சனி, 1 மார்ச், 2008

ஐங்குறுநூறு அறிமுகமும் பாடிய புலவர்களும்

ஐங்குறுநூறு என்னும் நூல் சங்க காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. மூன்று அடி சிற்றெல்லையும் ஆறடி பேரெல்லையும் கொண்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலத்தில் அமையும் ஐந்து ஒழுக்கங்களைப் பற்றிய பாடல்களைக் கொண்டது.

ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் என்ற வகையில் பாடல்களின் எண்ணிக்கை ஐந்நூறாகும். ஒவ்வொரு நூறு பாடலும் பத்துப் பத்தாகப் பகுக்கப்பட்டு, அப் பத்துப்பாடலும் கருத்தாழம் மிக்க ஒரு தொடரால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது. இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார். எனவே கடவுள் வாழ்த்துடன் 501 பாடல்களைக் கொண்டுள்ளது. எனினும் 129,130 ஆம் பாடல்கள் கிடைக்கவில்லை (ஒளவை.பதி.).

மருதத் திணையை ஓரம்போகியாரும் நெய்தல் திணையை அம்மூவனாரும் குறிஞ்சித் திணையைக் கபிலரும் பாலைத்திணையை ஓதலாந்தையாரும் முல்லைத் திணையைப் பேயனாரும் பாடியுள்ளனர். இதனை,

மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருது குறிஞ்சி கபிலர் -கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு

என்னும் பழம்பாடல் குறிப்பிடுகின்றது.

ஐங்குறுநூற்றிணைத் தொகுப்பித்தவன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசனாவான். தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உத்தி இந்நூலுள் உள்ளது. உ.வே.சாமிநாதர் 1903 இல் ஐங்குறுநூற்றை முதன் முதல் தமிழுலகிற்குப் பதிப்பித்து வழங்கினார். பின்னர் ஒளவை துரைசாமியார் ஐங்குறுநூற்றிற்கு அரிய உரை வரைந்து பதிப்பித்துள்ளார் (1957,58). இவ்வுரை அறிஞர்களால் போற்றப்படுவது. பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாரும் ஐங்குறு நூற்றுக்கு உரைவரைந்துள்ளார். ஈழத்திலும் இந்நூல் உரை வரைந்து பதிப்பிக்கப்பட்டுள்ளது.

என் உள்ளங் கவர்ந்த ஐங்குறுநூற்றுப் பாடல்:

'அன்னாய் வாழிவேண் டன்னை நம்படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்(டு)
உவலைக் கூவற் கீழ்
மானுண் டெஞ்சிய கலிழி நீரே' (ஐங்குறுநூறு, 203)

(விளக்கம்) தலைவனுடன் உடன்போக்கு நிகழ்த்தி மீண்ட தலைவியிடம் தோழி, தலைவன் நாட்டின் வளம் பற்றி கேட்டபொழுது,'அன்னையே யான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக! நம் தலைவரது நாட்டிலுள்ள தழை மூடிய கிணற்றிலுள்ள மான்குடித்து எஞ்சிய கலங்கல் நீர் நம் படப்பையில் (தோட்டம்) உள்ள தேன் கலக்கப்பட்ட பாலின் இனிமையை விட இனிது' என்றாள்.

2 கருத்துகள்: