தமிழ்க் கவிதைத்துறை இருபதாம் நூற்றாண்டில் பல நிலைகளில் வளர்ந்துள்ளது. பாரதியாரின் வருகை, பாவேந்தரின் வருகை தமிழ்க் கவிதைத்துறையில் பல புதுமைகள் நிலவ காரணமாக அமைந்தன. பாரதியார் வழியாக ஏற்பட்ட கவிதை மரபின் வளர்ச்சி பாவேந்தரின் வழியாக வேறு வேறு கட்டங்களைச் சந்தித்தது. பாவேந்தரின் வருகைக்குப் பிறகு தோன்றிய கவிஞர்களில் பாவேந்தரின் தாக்கம் மிகுதியாக இருந்தது. அதுபோல் பாரதி, பாவேந்தர் இருவர் தம் கவிதை உள்ளடக்கங்களையும் உள்வாங்கி எழுதிய கவிஞர்களின் பாடல்கள் வேறு வகையில் விளங்கின. பாரதியும் பாவேந்தரும் பல்வேறு பொருண்மைகளைப் புதியதாகப் பாடி,படைப்புகளைச் செழுமைப்படுத்தியது போலப் பல வடிவங்களையும் மக்கள் வடிவப்படுத்தினர். அவற்றுள் ஒன்று காப்பிய முயற்சியாகும். இவர்களின் வருகைக்குப் பிறகு காப்பிய முயற்சி வளர்ச்சி அடைந்துள்ள போக்கினை இக்கட்டுரை நினைவு கூர்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் காப்பிய உள்ளடக்கச் செய்திகள்1. இந்தியத் தேசியக் கருத்துக்கள்2. திராவிடத் தேசியக் கருத்துக்கள்3. தமிழ்த் தேசியக் கருத்துக்கள்இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு இயக்கங்கள் தோன்றி, சமூக மறுமலர்ச்சிக்குத் துணைசெய்தன. அவற்றுள் இந்தியத் தேசிய இயக்கம், திராவிடத் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம் என்பன குறிப்பிடத்தக்கன.இவ்வியக்கச்சார்பு இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களில் பதிவாகியுள்ளன. பாரதியாரின் படைப்புகளில் தேசியச் சிந்தனை தென்படுகின்றன. பாஞ்சாலி சபதத்தினை அவ்வகையில் பார்க்க வேண்டியுள்ளது.அதுபோல் பாவேந்தரின் பாவியங்களில் திராவிடத் தேசியக் கொள்கை மிளிர்கின்றன. கண்ணகிப் புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா முதலியன திராவிட இயக்கச் சார்பில் மீள் உருவாக்கம் செய்யப்பட்ட படைப்புகளாகும்.தமிழ்த் தேசிய,தனித் தமிழ் இயக்கச் சார்பில் முடியரசன், பெருஞ்சித்திரனார், தங்கப்பா, கடவூர் மணிமாறன், கன்னல், மறைமலையான், மலையமான், தமிழியக்கன் முதலானவர்களின் படைப்புகளைக் குறிப்பிடலாம்.
இந்தியத் தேசியக் கருத்துக்கள் என்னும் தலைப்பில் மதவழிப்பட்ட செய்திகளை, வேதத்துடன் தொடர்புடைய செய்திகளை, நாட்டிற்கு உழைத்தவர்களைப் பற்றிய செய்திகளைக் கொண்டு எழுதப்பட்ட காப்பியங்களை அணுக முடியும். இதில் பாரதியாரின் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, அரங்க. சீனிவாசனின் மனித தெய்வம் காந்தி கதை முதலிய நூல்களை அடக்கலாம்.திராவிடத் தேசியக் கருத்துக்கள் என்னும் வகையில் திராவிட இயக்கம் வலியுறுத்திய பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, பெண்ணுரிமை, மூடப்பழக்கவழக்க ஒழிப்பு, வரலாற்றுப் பெருமை முதலிய செய்திகளை உள்ளடக்கிய காப்பியங்களைக் குறிப்பிடலாம்.தமிழ்த் தேசியக் கருத்துக்கள் என்னும் அடிப்படையில் தமிழ்ச் சிறப்பைச் சொல்லுதல். பழந்தமிழ் பெருமை நாட்டல், மொழிக் காப்பு, தனித்தமிழ்ச் சொல்லாட்சி, பழைய இலக்கியச் செய்திகளைப் புதுக் கண் கொண்டு பார்த்தல், பண்டைய செய்திகளுக்கு வடிவம் தருதல், பண்டைய பாடல்களை விரித்துக் கதைப் படுத்தித் தருதல். தமிழ்ச் சமுகத்திற்கு உழைத்த தலைவர்களை நாயகர்களாக மாற்றுதல் என்னும் தன்மைகளைக் கொண்டு இக்காப்பிய வகை விளங்கும்.
பாரதியார் தம் காலத்தில் வலியுறுத்த நினைத்த கருத்துக்களைப் பாஞ்சாலி சபதத்தில், குயில் பாட்டில் விளக்கியுள்ளது போலப் பாவேந்தரும் தம் படைப்புகளில் தம் கொள்கைகளை, மக்களுக்குத் தேவையான செய்திகளை வலியுறுத்திப் படைப்புகளைத் தந்துள்ளனர். பாரதியார் காலத்தில் இந்தியத் தேசியம் முக்கிய பொருளாக மக்களிடம் வழங்கியது. எனவே அவர் தம் படைப்பு தேசியத் தன்மையை மையமிட்டு எழுந்தது. பாரதியார் மதத்தையும் வேதக் கருத்துகளையும் புராண இதிகாசச் செய்திகளையும் சொல்லி இந்தியத் தேசியத்தைக் கட்டமைக்க இலக்கியத்தின் வழி முயற்சி செய்தார்.
பாவேந்தர் பழந்தமிழரின் இலக்கியங்களைத் துணையாகக் கொண்டு அவ்விலக்கி யங்களில் மண்டியிருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை நீக்கி அறிவுக் கண் கொண்டு காப்பிய முயற்சியைத் தொடங்கினார். அவரிடம் மிகுந்திருந்த தமிழ்ப்பற்று அவர்தம் படைப்புகளில் பொங்கி வெளிப்பட்டன. பாவேந்தரிடம் இருந்த சமூக உணர்வு அவர்தம் புரட்சிக் கவியில் தெரிகின்றது. அதுபோல் பாவேந்தரின் நாட்டுப்பற்று பாண்டியன் பரிசு நூலில் அழகுடன் எடுத்துக் காட்டப்படுகிறது. எதிர்பாராத முத்தம் நூலில் அவர்தம் தமிழ்ப்பற்றும் புலவர்களைப் போற்றும் பாங்கும் தெரிய வருகின்றது. அதுபோல் புலவர் குழந்தையின் இராவண காவியம் என்னும் நூல் இராவணனைத் திராவிட இயக்கத் தலைவனாகப் போற்றிப் பாடியுள்ளது. இதில் இராவணனின் பல்வேறு பண்புகள் எடுத்துக் காட்டப்பட்டு ஒப்பற்றத் தலைவனாக எடுத்துரைக்கப்பட்டதால் இந்நூல் தடை செய்யப்பட்டதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.
பாவேந்தரின் வழியில் திராவிட இயக்க உணர்வுடன் பகுத்தறிவு நெறிநின்று பாவியம் படைத்தவர். ஆ. பழநி ஆவார். இவர்தம் சாலிமைந்தன் என்னும் காப்பியமும், அனிச்சஅடி காப்பியமும் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். சாலிமைந்தனில் வேதமந்திரக் கருத்துக்களை எதிர்ப்பது, பார்ப்பனிய எதிர்ப்பு முதலியன சிறப்புடன் படைத்துக் காட்டப்பட் டுள்ளது. திராவிட இயக்கம் வளர்ச்சி பெற்ற அதே சூழலில் தமிழ்த் தேசிய உணர்வும் தமிழகத்தில் நிலவியது. பாவேந்தரின் தமிழ்ப் பாடல்களில் திளைத்த தமிழ் உணர்வாளர்கள் பாவேந்தர் வழியில் பாவியங்களை மிகுதியாகப் புனைந்தனர். இவர்களில் முடியரசன், பெருஞ்சித்திரனார், தங்கப்பா, தமிழியக்கன், கடவூர் மணிமாறன், கன்னல் ஆகியோரின் படைப்புகள் குறிப்பிடத்தகுந்தன.
பெருஞ்சித்திரனார் மாணவப் பருவத்தில் கொய்யாக்கனி என்னும் நூலை எழுதியுள்ளார். இதில் ஓரிரு அயற்சொற்கள் கலந்துள்ளதைத் தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.தனித்தமிழில் முழுமையான ஈடுபாடு அமைந்த பிறகு எழுதப்பெற்ற ஐயை நூலில் மிகச்சிறந்த உணர்ச்சி ஓட்டத்தில் தனித்தமிழில் பல்வேறு யாப்பு வடிவங்களில் பெருஞ்சித்திரனார் பாடல் புனைந்துள்ளார். இவர்தம் பாவியக் கொத்து என்னும் நூல் பல பாவியங்களின் தொகுப்பாக இடம் பெற்றுள்ளது. பெருஞ்சித்திரனாரைப் போல் பாட்டு இயற்றும் ஆற்றல் கொண்ட தங்கப்பா தம் இளமைப் பருவத்தில் எழுதிய ஆந்தைப் பாட்டு நூலில் சமூக நடப்புகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
பெருஞ்சித்திரனாரின் தென்மொழி ஏடும், பாட்டு நூல்களும் தமிழகத்தில் பல்வேறு கவிஞர்களை பாட்டுத்துறையில் ஈடுபடுத்தியது. பலரும் சமூக உணர்வுடன் பாவியங்கள் எழுதத் தொடங்கினர். இளையத் தலைமுறையைச் சேர்ந்த கடவூர் மணிமாறன் பொன்னி என்னும் பாவியத்தை எழுதியுள்ளார்.இதில் சமூகச் செய்திகள் பாவியத்தில் உள்ளடக்கமாக உள்ளது. அதுபோல் பாவலர் கன்னல் எழுதிய முல்லை, சீதையின் சபதம் என்னும் நூல்கள் குறிப்பிடத்தக்க தனித்தமிழ்ப் பாவியமாக உள்ளன.
பொற்கோ இயற்றிய கோதை வளவன் என்னும் காப்பியம் தமிழ் மரபுடன் எழுதப்பட்டுள்ளது. மறைமலையான் இயற்றிய ஒரு தாழம்பூ தவிக்கிறது என்னும் பாவியமும் பாவிய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நூலாக விளங்குகிறது. பாவலர் அழகரசன் என்பவர் வேர்ப்பலா என்னும் பெயரில் எழுதிய பாவியம் கைம்பெண் துயரினை விளக்குகிறது. அரூர் மணிவேலன் அவர்கள் வீரவாஞ்சி காவியம் பாடியுள்ளார். அதுபோல் ச.து.சு யோகியார் தமிழன்னை காப்பியம் என்னும் நூலை வரைந்துள்ளார். தி.நா. அறிவொளி தென்றல் என்னும் பெயரில் வெண்பா வடிவில் பாவியம் இயற்றியுள்ளார்.
பாவலர் இறையரசன் பாண்டியனார் பாவியம் (செளந்தரபாண்டியனார் வரலாறு) எழுதியுள்ளார். அரசியல் தலைவர்களைப் போற்றிக் காப்பியம் வரைந்துள்ளமைக்குக் கருணானந்தம் எழுதிய அண்ணா காவியம் சான்றாக விளங்குகிறது. புலவர் புலமைப்பித்தன் பெரியாரின் வாழ்க்கையைக் காப்பியமாக எழுதி வருவதை அறியமுடிகிறது (நேர்காணலில்).இவ்வாறு இயக்கம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் மொழி சார்ந்தும் கருத்துக்கள் கொண்ட காப்பியங்கள் தோன்றிய தமிழ்ச் சூழலில் ஊடகங்களின் செல்வாக்கால் திரைப்படம், செய்தித்துறை சார்ந்தவர்கள் காப்பியம் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுள் வைரமுத்து எழுதிய கவிராஜன் கதை, வாலியின் பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் முதலியன எந்த இயக்கப் பின்புலமும் அமையாமல் எழுதப்பெற்ற வணிகப் படைப்புகளாகும். தமிழகத்தில் வாழும் பாவலர்களே அன்றி அயல்நாடுகளில் வாழும் பாவலர்களும் தமிழில் காப்பியம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் ஐ. உலகநாதன் முதலானவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் என்று காப்பியங்கள் வகைப்படுத்தப்பட்டு, காப்பிய இலக்கணம் வகுப்பப்பட்ட தமிழ் மொழியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களை விரிவாக ஆராய்வதும் காப்பியப் பண்புகளை உள்வாங்குவதும் தேவையாக உள்ளது.
கட்டுரைத் தலைப்பைக் கண்டு, மிகுந்த ஆவலோடு படித்தேன். தங்களின் பரந்த படிப்பை உணர்ந்தேன். ஆனால், எந்தச் செய்யுளையும் எடுத்துக்காட்டாமல் இப்படி ஒரு கட்டுரையை எழுதி முடிக்க எப்படி மனம் வந்தது?
பதிலளிநீக்குஅய்யா ஆ.பழனி அவர்களின் “காரல்மார்க்சு காப்பியம்”, இலங்கை மகாகவியின் “சாதாரண மனிதனின் சரித்திரம்” படிக்கவில்லையா? மிகச்சிறந்த மரபுக் காப்பியங்கள். (இலங்கைக் கவிஞர்கள் மரபுத் தொகுப்பைக் கூட புதுக்கவிதைத் தொகுப்பு போல வெளியிடும் முறை எனக்கு வியப்பாகவே இருக்கும்)
அத்தோடு கட்டுரைக்குப் பொருத்தமான சிறுதலைப்புகள் தந்து வகைப்படுத்துவதும் அவசியமல்லவா? இப்படி யோசித்தால் ஒரு சிறு நூல் உருவாக வாய்ப்புண்டு. வாழ்த்துகள்.
அன்புடன்,
நா.முத்து நிலவன்.