ஞாயிறு, 29 ஜூன், 2008

நாசா விண்வெளி ஆய்வுநடுவத்தில் ஒரு தமிழுள்ளம்....தமிழ் ஓசையில் என் கட்டுரை

தமிழ் ஓசை களஞ்சியம் மின்வருடிப் படம்

  உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அறிமுகமான பெயர் நாசா விண்வெளி ஆய்வு மையமாகும். தெரிந்தோ, தெரியாமலோ உலக மக்களாகிய நாம் அனைவரும் நாசாவின் ஆராய்ச்சிப் பயனிலும் சேவையிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். செல்பேசிகள், இணையம் இவற்றைப் பயன்படுத்த நாசா நமக்கு உதவியுள்ளது.

  உலகின் தலைசிறந்த அறிவாளிகளின் கடும் உழைப்பிலும் ஆராய்ச்சியிலும் இவ்விண்வெளி மையம் எந்தநேரமும் இயங்கிக்கொண்டே உள்ளது. பல நாடுகளைச் சேர்ந்த அறிவாளிகள் பணிபுரிந்து விண்வெளி ஆய்வுகளில் முத்திரை பதிக்கின்றனர். இந்நிறுவனத்தின் வழியாக நடைபெற்ற நிலவுப்பயணம், செவ்வாய்க்கோள் பயணம் என்பனவும், வானுலகில் பன்னாட்டு ஆய்வுமையம் அமைக்கும் பணியும் உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அண்மைக் காலமாக வான்வெளியில் பன்னாட்டு ஆய்வு நிலையம் அமைப்பதை உலக மக்கள் ஆர்வமுடன் பேசிவருகின்றனர்.

  வான்வெளி ஆய்வுமையம் புவியிலிருந்து 250 கல் தொலைவுக்கு மேலே1600 அடி நீளமும், 400 அடி அகலமும் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. இவ் வான்வெளிக்கு ஏவு ஊர்திகளை அனுப்புவதில் தமிழர் ஒருவர் பெரும் பங்காற்றி வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

  பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஊர் சமீன் காளியாபுரம்.இவ்வூரில் பிறந்தவர் நா.கணேசன் (அகவை 48).பெரும் செல்வ வளம் கொண்ட குடும்பத்தில் பிறந்த நா.கணேசன் இளமையில் பொள்ளாச்சியிலும் கோவையிலும் வாழ்ந்தவர்.(நா.கணேசனின் தாயார் வீடு சிங்காநல்லூரில் உள்ளது.இது தேவர்மகன் படத்தில் காட்டப்படுவது). சிற்றூர்ப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர்.இளம் அகவையில் பள்ளிக்குச் செல்லாமல் மலை மக்களுடன் சேர்ந்து மலைப் பகுதிகளுக்குச் சென்று இயற்கை வளங்களைக் கண்டு சுவைத்தவர். பின்னாளில் சங்க இலக்கியக் காட்சிகளைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது என்கிறார்.

  பொறியியல் படிப்பைச் சென்னைக் கிண்டிப் பொறியியல் கல்லூரியிலும் முதுநிலைப் பொறியியலை சென்னை ஐ.ஐ.டி.யிலும் பயின்றவர். முதுநிலை அறிவியல், முனைவர் பட்டங்களை அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். கடந்த பதினேழு ஆண்டுகளாக நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இயங்கியல் துறையில் (Notes and Dynamic)) மேல்நிலைப் பொறியாளராகப் பணிபுரிகின்றார்.

  கணேசன் அவர்கள் தாம் கற்ற கல்வியில் தம் பேரறிவு விளங்கும்படி கடுமையாக உழைத்தவர். இரு கண்டுபிடிப்புகளைப் புதியதாக வானாய்வுத் துறைக்கு வழங்கியவர். இவை கணேசன் மாதிரி (Ganesn Model) என அறிஞர் உலகால் அழைக்கப்படுகிறது.

திரு.நாக. கணேசன் அவர்கள்

 கணேசன் அவர்கள் பொறியியல் படிக்கின்ற காலத்திலேயே தமிழ்ப் பற்றுடையவராக விளங்கியவர். இவர் தம் உறவினர்களான கு. அருணாசலகவுண்டர் அவர்கள், வே.இரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் இவரின் தமிழ்ப்பற்றிற்கு ஒருவகையில் காரணகர்த்தாக்களாக விளங்கியுள்ளனர். ஓலைச் சுவடிகள், தமிழறிஞர்களின் வரலாறு, தமிழ்நூல் பதிப்பு பற்றிய பேரறிவு பெற்றவராக மாணவப் பருவத்திலேயே நா.கணேசன் விளங்கியவர். இப்பொழுது அவ்வறிவு தமிழ் ஓலைச்சுவடிகளைப் பதிப்பிக்கும் வகையில் மலர்ச்சி பெற்றுள்ளது. இவ்வகையில் காராணை விழுப்பரையன் மடல் என்னும் நூலைப் பதிப்பித்து மின்னூலாகத் தமிழ் மரபுத் திட்டத்திற்கு வழங்கியுள்ளார். பட்டிப்புராணம் பதிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளார். பழனித் திருக்கோயில் பற்றிய வரலாற்று ஆவணங்களைப் புலவர் இராசு அவர்களைத் தொகுக்கச் செய்து விரைவில் வெளியிட உள்ளார்.

  அரிய தமிழ்நூல்கள் பல வெளிவருவதற்குப் பலருக்கும் உதவுவது இவர் இயல்பு. அமெரிக்கா செல்லும் தமிழ் அறிஞர்களை வரவேற்று விருந்தோம்புவதைத் தம் பழக்கமாகவும் வழக்கமாகவும் கொண்டுள்ளார். வீ.ப.க.சுந்தரம், சிற்பி, கி.நாச்சிமுத்து, சாலமன் பாப்பைய்யா, அமுதன், மா.ரா.பெஎ.குருசாமி, இராம. சுந்தரம், அறிவுமதி, வா.செ.குழந்தைசாமி, தமிழன்பன், மலேசியா பரமசிவம் உள்ளிட்டவர்களை அழைத்துப் பெருமை செய்துள்ளார்.

  தம் பொள்ளாச்சி வீட்டில் மூவாயிரம் அரியதமிழ் நூல்களும், அமெரிக்க வீட்டில் மூவாயிரம் அரிய தமிழ் நூல்களும் பாதுகாத்து வருகின்றார். வெளிநாட்டு மாணவர்கள் தமிழ்படிக்க.ஆய்வு செய்யப் பலருக்கு இவர் நூல்கள், குறிப்புகள் வழங்கி உதவி செய்துள்ளார்.உலக அளவில் தமிழ்பற்றி நடைபெறும் கலந்துரையாடல்கள், ஆராய்ச்சிகளில் தமிழர், திராவிட மொழிகள் பற்றி கருத்துரைக்கும் கட்டுரை வரையும் இயல்புடையவர். சமற்கிருதப் பெருமை கூறி தமிழைத் தாழ்த்தும் அறிஞர்கள் உள்ளம் உவக்கும் வகையில் தமிழின் பெருமையை, தமிழர்களின் பெருமையை நிலை நாட்டி இவர் வரைந்துள்ள ஆய்வுக் கட்டுரைகள் உலகத் தரத்தனவாகும்.

  அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளுடனும் தமிழர்களுடனும் நல்லுறவை வைத்திருக்கும் கணேசன் அவர்கள் உலக அளவில் தமிழர்களுக்கு உதவும் பல அமைப்புகளில் அறிவுரைஞர் குழுக்களில் இடம்பெற்றுள்ளவர். தமிழ் மணம் என்ற இணையத்திரட்டிக்கு இடையூறு வந்தபொழுது அமெரிக்கா வாழ் நண்பர்களுடன் இணைந்து அந்நிறுவனம் வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல உதவி அதன் உறுப்பினராகவும் விளங்குபவர்.

  தமிழ் இணைய வளர்ச்சியில் கணேசனுக்கு ஒரு பங்கு உண்டு. தமிழ் எழுத்துரு, தமிழ் மென்பெருள் பற்றிய ஆய்வுகிளல் ஈடுபடுபவருக்குப் பல வகையில் உதவுவது, கருத்துரை வழங்குவது இவர் இயல்பு. இவ்வகையில் முகுந்துவின் எ.கலப்பை உருவாக்க உதவியுள்ளார். வலைப்பதிவு தமிழர்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும் என்பதை அறிந்த கணேசன் வலைப்பதிவர்களை ஊக்கும் வகையில் பல செயல்களைச் செய்து வருகின்றார். தமிழகத்தின் பகுதிகள்தோறும் தமிழ் வலைப்பதிவர்கள் பட்டறை நடைபெற அறிவுரை வழங்கி அமெரிக்காவில் இருந்தபடியே தக்கவர்களை நியமித்துப் பணிபுரிந்து வருகிறார்.

 தமிழர்களுக்கு இணையத்தில் இன்று தேவையாக இருப்பது ஒருங்குகுறி எழுத்துருவாகும்.அவ்வெழுத்துருக்களின் வளர்ச்சி பற்றி தெளிவான வரலாறு அறிந்தவர்களுள் கணேசனும் ஒருவர். பல தமிழ் எழுத்துருக்கள் வடிவமைப்பாளர்களுக்குக் கருத்துரை வழங்கியுள்ளார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களைப் பின்பற்றி கருத்துரைப்பவர். உகரங்களை உடைத்து எழுதவேண்டும் என்னும் இவர் கருத்தைத் தமிழ் அறிஞர் உலகம் ஏற்பதில்லை.

  தமிழில் வெளிவந்துள்ள பழைய பதிப்புகள், புலவர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்கள், அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரல்நுனியில் வைத்திருப்பவர். கல்வெட்டுகள் செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பவர்.

  அண்மையில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூருக்குப் பயணம் செய்தபொழுது அங்கிருந்த மலைப்பகுதியில் இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாக இரும்பு உருக்கியதற்கான தடயங்கள் இருந்ததை அறிஞர் தொ.பரமசிவன் அவர்கள் எடுத்துரைத்த பொழுது இலங்கையிலும் இத்தகு இரும்பு உருக்கும் உலைகள் இருந்துள்ளது என்பது பற்றி மேனாட்டு அறிஞர் ஒருவர் ஆராய்ந்துள்ளதை நா.கணேசன் எடுத்துரைத்தார்.

  மேல்நாட்டு அறிஞர்கள் தமிழகத்தைப் பற்றி எழுதியுள்ள நூல்கள், கட்டுரைகள் பற்றி வினவினால் அடுத்த நொடியில் விளக்கம் தரக்கூடியவர். நா.கணேசன் அவர்களிடம் பேசும்பொழுது பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முந்திய இலக்கியம் சார்ந்த செய்திகளை, சிற்றிலக்கியங்களை, புலவர்களைப் பற்றிக் கேட்டால் புது உற்சாகம் பிறக்கும் இவருக்கு. தமிழகத்துப் பாறை ஓவியங்கள் பற்றி நன்கு அறிந்தவர். தெய்வச் சிலைகள், படிமங்கள் பற்றியும் நன்கு அறிவார்.

  ஆராய்ச்சிப் பணிகளிலும் பொறுப்பு வாய்ந்த நாசா விண்வெளி ஆய்வுப்பணியிலும் இருக்கும் நா.கணேசனுக்குத் தமிழில் பதிவு எழுத நேரம் குறைவு. எனவே கிடைக்கும் நேரத்தில் யாகு இணையதளக் குழுமத்தில் இந்தியவியல், சீனவியல், சுமேரியவியல், மொழிநூல், கலைவரலாறு, எழுத்தியல்புகள் பற்றி எழுதும் பேராசிரியர்களுக்கு நடுவே தமிழ், தமிழர், திராவிடவியல் பற்றி எழுதுவதில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க மண்ணில் வாழ்ந்தாலும் உலகத் தமிழர்களின் முன்னேற்றத்திற்குக் குரல் கொடுப்பவர். ஆண்டுக்கு ஒருமுறை தாயகமாம் தமிழகத்திற்கு வந்து அறிஞர்களைக் காண்பது இலக்கிய முயற்சிகளை அறிவது என இவரின் விருப்பமாக உள்ளது. கொங்கு மணம் கமழ உரையாடும் இவரின் வாழ்க்கை அமெரிக்க மண்ணில் என்றாலும் நினைவுகள் என்னவோ தமிழ் இலக்கியங்களைப் பற்றியே உள்ளது.

காராணை விழுப்பரையன் மடல்

  காராணை விழுப்பரையன் மடல் என்ற நூலை நா.கணேசன் பதிப்பித்துள்ளார். இந்நூல் அச்சுவடிவம் பெறுவதற்கு முன்பாக மின்னூலாக வந்துள்ளது தனிச்சிறப்பு. மின்னூல்கள் என்பன உலகெங்கும் இருப்பவர்களுக்குப் பயன்படும் தரத்தின. இந்நூல் செயங்கொண்டார் இயற்றியது. இந்நூலில் குறிப்பிடப்படும் காராணை என்னும் ஊர் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள அண்ணமங்கலம், தீபங்குடிக்கு அருகில் உள்ள சிற்றூர். காராணைக்காரனான ஆதிநாதன் சோழரின் படைத்தளபதி. ஆதிநாதன் விழுப்பரையன் என்னும் குடிக்கு உரியவன். இவர்கள் விழுப்பாதரயன், விழுப்பதரையர் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரில்தான் இன்றைய விழுப்புரம் நகரம் பெயர்பெற்றுள்ளது. இந்நூல் நெடில்கீழ் தகர எதுகை (ஆதி நாதன்) கொண்டு 550 அடிகளில் அமைந்துள்ளது.

 பேராசிரியர் வே.இரா.தெய்வசிகாமணி கவுண்டரின் ஓலைச்சுவடி, சென்னைக் கீழ்த்திசை நூலக ஓலைச்சுவடிகளைக் கொண்டு பதிப்பித்துள்ளார். உலகாய்தம் பற்றி எடுத்துரைக்கும் அரியநூல் இது. தமிழ்க்கொங்கு என்னும் பெயரில் இவர் வைத்துள்ள இணைய தளங்களுக்குச் செல்லும் பொழுது பயனுடைய தகவல்களைப் பெறலாம்.

கணேசன் மாதிரியின் சிறப்பு

  எந்திரவியலில், முக்கியமான எல்லாக் கருவிகளும் அதன் பகுதிகளும் Finite Element Modeling என்னும் முறையில் கணினிகளில் வடிவமைக்கப்படுகின்றன. கணினிகளின் திறனின் அசுர வளர்ச்சியால் ஃபைனைட் எலிமெண்ட் மாடல்களின் அளவு (matrix size) கூடிக்கொண்டே போகிறது. மில்லியன் கணக்கான மாதிரிகள் இந்நாளில் சாதாரணம். ஆனால், அவ்வெந்திரங்களின் அதிர்வெண் (modal frequency), அதிர்வு வடிவம் (mode shape) பரிசோதனை முறையில் வரையறுக்க ஒரு சில நூறு பரிசோதனை சானல்களே இருக்கும். இதற்கே, விண்வெளி ஆய்வில் ஏராளமான செலவு ஆகும் நிலை, எனவே கணினி கொள்ளளவு போல பரிசோதனைகளில் சானல்களைப் பெருக்க முடியாது. அந்தப் பரிசோதனை Accelerometer channel-களைக் குறைந்த செலவில் தேர்ந்தெடுக்க 'கணேசன் மாதிரி' பல்வேறு களங்களில் விண்துறையில் 20 ஆண்டுகளாய்ப் பயன்படுகிறது.

நனி நன்றி : தமிழ் ஓசை, களஞ்சியம் 29.06.2008, சென்னை, தமிழ்நாடு

செவ்வாய், 24 ஜூன், 2008

காந்தியப் பற்றாளரும் தமிழ் உணர்வாளருமான பொ.தி.ப.சாந்தசீலன்



புதுச்சேரியின் அறிமுகம் எனக்குப் பதினாறு ஆண்டுகளாக உண்டு. 1992 இல் புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு இளம் முனைவர் பட்டம் படிக்க வந்ததிலிருந்து புதுச்சேரியில் வாழும் தமிழ் அறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகியுள்ளேன்.

தமிழாசிரியர்களாகவும், பாவலர்களாகவும், இலக்கணப் புலவர்களாகவும், இதழ் வெளியீட்டாளர்களாகவும், ஓவியர்களாகவும், அரசியல் இயக்கம் சார்ந்தவர்களாகவும், சமூகத் தொண்டர்களாகவும், கலைஞர்களாகவும் விரியும் அப்பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

மூவாண்டுகளாகப் பேராசிரியர் பணி ஏற்றது முதல் வீட்டிற்கு இலவயமாக வரும் சில விளம்பர ஏடுகளில் பொ.தி.ப.நிலவணிகம் என்னும் விளம்பரம் என் கண்ணை உறுத்திகொண்டே இருந்தது. தமிழில் விளம்பரம் செய்துள்ள இவ் அன்பரைப் பார்க்க வேண்டுமே எனப் பல நாட்களாக நினைத்தது உண்டு. ஆனால் உரிய காலம் வாய்க்காமல் இருந்தது. அண்மையில் தமிழ்க்காவல் என்னும் இணைய இதழ் வெளியீட்டு விழாவில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் பொ.தி.ப.சாந்தசீலன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

விழா நெருக்கடியில் அவர்களிடம் விரிவாகப் பேசமுடியவில்லை. ஆனால் என் தமிழ்ப் பணியை அறிந்து என்னிடம் உரையாட விரும்புவதைத் தெரிவித்தார்கள். அந்த வகையில் இரண்டு நாள்களுக்கு முன் திரு. தி.ப.சாந்தசீலனார் இல்லத்திற்குச் செல்ல நேர்ந்தது(21.06.2008). என் புத்தகங்கள் சிலவற்றை எடுத்துச் சென்று வழங்கினேன். பேசும்பொழுதுதான் தெரிந்தது அவர்கள் மிகச் சிறந்த காந்திய நெறியினர் என்பது. அத்துடன் நாட்டுப்புறப்பாடல்கள் பாடுவதில், கேட்பதில் அவர்களுக்கு மிகப்பெரிய நாட்டம் இருப்பதைக் கண்டு அளவில்லாத மகிழ்ச்சியுற்றேன்.

விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் என்னும் அறிஞரின் வாழ்க்கை வரலாற்றையும், நாட்டுப்புறவியல் என்ற என் இரு நூல்களையும் எடுத்துச் செல்லாமல் போனோமே என நினைத்தேன். விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் அவர்கள் தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழர். காந்தியடிகளுடன் இணைந்து தென்னாப்பிரிக்காவில் உழைத்தவர். தமிழகம் வந்த பிறகும் காந்தியக் கொள்கையில் முழுமையாக இருந்தவர். எனவே திரு.சாந்தசீலனார்க்கு அந்நூலை அளிப்பது பொருத்தம் என நினைத்தேன்.

அதுபோல் திரு.சாந்தசீலன் அவர்கள் நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் பெரு விருப்பம் உடையவர் என்பதை அறிந்தேன். இந்து நாளிதழில்(23.09.2002) நடவு நடும் பெண்களைப் பாடச்செய்து அவர்களுக்குப் போட்டி வைத்துப் பரிசளித்துள்ள செய்தியும் படத்துடன் இருக்கக் கண்டு மகிழ்ந்தேன்.நடவுப்பாடல்கள் பலவற்றைத் தொகுத்த எனக்கு அவர்மேல் மதிப்பு ஏற்படுவது இயல்புதானே!

அந்த முதல்நாள் சந்திப்பில் திரு.சாந்தசீலன் அவர்கள் பல நடவுப்பாடல், ஏற்றப்பபாடல்களை அழகிய இசையில் பாடிக் காட்டினார்கள். நானும் சில பாடல்களைப் பாடிக்காட்டினேன். இருவருக்கும் இசையிலும், தமிழிலும் ஆர்வம் இருப்பதை உணர்ந்துகொண்டோம்.பிரியா விடைபெற்று அன்று இரவு வீடு திரும்பினேன்.

தி.ப.சாந்தசீலன் அவர்களின் நினைவுகள் என்னை அவர்பால் ஈர்த்தது. காரணம் மிகப்பெரும் பொருள் வளம் உடைய அவர் காந்திய நெறியில் நிற்பதும் தமிழின்மேல் மிகப்பெரிய பற்றுக்கொண்டு இருப்பதும், நாட்டுப் புறப்பாடல்களை நேசிப்பதும் எளிய வாழ்க்கை வாழ்வதும், தன் உழைப்பில் ஈட்டிய செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி மகிழ்வதும் அவர்க்கு இயல்பாக உள்ளதை நினைத்து மிக மகிழ்ந்தேன்.

படிப்பார்வம் உடைய பல எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளைத் தத்தெடுத்துப் படிக்க வைத்தலை ஆண்டுதோறும் செய்து வருகிறார். விளையாட்டு வீரர்களுக்குப் பல வகையில் உதவுகிறார். விளம்பர வெளிச்சம் இல்லாமல் இப் பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறார் எனபது அறிந்து அவரைப் பற்றி எழுத நினைத்தேன்.

அவர் இல்லச் சுவர்களில் தமிழ், தாய்மொழியின் சிறப்பு,காந்திய நெறிகள், இயற்கை வாழ்வு,இயற்கைப் பாதுகாப்பு பற்றிய பல விளம்பரங்கள் உள்ளன. கோயில்களுக்குத் தமிழர்களின் மரபு மரங்களை இலவயமாக வைத்துக் கூண்டு உட்பட அமைத்துப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

ஒரு நாள் விட்டு இரண்டாம் முறையாகச் சந்திக்க தி.ப.சாந்தசீலனார் இல்லம் இன்று (23.06.200) மாலை சென்றேன். விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூலையும் என் நாட்டுப்புறவியல் நூலையும் அளித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுற்ற சாந்தசீலனார் தம் வயல்வெளியில் வேலை செய்யும் பெண்கள் மிகச் சிறப்பாகப் பாடல் பாடுவார்கள் என்றார். தினை விதைக்கும் பாடல் மிகச்சிறப்பாக இருக்கும் என்றார்கள். அவ்வாறு எனில் அப்பாடல் பாடுபவர்களை நான் பார்க்க இயலுமா? அத்தகு ஒரு வாய்ப்பு அமையும்பொழுது அவர்களை எனக்கு அறிமுகம் செய்யுங்கள் என்றேன்.

உடனே தம் தொலைபேசியை எடுத்துத் தன் உதவியாளர் ஒருவரிடம் பேசினார். பாடல் பாடுபவர்கள் தயாராக இருக்கும்படி பணித்தார். என்னை உடன் அழைத்துகொண்டு திரு.சாந்தசீலனார் அவர்களே தம் விலை மிகுந்த மகிழ்வுந்தை ஓட்டிக்கொண்டு வந்தார் (இதுநாள் வரை இதுபோன்ற ஒத்துழைப்பை நான் பார்த்ததும் இல்லை.நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை. மாறாக நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கவும் படம் எடுக்கவும் சென்ற என் நண்பர் ஒருவரைச் சாமிக் குற்றம் வரும் என ஊர் மக்கள் கட்டி வைத்தும் நாங்கள் சென்று மீட்டு வந்ததும் நினைவிற்கு வந்து சிரிப்பூட்டின. என் பல்வேறு நாட்டுப்புறவியல் பட்டறிவுகளைத் தனிக்கட்டுரையாக வேறொரு அன்பருக்காக எழுதி வருகிறேன். சில மாதங்களுக்குப் பின் வெளியிடுவேன். இது நிற்க)

ஏறத்தாழ 15 கல் தொலைவு எங்கள் வண்டி விரைந்தது. நாகரிகம் முற்றாகத் தாக்குதல் தொடுக்காத ஒரு ஊரில் இரவு 7.45 மணியளவில் இறங்கினோம். ஊர்மக்கள் அனைவரும் கூடிவிட்டனர். ஒவ்வொருவருக்கும் நூறு உரூவா தருகிறோம் பாடல் பாடுக என்றார் நம் சாந்தசீலனார். அகவை முதிர்ந்த பெண்டிர் பலரும் ஆர்வமுடன் பாட முன்வந்தனர். வியர்வை நீங்காத, ஒப்பனையற்ற அப்பெண்களின் உள்ளத்திலிருந்து தமிழிசை ஊற்றெடுத்தது.

இது திட்டமிடப்படாத திடீர் பயணம் என்பதால் என்னிடம் பதிவுக்கருவி இல்லை. ஆனாலும் சில பாடல்களைப் பாடும்படி கேட்டு அவர்களிடம் மிகச்சிறந்த தமிழ் மரபுச்செல்வம் உள்ளது. இவற்றைச் சிந்தாமல் சிதறாமல் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டும் என்று ஆழமாக எண்ணிக் கொண்டேன். நாங்கள் முக்கால் மணி நேரம் அங்கு இருந்திருப்போம். பல பாடல்களைப் பாடிக்காட்டினர். திரு.சாந்தசீனலார் அந்தப் பகுதியில் நன்கு அறிமுகம் ஆனவர். பாட வந்தவர்களுக்கு நூற் உருவா என்ற வகையில் உரூவா 5500 அளவில் பணத்தை அள்ளித்தந்த அந்த வள்ளல் உள்ளத்தை எவ்வாறு போற்றுவது?

தமிழிசையில் - நாட்டுப்புற இசையில் ஆர்வம்கொண்டுள்ள நம் சாந்தசீலனார் அந்த தமிழ் மரபுச் செல்வங்களை மீட்கும் பணிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதால் நாட்டுப்புற இசைச்செல்வங்களை உரியவகையில் (காணொளி, ஒலிப்பதிவு) என்னால் மீட்கமுடியும் என நினைக்கிறேன்.

23.06.2008 8 மணியளவில் பாடல் இசைத்த பெண்கள் பற்றிய சிறுவிவரம்.

1.இர.குப்பு(அகவை 70) க /பெ இரத்தினவேலு
இவர் "புள்ளையாரே", "குன்னக்குன்ன மப்பெறங்க", எனத்தொடங்கும் பாடல்களைப் பாடினார்.

2.ஆண்டாள் (அகவை 65) க /பெ தனபால்
"வடக்க மரக்காணம்", " மஞ்சகுளிக்குதாம் சென்ன குன்னி மைனரு தேடுதாம் சென்ன குன்னி" எனத்தொடங்கும் பாடல்களைப் பாடினார்.

3.கிருஷ்ணாம்பாள் (55) க./பெ முனுசாமி

4.விருத்தம்பாள்(70) க /பெ உத்திராடம்

5.செல்வி (35) க /பெ நடராசன்

திங்கள், 23 ஜூன், 2008

வகுப்பறை ஆளுமை - தமிழ் ஓசையில் என் கட்டுரை

பிற்பகல் உணவிற்குப் பிறகு வகுப்புக்குச் செல்ல மணி அடித்தது.விரைவாக வகுப்பிற்குள் நுழைந்தேன்.கல்லூரி வழக்கத்திற்கு மாறாகப் பரபரப்பாகக் காணப்பட்டது.சில
மணித்துளிகளுக்கு முன் வேறொரு வகுப்பறையைப் புறக்கணித்த இரு மாணவர்கள் அக்கல்லூரியின் சுற்று மதிலில் ஏறிக் குதித்துத் தப்பிச் சென்றுள்ளனர். இதனைத்
தூரத்திலிருந்து கவனித்த பாதுகாவலர் உள்ளிணைப்புத் தொலைபேசி வழியாக அருகில் இருந்த காவலருக்குத் தகவல் தந்தார். கட்டுப்பாட்டிற்கும் கண்டிப்பிற்கும்
பெயர்பெற்ற அந்தத் தனியார் கல்லூரியில் நான் பணிபுரிந்த பொழுதுதான் இது நடந்தது

நிருவாகத்திற்கு விடை சொல்லவேண்டுமே என நினைத்துக் கலங்கிய அனைத்துக் காவலர்களும், ஏவலர்களும் சுற்று மதிலுக்கு அருகிலிருந்த பல காணி அளவுள்ள
கரும்புத் தோட்டத்தைச் சுற்றித் தேடிப் பார்த்தனர். அம் மாணவர்கள் பளிச்செனத் தெரியும்படியான கல்லூரியின் சீருடை அணிந்திருந்தனர். அவ்வாறு சீருடை இருந்தும் அவர்களை இரண்டுமணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கோடை வெயிலின் கொடுமை தொடங்கியிருந்ததால் அக் கரும்புச் சுணையில் மாணவர்கள் மிகப்பெரிய துன்பம் அடைந்திருக்க வேண்டும்.வகுப்பறையை எதற்குப் புறக்கணித்தனர்? யாராலும் உண்மைச் சம்பவத்தை உணரமுடியவில்லை.மறுநாள் அந்த இரு மாணவர்களும் என்னைத் தனியே கண்டு உண்மையைச் சொன்னார்கள்.

குறிப்பிட்ட ஒரு பேராசிரியரின் வகுப்பில் இருக்கப் பிடிக்கவில்லை என்றனர்.வகுப்பு அறுவையாக இருந்தால் நூலகம் செல்லலாமே! அதை விட்டு விட்டுக் கரும்புச்
சுணையில் எதற்குச் சென்று துன்பப்பட வேண்டும் என்றேன்.அந்த ஆசிரியர் நடத்தும் பாடமும் தேவையற்ற கண்டிப்பையும் விட கரும்புச் சுணையன்றும் அவ்வளவு
கொடுமை தரவில்லை என்றனர் அம் மாணவர்கள்.

ஆம்! சில ஆசிரியர்கள் வகுப்பிற்கு வரமாட்டார்களா? என மாணவர்கள் ஏங்குவதும் உண்டு.சில ஆசிரியர்களை நினைத்து வகுப்புகளைப் புறக்கணித்துவிடுவதும் உண்டு. அறிஞர்கள் இரா.பி.சேதுபிள்ளை, மு.வ, அ.ச.ஞா, மு.அருணாசலம்பிள்ளை, அ.சிதம்பரநாதன்செட்டியார்,தமிழ்மறவர்பொன்னம்பலர்,வ.சுப.மாணிக்கனார்,க.வெள்ளைவாரணனார்,சோ.ந.கந்தசாமி,தி.வே.கோபாலையர், கு.சுந்தரமூர்த்தி,க.ப.அறவாணன் உள்ளிட்டவர்களிடம் கற்ற அவர்தம் மாணவப் பெருமக்கள் இன்றும் அப்பெருமக்களின் வகுப்புகளையும் பாடம் நடத்தும் முறைகளையும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வது உண்டு.

இதற்குக் காரணம் வகுப்பிற்குச் செல்லும் பேராசிரியர்கள் தாம் நடத்தும் பாடங்களை நன்கு கற்றவர்களாகவும் பாடம் சொல்வதில் கைதேர்ந்தவர்களாகவும் இருந்ததே காரணம்!
பல நூல் பயிற்சி,பன்மொழிப்புலமை,உலக நடப்புகளுடன் பாடத்தை இணைத்துக்காட்டும் ஆற்றல்,மனப்பாடத் திறன்,பாடம் நடத்தும் பகுதியைச் சார்ந்து ஆயத்தப் பணிகள், மாணவர்களின் உள்ளம் உணர்ந்து நடத்தும் திறன்,எந்தப் பாடத்தை எந்த நேரத்தில் எந்த வகையில் நடத்தவேண்டும் என்று மாணவர்களின் உளத்தியல் அறிந்து நடத்தும் பாங்கு இவற்றால் பாடம் நடத்துவதில் வெற்றிபெறுகின்றனர்.ஆசிரியக்கலை ஒரு தொழிலாகத் தாழ்த்தப்படக்கூடாது.அது ஒரு பெரும்பணி; புனிதப்பொறுப்பு;இலட்சியத்தொண்டு என்பர் அறிஞர் இராதாகிருட்டிணர்.(மீரட் கல்லூரி வைரவிழா,1953,திசம்பர் 20).

ஆசிரியர்களுள் சிலர் பாடம் நடத்துவதில் ஒன்றித் தாமே கதை மாந்தர்களாக மாறிவிடுவர்.கதைத்தலைவனாக,எதிர்த்தலைவனாக,தாயாக,தந்தையாக,ஆணாக,பெண்ணாக மாறித் தம் குரல் வளத்தால் ஏற்ற,இறக்க ஒலிப்பு முறைகளால் வகுப்பறையை நாடக மேடைபோல் அமைத்துக்கொள்வார்கள்.சேக்சுபியர் நாடகங்களை நடத்தும் பேராசிரியர்கள் அப் பாத்திரமாகவே மாறி நின்று பேசுவார்கள்.அவர்களின் ஆங்கிலமொழி உச்சரிப்பு வகுப்பறையில் அமர்ந்திருப்பவர்களைக் கட்டிப்போட்டுவிடும்.சில பேராசிரியர்கள் சங்க இலக்கியங்களை நடத்தும்பொழுது மாணவர்கள் தலைவன் தலைவியகவே தங்களை எண்ணிக்கொள்வது உண்டு.அதுபோல் இலக்கணங்களை நடத்தும்பொழுது இலக்கண வகுப்பு என்பையே மறந்து இலக்கியவகுப்புகளில் சிரித்து மகிழ்வதுபோல்
சில பேராசிரியர்களின் வகுப்பு அமையும்.

சான்றாகப்புலவர் கி.த.பச்சையப்பன் நன்னூல் விருத்தியுரையும்,தொல்காப்பியச் சேனாவரையமும்,பாடங் கற்பிக்கையில் நகைச்சுவையுடன் மாணாக்கர் உளங்கொளச் சொல்வார் என அவரிடம் கற்ற மாணவர்கள் சொல்கிறார்கள்.அறிஞர் கு.சுந்தரமூர்த்தி போன்றவர்கள் வகுப்பறையில் சிலப்பதிகாரம் பாடம் நடத்தினால் மாணவர்களைக் காவிரி கலக்கும் பூம்புகாருக்கே தம் ஆற்றலால் அழைத்துச் சென்று அமரவைத்துவிடுவர். கோபாலையர் போன்றவர்கள் பாடம் நடத்தும்பொழுது தமிழின் உரையாசிரியர்கள், பக்திமான்கள் அவரிடம் வந்து கைகட்டி ஏவல் செய்வார்கள்.

மிகச்சிறந்த ஆசிரியர்கள்தான் மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்கமுடியும்.அத்தகு மாணவர்கள் அவ்வாசிரியர்களை என்றும் நன்றியுடன் நினைவுகூர்வர். ஆசிரியர்களிடம் அமர்ந்து படிப்பது மட்டும் பாடமல்ல.அறிஞர்களின் நூல்களைக் கற்று அதன் தாக்கத்தால் அவர்களை ஆசிரியர்களாக ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு.அறிவியலாளர் ஐன்சுடீன் அவர்கள் மிகப்பெரிய சார்பியல் தத்துவக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய பொழுது அவரைச் செய்தியாளர்கள் வினவிய பொழுது,"எனக்கு முந்திய ஆசிரியர்களான நியூட்டன்,லாரன்சு,சேம்சு கிளார்க் மாக்சுவெல்ட்டு இவர்களின் தோள்களின்மீது நின்று பார்த்ததனால்தான் இத்தகு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடிந்தது என்று அடக்கமுடன் சொன்னார். தனக்கு வழிகாட்டிய பெரியோர்களை நன்றியுடன் நினைவு கூறும் தன்மையை இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.

மிகச்சிறந்த ஆசிரியர்கள் நெறிப்படுத்தும்பொழுதே மாணவர்கள் வல்லவர்களாக மலர முடியும்.உயர்வானதைச் சிந்திக்கும் வண்ணமும்,நல்லவர்களின் துணையுடனும் மிகச்சிறந்த
வெற்றியை ஈட்டமுடியும் என்பதற்குத் தக நல்ல ஆசிரியர்களை அடையாளம் கண்டு மாணவர்கள் முன்னேற வேண்டும்.யாரும் தனியாகச் செல்ல முடியாது என்பதற்காகத்தான் நிழல் உடன்வருகிறது என்பதற்கேற்பத் தக்கவர்களைத் துணையாக, முன்னோடியாகக் கொண்டு ஆசிரியர்களும் மாணவர்களும் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.

வகுப்பறையில் பாடம் கற்பிப்பவர்கள் வெற்றி பெறுவதில் பல கூறுகள் உள்ளன.இவற்றில் தோற்றம் மிக முக்கியம்.அதுபோல் நேரம் தவறாமை அதைவிட முக்கியம். நேற்று நிறுத்திய இடங்களிலிருந்து தொடங்கும் பொழுது மாணவர்கள் ஆசிரியர்களின் நினைவாற்றல் அறிந்து வியப்பர்.ஆசிரியர் பாடம் கற்பிப்பதால் மட்டும் வகுப்பறை ஆளுமையில் வெற்றி பெற்றுவிட முடியாது.தோற்றம், நடை,உடை, பாவனை, குரல்வளம், மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை, வகுப்பறையைத் தோழமையுணர்வுடன் அமைத்துக்கொள்ளல், மாணவர்களின் பெயர்சொல்லி அழைக்கும் முறை,ஒவ்வொரு மாணவரின் பின்புலம் அறிந்து நடத்தும் அருங்குணம் இவற்றால் பாடம்கற்பிப்பதில் வல்லவர்காளக மாறமுடியும்.

ஆசிரியர் சிலர் பகட்டு உடை அணிந்து வந்து மாணவர்கள் தங்களை அணுகமுடியாதபடி வேறுபட்டு நிற்பர்.சிலர் பொருத்தமற்ற உடைகளை அணிந்துவந்து மாணவர்கள் தம்மைப் பார்த்து இரங்கும்படியாக வருவர்.பொதுவாக எளிய உடையாயினும் பொருத்தமான உடையணிந்து வருவதையே மாணவர்கள் விரும்புகின்றனர்.சிலர் தங்களுக்கெனச் சீருடை போன்று ஒரு கொள்கைப் பிடிப்போடு உடையணிந்து வருவர்.பழங்காலத்தில் ஆசிரியர்கள் வேட்டியை மடித்துக்கட்டி,கையில் குடையுடன் வந்த காலம் உண்டு.செருப்புகளில் குறிப்பிட்ட வகையைத் தேர்ந்தெடுத்து அணிந்துவருவர்.

சிலர் மேனாட்டு உடையணிந்து பக்தி நூல்களைப் பாடம்சொல்ல வந்தால் அவையினருடன் வேறுபட்டு நின்று தங்கள் பணியில் வெற்றிபெறு முடியாமல் போகும்.எனவே அளவான ஒப்பனையும்,பொருத்தமான உடையமைப்பும், குரல்வளமும்,பாடத்தை எடுத்துரைக்கும் பாங்கும், அருவியென, ஆற்றொழுக்கெனத் தொடர்புடைய செய்திகளை எடுத்துரைக்கும் பொழுது மாணவர்கள் ஆசிரியர்களை விரும்புவர்.பாடத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குரிய பாடங்களையும், செய்திகளையும், நற்பண்புகளையும் எடுத்துரைப்பதுடன் நாமும் அவ்வாறு நடந்துகாட்டும்பொழுது மாணவர்களின் உள்ளத்தில் உறையும் கடவுளாக மாற முடியும்.

சில ஆசிரியர்கள் பாடத்தில் நல்ல அறிவு அமையாமல் தம் பிற திறமைகளைக் காட்டி நல்லவர்களாகப் பெயர் எடுப்பது உண்டு.சில ஆசிரியர்கள் மிகப்பெரும் அறிவாற்றல் பெற்றிருந்தும் எடுத்துரைக்கும் ஆற்றல் இல்லாததால் மாணவர்களிடம் நல்ல பெயர் வாங்கமுடியாமல் தடுமாறுவர்.வகுப்பறையில் நுழைந்தவுடன் சிலர் பாடத்தை உடனே தொடங்கி,மணியடிக்கும்வரை பிற பகுதி பற்றிச் சொல்லாமல் பாடத்தை மட்டும் வாந்தி எடுப்பதுபோல் முழங்குவர்.இவர்களின் செயல் தமக்கும் வகுப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுபோல் இருக்கும்.

திறமை வாய்ந்த சில ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் யாரும் கவனிக்காத வகையில் வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு விடுவர். நேற்று வராமல் இன்று வந்தவர்களை அடையாளம் காண்பர்.இன்று வராதவர்கள் யார் என மனத்திற்குள் கணக்கிட்டு வைத்துக்கொள்வர்.இடம் மாறி அமர்ந்தவர்களை அடையாளம் காண்பர். இவ்வாறு வகுப்பறைச் சூழலைக் கவனித்து பொது அறிவு, உலக நடப்புகளை நினைவூட்டி எப்பொழுது பாடத்திற்குள் நுழைகின்றோம் என்பது தெரியாதபடி கல்லூரி வகுப்பறைகளில் பாடம் நடத்துவதை மாணவர்கள் விரும்புகின்றனர். அதுபோல் எப்பொழுது பாடத்தை முடிக்கின்றோம் என்பது தெரியாதபடி பாடத்தை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்.

பாடம் தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கும் நமக்கும் இடையில் ஓர் உறவு ஏற்படும் வகையில் அவர்களின் நலன் சார்ந்த செய்திகளைப் பேசிப் பாடத்திற்குள் செல்லவேண்டும்.

வகுப்பறைகளில் பாடம் சொல்வதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடைமுறைகளப் பின்பற்றுகின்றனர்.சில ஆசிரியர்கள் இருக்கையில் அமர்ந்துகொண்டு பாடம் நடத்துவர். அதாவது புத்தகத்தைப் படித்துப் பொருள் சொல்வார்கள்.ஒருமணிநேரம் ஆடாமல் அசையாமல் அவர்கள் புத்தகத்தைப் படித்துப் பொருள் சொல்லும் பொழுது மாணவர்கள் இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பர்.

சில ஆசிரியர்கள் மேசைமேல் ஏறி அமர்ந்துகொண்டு படித்துக் காட்டுவர். இவ்வாறு அமரும்பொழுது மாணவர்கள் பாடத்தில் முழுக்கவனம் செலுத்தாமல் இருப்பதை அறியமுடிகிறது. எனவே வகுப்பறையில் நின்றபடி,அல்லது இயங்கியபடி 180 பாகையில் அனைத்து மாணவர்களையும் அவர்களின் அசைவுகளையும் கவனித்தபடி பாடத்தை நடத்த வேண்டும்.பாடம் நடத்தும்பொழுது தேவையான இடங்களில் நகைச்சுவையை இணைக்கலாம்.நல்ல குரல்வளம் உடையவர்கள் பாடிக்காட்டலாம். நடிப்புத்திறன் உடையவர்கள் நடித்துக்காட்டலாம்.இவையெல்லாம் இயற்கையாக நடைபெறவேண்டும். செயற்கைத் தன்மை வெற்றி தராது.

மாணவர்களின் முகங்களே நமக்கு மணிப்பொறிகளாகும்.ஒரு மாணவன் கொட்டாவி விட்டாலோ, கால்மேல் கால்போட்டு அமர்ந்தாலோ,வழிச் செல்வோர்களைக் கவனித்தாலோ, சோம்பல் முறித்தாலோ,பாடத்தைக் கவனிக்காமல் கரிக்கோல் சீவுவது,பக்கத்து மாணவர்களிடம் எழுதிக்காட்டும் செயல்களில் ஈடுபட்டாலோ மாணவர்களுக்குச் சோர்வு உண்டாகிவிட்டது என உணர வேண்டும்.அத்தகுச் சூழலில் பாடத்தின் கடுமையைக் குறைத்து, எளிய செய்திகள், நகைச்சுவைகள், உலக நடப்புகளைச் சொல்லி அவர்கள் அறியாமல் அவர்களுக்கு ஊக்கம் உண்டாக்க வேண்டும்.

சில ஆசிரியர்கள் வகுப்பில் இருக்கும்பொழுது புதைப்பிட அமைதி நிலவும்.பாடத்தில் ஈர்ப்புண்டு மாணவர்கள் இருக்கும்பொழுது இத்தகு நிலை ஏற்படுவதும் உண்டு.ஆசிரியர்களின் மருட்டல்,அச்சமூட்டல்,செய்ம்முறை மதிப்பெண்களால் இவ்வாறு இருப்பதும் உண்டு. உண்மையில் வகுப்பு என்பது அமைதியும் இருக்க வேண்டும்.மகிழ்ச்சி உருவாகும் பொழுது ஆர்ப்பாட்டமாகவும் இருக்கவேண்டும் .

ஆர்ப்பாட்டம் அடுத்த வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியருக்கு எள்முனை அளவுகூட இடையூறாக இருக்கக்கூடாது. மாணவர்கள் வகுப்பில் பாடத்தை ஆர்வத்துடன் கேட்கும்படி நடத்தவேண்டும்.'செவி வாயாக நெஞ்சுகலனாக' என்று நன்னூல் இதனைத்தான் குறிப்பிடுகின்றது.'சித்திரப்பாவையின் அத்தக அடங்கி' என்றும் மாணவர்கள் பாடம் கற்கும் முறையை மேலும் நன்னூல் குறிப்பிடும்.

வகுப்பறை நாற்றங்கால் போன்றது.நன்கு அறிவு விதைகளை விதைத்தால்தான் நல்ல விளைச்சலைப்பெற முடியும். உழவன் வயலைப் பன்மடங்கு உழுது,அளவே எருஇட்டு, போதியநீர் வைத்து,நல்ல விதைகளைப் பாதுகாத்து,காலத்தில் அளவே ஊறவைத்து, நீர் வடிகட்டி, நாற்றங்காலில் இலகுவாக வீசி,குறிப்பிட்ட நேரம் நீர்தேக்கி, விதைமணிகள் நன்கு மண்ணில் பொருந்திய பிறகே நாற்றங்கால் நீரை மறுநாள் வெளியேற்றுவான். தேவையற்ற நீர் சிறிது இருந்தாலும் அதனைப் பல உத்திகளைப் பயன்படுத்தி வெளியேற்றுவான்.திடுமென மேகம் கறுத்து இடிமழை வந்தால் மீண்டும் நீர்கோலிப் பாதுகாப்பான்.அதுபோல் மாணவப் பயிர்களை வகுப்பறையின் புறச்சூழல்கள் குலைத்தாலும் ஆசிரியன் உழவனைப்போல் அப் பிஞ்சுப் பயிர்களைப் பாதுகாக்கவேண்டும்.நெல் நாற்றுகள் ஒருமுறை விளைச்சலை மட்டும் தரும். மாணவ நாற்றுகளோ அடுத்தடுத்த ஊழிக்காலம் கூடப் பயன்தருவார்கள்.

நனி நன்றி : தமிழ் ஓசை 22.06.2008 சென்னை

வெள்ளி, 20 ஜூன், 2008

ஆதிச்சநல்லூர் சில படங்கள்...

ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்யப்பெற்ற மேட்டுப்பகுதி
(அகழாய்வுக்குப் பிறகு மூடப்பட்ட பகுதி)

ஆதிச்சநல்லூர் மேட்டுப்பகுதியில் சிதைந்துகிடக்கும் 
முதுமக்கள் தாழி உள்ளிட்டவற்றின் பானை ஓடுகள்


தொ.பரமசிவன், நாக.கணேசன், மு.இளங்கோவன் 
(மு.இளங்கோவனுக்கு அகல் விளக்கு ஒன்றைத் தொ.ப.நினைவாக வழங்கல்)

ஆதிச்சநல்லூர் பயணம் பற்றி முன்பு என் பக்கத்தில் எழுதியிருந்தேன். முறையாக அகழாய்வு செய்து பாதுகாக்கப்பட வேண்டிய முதன்மைப்பகுதி இதுவாகும். தமிழர்களின் தொல்பழங்கால எச்சங்கள் இங்குதான் உள்ளன.

இந்து நாளிதழ் ஆதிச்சநல்லூர் பற்றி பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.
காண்க:
http://www.hindu.com/2005/04/03/stories/2005040301931400.htm

செவ்வாய், 17 ஜூன், 2008

தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா -படங்கள்


தமிழ்க்காவல் ஆசிரியர் முனைவர் இரா.திருமுருகனார்


புதுவைத் தமிழறிஞர்கள் புலவர் சீனு.இராமச்சந்திரன்,புலவர் நாகி உள்ளிட்டவர்கள்


பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா இதழ் வெளியிடல்


மு.இளங்கோவன் உரை


இணைய இதழ் விளக்கம்


காட்சிப்படுத்தும் முருகையன்,மு.இளங்கோவன்


பொருளாளரும்,தமிழ்ப் பற்றாளருமான சாந்தசீலன் அவர்கள்


பொறிஞர் பரணன் அவர்கள்

தினகரன் நாளிதழில் தமிழ்க்காவல் வெளியீட்டுச் செய்தி

தமிழ்க்காவல் இணைய தளம் துவக்கம்

புதுச்சேரி, ஜூன் 16: புதுச்சேரி தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழ்க்காவல் இணைய மாதஇதழ் துவக்க விழா தமிழ்ச்சங்க அரங்கில் நடந்தது. பேராசிரியர் தங்கப்பா தலைமை தாங்கினார்.
டாக்டர் திருமுருகன் தொடக்கவுரையாற்றினார். டாக்டர் தமிழப்பன் நோக்கவுரையாற்றினார். பொறியாளர் முருகையன், நந்திவர்மன், டாக்டர் இளங்கோவன், வெங்கடேசு, சாந்தசீலன், செம்பியன், பரணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இளமுருகன் நன்றி கூறினார். சீரழிந்து வரும் தமிழ் மொழியையும், தமிழ் பண்பாட்டையும் காத்து வளர்க்கும் நோக்கமாக இந்த இணையதள இதழ் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன் புதுச்சேரி பதிப்பு 16.06.2008

ஞாயிறு, 15 ஜூன், 2008

தமிழ்க்காவல் விருந்தினர்களை வரவேற்கும் தமிழ்மணம் படங்கள்


தமிழ்க்காவல் விழா அரங்கம்


தமிழ்க்காவல் விருந்தினர்களை வரவேற்கும் தமிழ்மணம்
படங்கள்- புதுவை செந்தமிழினியன்

தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா தொடக்கம்...

புதுச்சேரி தமிழ்ச்சங்க அரங்கில் தமிழ்க்காவல் இணைய இதழ்வெளியிட அறிஞர்பெருமக்கள் வருகை தந்துள்ளனர்.மாலை 6 மணிக்கு விழா தொடங்க உள்ளது.அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளை இணைய உலக நண்பர்களுக்கு வழங்க உள்ளேன்.அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் தமிழ் இணையம்,வலைப்பதிவு பற்றி அறிய ஆர்வமுடன் காத்துள்ளனர்.

முனைவர் இரா.திருமுருகன்,முனைவர் தமிழப்பன்,பாவலர் பரணன், திரு.சாந்தசீலன், முனைவர் மு.இளங்கோவன்,பொறிஞர் வே.முருகையன்,திரு நந்திவர்மன், திரு.இரா.செம்பியன், பேராசிரியர்.ம.இலெ.தங்கப்பா
உள்ளிட்டவர்கள் உரையாற்ற உள்ளனர்.

மீண்டும் வருவேன்...

சனி, 14 ஜூன், 2008

தமிழ்ப்படைப்பாளிகள் எங்கள் மக்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் -காசி ஆனந்தன்

தமிழகத்தில் 5 படங்கள் ஈழ மக்களைப்பற்றி வந்துள்ளது.
சிறுகதைகள் வரவில்லை.

ஓவியர் வீர சந்தானம்,ஓவியர் புகழேந்தி போன்ற கலைஞர்கள் ஈழமக்களின் விடுதலைக்கு பாடுபட்டுள்ளனர்.தமழ்ப்படைப்பாளிகள் எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

தமிழ்ச்செல்வன்(த.மு.எ.ச)
படைப்பு தனிநபர் சார்ந்தது.
படைப்பாளியிடமிருந்து வரவேண்டும்.
படைப்பாளிகள் கொள்கை வழியில் ஒன்றுதிரட்டமுடியும்.
சங்க இலக்கியம் பற்றி பேச ஆள் இல்லை.அனைவரும் நவீன இலக்கியத்தில் ஆய்வு செய்கின்றனர்.எனவே சங்க இலக்கிய விழிப்புணர்ச்சி வேண்டும்.

பாரதி கிருட்டிணகுமார்(இயக்குநர்)கருத்து,கொள்கை,இயக்கம் கடந்து இன்று கூடியுள்ளோம்.இலக்கியம் என்பது மானுடம் உயர்த்த துணைசெய்ய வேண்டும்.கலை இலக்கிய அமைப்பு இல்லாத இயக்கம் மந்தகதியில் இருக்கும்.வெள்ளத்தில் இறந்தவர்களைக்காட்டிலும் வெள்ள நிவாரணத்திற்கு இறந்தவர்கள் அதிகம்.
மறைமுகமாக ஆபாச நூல்கள் படித்தது போக இன்று ஆபாச நூல்கள் அனைவரும் படிக்கின்றனர்.ஆபாச படங்களைத்தனித்துப்பார்த்தோம்.இன்று குடும்பத்துடன் பார்க்கிறோம்.
தொடக்க கல்வி முழுவதும் தமிழில் கல்வி வேண்டும்.அப்பொழுதுதான் தமிழ் இலக்கியம்,படைப்பு மதிக்கப்படவேண்டும். பள்ளத்தை ஒரே பாய்ச்சலில் தாண்ட வேண்டும்.படிப்படியாகத்தாண்டக்கூடாது. கள்ளுக்கடைகளை முன்பு தனியார் நடத்தினார்.
பள்ளிகளை அரசு நடத்தியது. இன்று கள்ளுக்கடைகளை மதுக்கடைகளை அரசு நடத்துகிறது.
கல்வியை இன்று தனியார் தருகிறார்கள்.

தோழர் தியாகு
கலை இலக்கியம் என்பவை மக்களுக்கானவை. கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டுக்காலத்தை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும். கலை இலக்கியம் என்பவை இன்று அண்டிப்பிழைப்பதற்காக அமைந்துவிட்டது.கலை இலக்கியப்படைப்பாளர்களுக்கு மூலப்பொருள்கள் தேவை. அவை உழைக்கும் மக்களின் வாழ்க்கையாகும்.

மக்களுக்காக படைப்பது சிறப்பு.தமிழ்ச்சமூகத்தைப்பிடித்துள்ள நோய்களைப்போக்க படைப்புகள் பயன்படவேண்டும்.

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்க விழாவில் இதுவரை பேசியவர்கள்...

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கத்தொடக்க விழா சென்னை இமேச் அரங்கில் சிறப்பாக நடந்துகொண்டுள்ளது. இதுவரை பழமலை, இரா.இளங்குமரனார், கவிக்கோ அப்துல்ரகுமான், இன்குலாப், பொற்கோ, இரவிக்குமார், பிரபஞ்சன், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் பேசியுள்ளனர்.

அப்துல் ரகுமான் தமிழிசை,தமிழ்ப்பண்பாடு பற்றி மிகச்சிறப்பாகப்பேசினார்.தமிழர்கள் பத்துப்பாட்டை விட்டுவிட்டு இன்று குத்துப்பாட்டில் ஈடுபட்டுள்ளதைக்கண்டித்தார்.

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வால்டுவிட்மன் பாடலை விடுதலை செய்தான்.ஆனால் அங்கு உழைத்த,இரத்தம் சிந்தியவர்களைப்பாடவில்லை என்றார்.
மேல்நாட்டு நாகரிகத்தைக்கண்டித்தார்.

மீண்டும் தொடர்வேன்...

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் விழா- மேடையில்...

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கத்தின் தொடக்கவிழா மேடையில் முனைவர் பொற்கோ,பாவலர் காசி ஆனந்தன்,பழமலை,அப்துல்ரகுமான்,மருத்துவர் இராமதாசு,புலவர் இரா.இளங்குமரனார்,பிரபஞ்சன்,வீர சந்தானம்,பாரதி கிருட்டிணகுமார், பச்சியப்பன், தமிழ்ச்செல்வன்,இன்குலாப்,க.பன்னீர்செல்வம்,கண்மணி குணசேகரன்,பர்வீன் சுல்தானா,செயபாசுகரன் ஆகியோர் உள்ளனர்.

வீரசந்தனம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.பேராசிரியர் பிரம்மராசன் அவர்கள் தம் பேச்சைக் கட்டுரை வடிவில் வழங்கினார்.
கவிஞர் பச்சியப்பன் அவர்கள் கலை இலக்கியக்களத்துமேடு என்னும் தலைப்பில் உணர்ச்சி மயமான கவிதை படித்துக்கொண்டுள்ளார்.

இன்னும் வருவேன்...

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்கவிழா இனிதே தொடங்கியது...

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்க விழா சென்னை இமேச் அரங்கில் தொடங்கியுள்ளது.
நாகசுரம்,பறைமுழக்கத்துடன் விழா இனிது நடைபெற்றுக்கொண்டுள்ளது.

விழாவிற்குத்தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் கலை இலக்கியப்படைப்பாளிகள்,கல்வியாளர்கள் வந்துள்ளனர்.

முனைவர் பொற்கோ,கவிஞர் இன்குலாப்,பேராசிரியர் பழமலை,பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)பேராசிரிர் பிரம்மராசன்,பேராசிரியர் கு.அரசேந்திரன்,பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்திமுனைவர் துரையரசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வந்துள்ளனர்
புலவர் இரா.இளங்குமரனார் வந்துள்ளார்.

சந்தனக்காடு கெளதமன்,தங்கர்பச்சான்,சீமான்,பச்சியப்பன் மற்றும் பல கலை இலக்கியப்படைப்பாளிகள் வந்துள்ளனர்

மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் மேடைக்கு வந்துள்ளார்கள்.

இன்னும் தொடர்வேன்...

இமேஜ் அரங்கிலிருந்து...

வெள்ளி, 13 ஜூன், 2008

புதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா...

புதுச்சேரி தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்க்காவல் என்னும் இணைய இதழ் தொடக்கவிழா புதுச்சேரியில் உள்ள புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் 15.06.2008 ஞாயிறு மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இணைய உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் இவ்விதழ் வெளியீடும் தொடக்க விழாவும்
ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. கணிப்பொறி,இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டு இணையம் பற்றியும்,தமிழ் வலைப்பதிவுகள் பற்றியும் விளக்க உள்ளனர்.

நிகழ்ச்சிக்குப் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் தலைமை தாங்குகிறார்.முனைவர் இரா.திருமுருகனார் தொடக்கவுரையாற்றவும்,முனைவர் தமிழப்பன் அவர்கள் நோக்கவுரையாற்றவும் உள்ளனர். தமிழ்க்காவல் இதழை வடிவமைத்த பொறிஞர் வே.முருகையன் வடிவமைப்பு விளக்கம் சொல்ல உள்ளார்.நா.நந்திவர்மன்,முனைவர் மு.இளங்கோவன் ஏ.வெங்கடேசு ஆகியோர் இணைய வளர்ச்சி பற்றி உரையாற்ற உள்ளனர். தி.பா.சாந்தசீலன்,இரா.செம்பியன்,முவ.பரணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.நன்றியுரை இரா.இளமுருகன்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் உறுப்பினர்கள் அரங்கில் செயல் விளக்கம் வழித் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்க உள்ளனர்.தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

பார்க்கவும் :

http://www.thamizhkkaaval.net/

தொடர்பிற்கு :

முனைவர் இரா.திருமுருகன்

செல்பேசி : + 91 9362664390

பேசி : +91 413 - 221191


முனைவர் மு.இளங்கோவன்

செல்பேசி : + 91 9442029053

வியாழன், 12 ஜூன், 2008

திருநெல்வேலிக்குச் சென்றபொழுது...தொடர் 2

  நெல்லைக் காட்சியகம் சென்றபொழுது என் புகைப்படக் கருவியில் சுருள் தீர்ந்தது நினைவுக்கு வந்தது. முல்லை முருகன் ஐயாவுடன் சென்று விரைவாக ஒரு சுருள் வாங்கி வந்தேன். காட்சியகத்தில் சில படங்கள் எடுத்துக்கொண்டேன். முதுமக்கள் தாழி, பாண்டங்கள் சிலவற்றைப் படம் எடுத்துக்கொண்டேன். திரு.கணேசன் அவர்கள் அங்கிருந்த பல படங்களுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார். சிவனை இராமன் எனவும் ஐயனாரை வேறொரு தெய்வமாகவும் குறித்து வைத்திருந்ததை நா.கணேசன் எடுத்துரைத்துத் திருத்தச் சொன்னார். கணேசன் அவர்கள் நாசா விண்வெளியின் ஆய்வு வல்லுநரா, அல்லது வரலாற்றுப் பேராசிரியரா? இலக்கியவாணரா? என வியந்தேன்.

  அங்கு நெல்லையைச் சேர்ந்த நண்பர்கள் பலர் வந்து எங்களுடன் இணைந்துகொண்டு பல செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர். அனைவரும் சீத்தாபதி விடுதிக்குத் திரும்பினோம். என் கையில் பானை ஓடுகள், அகல்விளக்குகள் இவற்றைக் கண்ட விடுதிக்காரர்கள் மருட்சியுடன் பார்த்தனர். அப்பொழுதுதான் நண்பர் காசியிடம் எங்கள் அறையின் திறவுகோல் இருப்பது நினைவுக்கு வந்தது. காசி வந்தால்தான் பொருள்களை உள்ளே வைக்கமுடியும். 1 மணி அளவில் அனைவரும் உணவுக்காகச் சானகிராம் உணவகம் சென்றனர். நண்பர் காசி அவர்கள் வந்ததும் பொருள்களை வைத்துவிட்டு சானகிராம் உணவகத்தில் நானும் காசியும் இணைந்துகொள்வது எங்கள் திட்டம்.

  1.45 மணிக்குக் காசி திரும்பினார். குளிக்க நினைத்தும் முடியவில்லை. உணவுக்கு அனைவரும் காத்திருப்பர் என நினைத்து நானும் காசியும் உணவகம் விரைந்தோம். அங்கு திரு. சேகர் பொன்னையா அவர்கள் எங்களுக்கு ஒரு சிறந்த விருந்து வழங்கினார். திரு.சேகர் பொன்னையா தம் அறிவு உழைப்பால் முன்னேறிய பெருந்தகையாளர். பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரத்தின் உறவினர் (சித்தப்பா என அழைக்கும் உறவுடையவர்). நாட்டுப்புறவியல் துறையில் புகழ்பெற்ற காவ்யா சண்முகசுந்தரனாரை முன்பே நான் நன்கு அறிவேன். எனவே திரு.சேகர் அவர்களை எங்கள் குடும்ப உறுப்பினராகவே என் தமிழ் உள்ளம் நினைத்தது. அவர் புறவழிச் சாலையில் எடுத்துள்ள மிகப்பெரிய விளையாட்டுத் தோட்டத்தில்தான் மாலைவிழா நடைபெற்றது. இது நிற்க.

  அன்பான விருந்தோம்பலுக்குக் காரணமான திரு.சேகர் பொன்னையா அவர்கள் மென்பொருள் நிறுவனம் நடத்துபவர். பல நாடுகளுக்குச் சென்றுவரும் இயல்பினர். நம் அன்பிற்குரிய நா.கணேசன் ஐயா அவர்களுக்கு அணுக்கமான நட்புடையவர். நா.கணேசன் அவர்களே அனைவரையும் ஒன்றிணைத்த பெருமைக்கு உரியவர். விருந்துக்குப் பிறகு சீத்தாபதி விடுதிக்கு வந்தோம். நான் நிலுவையில் வைத்திருந்த குளியலை முடித்தேன்.

  சிறிது ஓய்வுக்குப் பிறகு அனைவரும் நெல்லையிலிருந்து பத்து கல் தொலைவில் உள்ள இராசவல்லிபுரம் என்னும் ஊரை அடுத்த செப்பறை என்னும் ஊருக்குச் சென்றோம். இராசவல்லிபுரம் வல்லிக்கண்ணன், இரா.பி.சேதுபிள்ளை என்னும் அறிஞர்களைத் தந்த ஊர். அவ்வூரில் வாழ்ந்த திரு.கோமதிநாயகம் அவர்கள் செப்பறைக் கோயிலைப் பார்க்க ஆவன செய்தார். இராசவல்லிபுரத்திற்கும் செப்பறைக்கும் இண்டுகல் தொலைவிருக்கும்.

  மாலை நேரத்தில் 4 மணி அளவில் செப்பறைக் கோயிலை அடைந்தோம். அழகிய வேலைப் பாடமைந்த கோயில். ஒரே கல்லில் அமைந்த கோயிலின் மேற்கூரை, வடம், செப்பால்அமைந்த மேல் பகுதி, கற்சிலைகள் யாவும் கண்ணுக்கு இனிய விருந்து.அழகிய வயல்வெளி சூழ்ந்த பகுதியில் அக்கோயில் அவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.இறைவன் பெயர் அழகியகூத்தர். சில ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டு மாலை 5 மணி அளவில் 'வளர் தமிழில் இணையம்' கருத்தரங்கத்திற்குப் புறப்பட்டோம்.

  விசயா தோட்டத்தில் (கார்டன்) மாலை 6 மணி அளவில் விழா தொடங்கியநேரம். அனைவரும் ஆர்வமுடன் நுழைந்தோம். அரங்கு நிறைந்த கூட்டம். மாணவர்கள், நெல்லையைச் சேர்ந்த அன்பர்கள் பலரும் வந்திருந்தனர். திரு.சங்கரபாண்டி அவர்கள் அறிமுக உரையாற்றிக் கொண்டிருந்தார். காலையிலேயே சங்கரபாண்டி அறிமுகம் ஆகியிருந்தார். துடிப்புமிக்க இளைஞர். தமிழ்ப்பற்று உடையவர். அமெரிக்க மண்ணிற்குச் செல்லும் தமிழின உணர்வாளர்களுக்கு உதவும் உள்ளம் உடையவர். அவர் துணைவியாரும் அமெரிக்காவில் பணியில் உள்ளார்கள்.

  திரு.காசி, நா. கணேசன், முத்துமாறன், கோமதிநாயகம் அனைவரும் அங்குமிங்குமாகப் பிரிந்து அமர்ந்தோம்.  திரு.காசி, நா.கணேசன், சங்கரபாண்டி, தொ.பரமசிவன், சேகர் பொன்னையா, முல்லை முருகன் மேடையில் இருந்தனர். முன்பே திரு.பொன்னையா அவர்கள் அரங்கில் கணிப்பொறி வசதிகளை உருவாக்கி வைத்திருந்தார்.

  காசி அவர்களின் துணையுடன் நண்பர் முகுந்துவின் இ.கலப்பை உதவியது. நிகழ்ச்சியைப் படம் பிடித்தும் நிகழ்ச்சி நடைமுறைகளை உடனுக்குடன் செய்தியாகவும் தமிழ்மணம் உதவியுடன் வெளியுலகிற்கு வழங்கினேன். படம்பிடித்த நண்பர் முத்துமாறனின் ஒளிப்படக் கருவி பழுதுற்றது. நிகழ்ச்சியைப் படம் எடுக்க வந்த உள்ளூர் ஒளிப்படக்காரரின் படக்கருவிகளிலிருந்த படங்களை இரவல் பெற்று என் தளத்தில் வெளியிட்டேன்.

  மாவட்ட ஆட்சியர் வந்திருந்து நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தார். பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் வாழ்த்திப் பேசினார். திரு.சேகர் பொன்னையா தம் உள்ளத்து உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். நண்பர் காசி தம் தமிழ்மணப் பட்டறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

  நா.கணேசன் அவர்கள் இணையத்தில் வளரும் தமிழ்பற்றி விளக்கிப் பேசினார்.
தமிழ் 99 விசைப்பலகை பற்றி விளக்கும்பொழுது எனக்குச் சில விளக்கம் தர வாய்ப்பு வழங்கினார் நா.கணேசன் அவர்கள்.நான் தமிழ் 99 விசைப்பலகையில் உள்ள சிறப்புகளைக் காட்சிப்படுத்தி தட்டச்சுச் செய்துகாட்டியதும் அவையினர் மகிழ்ச்சியடைந்தனர். என் இணையப்பக்கத்தில் உள்ள இல அரிய செய்திகளைக் காட்டி, வலைப்பதிவில் என் விருப்பத்தையும் ஆர்வத்தையும் சொன்னேன்.

  முல்லை முருகன் அவர்கள் இரண்டுமுறை நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக்கழகத்தில் நான் தங்கப்பதக்கம் பரிசுபெற்றதைத் தெரிவித்ததும் அனைவரும் மகிழ்ச்சியாகக் கைதட்டி வரவேற்றனர். விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினர். அனைவருக்கும் இரவு உணவு விழா அரங்கின் அருகில் இருந்த தோட்டத்தில் வழங்கப்பட்டது.

  தமிழ் உணர்வுடன் இணையம் சார்ந்த ஒரு நிகழ்ச்சிக்குத் திரு.சேகர் பொன்னையா அவர்கள் இடம் வழங்கி, உணவு வழங்கி, விழாவிற்கான பெரும் உதவிகளைச் செய்துள்ளார். இவர்களைப் போலும் தமிழ் உணர்வாளர்கள் தமிழ் இணையம் சார்ந்த பயிற்சிப் பயிலரங்குகளை நடத்தியும் தமிழ் இணையம் சார்ந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியும் தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் செயல்படத் தமிழ் விரைந்து வளர்ச்சிபெறும்.

  அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு நண்பர் காசி அவர்கள் கோவைக்குப் பயணமானார். நான் மட்டும் அறைக்குத் திரும்பினேன். கணேசன் அவர்கள் அங்குள்ள மூத்த நண்பர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்றார்.

  மறுநாள் பொருநை இலக்கியவட்டத்தில் கண்டதை வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாது!

மீண்டும் தொடர்வேன்...

புதன், 11 ஜூன், 2008

திருநெல்வேலிக்குச் சென்றபொழுது...தொடர் - 1

    தமிழ் இணையம் சார்ந்த கருத்தரங்கு 07.06.2008 இல் நெல்லையில் நடத்துவது குறித்து நா.கணேசன் அவர்கள் மின்மடலிலும் தொலைபேசியிலும் குறிப்பிட்ட வண்ணம் இருந்தார். தமிழ்மணமும் தன்பங்கிற்கு முகப்பில் அச்செய்தியைத் தாங்கி நினைவூட்டிய வண்ணம் இருந்தது. நான் மட்டும் தொடர்வண்டிச் செலவுச்சீட்டுக்குப் பதிவு செய்திருந்தேன். காத்திருப்போர் பட்டியலில் என் பெயர் இருந்தது. நடுவண் அமைச்சர் ஒருவரின் விரைவு ஒதுக்கீட்டில் செல்ல முயன்றும் அம்மடலைத் தொடர்வண்டித்துறை மதித்தபாடில்லை. 
 
  அப்புறம் என்ன? விழுப்புரத்தில் 06..06.2006 இரவு 11.45 மணிக்கு நெல்லை விரைவுத் தொடர்வண்டியில் நிலைய மேலாளர் இசைவின்படி ஏறி செய்தித்தாளை விரித்தேன். இரவு முழுவதும் புரண்டுபடுத்தும் தூக்கம் இல்லை. திருச்சியிலிருந்து படுக்கைக் கிடைத்தது. இருந்தாலும் தூக்கம் இல்லை. 07.06.2008 பொதுவுடைமைக்கட்சி கடையடைப்புக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. எனவே கருத்தரங்கு நடக்குமோ, நடக்காதோ என எனக்கு ஐயம் முன்பே ஏற்பட்டதைத் திரு. நா.கணேசன் அவர்கள் போக்கி, கருத்தரங்கம் நடக்கும் என்றார்கள். இதன் அடிப்படையில் கருத்தரங்கம் நடக்கும் என்ற அடிப்படையில் சென்றேன். முன்பே நெல்லையில் இருந்த எனக்குத் தெரிந்த பேராசிரியர்களுக்கு என் வருகையை மடல்வழித் தெரிவித்திருந்தேன். இயன்றால் சந்திக்க நினைத்தேன்(யாரையும் சந்திக்கமுடியவில்லை). 
 
 நண்பர் காசி அவர்கள் இரவே பேசித் தாம் சென்னையிலிருந்து புறப்படுவதாகவும், காலையில் 7.45 மணிக்கு நெல்லை அடைவதாகவும் தெரிவித்தார். 8.45 மணிக்கு என் தொடர்வண்டி நெல்லையை அடையும்.எனவே அவர் தங்கியுள்ள அறையில் குளித்துமுடிக்க நினைத்தேன். காலையில் நெல்லையை அடைந்ததும் என் வருகையை நண்பர் காசிக்குச் சொன்னேன். சீத்தாபதி விடுதியில் தாம் தங்கியுள்ளதைக் குறிப்பிட்டார். தொடர் வண்டி நிலையத்திலிருந்து நடந்து அருகில் உள்ள சீத்தாபதி விடுதியை காலை 9.15 மணிக்கு அடைந்தேன். நண்பர் காசியை அங்கு முதன் முதலாகப் பார்த்தேன். அதற்குமுன் தொலைபேசி, மின்னஞ்சலில் மட்டும் அறிமுகம் இருந்தது. அன்போடு பழகினார். பல ஆண்டு பழகியது போன்ற கொங்குநாட்டு அன்புப் பேச்சில் மகிழ்ந்தேன்.முகம் மழித்துக் குளிக்க முயன்றேன். என் வருகையை நண்பர் நா.கணேசன் அவர்களுக்குத் தொலைபேசியில் தெரிவித்தார். 
 
 நண்பர் நா.கணேசன் அவர்கள் ஒரு குழுவாக ஆதிச்சநல்லூர் செல்லும் திட்டத்தில் இருந்தார். அக்குழுவில் நானும் இணைந்துகொள்வது சிறப்பு எனக் கணேசனும் விரும்பினார். நானும் நினைத்தேன். பலநாள் பார்க்க நினைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாயிற்றே அது. முகம் மட்டும் கழுவிக்கொண்டு அணிந்திருந்த சட்டையுடன் என் புகைப்படக்கருவி, குறிப்புச்சுவடியுடன் புறப்பட்டேன். நான், பேராசிரியர் தொ.பரமசிவன், நா.கணேசன், முல்லை முருகன், நீதியரசர் மகராசன் அவர்களின் பெயரன் திரு.கோமதிநாயகம். நா.கணேசனின் மைத்துநர் முத்துமாறன் ஆகியோர் அடங்கிய எங்கள் குழு முதலில் திருச்செந்தூர் சாலையில் உள்ள ஆதிச்சநல்லூர் மேட்டுப்பகுதிக்குச் சென்றோம். 
 
  ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் படங்களை முன்பு நாளிதழ்களில் பார்த்தபொழுது நல்ல காட்சிகள் மனத்தில் பதிந்தன. அந்தக்காட்சிகள் பார்வைக்குக் கிடைக்கும் என நினைத்தேன். எங்கள் பொன்னேரி போன்ற வறண்ட மேட்டைக்காட்டி இதுதான் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப்பகுதி என தொ.ப. விளக்கம் சொல்ல என்னால் நம்ப முடியவில்லை. காரணம் அரும்பெரும் வரலாற்று உண்மைகளைத் தாங்கிக்கொண்டுள்ள அந்த நிலப்பகுதியை வேலியிட்டுப் பாதுகாக்கவோ, அழகிய நினைவுச் சின்னங்களை காட்சிப்படுத்தவோ அரசு முன்வரவில்லை. வெண் சரளைக் கற்கள் கிடக்க அதில் பலவகை மண் ஓடுகள் கலைநயத்துடன் கிடந்தன. மேலே சிவப்பு நிறமும் கீழே கறுப்பு நிறமுமாகப் பல ஓடுகளைக் கண்டு வியந்தேன். அவற்றுள் சிலவற்றை நினைவுக்காகச் சேமித்துக்கொண்டேன். 
 
  முதுமக்கள் தாழிகள் இருந்ததற்கான தடயங்கள் பல தெரிந்தன.பளிங்கு போன்ற கூழாங்கற்கள் சிறு சிறு வட்டாக இருந்தன. அவற்றின் கீழ் முதுமக்கள் தாழி இருக்கும் எனப் பேராசிரியர் தொ.ப. விளக்கம் சொன்னார். பழங்காலத்தில் மக்களை முதுமக்கள் தாழியில் வைத்தபிறகு அவர்களின் உடலை நாயோ, நரியோ இழுக்காமல் இருக்க உறுதியான இத்தகு கல்லை வைத்திருக்கவேண்டும் என நம்புகின்றனர். பொருநையாற்றின் கரையில் இருந்த இப்பகுதியை மிகுதியான வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட தண்ணீரின் போக்கு அரித்து ஆதிச்சநல்லூர் அகழாய்வை இயற்கையாக வெளிப்படுத்திக் காட்டியதாகவும், அதன்பிறகு அகழாய்வுப்பணிகள் நடைபெற்றதாகவும் அறியமுடிந்தது. 
 
  அழகிய சிறு அகல் ஒன்றை எனக்குப் பேராசிரியர் தொ.ப. பரிசாக வழங்கினார். பல காட்சிகள் படமாக்கிக்கொண்டேன்(பிறகு இணைப்பேன்). அருகில் இருந்த மலைப்பகுதியில் இரும்பு உருக்கும் பகுதிகளைப் பேராசிரியர் தொ.பரமசிவன் கண்டுபிடித்ததை நினைவுகூர்ந்தார். இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாகக் காற்றின் போக்கிற்கு ஏற்ப இந்த இரும்பு உருக்கும் அடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததையும் தாமிரபரணிக் கரையில் உள்ள மணலில் மிகுந்த இரும்புத் தாதுக்கள் இருந்ததால் இங்கு இரும்பு உருக்கப்பட்டது எனவும் இதனையொத்த பணி இலங்கையில் நடைபெற்றதையும் எங்கள் குழு விவாதித்தது. நா.கணேசன் அவர்கள் இது பற்றி ஆராயும்படி என்னிடம் தெரிவித்தார். 
 
 ஆதிச்சநல்லூர் மேட்டுப்பகுதியை (சாலைக்குத் தென்புறம்) பார்வையிட்ட பிறகு வடபகுதியையும் பார்வையிட்டோம். அங்கிருந்த பொருநையாற்றில் அழகிய நீரின் போக்கைக் கண்ட எனக்கு நீராட எண்ணம். துண்டு கொண்டு போயிருந்தால் ஒரு குளியல் போட்டிருக்கலாம். காலையில் குளிக்காததைச் சமன் செய்திருக்கலாம். குளிக்கமுடியாத ஏக்கத்துடன் இருந்த என்னைச் சுமந்தபடி திருநெல்வேலிக் காட்சியகம் (மியூசியம்) நோக்கி எங்கள் மகிழ்வுந்து விரைந்தது. (மீண்டும் தொடர்வேன்)

சனி, 7 ஜூன், 2008

திருநெல்வேலிக் கருத்தரங்கு நிறைவு...

இரவு 8.15 மணிக்கு அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்க கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது.

திருநெல்வேலிக் கருத்தரங்கு நா.கணேசன் உரை...

அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வுநிறுவனத்தில் பணிபுரியும் நா.கணேசன் அவர்கள் :
தமிழ்மணத்தைக்காசி அவர்கள் தொடங்கும் பொழுது 100 அளவில் பதிவர்கள் இருந்தனர்.இன்று 4000 பேர் பதிவர்கள் உள்ளனர். நாள்தோறும் இன்று பலர் இணைகின்றனர்.இதில் பல வசதிகள் உள்ளன.

தமிழ் வளர்த்த பல பெரியவர்கள் வாழ்ந்த பகுதி நெல்லைப்பகுதி.குமரகுருபரர் போன்ற தமிழ் முனிவர் பிறந்த பகுதி இது.நெல்லையில் வாழ்ந்த பல அறிஞர்களை நினைவுகூர்ந்தார்.
பொதியம்(புறம்)
என இப்பகுதி வழங்கப்பட்டது.
தமிழ் ஆர்வலர்கள் பலர் இணையத்தில் இயங்க வேண்டும்.
பல துறைகளிலும் இணையம் பாடப்பகுதியாக அமைக்கப்பட வேண்டும்.
இணையத் தமிழை வளர்க்கவேண்டும்.

புரியாத ஆங்கிலத்தில் பேசினால் உயர்வு என நினைக்கும் போக்கு மாறவேண்டும்.
நாம் எழுதும் கட்டுரைகள் பிற இதழ்களில் வெளிவரும்பொழுது மாற்றத்திற்கு உபட்டுவிடுகிறது.
நாமே பதிவில் நம் விருப்பம்போல் நம் படைப்புகளை வெளியிட பதிவு உதவுகிறது.

கணினியில் தமிழ் வளர்ச்சி
தமிழ் எழுத்துருக்கள் வரலாறு
ஆதம் ஆஸ்போர்ன்,ஜார்ஜ்கார்ட்,கூப்பர்,பெ.குப்புசாமி,முத்துநெடுமாறன்,உமர் 'தேனீ'இயங்கு எழுத்துரு. பற்றி விளக்கினார்.

குறியேற்ற(encoding) முறைகளின் சரித்திரம்
திஸ்கி,டாப்,டேம்,யுனிகோடு பற்றி விளக்கினார்.

யாகு,கூகுள்,தமிழ் கூறும் வலைப்பதிவுலகு பற்றி விளக்கினார்.

Tamil Within 16-bit multilingual unicode பற்றி எடுத்துரைத்தார்.

குமுதம்,விகடன் யுனிகோடுக்கு மாறியுள்ளதை நினைவுகூர்ந்தார்.

ஒரு விளக்கை வாங்கிக்கொண்டு போய் அதற்குரிய துளையில் பொருத்தும்பொழுது பொருந்துகிறது.உலக அளவில் இது ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதுபோல் தமிழ் எழுத்துகள் ஒரேவடிவில் எழுதும்படி ஒருங்குகுறி வேண்டும்.

தமிழ் 99 விசைப்பலகை சிறந்தது.அதனை அனைவரும் பயன்படுத்தவேண்டும்.
(இதன் விளக்கத்தை நானும் அவைக்கு விளக்கினேன்.அனைவரும் வியந்தனர்.பாராட்டினர்)

திருநெல்வேலிக் கருத்தரங்கில் பேசப்பட்டவை...

  திருநெல்வேலிக் கருத்தரங்கில் முனைவர் சங்கரபாண்டி அவர்கள் இணையம் பற்றியும் அமெரிக்காவில் தமிழ்நிலை பற்றியும் விளக்கிப்பேசினார். அடுத்து காசி அவர்கள் தமிழ்மணம் பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் விளக்கினார். தமிழ் மணத்தில் உள்ள பல்வேறு வசதிகளை அவர் செய்முறை விளக்கம்வழி விளக்கினார். பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் இணையத்துறையில் தொடங்கபட்டுள்ள இம் முயற்சியைப் வாழ்த்தி பாராட்டினார். திரு.சேகர் அவர்கள் தமிழ் இணையமுயற்சிக்கு என்றும் துணைநிற்பேன் என்று உறுதியளித்தார். 
 
  மாவட்ட ஆட்சியர் திரு கோ.பிரகாஷ் அவர்கள்: இணையத்தை நல்லதற்குப் பயன்படுத்துவதுபோல் தவறானவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இச்சூழலில் இணையத்தை நல்லவற்றிற்குப் பயன்படுத்தவேண்டும். உலகில் எல்லா இனமும் மொழியைப் பாதுகாப்பதற்குப் போராடியுள்ளனர். நாமும் போராடி தமிழைப்  வளர்க்கவேண்டியுள்ளது. ஓர் இனத்தின் பல அடையாளங்கள் மாறும். மொழி மாறாது. உடலில் ஊறிப்போன இரத்தம் போன்றது மொழி. ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பு உண்டு. பிற மொழி தெரிந்தால்தான் முன்னேற முடியும் என்பது தவறு. தாய்மொழி அறிவு தேவை. நம்மொழி உயர்வு என்ற எண்ணம் அனைவருக்கும் வேண்டும். தமிழிலிருந்து பிறந்தவைதான் பிற திராவிடமொழிகள். இராபர்ட்டு கால்டுவெல் இதனை வெளிப்படுத்தியவர். அதுபோல் அயல்நாடுகளில் இருந்து வந்து கணேசன், சேகர் போன்றவர்கள் தமிழ்ப்பணிபுரிகின்றனர். நான் தமிழை விரும்பிப் படித்து ஆட்சிப்பணியில் வெற்றிபெற்றுள்ளேன். தமிழைச் சிதைக்காமல் வளர்க்கவேண்டும். தமிழ்மொழி எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சிபெற உள்ளது என்று பேசினார்.

திருநெல்வேலிக் கருத்தரங்கம் படங்கள்...

மாவட்ட ஆட்சியர் திரு.கோ.பிரகாஷ் இ.ஆ.ப. அவர்கள் குத்துவிளக்கேற்றல்
 
அரங்கில் பார்வையாளர்கள்
 
பேராசிரியர் தொ.பரமசிவன்

திருநெல்வேலிக் கருத்தரங்கம் படங்கள்...


நெல்லை இணையக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் திரு.கோ.பிரகாஷ் இ.ஆ.ப அவர்கள் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உருவாக்கியுள்ள குறுவட்டை வெளியீடு செய்தல்

திருநெல்வேலிக் கருத்தரங்க படங்கள்...


வரவேற்புப் பதாகை


நா.கணேசன்(அமெரிக்கா)


காசி அவர்களும் மு.இளங்கோவனும்

திருநெல்வேலி - இணையத்தில் வளர்தமிழ் கருத்தரங்கம் படங்கள்...


கருத்தரங்க மேடையில் முனைவர் தொ.பரமசிவன், நாக. கணேசன், காசி

இணையத்தில் வளர்தமிழ் -வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழாய்வில் பயன்பாடும் கருத்தரங்கம் தொடங்கியது...


இணையத்தில் வளர்தமிழ் -வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழாய்வில் பயன்பாடும் கருத்தரங்கம் திருநெல்வேலியில் விசயா தோட்டம்(கார்டன்) கருத்தரங்க அறையில் தொடங்கியுள்ளது. திரு.சங்கரபாண்டி அவர்கள் கருத்தரங்கு நோக்கம் பற்றி விளக்குகிறார்.

புதன், 4 ஜூன், 2008

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்க விழா...

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கத்தின் தொடக்கவிழா 14.06.2008 காரி(சனி)க்கிழமை மாலை 3மணிக்கு சென்னை இராசா அண்ணாமலைபுரத்தில்(ஐயப்பன் கோயில் அருகில்) உள்ள இமேச் அரங்கில் நடைபெற உள்ளது.

குத்துவிளக்கேற்றி அமைப்பைத் தொடங்கிவைத்து விழாப் பேருரையாற்ற மருத்துவர் இராமதாசு அவர்கள் இசைந்துள்ளார்.பாவலர் த.பழமலை அவர்கள் தலைமையில்
நடைபெறும் இவ்விழாவில் ஓவியர் வீர.சந்தானம் அவர்கள் வரவேற்புரையாற்ற உள்ளார்.பேராசிரியர் பிரம்மராசன் அவர்கள் தொடக்கவுரையாற்ற உள்ளார்.

'இலக்கியமும் இயக்கமும்' என்னும் தலைப்பில் பாவலர் செயபாசுகரன் அவர்களும் 'கலை இலக்கியக் களத்துமேடு' என்னும் பொருளில் பாவலர் பச்சியப்பன் அவர்களும் உரையாற்ற
உள்ளனர்.

வாழ்த்துரை வழங்கி அமைப்பைப் பெருமைப்படுத்த தமிழறிஞர் இரா.இளங்குமரனார், பேராசிரியர் அப்துல்ரகுமான்,முனைவர் பொற்கோ,உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், பாவலர் இன்குலாப்,தோழர் சி.மகேந்திரன்,எழுத்தாளர் பிரபஞ்சன்,தோழர் தியாகு, தோழர் ச.தமிழ்ச்செல்வன்,எழுத்தாளர் இரவிக்குமார்,திரைப்பட இயக்குநர் பாரதி கிருட்டிணகுமார், எழுத்தாளர் இராசேந்திரசோழன்,முனைவர் க.பன்னீர்செல்வம் ஆகியோர் இசைந்துள்ளனர்.

எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களின் நன்றியுரையிலும் பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களின் தொகுப்புரையிலும் விழா சிறக்க உள்ளது.

திருக்கோவிலூர் அபிராமி-ஆனந்தி அகியோரின் நாகசுர இசையும்,பொங்குதமிழ்ப் பண்பாட்டுக் கலைப் பயிலகத்தின் மகளிர் பறைமுழக்க இசை நடனமும் நடைபெற உள்ளன.

அனைவரும் கலந்துகொண்டு விளிம்புநிலையில், ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் கலை,இலக்கிய வெளிப்பாட்டு விழிப்புணர்ச்சிக்குத் துணைநிற்கலாம்.
அழைப்பிதழ் :