செவ்வாய், 24 ஜூன், 2008

காந்தியப் பற்றாளரும் தமிழ் உணர்வாளருமான பொ.தி.ப.சாந்தசீலன்



புதுச்சேரியின் அறிமுகம் எனக்குப் பதினாறு ஆண்டுகளாக உண்டு. 1992 இல் புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு இளம் முனைவர் பட்டம் படிக்க வந்ததிலிருந்து புதுச்சேரியில் வாழும் தமிழ் அறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகியுள்ளேன்.

தமிழாசிரியர்களாகவும், பாவலர்களாகவும், இலக்கணப் புலவர்களாகவும், இதழ் வெளியீட்டாளர்களாகவும், ஓவியர்களாகவும், அரசியல் இயக்கம் சார்ந்தவர்களாகவும், சமூகத் தொண்டர்களாகவும், கலைஞர்களாகவும் விரியும் அப்பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

மூவாண்டுகளாகப் பேராசிரியர் பணி ஏற்றது முதல் வீட்டிற்கு இலவயமாக வரும் சில விளம்பர ஏடுகளில் பொ.தி.ப.நிலவணிகம் என்னும் விளம்பரம் என் கண்ணை உறுத்திகொண்டே இருந்தது. தமிழில் விளம்பரம் செய்துள்ள இவ் அன்பரைப் பார்க்க வேண்டுமே எனப் பல நாட்களாக நினைத்தது உண்டு. ஆனால் உரிய காலம் வாய்க்காமல் இருந்தது. அண்மையில் தமிழ்க்காவல் என்னும் இணைய இதழ் வெளியீட்டு விழாவில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் பொ.தி.ப.சாந்தசீலன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

விழா நெருக்கடியில் அவர்களிடம் விரிவாகப் பேசமுடியவில்லை. ஆனால் என் தமிழ்ப் பணியை அறிந்து என்னிடம் உரையாட விரும்புவதைத் தெரிவித்தார்கள். அந்த வகையில் இரண்டு நாள்களுக்கு முன் திரு. தி.ப.சாந்தசீலனார் இல்லத்திற்குச் செல்ல நேர்ந்தது(21.06.2008). என் புத்தகங்கள் சிலவற்றை எடுத்துச் சென்று வழங்கினேன். பேசும்பொழுதுதான் தெரிந்தது அவர்கள் மிகச் சிறந்த காந்திய நெறியினர் என்பது. அத்துடன் நாட்டுப்புறப்பாடல்கள் பாடுவதில், கேட்பதில் அவர்களுக்கு மிகப்பெரிய நாட்டம் இருப்பதைக் கண்டு அளவில்லாத மகிழ்ச்சியுற்றேன்.

விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் என்னும் அறிஞரின் வாழ்க்கை வரலாற்றையும், நாட்டுப்புறவியல் என்ற என் இரு நூல்களையும் எடுத்துச் செல்லாமல் போனோமே என நினைத்தேன். விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் அவர்கள் தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழர். காந்தியடிகளுடன் இணைந்து தென்னாப்பிரிக்காவில் உழைத்தவர். தமிழகம் வந்த பிறகும் காந்தியக் கொள்கையில் முழுமையாக இருந்தவர். எனவே திரு.சாந்தசீலனார்க்கு அந்நூலை அளிப்பது பொருத்தம் என நினைத்தேன்.

அதுபோல் திரு.சாந்தசீலன் அவர்கள் நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் பெரு விருப்பம் உடையவர் என்பதை அறிந்தேன். இந்து நாளிதழில்(23.09.2002) நடவு நடும் பெண்களைப் பாடச்செய்து அவர்களுக்குப் போட்டி வைத்துப் பரிசளித்துள்ள செய்தியும் படத்துடன் இருக்கக் கண்டு மகிழ்ந்தேன்.நடவுப்பாடல்கள் பலவற்றைத் தொகுத்த எனக்கு அவர்மேல் மதிப்பு ஏற்படுவது இயல்புதானே!

அந்த முதல்நாள் சந்திப்பில் திரு.சாந்தசீலன் அவர்கள் பல நடவுப்பாடல், ஏற்றப்பபாடல்களை அழகிய இசையில் பாடிக் காட்டினார்கள். நானும் சில பாடல்களைப் பாடிக்காட்டினேன். இருவருக்கும் இசையிலும், தமிழிலும் ஆர்வம் இருப்பதை உணர்ந்துகொண்டோம்.பிரியா விடைபெற்று அன்று இரவு வீடு திரும்பினேன்.

தி.ப.சாந்தசீலன் அவர்களின் நினைவுகள் என்னை அவர்பால் ஈர்த்தது. காரணம் மிகப்பெரும் பொருள் வளம் உடைய அவர் காந்திய நெறியில் நிற்பதும் தமிழின்மேல் மிகப்பெரிய பற்றுக்கொண்டு இருப்பதும், நாட்டுப் புறப்பாடல்களை நேசிப்பதும் எளிய வாழ்க்கை வாழ்வதும், தன் உழைப்பில் ஈட்டிய செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி மகிழ்வதும் அவர்க்கு இயல்பாக உள்ளதை நினைத்து மிக மகிழ்ந்தேன்.

படிப்பார்வம் உடைய பல எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளைத் தத்தெடுத்துப் படிக்க வைத்தலை ஆண்டுதோறும் செய்து வருகிறார். விளையாட்டு வீரர்களுக்குப் பல வகையில் உதவுகிறார். விளம்பர வெளிச்சம் இல்லாமல் இப் பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறார் எனபது அறிந்து அவரைப் பற்றி எழுத நினைத்தேன்.

அவர் இல்லச் சுவர்களில் தமிழ், தாய்மொழியின் சிறப்பு,காந்திய நெறிகள், இயற்கை வாழ்வு,இயற்கைப் பாதுகாப்பு பற்றிய பல விளம்பரங்கள் உள்ளன. கோயில்களுக்குத் தமிழர்களின் மரபு மரங்களை இலவயமாக வைத்துக் கூண்டு உட்பட அமைத்துப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

ஒரு நாள் விட்டு இரண்டாம் முறையாகச் சந்திக்க தி.ப.சாந்தசீலனார் இல்லம் இன்று (23.06.200) மாலை சென்றேன். விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூலையும் என் நாட்டுப்புறவியல் நூலையும் அளித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுற்ற சாந்தசீலனார் தம் வயல்வெளியில் வேலை செய்யும் பெண்கள் மிகச் சிறப்பாகப் பாடல் பாடுவார்கள் என்றார். தினை விதைக்கும் பாடல் மிகச்சிறப்பாக இருக்கும் என்றார்கள். அவ்வாறு எனில் அப்பாடல் பாடுபவர்களை நான் பார்க்க இயலுமா? அத்தகு ஒரு வாய்ப்பு அமையும்பொழுது அவர்களை எனக்கு அறிமுகம் செய்யுங்கள் என்றேன்.

உடனே தம் தொலைபேசியை எடுத்துத் தன் உதவியாளர் ஒருவரிடம் பேசினார். பாடல் பாடுபவர்கள் தயாராக இருக்கும்படி பணித்தார். என்னை உடன் அழைத்துகொண்டு திரு.சாந்தசீலனார் அவர்களே தம் விலை மிகுந்த மகிழ்வுந்தை ஓட்டிக்கொண்டு வந்தார் (இதுநாள் வரை இதுபோன்ற ஒத்துழைப்பை நான் பார்த்ததும் இல்லை.நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை. மாறாக நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கவும் படம் எடுக்கவும் சென்ற என் நண்பர் ஒருவரைச் சாமிக் குற்றம் வரும் என ஊர் மக்கள் கட்டி வைத்தும் நாங்கள் சென்று மீட்டு வந்ததும் நினைவிற்கு வந்து சிரிப்பூட்டின. என் பல்வேறு நாட்டுப்புறவியல் பட்டறிவுகளைத் தனிக்கட்டுரையாக வேறொரு அன்பருக்காக எழுதி வருகிறேன். சில மாதங்களுக்குப் பின் வெளியிடுவேன். இது நிற்க)

ஏறத்தாழ 15 கல் தொலைவு எங்கள் வண்டி விரைந்தது. நாகரிகம் முற்றாகத் தாக்குதல் தொடுக்காத ஒரு ஊரில் இரவு 7.45 மணியளவில் இறங்கினோம். ஊர்மக்கள் அனைவரும் கூடிவிட்டனர். ஒவ்வொருவருக்கும் நூறு உரூவா தருகிறோம் பாடல் பாடுக என்றார் நம் சாந்தசீலனார். அகவை முதிர்ந்த பெண்டிர் பலரும் ஆர்வமுடன் பாட முன்வந்தனர். வியர்வை நீங்காத, ஒப்பனையற்ற அப்பெண்களின் உள்ளத்திலிருந்து தமிழிசை ஊற்றெடுத்தது.

இது திட்டமிடப்படாத திடீர் பயணம் என்பதால் என்னிடம் பதிவுக்கருவி இல்லை. ஆனாலும் சில பாடல்களைப் பாடும்படி கேட்டு அவர்களிடம் மிகச்சிறந்த தமிழ் மரபுச்செல்வம் உள்ளது. இவற்றைச் சிந்தாமல் சிதறாமல் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டும் என்று ஆழமாக எண்ணிக் கொண்டேன். நாங்கள் முக்கால் மணி நேரம் அங்கு இருந்திருப்போம். பல பாடல்களைப் பாடிக்காட்டினர். திரு.சாந்தசீனலார் அந்தப் பகுதியில் நன்கு அறிமுகம் ஆனவர். பாட வந்தவர்களுக்கு நூற் உருவா என்ற வகையில் உரூவா 5500 அளவில் பணத்தை அள்ளித்தந்த அந்த வள்ளல் உள்ளத்தை எவ்வாறு போற்றுவது?

தமிழிசையில் - நாட்டுப்புற இசையில் ஆர்வம்கொண்டுள்ள நம் சாந்தசீலனார் அந்த தமிழ் மரபுச் செல்வங்களை மீட்கும் பணிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதால் நாட்டுப்புற இசைச்செல்வங்களை உரியவகையில் (காணொளி, ஒலிப்பதிவு) என்னால் மீட்கமுடியும் என நினைக்கிறேன்.

23.06.2008 8 மணியளவில் பாடல் இசைத்த பெண்கள் பற்றிய சிறுவிவரம்.

1.இர.குப்பு(அகவை 70) க /பெ இரத்தினவேலு
இவர் "புள்ளையாரே", "குன்னக்குன்ன மப்பெறங்க", எனத்தொடங்கும் பாடல்களைப் பாடினார்.

2.ஆண்டாள் (அகவை 65) க /பெ தனபால்
"வடக்க மரக்காணம்", " மஞ்சகுளிக்குதாம் சென்ன குன்னி மைனரு தேடுதாம் சென்ன குன்னி" எனத்தொடங்கும் பாடல்களைப் பாடினார்.

3.கிருஷ்ணாம்பாள் (55) க./பெ முனுசாமி

4.விருத்தம்பாள்(70) க /பெ உத்திராடம்

5.செல்வி (35) க /பெ நடராசன்

8 கருத்துகள்:

  1. ஏற்றவரை ஏற்றபொழுதில் பாராட்டியிருக்கிறீர்கள். மனமுவந்த பாராட்டுகள்!
    அன்புடன்
    தேவமைந்தன்

    பதிலளிநீக்கு
  2. ஐயா,
    தங்கள் கருத்திற்கும்,பாராட்டிற்கும்
    நன்றி.
    மு.இளங்கோவன்

    பதிலளிநீக்கு
  3. முனைவர் திரு இளங்கோவன் அவர்களே
    திரு தி ப சாந்த சீலன் அவர்கள் பற்றி உங்கள் மூலமாக அறிந்த போது
    மனம் மிகவும் மகிழ்வுற்றது,
    நம்முடைய பழங் கலைகளான பாரம்பரியமிக்க நாட்டுப் புறக் கலைகளில் அடக்கமான நாட்டுபுறப் பாடல்கள் பல அறிவார்ந்த சொற்களை , நல் பொருட்களை தன்னகத்தே கொண்டது,ஆராய்ந்து அவைகளில் உள்ள நல்ல விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டும், அவைகளை ஒருவர் பாதுகாக்க நினைக்கிறார் என்றாலே அது மிகவும் போற்றத்தக்கது, மேலும் அவரின் பெருமைய அறிந்து அவரை உலகறியச் செய்த நீங்களும் மிகவும் பாராட்டப் படவேண்ண்டியவர் என்பதில் ஐய்யமில்லை
    மிகவும் மகிழ்ச்சி

    அன்புடன்
    தமிழ்த்தேனீ
    rkc1947@gmail.com
    http://thamizthenee.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. தமிழ்த்தேனீ அவர்களுக்கு வணக்கம்.
    தங்கள் பாராட்டு மொழிகளுக்கு நன்றி.
    நாட்டுப்புறப் பாடல்கள்,தமிழரின் பிற மரபுக் கலைகளைப் பாதுகாக்க வேண்டும் எனத் திரு கண்ணன்,சுபா,நா.கணேசன்,சங்கரபாண்டி போன்றவர்களும் வெளிநாட்டிலிருந்து அடிக்கடி என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.உங்கள் அனைவருக்கும் நன்றி.
    மு.இளங்கோவன்

    பதிலளிநீக்கு
  5. "நாற்று நடும் பெண்கள், எல்லாம் அழுக்கு, அவர்களின் பாடல்களைத் தவிர" அறிவுமதி சொல்லக் கேட்ட சப்பானிய துளிப்பா. தோழர். சாந்தசீலன் பணி சிறக்கட்டும். தங்களின் எண்ணங்கள் செயல் வடிவமாகட்டும். தமிழரின் தொன்கலைகளை மீட்டெடுப்போம்.

    பதிலளிநீக்கு
  6. முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு ,
    நானும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் .
    உரு கண்டு எதுவும் உணரமுடியாது என்பதை உங்கள் கடிதம் முலம் தெரிந்துகொண்டேன் .
    திரு சாந்த சிலன் அவர்கள் பெயர் என்னை கவர்ந்தது , அவரின் காந்திய பற்றும் , நாட்டு பாடல் பற்றிய ஆர்வமும் மகிழ்ச்சி அளிக்கிறது .
    அன்புடன்
    சுகுமாரன் amirthamintl@gmail.com

    பதிலளிநீக்கு
  7. தங்கள் பாராட்டிற்கு நன்றி
    மு.இ

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் தமிழ்நாடன்,
    தங்கள் மடலுக்கு நன்றி.
    மு.இ

    பதிலளிநீக்கு