகிய முனைவர் ச.அகத்தியலிங்கம் ஐயா அவர்கள் புதுச்சேரி அருகே உள்ள கிளியனூர் அருகில் இன்று காலை (04.08.2008)11 மணியளவில் நடந்த சாலை விபத்தில் இயற்கை எய்தினார்.இதனை அறிவிக்க மிகுந்த மனத்துயரம் அடைகிறேன்.
துணைவேந்தரின் உடல் புதுச்சேரி சிப்மர் மருத்துவமனைக்கு எடுத்துவரப் பெற்றுள்ளது.அவர்தம் துணைவியார் அவர்கள் சிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பிறகு இயற்கை எய்தியுள்ளார்.ஓட்டுநர்,துணைவேந்தர் அவர்களின் பெயர்த்தியார் காயத்துடன் சிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனக் கிளியனூர் காவல்நிலையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபொழுது அறியமுடிகிறது.உடல் ஆய்வுக்குத் துணைவேந்தரின் உடல் இன்று உட்படுத்தப்பட்டு பின்னர் அவர் ஊருக்கு எடுத்துச்செல்லப்படும்.
முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள் அமெரிக்காவில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.திராவிடமொழிகள் பற்றிய அவர்தம் நூலும் சங்க இலக்கியம் பற்றிய அவர்களின் நூலும் குறிப்பிடத்தகுந்தன.உலக அளவில் தமிழ் மொழியியலுக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்தவர்.அவர்தம் மாணவர்களும்,மொழியியல் துறையும் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளனர்.உலக நாடுகள் பலவற்றிற்குச் சென்று தமிழின் சிறப்பையும், மொழியிலின் மேன்மையையும் வெளிப்படுத்தியவர்.
புதுச்சேரி சார்ந்த தமிழ் உணர்வாளர்கள்,அறிஞர்கள்,பேராசிரியர்கள் துணைவேந்தரின் உடலுக்குச் சிறப்புச்செய்ய அணி அணியாகப் புறப்பட்டவண்ணம் உள்ளனர்.
பின்னர் விரிவாக எழுதுவேன்.
புதுச்சேரியிலிருந்து...
மு.இளங்கோவன், பிற்பகல் 3.10
அறிஞர் ச.அகத்தியலிங்கம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலுடன் , அவரின் தமிழ்த்தொண்டிற்கு நாம் தலை வணங்குவோமாக......
பதிலளிநீக்குதமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் இது ஒரு பேரிழப்பு.
பதிலளிநீக்குஅன்னாரின் தொண்டுகள் என்றும் நிலைத்து நிற்கும்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
நெஞ்சைப் பிளக்கும் துன்பநேர்ச்சி.
பதிலளிநீக்குஅறிஞர் அகத்தியலிங்கனார் மொழியியல் துறைக்கு வந்தபின்னரே
அத்துறைக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது.
அதற்கு முன்னர் அத்துறையில் ஈடுபட்டவர்கள் தமிழ்மரபைப் புறக்கணித்தனர்.இதன் விளைவாகத் தமிழறிஞரால் மொழியியல் ஏற்கப்படவில்லை.அகத்தியலிங்கனாரே
இப் பிளவை நீக்கினார்.
தொல்காப்பியநெறியையும் மொழியியல் ஆய்வையும் இணைத்துநோக்கிய முன்னோடி என்பதாலேயே அவர் மதிப்புப் பெறுகிறார்.அத்தகைய
அறிஞரேறு மறைந்தாரே.
இத்துயரைத் தாங்குதல் எங்ஙனம்?
மறைமலை இலக்குவனார்.
ஆழ்ந்த இரங்கலும், அவரது தமிழ்த்தொண்டுக்கு வணக்கங்களும்!
பதிலளிநீக்குஅறிஞர் ச. அகத்தியலிங்கத்தின் மறைவு தமிழுலகிற்கு பேரிழப்பாகும். அவரது தொண்டு ஈடு இணையற்றது. அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்கு