செவ்வாய், 1 ஜூலை, 2008

நீ.கந்தசாமிப் பிள்ளை (09.06.1898 -18.06.1977)


நீ.கந்தசாமிப் பிள்ளை

நீ.கந்தசாமிப் பிள்ளை அவர்கள் தஞ்சைக்கு அருகில் உள்ள பள்ளியகரம் என்ற ஊரில் பிறந்தவர்.பெற்றோர் நீலமேகப் பிள்ளை, சௌந்தரவல்லி அம்மாள். தஞ்சையில் உள்ள தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். பிறகு தாமே அறிஞர்களிடம் அக்கால வழக்கப்படி பாடங்கேட்டு,பலவற்றையும் கற்று அறிஞரானவர்.அவ்வகையில் தம் பன்னிரண்டாம் அகவையில் சாமிநாதப் பிள்ளை என்பவரிடம் திருமுருகாற்றுப்படை நூலையும், திருவெண்காடு வேங்கடசாமி நாயுடுவிடம் கம்பராமாயணத்தையும், அப்பாவு ஆச்சாரியாரிடம் அறிவுநூல், இயற்கைநூல் எண்ணியலையும் கற்றார்.

யாழ்ப்பாணத்திலிருந்து இவர் வீட்டுக்கு வந்த துறவியொருவர் வழியாகச் சங்க நூல்களின் அறிமுகம் அமைந்தது. சிந்தாமணி அச்சுநூல் ஒன்றையும் அவர்வழிப் பெற்றுள்ளார். சுருங்கச் சொன்னால் தம் இருபத்தைந்தாம் அகவைக்குள் தமிழ் நூல்கள் பலவற்றில் இவருக்கு நல்ல பயிற்சி அமைந்தது. அக்காலத்தில் நிலவிய நீதிக்கட்சியின் அரசியல் செயல்பாடுகள்,கரந்தைத் தமிழ்ச்சங்கப் பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டார். அவ்வகையில் ஏறத்தாழ 40 ஆண்டுகள் கரந்தைத் தமிழ்ச்சங்கப் பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்தவர்.

தமிழகத்திலும் புதுவையிலும் இருந்த பல நிறுவனங்களில் இணைந்து தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார். அவ்வகையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழம், புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம்-தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து பணிபுரிந்துள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கப்பணியில் பல பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச் செயலாற்றியுள்ளார். தமிழ்ப்பொழிலில் இக்கால கட்டத்தில் பல கட்டுரைகளை வரைந்துள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு,ஆளவைமன்றம்,கல்விக் குழுக்களில் பணிபுரிந்துள்ளார். அங்குப் பணிபுரிந்தபொழுது கம்பராமாயணப் பதிப்பு வெளிவர காரண கர்த்தாவாக விளங்கியுள்ளார். அதன் ஆலோசனைக்குழு உறுப்பினர் பதவி வகித்தவர். கலாசேத்திரா, உ.வே.சா. நூலகம் இவற்றின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

தமிழக அரசின் சித்த மருத்துவத்துறை ஆலோசனைக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். பழந்தமிழ் நூற் சொல்லடைவு என்னும் சொல்தொகுப்புப் பணியைப் புதுவையில் தங்கிச் செய்துள்ளார். மேலும் நற்றிணையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அண்மையில் புதுவை பிரெஞ்சு நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது. இன்னும் பல நூல்கள் பிரெஞ்சு நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

நீ.கந்தசாமியார் பெரும் நிலக்கிழார்.சிற்பம் நாட்டியம், கட்டடக்கலையில் ஈடுபாடு கொண்டவர். பிரகதி என்ற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி சில படங்கள் எடுத்து மிகப்பபெரிய பொருளிழப்பிற்கு ஆளாகியுள்ளார். தொடக்க காலத் திரைப்பட வரிசையில்(1940-50) இவரின் திரைப்பட முயற்சி அமைந்துள்ளதை அறியமுடிகிறது. தமிழுக்குக் காலத்தால் அழியாத பல நூல்களை வழங்கியுள்ள இவரின் வாழ்க்கை வரலாறு முழுமையாக எழுதப்பட வேண்டும்.

நீ. கந்தசாமிப் பிள்ளையின் படைப்புகள் சில :

1.திருவாசகம், மர்ரே பதிப்பு, 1956
2.தொல்காப்பியம், மர்ரே பதிப்பு, 1957
3.கல்லாடம்,மர்ரே பதிப்பு, 1957
4.கம்பராமாயணம்(யுத்தகாண்டம் நீங்கலாக), மர்ரே பதிப்பு, 1958
5.தாமசு கிரேயின் இரங்கற்பா, கழகம், 1961
6.திருவாசகம் முதற்பகுதி, 1964
7.பழந்தமிழ் நூற்சொல்லடைவு, 1967
8.சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பெருநூல்
9. valluvar speaks
10 நற்றிணை ஆங்கில மொழிபெயர்ப்பு(2008),பிரஞ்சு நிறுவனம்.

தமிழ்ப்பொழிலில் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
அவற்றுள் சில :

1.தொல்காப்பிய மரபியல், 1926,
2.கம்பரும் மக்களுள்ளமும்,1927,
3.தமிழ்நாட்டு வரலாறு,
4முற்காலத்தில் நாட்டுப்புற ஊர்,1932
5.பள்ளியகரப் பழங்கதை,1938
6.திருக்குறளும் உபநிடதங்களும்,1938
7.இலக்கணப்புலவர் ம.நா.சோமசுந்தரம் பிள்ளை
8.கம்பராமாயணம் பதிப்பும் நிலைமையும்,1954

நீ. கந்தசாமிப் பிள்ளை அவர்களைப் பற்றிப் பாவேந்தர் பாரதிதாசன் பின்வருமாறு பாடியுள்ளார்.

எந்தசாமிப் பிள்ளையும் ஈடிணையற் றுயர்ந்தொருவன் எனைக்க வர்ந்த
சொந்தசாமி உண்டென்றால் வியப்புறுவீர்,மருண்டிடுவீர் தூய்த மிழ்த்தாய்
தந்தசாமி தலைச்சாமி பழந்தமிழும் புதுத்தமிழும் தரமாய்க் கற்ற
கந்தசாமிப் பிள்ளையவன் கடலாழம், விரிவானக் கல்வி யாளன்.

பொறியியலில் பேரறிஞன் புலமையிலோ நுண்ணறிஞன் புதுமலர்ச்சி
அறிவியலில கரைகடந்த அறிவாளன் செந்தமிழ்க்கே அவற்றைக் கொண்டு
நெறியியலில் திறனாயும் நெஞ்சுடையான் நிறைநூற்கள் நினைந்து கற்பான்
வெறியியலில் நிற்காத வீரனவன் வீழ்தவனே விரித மிழ்க்கே.

கட்டடத்தின் ஒப்பந்தம் ஒவ்வொன்றும் கண்டுமுதல் காண்ப தெல்லாம்
கொட்டிடுவான் கரந்தைதமிழ்ச் சங்கத்தின் கடைக்காலாய் கலைம லிந்த
கட்டடமும் அவனாவான் தமிழ்ப்பொழிலின் கடிமணமும் கவின்வ னப்பும்
உட்சுவையும் அவனாவான் உணர்வெல்லாம் உணர்ச்சியெல்லாம் உயிர்த்த மிழ்தான்.

இலக்கியமும் இலக்கணமும் கல்வெட்டாய் செப்பேடாய் இருந்தி னிக்கும்
வலக்கண்ணாய் இடக்கண்ணாய் வாங்குவளி நுரையீரல் வகைப டல்போல்
துலக்கமுறும் எந்நாளும் துல்லியமாய் மிகத்தெளிவாய்த் துய்த்த வற்றைச்
சொலத்தெரிந்த மிகச்சிறந்த காவிரிபோல் தலைச்சுரப்பு சொரியும் குன்றம்.

எள்ளிநகை யாடுவதில் இலக்கணத்தில் சொக்கட்டான் இடுவான், வெல்வான்,
வெள்ளிமின்னல் போல்சிரிக்க விளையாட்டாய்த் தமிழ்கற்கும் வேலையற்றோர்
கொள்ளிவைக்கும் கோடரிக்காம் பானசில வழக்கறிஞர் கூட்டந் தன்னைப்
பள்ளியகரப் பழங்கதைபோல் பலகூறிப் பழமைப்பித்த றுப்பான் பாய்ந்தே!

மொழிபெயர்ப்பில் ஈடில்லான் மேனாட்டு மொழிப்புலவர் முதுநூல் கண்டு
தொழிலாகக் கொள்ளாமல் தொண்டாக்கும் பேருள்ளம் தூய உள்ளம்.
விழியாவான் எந்தமிழுக்கு,,சங்கநூற் சொல்லடைவு விரிவனைத்தும்
பொழிகின்ற குற்றாலத் தைந்தருவி பெரும்புலமை பொருநை ஆறே!

எத்தனைநூல் வாங்கிடுவான் எத்துணைநூல் கற்றிடுவான்
அத்தனையும் தன்னலத் தாழியின் - முத்தல்ல!
எண்டிசைக்கும் ஏருழவன் ஈந்த உணவாகும்
ஒண்டமிழ்க் கான உரம்.

(நூல் : புகழ்மலர்கள்) பாடல் வெளிவந்த இதழ்,தமிழ்நிலம்(13.10.1949)


இவர்களுக்கு நன்றி:

பேராசிரியர் மது.ச.விமலானந்தம்,தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்.
பாவேந்தர் பாரதிதாசன், புகழ்மலர்கள்.
முனைவர் வீ.அரசு முகப்புரை,நீ.கந்தசாமியாரின் நற்றிணை ஆங்கில மொழிபெயர்ப்பு(2008).
திரு.கண்ணன்,பிரஞ்சு நிறுவனம்,புதுச்சேரி (படம் உதவி).

6 கருத்துகள்:

  1. தகவலுக்கு நன்றிங்க

    பதிலளிநீக்கு
  2. தமிழிற்கினிய அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    தமிழ் ஓசையில் தங்களின் அறிவியல்,கணினி சார்ந்த கட்டுரைகளை படித்திருகிறேன்.
    தங்கள் வலைப்பூவையும் படிப்பதுண்டு.


    தமிழ் மென்பொருள் குறித்த தகவல்கள், அது குறித்த சிந்தனை பதிவுகள் மிகக்குறைவாகவே ஊடகங்களில் பதியப் படுகிறது. இணையத்தில் பதிந்துவந்தாலும் துறையோரே படிக்கும்படியாக உள்ளது...
    தாங்கள் ஏன் இது குறுத்த கட்டுரைகளை சிறந்த நாளேடான தமிழ் ஓசையின் களஞ்சியம் பகுதில் தொடர்ந்து எழுதக்கூடாது..?

    இதன் தேவை தமிழுலகிற்கு அவசியப்படுகிறது.
    ஆவணம் செய்வீர்களாக..

    (எமது கட்டுரைகள் பாதிரி.வெ.யுவராசன் எனும் பெயரில் தமிழ் ஓசையில் வெளியாகியுள்ளன)

    அன்புடன்,
    வெ.யுவராசன்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் எண்ணத்தை ஈடேற்றுவேன்.
    மு.இளங்கோவன்

    பதிலளிநீக்கு
  4. அன்பு இளவல் முனைவர் மு.இளங்கோவன் அவர்களே!

    தங்களின் பதிவுகள் அனைத்தும் வரலாற்றை அறிவுறுத்தும் நெடுஞ்சாலையாகும்.

    ஒரு நூறு ஆண்டின் முன்னே ஓங்கிய தமிழர் தம்மின் வரலாற்றை
    அறியாரும் அறியும் வண்ணம்
    ஆக்கிய பதிவைப் போற்றித் தரவேண்டும் ஒரு நூறு
    தங்கக் கட்டி.

    பெரும்பேறு பெற்றோரைப் போற்றுதற்கு தினம் நூறு பதிவுகள் வேண்டும்.

    இவண்

    இரவா

    பதிலளிநீக்கு
  5. அய்யா,
    நல்ல பதிவு, சிறந்த அறிமுகம். தொடரட்டும் தங்களின் தமிழ்த் தொண்டு. கரந்தை தமிழ்ச்சங்கம் குறித்தும், தமிழ் பொழில் குறித்தும் அதில் வந்த கட்டுரைகள் போன்றவற்றையும் தனி பதிவில் இடுங்கள். பிள்ளையவர்கள் போன்றே வே.உமாமகேசுவரனார், ந.மு.வே.நாட்டார், விபுலானந்தர் பட்டியல் தொடரும், கரந்தை சங்கத்தின் அங்கத்தினர்கள். அனைவரையும் பற்றியும் அறியத்தாருங்கள். எங்களின் தமிழ்த்தாகம் தீருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு