புதன், 25 ஏப்ரல், 2007

தமிழில் ஒப்பாரி இலக்கியம்

தமிழ்மொழி தொன்மைச் சிறப்புடையதாகும். இம்மொழி பேச்சு வழக்கு, எழுத்து வழக்குகளைக் கொண்டது. ஏட்டு இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி இலக்கியம் இம்மொழி பேசும் மக்களிடம் தோற்றம் பெற்றுவிட்டது. வாய்மொழி இலக்கிய வடிவங்களில் ஒன்று பாட்டு இலக்கியமாகும். இப் பாட்டு இலக்கியம் மக்களின் உடல் உழைப்பு நேரங்களில் தோற்றம் பெற்றது. உழைப்பு ஒலிகளில் இருந்தே பாட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்பது மனித சாரம் நூலாசிரியரின் கருத்து. பாட்டு என்பது தமிழக மக்களைப் பொறுத்தவரை பிறப்பு முதல் இறப்பு வரை ஊடாடி நிற்கின்றது. பிறப்பில் தாலாட்டுப் பாடலாகவும். மறைவின் பொழுது ஒப்பாரிப் பாடலாகவும் வெளிப்படும் பாங்கினை நாட்டுப்புறவியல் அறிஞர்கள் குறிப்பிடுவர்.இங்கு ஒப்பாரி என்னும் வாய்மொழி வடிவம் பற்றி எண்ணிப் பார்ப்போம்.

ஒப்பாரி என்பது இறந்தவர்களை நினைத்துக் கண்ணீர் விட்டுக் கதறி அழும் பெண்கள் பாடுவது. இவ்வாறு பாடும் பொழுது மாரடித்துக் கொண்டும் பாடுவது உண்டு. ஒப்பாரியை "ஒப்பு' எனவும் "பிலாக்கணம்' எனவும் குறிப்பது உண்டு. "பினக்கானம்' என்பதே பிலாக்கணம் எனப்படுகிறது. தொன்மைக் காலத்தில் கையறு நிலைப்பாடல், புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு, அழுகைப்பாட்டு என நம் முன்னோர்கள் ஒப்பாரியை அழைத்தனர்.

ஒப்ப + ஆரி எனப் பிரித்து ஒப்புச் சொல்லி அழுதல் என ஒப்பாரிக்குச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி விளக்கம் தருகிறது. ஒப்பாரி என்பது பெண்களுக்கே உரிய வழக்காற்று வடிவமாக உள்ளது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஒப்பாரி வடிவம் வழங்கப்படுகிறது என்பதைப் பின்வரும் நூற்பா வழி அறியலாம்.

""மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
ஆய்ந்த பூசல் மயக்கத் தானும்
தாமே ஏங்கிய தாங்கரும் பையுளும்
கணவ னோடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமும்
நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையும
கழிந்தோர் தேஎத் தழிபடர் உறீஇ
ஒழிந்தோர்புலம்பியகையறுநிலையும்'' என்பது தொல்காப்பியம்.

உறவினர்கள் இழவு வீடுகளுக்குச் செல்லும் போது "இழவு கொடுத்தல்' என்னும் பெயரில் மாரடித்து அழத் தொடங்கும் பொழுது ஒப்பாரி பாடப்படும். இறந்து கிடப்பவரின் நெருங்கிய உறவினர் முறையாகவும், சில நேரங்களில் முறையற்று வாய்க்கு வந்த வகையில் எல்லாம் இழப்பை எண்ணி அழுது புலம்புவர். மார்பிலும், தலையிலும் அடித்துக் கொள்வர். தமக்கு நெருங்கிய உறவினர் வந்தவுடன் அவர்களிடம் தம் கையற்ற நிலையைச் சொல்லியவாறு அழுது புலம்புவர்.

நிறைவாழ்வு வாழ்ந்தவர் இறந்தார் என்றாலும் ஒப்பாரி சொல்வதில் பஞ்சம் இருக்காது. திடீர்ச் சாவு நிகழ்ந்த பொழுது பாடப்படும் ஒப்பாரிக்கும் நிறை வாழ்வு வாழ்ந்த பெரியவர்கள் இறந்த பொழுது - எதிர்பார்த்த சாவுகள் நிகழும் பொழுது பாடப்படும் ஒப்பாரிக்கும் வேறுபாடு உண்டு.

பின்னைய நிகழ்வில் உரை சொல்லி அழும் மரபு உண்டு. இவ்வாறு பாடப்படும் பாடல் இரண்டு, மூன்று மணிநேரம் கூட நீண்டு செல்வது உண்டு. உறவு முறைகளின் நெருக்கத்திற்கு ஏற்ப ஒப்பாரிப் பாடலின் கால அளவு மாறுபடும். நெருங்கிய உறவினர் என்றால் நீண்ட நேரமும் தூரத்து உறவினர் என்றால் குறைந்த நேரமும் ஒப்பாரி சொல்வர். தமிழகத்தில் சில பகுதிகளில் கூலிக்கு ஒப்பாரி சொல்லி அழுவதும் உண்டு. அரவாணிகள் சொல்லும் ஒப்பாரி தனி வகையின.

ஒப்பாரி என்பது தாய், தந்தை, மகன், மகள், கணவன், அண்ணன், தங்கை, அக்கா உறவு முறைகளுக்கு ஏற்பப் பாடப்படுவதும் உண்டு. ஒரு பாடலைச் சூழலுக்கு ஏற்ப மாற்றிப் பாடி ஒப்பாரி ஆக்குவது பெண்களுக்குக் கைவந்த கலையாக உள்ளது. ஒப்பாரி என்னும் வாய்மொழி வடிவம் உணர்வு மயமான சூழலில் பாடப்பட்டாலும் அதிலும் வடிவ ஒழுங்கு, அணியமைப்பு, எதுகை, மோனை, இயைபு, முரண், கற்பனைநயம் எனப் பல அழகுகள் உள்ளன. தமிழகம் முழுவதும் பாடப்படும் ஒப்பாரிப் பாடல்களை எடுத்து ஆராயும் போது சில அமைப்பு முறைகளில் ஒன்று பட்டுக் காணப்படுவதை அறிய முடிகிறது.

ஒப்பாரிப் பாடல்களில் இறந்தவர்களின் குணநலன், பெருமை, சிறப்பு முதலியன சிறப்பாகப் பேசப்படும். இறந்தவருக்கும் தனக்கும் உள்ள உறவு, நெருக்கம், அவரை இழந்த பிறகு தான் அடைய உள்ள துன்பம் முதலியன ஒப்பாரிப் பாடலைப் பாடுபவர் குறிப்பிடுவார். "குழந்தை பெற்றவளுக்குத் தாலாட்டும் கணவனை இழந்தவளுக்கு ஒப்பாரியும் தானே வரும்' என்பது தமிழகப் பழமொழி.ஒப்பாரிப் பாடல்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களால் பாடப்படுகிறது. அதுபோல் தமிழர்கள் வாழும் இலங்கை, மலேசியா முதலான நாடுகளிலும் இவ்வடிவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாழும் மலையின மக்களும், பழங்குடி மக்களும் ஒப்பாரிப் பாடல்களைப் பாடி வருகின்றனர். கொல்லிமலைப் பகுதியில் வாழும் மலை வாழ் மக்களின் வாழ்வில் இறப்பு நிகழும்போது ஒப்பாரி பாடுகின்றனர். இதனைக்,

"கோட மழபேஞ்சி - நா
குயிலா (ள்) நனஞ்சிவந்தா - ஏ ஆயா நா(ன்)
என்ன பெத்த குயிலா இருந்துவிட்டால் -
எ(ன்)கூந்தல் ஒனத்திருந்தே
கொடிச்சீல மாத்திருந்தே
கொடிமணியச் சூடிருந்தே
என்னபெத்த குயிலா போனோடனே - நா
கூந்த ஒனத்திலேயே -
நாகொடிச்சீல மாத்திலியே - நா கொடிமணியச் சூடிலியே -
நாகொடிய வர ஞாயமுண்டோ'' (கொல்லிமலை மக்கள் பாடல்கள், ப. 290)

என்னும் பாடல் வழி அறியலாம்.

ஒப்பாரிப் பாடல்கள் துன்பத்தின் வடிகாலாக அமைவதுடன் பெண் சமுதாயத்தின் நிலையினைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதுவரை பூவும், பொட்டும் வைத்திருந்த நிலை மாறுவதையும் தீய சகுணமாக மக்கள் கருதுவதையும் மங்கல நிகழ்வுகளில் பங்கேற்பதைச் சமூகம் விரும்பாததையும் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. தந்தை, தாய், இறந்த பிறகு நாத்திமார் தங்களைக் கொடுமைப் படுத்துவார்கள் என்பதைச் சில பாடல்கள் குறிப்பிடுகின்றன.

கணவனை இழந்த பெண் தனக்கு வேறு ஆறுதல் தருபவர் இல்லை என்பதை,

"செஞ்சி மலையோரம் - அந்தச்
சீரங்கத்து ரோட்டோரம்
சீமான காணுமின்னு - நான்
சீத பொலம்பி வந்தேன்
செஞ்சிமல தட்டானுந்தான் - அந்தச்
சீரங்கத்து ஆசாரியும்
சீமான போலநல்ல
செலயயழுதித் தாரேனுன்னான்
செஞ்சிமல தட்டான்கிட்ட -
செலஎழுதி வாங்கிவந்தேன்
செலையுந்தான் பேசுலய்யா,
சீத குற ஆறலய்யா' (நாட்டுப்புறவியல், பக்கம் 140)

என்னும் பாடல் வழி அறியலாம்.அறிவியல் தொழில்நுட்ப உலகில் நாகரிக மயக்கத்தில் ஒப்பாரி சொல்லி அழுதல் என்னும் வழக்கம் பரவலாக மறைந்து வருகிறது. சிற்றூர்ப்புறங்களில் மட்டும் இவ்வடிவம் குற்றுயிரும் குலையுயிருமாக உள்ளது. நெஞ்சை உருக்கும் இக்கலை வடிவம் சமூக நடப்பியலைத் தாங்கி உள்ளதால் இதனைப் பதிவு செய்வதும், பாதுகாப்பதும் காலத்தேவையாகும்.

முனைவர் மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி
புதுச்சேரி

ஞாயிறு, 15 ஏப்ரல், 2007

த. கோவேந்தனின் "வானம்பாடி' இதழ் அறிமுகம்


இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியின் பாட்டுத்துறை (கவிதை) மிகச்சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பாரதியார், பாவேந்தரின் வருகைக்குப் பிறகு தமிழ்ப் பாட்டுத்துறையில் வடிவம், உள்ளடக்கம், வெளியீட்டு நுட்பங்களில் பாவலர்கள் தம் கவனம் செலுத்தித் தமிழ்ப் பாட்டுத்துறையை வளப்படுத்தினர். மரபு, புதுப்பா, திரைப்பா, உரைவீச்சு, துளிப்பா (ஐக்கூ), குறும்பா (Limerik), நகைப்பா (Parody) எனப் பல வடிவங்களில் பாவலர்கள் பாட்டுத் துறையைச் செழுமைப்படுத்தினர்.சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் (1935), குயில்(1947) எனும் பாட்டு இதழ்களின் வருகைக்குப் பிறகு தமிழ்ப்பட்டுத்துறையை வளர்க்கும் பல பாட்டு இதழ்கள் தமிழ்மொழியில் வெளிவந்தன.அவற்றுள் வேலூரிலிருந்து (வடார்க்காடு மாவட்டம்) த. கோவேந்தனால் வெளியிடப்பெற்ற "வானம்பாடி' எனும் பாடல் இதழ் குறிப்பிடத்தகுந்தது. அவ்விதழை இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது.

வானம்பாடி' இதழ் அறிமுகம் 

வானம்பாடி' இதழ் 22 மு 27 எனும் வடிவில், 15-9-1957இல் ஆசிரியர் த. கோவேந்தன், சைதாப்பேட்டை, வேலூர் எனும் முகவரியிலிருந்து வெளிவந்தது. விலை ஓர் இதழ் 16-காசு; ஆண்டுக்கட்டணம் 2-00. ஒவ்வொரு மாதமும் 15-ஆம் நாளில் வெளிவந்த மாத இதழ் இஃது. "தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்' எனும் பாவேந்தரின் வரிகளை முகப்பு வரிகளாகக் கொண்ட இதழ். ஓராண்டில் 9 - இதழ்கள் வெளிவந்தன. 12,16,20 என்ற பக்கங்களைக் கொண்டு வந்தது. பின்பு இரண்டாம் ஆண்டுத் தொடக்கத்தில் 1 மு 4 கிரவுண் அளவில் 50 பக்கமாக வெளிவரும் என்ற அறிவிப்பு வழி இதழின் வடிவம் வேறுபட்டதை அறிய முடிகிறது. எனினும் அவ் ஏடுகள் பார்வைக்குக் கிடைத்தில. எனவே ஓராண்டில் வெளிவந்த ஒன்பது ஏடுகளின் 128-பக்கச் செய்திகளை மட்டும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்துகிறது இக்கட்டுரை.

வானம்பாடியின் படைப்புகள்வானம்பாடியில் பெரும்பாலும் மரபுப் பாடல்களே இடம்பெற்றுள்ளன. படைப்புப்பாடல்களும், மொழிபெயர்ப்புப் பாடல்களும் என இவற்றை வகைப்படுத்தலாம். கவிதை குறித்த சில கட்டுரைகளும் உண்டு. படைப்புப் பாடல்களை அறிஞர்கள் த. கோவேந்தன், துரை. மாணிக்கம் (பாவலரேறு பெருஞ்சித்திரனார்), ம. இலெனின் தங்கப்பா, சிவஞானவள்ளல், சாமிபழனியப்பன், சுப்பு ஆறுமுகம், இலால்குடி நம்பி, இரா. வேங்கடபதி, கோ. கந்தசாமி, ஆ. முத்துசிவன், இராமசேடனார், செ. வரதராசன், முருகேச பண்டிதர் முதலானவர்கள் இயற்றியுள்ளனர்.

த. கோவேந்தன் பல்வேறு புனைபெயர்களிலும் (காவேரிக்கவிராயர்) பெயரின்றியும் பல பாடல்களை எழுதியுள்ளார். மேலும் பாவேந்தர் பாரதிதாசன், பாரதியார், மு.வ, புலவர் குழந்தை, அறிஞர்அண்ணா ஆகியோரின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.மொழிபெயர்ப்புப் பாடல்கள் மேனாட்டுக் கவிதைகள் சில தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைப் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், த. கோவேந்தன் ஆகியோர் மொழி பெயர்த்துள்ளனர். 1.4.58 இதழில் மேலட்டையில் செல்லியின் படமும், உள்ளட்டையில் "வானம்பாடி' எனும் பாடலும் இடம்பெற்றுள்ளன.

செல்லியின் (The Sky Lark) எனும் பாடலைப் பன்மொழிப்புலவர் அவர்கள் "வானம்பாடி' என மொழிபெயர்த்துத் தந்துள்ளார் (22-பாடல்), பெரும்பாவலர் தாகூரின் பாடலை "அன்பு மனத் தொல்லை' எனும் பெயரில் த. கோவேந்தன் மொழிபெயர்த்து நான்காம் இதழின் அட்டைப்பாடலாக வெளியிட்டுள்ளார். வள்ளத் தோளின் பாடல் "காதல்தேர்வு' எனும் தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது (15.5.58), சேக்சுபியரின் கவிதை "வேனில் அழகு ஒப்பாமோ' எனும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்ப்பாடல்கள் சில ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இப்பாடல்கள் சங்கப்பாடல்கள், சமகாலப் படைப்புகள் எனும் இரு நிலையினவாக உள்ளன. சங்கப்பாடல்கள் பலவும் பேராசிரியர் ம. இலெனின் தங்கப்பா அவர்களால் மிகச்சிறப்புடன் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பின்னாளில் சில ‘INTELLECTUAL BEAUTY’ எனும் பெயரில் (விலை 2.25) தனி நூலாக வெளிவரும் என்ற விளம்பரத்தையும் காண முடிகிறது (ப.15, 1.8.58). திரு. கந்தசாமி அவர்கள் முடத்தாமக்கண்ணியாரின் (அறல்போல்கூந்தல்) பாடலை "The Full Bloom of Woman-hood"எனும் பெயரில் ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளார். பாரதியாரின் "விடுதலை' எனும் பாடல் ‘Liberation’ எனும் பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளதுடன், பாவேந்தரின் "வானம்பாடி' பாடல் தங்கப்பாவால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

தங்கப்பா "வித்துலகீரே' எனும் திருவருட்பாபாடலை, "O worldly men"எனும் தலைப்பில் பெயர்த்து வெளியிட்டுள்ளார்.

தமிழ்ப்பாடல்கள்,தமிழ் மரபுப் பாடல்கள் பலவும் பலதரத்தனவாக வெளிப்பட்டுள்ளன.பெரும்பாலும் காதல், சமூகநிலை, இயற்கை குறித்த பாடல்களாகவே உள்ளன. துரை. மாணிக்கம், தங்கப்பா, சுப்பு ஆறுமுகம், த. கோவேந்தனின் பாடல்கள் முற்போக்கு எண்ணங்களுடன் படைக்கப்பட்டுள்ளன.இவற்றுள் துரை.மாணிக்கத்தின் பாடல்கள் வானம்பாடி, வேண்டாத இந்தி, மதங்காப்பார், உள்ளழகு, என்னடி சொன்னாரவர்?, குச்சுக்குடிசையிலே, குருடர்காதல், ஊர் அறியும்முன், உள்ளத்தனையதுயர்வு, ஆறு எனும் தலைப்புகளில் உள்ளன. இதில் "மதங்காப்பார்' எனும் பாடல் துறவியர்களின் மூடத்தனமான வாழ்க்கையினை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

தங்கப்பாவின் பாடல்களுள் "ஆந்தைப்பாட்டு' எனும் காவியமும் ஆரடா எனக்குப் பெண் கொடுப்பது? எனும் பாடலும் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். இவற்றுள் "ஆராடா எனக்குப் பெண் கொடுப்பது?' எனும் பாடல் இன்றைய சடங்குத்தனமான இல்வாழ்க்கை முறைகளைக் கடிந்துரைக்கின்றது". பணத்தினால் எதையும் சரிப்படுத் திடலாம்பணிந்திடச் செய்யலாம் என்ற குணத்தினைக் கொண்ட குறுமகனா நீ?குப்புற விழுந்துநீ ஓடு!பிணத்தினைப் போய் ஓர் சுடலையில் தோண்டு! பெரும்பணம் அதன்முனர்க் கொட்டு!மணத்தினைப் பின்செய்; மகளினை வழங்கு!மகிழ்வொடும் வாழுவள் அவளே!'' எனும் பாட்டு வரிகளே இதற்குச் சான்றாகும் (பக். 6,1.4.58).

வானம்பாடியின் இதழாசிரியர் பல்வேறு வடிவங்களில் பாடல்களை எழுதியுள்ளார். படைப்பு, மொழிபெயர்ப்பு என இவரின் பங்களிப்பு இருந்துள்ளது. பழந்தமிழ் இலக்கியப் பாடல்களைப் பாட்டு வடிவில் விளக்கும் பல பாடல்களைக் கோவேந்தன் வழங்கியுள்ளார். நற்றிணையின் (196) பாடலை விளக்கும் வகையில் "நிலவே சொல்' (ப.10, 15.10.57) எனும் தலைப்பில் 7 பாடல்களைச் சிந்து அமைப்பில் கோவேந்தன் வழங்கியுள்ளார். மேலும் சமூக நடப்புகளை எதிரொலிக்கும் வகையில் "முதுகுளத்தூர்' கலவரம் பற்றிய பாடல்களையும் கோவேந்தன் வரைந்துள்ளார். நாட்டு நடப்புகள் யாவும் பாட்டு வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இதழில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள், மதிப்புரைகள், நன்றியுரை, பொன்மொழிகள் யாவும் பாட்டு வடிவில் வெளியிடப்பட்டுள்ளதை நோக்கும் பொழுது தமிழ்ப்பாட்டு வழியாக அனைத்துச் செய்திகளையும் சொல்ல முடியும் என்பதை நிலைநாட்டியுள்ளனர்.

வானம்பாடியின் மூன்றாம் இதழில் A.S.Aபேக்கரியின் விளம்பரத்தில், "நலந்தரும் கைவண்ணத்தால் நற்சுவை சீர் வண் ணத்தால் பலர்புகழ் ரொட்டி பிஸ்கட்பண்டங்கள் செய்கின் றோம் யாம்!' (அட்டையின் பின்புறம்)எனும் பாடல்வடிவில் செய்தி பதிவாகியுள்ளது.வானம்பாடியில் எழுதுவோர்க்கு ஆசிரியர் பாட்டு வடிவில் வேண்டுகோள் விடுப்பதை,"எழுதுவோர் உள்ளத் தூறும்எழுங்கவி யுணர்வைத் தாரீர்உழுபுலன் புரட்சி யயன்னும்ஒருபொருள்; சிந்தனைப்பொன்எழுச்சியைத் தூவி, யாப்பின்இசைப்புனல் பாய்ச்சி, வாழ்வின்முழுப்பயன் புத்தார்வத்தைமுரணிலா தனுப்பி வைப்பீர்'' (15.11.58)என்று எழுதியுள்ளார். தம் இதழின் படைப்புகள் சமூக மாற்றத்திற்கு அடிகோல வேண்டும் என்பதை இதிலிருந்து உணரலாம்.

வானம்பாடியின் இதழ் நோக்கம் ஒவ்வொரு இதழும் ஒரு குறிக்கோள் கொண்டே தொடங்கப்படும். அக்குறிக்கோளை எட்டும் வகையில தாம் செயல்படுகின்றோமா என இதழாசிரியர்கள் ஒவ்வொரு நிலையிலும் மதிப்பிட்டுக் கொண்டு செயல்பட்டால் சரியாகத் திட்டமிட்டு இதழை வளர்த்தெடுக்கலாம். இவ்வகையில் கோவேந்தன் ஓராண்டு நிறைவின்பொழுது தம் இதழ்ப்பணிகளை ஆய்வு செய்து பின்வரும் நிலைப்பாட்டினை முன் வைக்கின்றார்.

"இந்த இதழுடன் வானம்பாடிக்கு ஓராண்டு முடிகிறது... தமிழிலக்கியக் காவனத்தே புத்தம் புதிய சுமார் ஐம்பது கவிஞர்களை அறிமுகப்படுத்தி, நூற்றெழுபத்தெட்டுக் கவிதை மலர்களை மணக்க வைத்த பெருமை வானம்பாடிக்கே உண்டென்று எண்ணும்போது உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.வானம்பாடி கவிதை இதழுக்குக் கைம்மாறு கருதாது கவிதைகளைத் தந்துதவிய எல்லாக்கவிஞர்கட்கும் என் இதயம் கனிந்த நன்றி... தமிழருமையை ஆங்கிலமறிந்தார் உணர, புகழ - செந்தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டேன். பயன்கண்டார் பலர்...இறுதியாக... செப்டம்பர் திங்கள் இரண்டாம் ஆண்டின் முதல் இதழ் வெளிவரும். ஒரு சிறு மாற்றம். நூல் "கிரவுண்' 1 மு 4 அளவில் நூலாக 50 பக்கங்களுடன் வெளிவரும். ஆனால் திங்கள்தோறும் வெளியிட இயலாது. எனக்கென்று வேறு வாணிபம் இருப்பதால் திங்கள்தோறும் வெளியிட வானம்பாடி இதழுடன் ஒத்துழைக்க இயலவில்லை'' எனத் தன் வெளியீட்டு முயற்சி பற்றிக் கோவேந்தன் எழுதியுள்ளார்.

பொருள் தட்டுப்பாடு, வணிகச்செயல்பாடுகளால் "வானம்பாடி' இதழைக் கோவேந்தன் நெருக்கடிகளுக்கு இடையேதான் வெளியிட்டுள்ளார். தமிழ்ப் பாடல்புனைவோர் வளரும் நல்ல களமாக "வானம்பாடி' விளங்கியுள்ளது. பாவேந்தர் வழியில் பாடல் புனைவோர் சேர்ந்தியங்கிய "வானம்பாடி' இதழ் இரண்டாம் ஆண்டுகளில் வெளிவந்ததாக அறிய முடிந்தாலும் குறுகிய காலத்தில் தன் கவிதைச் சிறகடிப்பை நிறுத்திக் கொண்டது.

நிறைவுரை

வானம்பாடி இதழ் பாட்டுத்துறையின் வளர்ச்சியில் ஈடுபட்டு மரபுப்பாடல்களும், மொழிபெயர்ப்புப் பாடல்களும் வெளிவருவதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. த. கோவேந்தன், துரை. மாணிக்கம் (பெருஞ்சித்திரனார்), ம.இலெ. தங்கப்பா, சுப்பு. ஆறுமுகம் எனும் பாட்டுத்துறை அறிஞர்கள் நின்று நிலைபெற உதவிய ஏடாக வானம்பாடி திகழ்ந்துள்ளது. பின்னாளில் சோவியத் பாடல்களைத் தமிழாக்கம் செய்பவராகக் கோவேந்தனும், தமிழ்த்தேசியப் பாடல்களைப் புனைபவராகத் துரை. மாணிக்கமும் (பெருஞ்சித்திரனார்), படைப்பு, மொழிபெயர்ப்புத்துறையில் வல்லவராகத் தங்கப்பாவும், வில்லிசைப் பாடகராகச் சுப்பு ஆறுமுகமும் புகழ்பெற்று விளங்க அடித்தளம் அமைத்தது வானம்பாடி எனும் பாட்டு இதழ் எனில் மிகையன்று.

புதன், 4 ஏப்ரல், 2007

தமிழ்நூற்கடல் தி.வே. கோபாலையர் மறைவு


தி.வே.கோபாலையர் (22.01.1926 - 01.04.2007)


 தமிழ்நூற்கடல் என அறிஞர் பெருமக்களால் போற்றப்பட்ட பண்டித, வித்துவான் தி.வே. கோபாலையர் அவர்கள் உடல்நலம் குறைவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர்தம் சிறுநீரகம் செயலற்றதாலும், நெஞ்சடைப்பாலும் உயிர் மீளமுடியாமல் 2007 ஏப்ரல் முதல் நாளன்று இயற்கை எய்தினார். திருச்சிராப்பள்ளி திருவரங்கத்தில் உள்ள அவர்தம் மகளார் இல்லத்தில் அனைவரின் இறுதி வணக்கத்திற்கு வைக்கப்பட்டிருந்த உடல், நல்லோர்களின் வணக்கத்திற்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் பணி புரிந்த புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தினரும், தமிழறிஞர்களும், சமயத்துறை சார்ந்த அறிஞர் பெருமக்களும் கையற்றுக் கலங்கித் தம் இறுதி வணக்கத்தைச் செய்த வண்ணம் உள்ளனர். தி.வே. கோபாலையரின் நினைவைப் போற்றும் வண்ணம் பல்வேறு நினைவுக் கூட்டங்கள் பல ஊர்களில் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

 புதுவை பிரெஞ்சு நிறுவனத்தின் ஆசியவியல் பள்ளியில் 04-04-2007 அறிவன் (புதன்) மாலை 4.00 மணிக்கு ஆசியவியல் பள்ளியின் தமிழ்ப்பிரிவுத் தலைவர் ஈவா வில்டன் முன்னிலையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. பேராசிரியர் விசயவேணுகோபால் தி.வே. கோபாலையரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பின்பு கோபாலையருடன் பணிபுரிந்த, பழகிய அன்பர்கள் தி.வே. கோபாலையரின் படத்திற்கு மலர் வணக்கம் செய்து நினைவுரை ஆற்றினர். திரு. வரததேசிகன் கோபாலையரின் பெருமைகளை எடுத்துச் சொன்னார். கோபாலையர் படிக்கத் தொடங்கினால் வேறு எதனையும் நினைவில் கொள்ள மாட்டார் எனவும் தான் படித்ததை, கற்றதை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதைக் கடமையாகக் கொண்டவர் எனவும் கூறினார். மேலும் தமிழில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்து வைக்கும் தலைமைப் புலவராகக் கோபாலையர் விளங்கியதையும் மனதில் பட்டதைத் துணிச்சலுடன் எடுத்துரைக்கும் ஆற்றலையும் நினைவு கூர்ந்தார். தி.வே. கோபாலையரின் நூல்களை (இலக்கணக் களஞ்சியங்களை) செம்பதிப்பாக வெளிக்கொணர்ந்த தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் இளவழகன் அவர்கள் தமக்குக் கோபாலையருடன் அமைந்த தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.

 பாவலர் செவ்வேள், பாவலர் மணி சித்தன், பேராசிரியர் அ. அறிவுநம்பி, பேராசிரியர் ஆரோக்கியநாதன், முனைவர் இரா. திருமுருகனார் முதலானவர்கள் கோபாலையரின் பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்தினர். புதுச்சேரியில் உள்ள பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களும், புதுவை நகரத் தமிழறிஞர்களும், தி.வே. கோபாலை யருடன் பணிபுரிந்தவர்களும், அவர்தம் குடும்பத்தினரும், நண்பர்களும் திரளாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

தி.வே. கோபாலையர் வாழ்க்கைக் குறிப்பு

 தி.வே. கோபாலையர் 22.01.1926இல் பிறந்தவர் பெற்றோர் வேங்கடராம ஐயர், இலக்குமி அம்மாள். தம்பியர் நால்வர். தங்கையர் இருவர். கோபாலையருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. பள்ளியிறுதி வகுப்பினை கோபாலையர் 1940இல் நிறைவு செய்தார். 1945இல் தமிழ் வித்துவான் தேர்வில் தேறி முதல் தகுதியாக ஆயிரம் உரூபா பரிசு பெற்றார். 1951இல் பி.ஓ.எல். பட்டம் பெற்று இலாசரசு பதக்கம் பெற்றவர். 1953இல் பண்டிதம் தேறி முதல் தகுதியாக 100 உருபா பரிசு பெற்றவர்.பி.ஓ.எல். (ஆனர்சு) 1958இல் முதல் தகுதி பெற்று அரங்கையா செட்டியார் பரிசைப் பெற்றவர்.தி.வே. கோபாலையர் அவர்கள் 15 ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தவர் (சிங்கப்பூர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் கோபாலையரிடம் உயர்நிலைப்பள்ளியில் கற்றவர்)

 15 ஆண்டுகள் தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணிபுரிந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இவர் பணிபுரிந்த போது மிகச்சிறந்த தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர் (பேராசிரியர் தா.ம. வெள்ளை வாரணம், முனைவர் கு. சுந்தரமூர்த்தி உள்ளிட்டவர்கள்). 1979 முதல் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சு கலை நிறுவனத்தில் தம் ஆய்வுப்பணியைத் தொடங்கி இறுதிக் காலம் வரை மிகச்சிறப்பாகச் செய்தவர். அவர்தம் பணி காலத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் பலர் வந்து இவரிடம் தமிழ் கற்றனர். அவ்வாறு கற்ற மாணவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை வேறு மொழிகளுக்கு மொழி பெயர்த்த போது தி.வே. கோபாலையர் பெரிதும் உதவியவர்.

 தி.வே. கோபாலையர் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்ததுடன் தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். பல ஊர்களில் தமிழ் நூல்களைச் சொற்பொழிவாற்றி மக்களுக்கு அறிமுகம் செய்தவர். பல இதழ்களில், மலர்களில் ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தவர். பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு தம் ஆழ்ந்த புலமையையும் நினைவாற்றலை யும் வெளிப்படுத்திக் கற்றவர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியவர். தி.வே. கோபாலையரின் நினைவாற்றல் உலகம் அறிந்த ஒன்றாகும்.

 இவர்தம் மனத்தில் தொல்காப்பியம், சங்க நூல்கள், காப்பியங்கள், சமய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள் என அனைத்தும் எந்த நேரமும் எடுத்துப் பயன்படுத்தும் வண்ணம் பதிந்து இருந்தன. மூல நூல்கள் மட்டுமன்றி உரைகளையும் மனப்பாடமாகச் சொல்லும் இயல்புடையவர். தாம் கற்ற நூல்களின் ஆசிரியர்களையும் உரையாசிரியர்களையும் மிக உயர்வாகப் போற்றி மதிக்கும் இயல்புடையவர். தி.வே.கோபாலையர் எளிமையான தோற்றம் கொண்டவர். அடக்கமாக வாழ்வு வாழ்ந்தவர். இறுதிக் காலம் வரை இவர்தம் படிப்புத் தொடர்ந்தவண்ணம் இருந்தது. தி.வே. கோபாலையரின் எழுத்து, பேச்சு, ஆய்வு இவை யாவும் தமிழின் வளர்ச்சி நோக்கி அமைந்தது.

 தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், பிரெஞ்சு மொழிகளை நன்கு அறிந்தவர். இவர் மிகச்சிறந்த பதிப்பாளர் என்பது போல உரைவரையும் ஆற்றலையும் பெற்றிருந்தார். தமிழக அரசும் புதுவை அரசும் இந்திய அரசும் தி.வே. கோபாலையரை நினைவு கூரத்தக்க வண்ணம் நினைவுச்சின்னங்களை ஏற்படுத்த வேண்டும். இவர்தம் நினைவாற்றலைக் கண்டு மாந்தக் கணினி எனவும் இவர்தம் அறிவுச் செழுமையைக் கண்டு "அறிவுக் குறுந்தகடு' எனவும் அறிஞர்கள் போற்றுவர்.

தி.வே. கோபாலையரின் மிகச்சிறந்த நூல்களுள் சில :

1. இலக்கண விளக்கம் : எழுத்ததிகாரம் 1970
2. இலக்கண விளக்கம் : சொல்லதிகாரம் 1971
3. இலக்கண விளக்கம் : பொருளதிகாரம்
4 அகத்திணையியல் - 2 தொகுதி 1972
5. புறத்திணையியல் 1972
6. அணியியல் 1973
7. செய்யுளியல் 1974
8. பாட்டியல் 1974
9. இலக்கணக் கொத்து உரை 1973
10. பிரயோக விவேக உரை 1973
11.திருஞானசம்பந்தர் தேவாரம் சொற்பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன், 1984
12. திருநாவுக்கரசர் தேவாரமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் சொற் பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன் செம்பதிப்பு 1985
13. தேவார ஆய்வுத் துணை - தேவாரம் பற்றிய விரிவான செய்திகளுடன் 1991
14. வீரசோழிய உரை - விரிவான விளக்கங்களுடன் 2005
15. தமிழ் இலக்கணத்தின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐம் பகுப்புக்களிலுள்ள இலக்கண மரபுச் சொற்களுக்குத் தொல்காப்பியம் முதல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட விருத்தப்பாவியல் இறுதியான வழக்கத்தில் உள்ள இலக்கண நூல்களையும் அவற்றின் உரைகள் பலவற்றையும் உட்கொண்டு விரிவான மேற்கோள் எடுத்துக்காட்டுக்களுடன் தொகுக்கப்பட்ட தமிழ் இலக்கண மரபுச் சொல் அகர வரிசை 2006
16. திருமங்கை மன்னனுடைய ஆறு பிரபந்தங்களுக்கும் மணிப்பிரவாள நடையில் வரையப்பட்ட பெரிய வாச்சான் பிள்ளை அவர்களின் உரைக்குத் தெளிவான தமிழாக்கம் - 2006
17. மாறன் அலங்காரம் - பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் 2006
18. மாறன் அகப்பொருளும் திருப்பதிக் கோவையும் - புதிதாக எழுதப்பட்ட விளக்கங்களுடன் 2006
19. இலைமறை கனிகள் - இலக்கணக் கட்டுரைகள் - தெளி தமிழில் வெளிவந்தவை 2006

எழுதிய சிறு நூல்கள் - அச்சேறியவை :

1. தொல்காப்பியச் சேனாவரையம் - வினா விடை விளக்கம்
2. கம்பராமாயணத்தில் முனிவர்கள் - 1994
3. கம்பராமாயணத்தில் தம்பிமார்கள் - 2 தொகுதி 1995, 1996
4. கம்பராமாயத்தில் தலைமைப் பாத்திரங்கள் - 1998
5. சீவக சிந்தாமணி - காப்பிய நலன் - 1999 கம்ப ராமாயணப் படலச் சுருக்கம்
6. பால காண்டம் - 1999
7. அயோத்தியா காண்டம் - 1999
8. சுந்தர காண்டம் - 1999
9. உயுத்த காண்டம் - 2000
10. சீவக சிந்தாமணியின் இலம்பகச் சுருக்கம் - 2002

மொழிபெயர்ப்பு நூல்களுக்குத் துணை நின்றமை

1. எசு.ஆர். பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆங்கில நூலின் சோழர் காலப் கலைப்பணி - தமிழ் ஆக்கம்.
2. ஆலன் டேனியலுவின் "மணிமேகலை' ஆங்கில மொழிபெயர்ப்பு
3. சேனாவரையத்தின் பிரெஞ்சு மொழி ஆக்கம்.

நடத்திய சித்தாந்த வகுப்புக்கள் :

1. உண்மை விளக்கம்
2. திருவருட் பயன்.

ஆற்றிய தொடர் சொற்பொழிவுகள் :
1. பெரிய புராணம்
2. கம்ப ராமாயணம்
3. சீவக சிந்தாமணி

திங்கள்தோறும் சதயத் திருநாளில் திருவாமூரில் திருமுறை விளக்கவுரை.

தி.வே.கோபாலையர் பெற்ற பட்டங்கள் :

1. தருமையாதீனத் திருமடம் ""செந்தமிழ்க் கலாநிதி'' - 1994
2. திருப்பனந்தாள் காசித் திருமடம் ""சைவ நன்மணி'' - 1997
3. திண்டிவனம் கேள்விச் செல்வர் மன்றம் ""அறிஞர் திலகம்'' - 1978
4. மயிலாடுதுறை தெய்வத் தமிழ் மன்றம் ""சிந்தாமணிக் களஞ்சியம்'' - 1996
5. புதுச்சேரித் தமிழ்ச் சங்கம் - ""நூற்கடல்'' - 1982
6. புதுச்சேரி அரசு - ""கலைமாமணி'' - 2002
7. சென்னை - வடமொழிச் சங்கம் ""சாகித்திய வல்லப'' - 2002
8. பொங்கு தமிழ் விருது - 2003
9. தமிழக அரசு - திரு.வி.க. விருது - 2005
10. சடையப்ப வள்ளல் விருது - 2006
11. கபிலர் விருது - 2006

திங்கள், 2 ஏப்ரல், 2007

வளர்முக நோக்கில் இசையும் இசைக் கலைஞர்களும்

பழந்தமிழகத்தைப் பற்றி அறிவதற்குத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலான நூல்கள் பெரும் துணை புரிகின்றன. இந்நூல்களின் வழியாகப் பழந்தமிழரின் வாழ்க்கை முறை, ஒழுக்கம், நிலஅமைப்பு, வணிகம், போர், கலை முதலானவற்றை அறிய முடிகிறது. சங்க நூல்கள் வழிப் பழந்தமிழகத்தை அறிவதுபோல் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய, இலக்கணங்கள், கல்வெட்டுகள் வழியாக இடைக்காலத் தமிழகத்தையும், பிற்கால நூல்கள், பிற வரலாற்று மூலங்கள் வழியாகப் பிற்காலத் தமிழகத்தையும் அறியலாம். இக்கட்டுரை காலந்தோறும் இசை, இசைக் கலைஞர்களின் நிலை எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றித் தமிழ் நூல்களை அடிப்படையாகக் கொண்டு விளக்குவதுடன் இன்றைய நிலையையும் குறிப்பிடுகின்றது.
சங்கச் சமூகத்தில் கலைஞர்கள் பல திறத்தனவராக இருந்துள்ளதை நூல்கள் வழி அறிகின்றோம். பெரும்பாலும் ஐந்து நில மக்களும் இசைத்தும், ஆடியும், பாடியும் மகிழும் வாழ்க்கை முறையினைக் கொண்டு இருந்தனர். ஆண், பெண் வேறுபாடு இன்றிக் கலையுணர்வு கொண்டவர்களாக இருந்தனர்.அவரவர்களின் உடல்நிலைகளுக்கு, பயிற்சிக்கு ஏற்பக் கலைகளில் ஈடுபாடு காட்டியுள்ளனர்.பழந்தமிழ் மக்கள் தொழில்,உழைப்பின்பொழுது கலைகளைப் பயன்படுத்தினர். இது கூத்து, பாட்டு, கருவி முழக்கம் என அமைந்தது.
சமூகத்தில் இருந்த ஆயர், எயினர், கடம்பர் (புறம். 335) கள்ளர், கானவர், குறவர், கோவலர் (அகம் 123, 214) பரதவர், புலையர், மழவர், மள்ளர், மறவர், வினைஞர் அகவன்மகள் (குறுந்.23) குறமகள், குறுமகள் கொடிச்சி முதலானவர்களை இசையுடன் தொடர்புடையவர்களாக நம் நூல்கள் குறிப்பிடுக்கின்றன.இவர்கள் தத்தம் தொழிலின் பொழுது இசையைப் பயன்படுத்தியவர்கள். இவர்கள் ஒரு வகையினர்.
இசையை, கூத்ததை முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்கள் வேறு ஒரு வகையினராகக் கருதலாம். அவர்களுள் அகவலன் (பதிற் : 43:26-28), அகவுநர் (அகம் 113), அகவர் (மதுரை 221-24), ஆடுநர் (புறம் 221-2), இயவர் (ஐங்கு. 215), கண்ணுளர் (மலை. 50), கலப்பயைர் (அகம். 301), கிணைவன் (நற்.108), கூத்தர் (புறம். 28), கோடியர் (புறம். 29), துடியன் (புறம். 2), பரிசிலர், பறையன் (புறம். 335), பாடுநர் (புறம். 33), பாணன் (புறம். 69), பாண்மகன், பொருநர் (பொரு. 1-3), முழவன் (அகம். 352), வயிரியர் (மது. 749), ஆடுமகள் (புறம். 128) கிணை மகள் (புறம். 111), பாடினி (பொரு.47), பாண்மகள் (அகம்.126), பாடுமகள் (பதி.44), விறலி (புறம். 280) எனவரும் பிரிவினர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களைத் தவிர மூன்றாம் வகையினராகச் சூதர், மாகதர், வைதாளிகர் (மதுரை. 670) என்னும் பிரிவினர் இருந்ததையும் அறிய முடிகிறது. மூன்றாம் வகைக் கலைஞர்கள் அரசன் காணும் பொருட்டுத் தம் திறமையை வெளிப்படுத்தியவர்கள். இவ்வாறு கலைஞர்கள் மட்டுமன்றி இசையிலும் கூத்திலும் வல்லுநர்களாக, சுவைஞர்களாக அரசர்களும் இருந்துள்ளனர்.
தமிழ் இலக்கியங்களை நோக்கும் பொழுது கலைகள், பற்றிய வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையாக அமைந்துள்ளது. தமிழில் முதலில் கிடைக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம் சுட்டும் செய்திகளின் அடிப்படையில் கலைகளையும், கலைஞர்களையும் நோக்கும்பொழுது சில செய்திகளைப் பெறமுடிகின்றது. நரம்பின் மறை, யாழ், யாழின் பகுதி, பண் எனும் பெயரில் இசை குறித்த செய்திகளைத் தொல்காப்பியம் குறிப்பிடும். அதுபோல் வண்ணம் (சந்தம்) பற்றிய செய்திகளையும் தருகிறது. மேலும் பொருநர், பாணர், கூத்தர், விறலியர் முதலான கலைஞர்களைப் பற்றியும் அவர்களுக்குச் சமூகத்தில் அமைந்த பணிகளையும் தொல்காப்பியம் குறிப்பிடும். அரசர்களிடம் ஆற்றுப்படுத்துபவராகவும் ஏர்க்களம், போர்க்களம் பாடுபவராகவும் போருக்கு முன்பும், போருக்குப் பின்பும் கருவிகளை முழக்குபவராகவும், அரசனின் பெருமையைப் பாடுபவராகவும் தலைவன் தலைவியருக்கு இடையே ஊடல் ஏற்படும்பொழுது அவற்றை நீக்கும் வாயில்களாகவும் தொல்காப்பியம் கலைஞர்களைக் குறிப்பிடுகிறது. புலவர்களே இசையறிந்த கலைஞர்களாகவும் இருந்துள்ளனர். அதுபோல் அரசர்கள் தகுதியுணர்ந்து பரிசில் நல்கும் அளவில் கலையுணர்வு நிறைந்தவர்களாக இருந்துள்ளனர்.
ஆடியும், பாடியும் கலைவளர்த்த கலைஞர்களின் வகைகளை அவர்களின் செயல்களைச் சங்க நூல்களில் பல இடங்களில் காண முடிகிறது.தொல்காப்பியம் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருளை விளக்கும்பொழுது இசையையும் இசைக் கருவிகளையும் சுட்டுகிறது. தொல்காப்பியச் செய்திகள் மொழிசார்ந்த செய்திகள் எனவே மொழி, மொழிபேசும் மக்கள். வாழ்க்கையைப் பற்றிப் பேசும் பொழுது தேவையான இடங்களில் மட்டும் இசை, கூத்து, பிற கலைகள் பற்றிப் பேசப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியங்களின் பாடுபொருள் காலந்தோறும் மாறிமாறியுள்ளன. சங்கச்சமூகம் என்பது வீரநிலைக் காலமாகக் கருதப்படுகிறது. அதன்பின் காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் இசைவிளக்கம் தெரிகிறது.பல்லவர்காலத்தில் ஊர்தோறும் சென்று பக்தி நோக்கில் பண்ணிசைக்கும் இறையடியவர்களின் கையில் இசை வாழ்ந்தது.பொற்றாளம் வழங்கிய இறைவன் அருளால் இசைத்தமிழ் உயர்நிலையில் இருந்ததை யாழ்முரிப்பண் வரலாற்றால் அறியலாம். நாயன்மார்கள் காலத்துக் கலைநிலையை அவர்தம் திருமுறைகளால் அறியலாம். பண்வகுத்துப்பாடிய பாவலர்களாகப் பழந்தமிழர்கள் இருந்துள்ளனர்.
அமைச்சர் பொறுப்பில் இருந்த சேக்கிழார் பெருமான் மிகுந்த இசையறிவு கொண்டவர். எனவே தம் காலத்தில் நிலவிய இசையமைப்பு, இசைக்கருவிகளைத் தம் பெரியபுராண நூலில் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமிருந்த மிடற்று இசை, கருவி இசை இறையடியவர்களிடம் தங்கியிருந்தது. இது திருப்புகழ் காலம் வரை நீடிக்கிறது.சிற்றிலயக்கியங்களை நோக்கும் பொழுது மீண்டும் மக்களிசையாக இசை மலர்ந்துள்ளது. நாட்டுப்புற இசையாக இருந்த தமிழிசை புலவர்களால் பள்ளு, குறவஞ்சி, காவடிச்சிந்து நூல்களில் அடைக்கலம் புகுந்தது. குறுநில மன்னர்களின் காலத்தில் தேவரடியார்கள், ஓதுவார்கள் அரண்மனைக் கலைஞர்களிடம் இசை தஞ்சம் புகுந்தது.
வேற்று மொழியினரின் படையயடுப்பால் தமிழிசையின் இடத்தைத் தெலுங்கு மொழி பிடித்துக் கொண்டது.தமிழிசைக் கலைஞர்களின் இடத்தை வேற்று மொழியில் பாடுபவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.இன்றைய நிலையில் இசைக்கலை என்பது சமூகத்தின் உயர்சாதிக்காரர்களிடமும் அடித்தட்டு மக்களிடமும் உள்ளதே தவிர, நடுத்தட்டு மக்களிடம் இல்லை. உயர்சாதியினர் இசையினுக்கும் அடித்தட்டு மக்களின் இசையினுக்கும் வேறுபாடு உள்ளது.உடல் உழைப்பு அதிகம் உடைய இசைக்கருவிகளை உயர் சாதியினர் பயன்படுத்துவது இல்லை. தவில், நாகசுரம் போன்ற இசைக்கருவிகளை உயர்சாதியினர் பயன்படுத்தாமல் வீணை, வயலின் முதலான மென்மையான இசைக்கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.
அரசியல் மாற்றங்களால் இசையிலும் மாற்றங்களைக் காண முடிகிறது. அனைத்து இன மக்களும் இன்று இசைக்கலைஞர்களாக மாறி வருகின்றனர். உயர் வகுப்பினரின் வாய்ப்பாட்டு, கருவியிசையைப் பிற இனத்து மக்களும் பயன்படுத்துகின்றனர். ஒரு மதத்தினரின் இசைக் கருவியினைப் பிற மதத்தினரும் வாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேக் சின்னமெளலான நாகசுரம் வாசிப்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல் ஆயர்குல மக்களின் அடிப்படைக் கருவியாக இருந்த புல்லாங்குழல் தேவாலயங்களில் ஒலிப்பதற்குத் தடையிருந்த நிலை இன்று மாறியுள்ளது.
இசைக்கருவிகளை வாசிப்பவர்களிடையே சில இடங்களில் உயர்வு தாழ்வு காணப்படுகிறது. மேடைக்குத் தகுந்தவாறு சிலர் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது உண்டு. பறை, உடுக்கை, பம்பை, சுரை, உறுமி, கிளாரிநெட், நாகசுரம், தவில் முதலியவற்றை வாசிப்பவர் நிலை வேறு. பிடில், வயலின், வீணை, டிரம்ஸ், வாசிப்பவர்களின் நிலை வேறு. மக்களை மகிழ்ச்சிப்படுத்தவும் உழைப்பின் துன்பத்தைப் போக்கவும் பயன்பட்ட கலையும் கலைஞர்களும் சமூக மாற்றத்தால் பல்வேறு சவால்களை இன்று சந்தித்து வருகின்றனர்.
இசைக்கருவிகள் அறிவியல் தொழில்நுட்பக் காரணங்களால் இசைத் துல்லியம் பெற்றுவிட்டன.யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும்படி கணிப்பொறி மயமாகிவிட்டன. ஒரே விசைப்பலகையில் பலதிற இசைகளை உருவாக்கும் வகையில் கருவி வளர்ச்சி பெற்றுவிட்டது. ஒரு கலைஞரால் ஒரு கருவியை மட்டும் வாசிக்க முடியும் என்ற நிலை மாறி ஒரே கலைஞரே பல கருவிகளை இசைக்கும் ஆற்றல் பெற்றுள்ளார். ஒரு நிலத்தில் உள்ள கருவி வேறொரு நிலத்தில் பயன்படுத்தப்பட்டால் திணை மயக்கமாகக் கருதிய நிலை மாறி ஒரு கருவிக்குள்ளேயே பல கருவிகளை இசைக்கும் மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டது.
ஊர், ஊராகச் சென்று தம் திறமையைக் காட்டிய நிலை மாறி ஒரு இடத்தில் இருந்து உருவாக்கும் கலைப்படைப்புகள் உலகம் முழுவதும் சென்று பரவும் நிலை உள்ளது.இசைக்கலைஞர்கள் சமூகத்தில் மதிப்புக்கு உரியவர்களாக மாறிவிட்டநிலையைப் பார்க்கிறோம். பாட்டுக்கு இசை என்ற நிலைமாறி இன்று இசைக்குப் பாட்டு என்ற நிலை வந்துள்ளது.இசைக் கலைஞர் எடுக்கும் முடிவுக்குப் படைப்பாளர்கள் கட்டுப்பட வேண்டிய நிலையில் இசை ஆதிக்கமும் இசைக்கருவிகளை இயக்குவோரின் ஆதிக்கமும் ஏற்பட்டுவிட்டது.
இசை, இசைகருவிக்கு இருக்கும் மதிப்பைப் போல ஒலிப்பதிவாளருக்கும், ஒலிசேர்க்கையாளருக்கும், பாடகருக்கும், பாடலாசிரியருக்கும் உரிய இடம் இன்று கிடைத்துள்ளது. மொழி தெரியாதவரே வேறு ஒரு மொழிப் பாடலைப் பாடிவிட முடிகிறது.வாயசைப்பு மட்டும் உடையவரே இன்று பாடலைப்பாடியவராக மக்கள் பேசும் நிலைக்கு மக்களின் மனஉணர்வு உள்ளது.உழைப்பை மறக்க, துன்பத்தைப் போக்கப் பயன்பட்ட இசைக் கலை இன்று பொழுதுப்போக்குக் கூறாகவும், கூடுதல் தகுதியைக் காட்டவும் என்று அமைந்துவிட்டது. மேலும் மக்களிடையே உயர்வு தாழ்வை உண்டாக்கிய நிலையும் இசைக்கு எதிர்பாராமல் அமைந்துவிட்டது. இவ்வாறு காலந்தோறும் இசையும், இசைக் கலைஞர்களும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்

  தமிழ்க் கவிதைத்துறை இருபதாம் நூற்றாண்டில் பல நிலைகளில் வளர்ந்துள்ளது. பாரதியாரின் வருகை, பாவேந்தரின் வருகை தமிழ்க் கவிதைத்துறையில் பல புதுமைகள் நிலவ காரணமாக அமைந்தன. பாரதியார் வழியாக ஏற்பட்ட கவிதை மரபின் வளர்ச்சி பாவேந்தரின் வழியாக வேறு வேறு கட்டங்களைச் சந்தித்தது. பாவேந்தரின் வருகைக்குப் பிறகு தோன்றிய கவிஞர்களில் பாவேந்தரின் தாக்கம் மிகுதியாக இருந்தது. அதுபோல் பாரதி, பாவேந்தர் இருவர் தம் கவிதை உள்ளடக்கங்களையும் உள்வாங்கி எழுதிய கவிஞர்களின் பாடல்கள் வேறு வகையில் விளங்கின. பாரதியும் பாவேந்தரும் பல்வேறு பொருண்மைகளைப் புதியதாகப் பாடி,படைப்புகளைச் செழுமைப்படுத்தியது போலப் பல வடிவங்களையும் மக்கள் வடிவப்படுத்தினர். அவற்றுள் ஒன்று காப்பிய முயற்சியாகும். இவர்களின் வருகைக்குப் பிறகு காப்பிய முயற்சி வளர்ச்சி அடைந்துள்ள போக்கினை இக்கட்டுரை நினைவு கூர்கிறது.

  இருபதாம் நூற்றாண்டின் காப்பிய உள்ளடக்கச் செய்திகள்1. இந்தியத் தேசியக் கருத்துக்கள்2. திராவிடத் தேசியக் கருத்துக்கள்3. தமிழ்த் தேசியக் கருத்துக்கள்இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு இயக்கங்கள் தோன்றி, சமூக மறுமலர்ச்சிக்குத் துணைசெய்தன. அவற்றுள் இந்தியத் தேசிய இயக்கம், திராவிடத் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம் என்பன குறிப்பிடத்தக்கன.இவ்வியக்கச்சார்பு இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களில் பதிவாகியுள்ளன. பாரதியாரின் படைப்புகளில் தேசியச் சிந்தனை தென்படுகின்றன. பாஞ்சாலி சபதத்தினை அவ்வகையில் பார்க்க வேண்டியுள்ளது.அதுபோல் பாவேந்தரின் பாவியங்களில் திராவிடத் தேசியக் கொள்கை மிளிர்கின்றன. கண்ணகிப் புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா முதலியன திராவிட இயக்கச் சார்பில் மீள் உருவாக்கம் செய்யப்பட்ட படைப்புகளாகும்.தமிழ்த் தேசிய,தனித் தமிழ் இயக்கச் சார்பில் முடியரசன், பெருஞ்சித்திரனார், தங்கப்பா, கடவூர் மணிமாறன், கன்னல், மறைமலையான், மலையமான், தமிழியக்கன் முதலானவர்களின் படைப்புகளைக் குறிப்பிடலாம்.

  இந்தியத் தேசியக் கருத்துக்கள் என்னும் தலைப்பில் மதவழிப்பட்ட செய்திகளை, வேதத்துடன் தொடர்புடைய செய்திகளை, நாட்டிற்கு உழைத்தவர்களைப் பற்றிய செய்திகளைக் கொண்டு எழுதப்பட்ட காப்பியங்களை அணுக முடியும். இதில் பாரதியாரின் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, அரங்க. சீனிவாசனின் மனித தெய்வம் காந்தி கதை முதலிய நூல்களை அடக்கலாம்.திராவிடத் தேசியக் கருத்துக்கள் என்னும் வகையில் திராவிட இயக்கம் வலியுறுத்திய பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, பெண்ணுரிமை, மூடப்பழக்கவழக்க ஒழிப்பு, வரலாற்றுப் பெருமை முதலிய செய்திகளை உள்ளடக்கிய காப்பியங்களைக் குறிப்பிடலாம்.தமிழ்த் தேசியக் கருத்துக்கள் என்னும் அடிப்படையில் தமிழ்ச் சிறப்பைச் சொல்லுதல். பழந்தமிழ் பெருமை நாட்டல், மொழிக் காப்பு, தனித்தமிழ்ச் சொல்லாட்சி, பழைய இலக்கியச் செய்திகளைப் புதுக் கண் கொண்டு பார்த்தல், பண்டைய செய்திகளுக்கு வடிவம் தருதல், பண்டைய பாடல்களை விரித்துக் கதைப் படுத்தித் தருதல். தமிழ்ச் சமுகத்திற்கு உழைத்த தலைவர்களை நாயகர்களாக மாற்றுதல் என்னும் தன்மைகளைக் கொண்டு இக்காப்பிய வகை விளங்கும்.

  பாரதியார் தம் காலத்தில் வலியுறுத்த நினைத்த கருத்துக்களைப் பாஞ்சாலி சபதத்தில், குயில் பாட்டில் விளக்கியுள்ளது போலப் பாவேந்தரும் தம் படைப்புகளில் தம் கொள்கைகளை, மக்களுக்குத் தேவையான செய்திகளை வலியுறுத்திப் படைப்புகளைத் தந்துள்ளனர். பாரதியார் காலத்தில் இந்தியத் தேசியம் முக்கிய பொருளாக மக்களிடம் வழங்கியது. எனவே அவர் தம் படைப்பு தேசியத் தன்மையை மையமிட்டு எழுந்தது. பாரதியார் மதத்தையும் வேதக் கருத்துகளையும் புராண இதிகாசச் செய்திகளையும் சொல்லி இந்தியத் தேசியத்தைக் கட்டமைக்க இலக்கியத்தின் வழி முயற்சி செய்தார்.

  பாவேந்தர் பழந்தமிழரின் இலக்கியங்களைத் துணையாகக் கொண்டு அவ்விலக்கி யங்களில் மண்டியிருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை நீக்கி அறிவுக் கண் கொண்டு காப்பிய முயற்சியைத் தொடங்கினார். அவரிடம் மிகுந்திருந்த தமிழ்ப்பற்று அவர்தம் படைப்புகளில் பொங்கி வெளிப்பட்டன. பாவேந்தரிடம் இருந்த சமூக உணர்வு அவர்தம் புரட்சிக் கவியில் தெரிகின்றது. அதுபோல் பாவேந்தரின் நாட்டுப்பற்று பாண்டியன் பரிசு நூலில் அழகுடன் எடுத்துக் காட்டப்படுகிறது. எதிர்பாராத முத்தம் நூலில் அவர்தம் தமிழ்ப்பற்றும் புலவர்களைப் போற்றும் பாங்கும் தெரிய வருகின்றது. அதுபோல் புலவர் குழந்தையின் இராவண காவியம் என்னும் நூல் இராவணனைத் திராவிட இயக்கத் தலைவனாகப் போற்றிப் பாடியுள்ளது. இதில் இராவணனின் பல்வேறு பண்புகள் எடுத்துக் காட்டப்பட்டு ஒப்பற்றத் தலைவனாக எடுத்துரைக்கப்பட்டதால் இந்நூல் தடை செய்யப்பட்டதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.

  பாவேந்தரின் வழியில் திராவிட இயக்க உணர்வுடன் பகுத்தறிவு நெறிநின்று பாவியம் படைத்தவர். ஆ. பழநி ஆவார். இவர்தம் சாலிமைந்தன் என்னும் காப்பியமும், அனிச்சஅடி காப்பியமும் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். சாலிமைந்தனில் வேதமந்திரக் கருத்துக்களை எதிர்ப்பது, பார்ப்பனிய எதிர்ப்பு முதலியன சிறப்புடன் படைத்துக் காட்டப்பட் டுள்ளது. திராவிட இயக்கம் வளர்ச்சி பெற்ற அதே சூழலில் தமிழ்த் தேசிய உணர்வும் தமிழகத்தில் நிலவியது. பாவேந்தரின் தமிழ்ப் பாடல்களில் திளைத்த தமிழ் உணர்வாளர்கள் பாவேந்தர் வழியில் பாவியங்களை மிகுதியாகப் புனைந்தனர். இவர்களில் முடியரசன், பெருஞ்சித்திரனார், தங்கப்பா, தமிழியக்கன், கடவூர் மணிமாறன், கன்னல் ஆகியோரின் படைப்புகள் குறிப்பிடத்தகுந்தன.

  பெருஞ்சித்திரனார் மாணவப் பருவத்தில் கொய்யாக்கனி என்னும் நூலை எழுதியுள்ளார். இதில் ஓரிரு அயற்சொற்கள் கலந்துள்ளதைத் தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.தனித்தமிழில் முழுமையான ஈடுபாடு அமைந்த பிறகு எழுதப்பெற்ற ஐயை நூலில் மிகச்சிறந்த உணர்ச்சி ஓட்டத்தில் தனித்தமிழில் பல்வேறு யாப்பு வடிவங்களில் பெருஞ்சித்திரனார் பாடல் புனைந்துள்ளார். இவர்தம் பாவியக் கொத்து என்னும் நூல் பல பாவியங்களின் தொகுப்பாக இடம் பெற்றுள்ளது. பெருஞ்சித்திரனாரைப் போல் பாட்டு இயற்றும் ஆற்றல் கொண்ட தங்கப்பா தம் இளமைப் பருவத்தில் எழுதிய ஆந்தைப் பாட்டு நூலில் சமூக நடப்புகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

  பெருஞ்சித்திரனாரின் தென்மொழி ஏடும், பாட்டு நூல்களும் தமிழகத்தில் பல்வேறு கவிஞர்களை பாட்டுத்துறையில் ஈடுபடுத்தியது. பலரும் சமூக உணர்வுடன் பாவியங்கள் எழுதத் தொடங்கினர். இளையத் தலைமுறையைச் சேர்ந்த கடவூர் மணிமாறன் பொன்னி என்னும் பாவியத்தை எழுதியுள்ளார்.இதில் சமூகச் செய்திகள் பாவியத்தில் உள்ளடக்கமாக உள்ளது. அதுபோல் பாவலர் கன்னல் எழுதிய முல்லை, சீதையின் சபதம் என்னும் நூல்கள் குறிப்பிடத்தக்க தனித்தமிழ்ப் பாவியமாக உள்ளன.

  பொற்கோ இயற்றிய கோதை வளவன் என்னும் காப்பியம் தமிழ் மரபுடன் எழுதப்பட்டுள்ளது. மறைமலையான் இயற்றிய ஒரு தாழம்பூ தவிக்கிறது என்னும் பாவியமும் பாவிய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நூலாக விளங்குகிறது. பாவலர் அழகரசன் என்பவர் வேர்ப்பலா என்னும் பெயரில் எழுதிய பாவியம் கைம்பெண் துயரினை விளக்குகிறது. அரூர் மணிவேலன் அவர்கள் வீரவாஞ்சி காவியம் பாடியுள்ளார். அதுபோல் ச.து.சு யோகியார் தமிழன்னை காப்பியம் என்னும் நூலை வரைந்துள்ளார். தி.நா. அறிவொளி தென்றல் என்னும் பெயரில் வெண்பா வடிவில் பாவியம் இயற்றியுள்ளார்.

  பாவலர் இறையரசன் பாண்டியனார் பாவியம் (செளந்தரபாண்டியனார் வரலாறு) எழுதியுள்ளார். அரசியல் தலைவர்களைப் போற்றிக் காப்பியம் வரைந்துள்ளமைக்குக் கருணானந்தம் எழுதிய அண்ணா காவியம் சான்றாக விளங்குகிறது. புலவர் புலமைப்பித்தன் பெரியாரின் வாழ்க்கையைக் காப்பியமாக எழுதி வருவதை அறியமுடிகிறது (நேர்காணலில்).இவ்வாறு இயக்கம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் மொழி சார்ந்தும் கருத்துக்கள் கொண்ட காப்பியங்கள் தோன்றிய தமிழ்ச் சூழலில் ஊடகங்களின் செல்வாக்கால் திரைப்படம், செய்தித்துறை சார்ந்தவர்கள் காப்பியம் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

  இவர்களுள் வைரமுத்து எழுதிய கவிராஜன் கதை, வாலியின் பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் முதலியன எந்த இயக்கப் பின்புலமும் அமையாமல் எழுதப்பெற்ற வணிகப் படைப்புகளாகும். தமிழகத்தில் வாழும் பாவலர்களே அன்றி அயல்நாடுகளில் வாழும் பாவலர்களும் தமிழில் காப்பியம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் ஐ. உலகநாதன் முதலானவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் என்று காப்பியங்கள் வகைப்படுத்தப்பட்டு, காப்பிய இலக்கணம் வகுப்பப்பட்ட தமிழ் மொழியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களை விரிவாக ஆராய்வதும் காப்பியப் பண்புகளை உள்வாங்குவதும் தேவையாக உள்ளது.

ஞாயிறு, 1 ஏப்ரல், 2007

சமணர்களின் வரலாறு சொல்லும் பொன்னூர்மலை

  தமிழகத்தில் சைவம், வைணவம், சமணம், பெளத்தம் முதலான சமயங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தன. இவற்றுள் சமணமும் பெளத்தமும் புறச்சமயங்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தை ஆண்ட அரசர்கள் சார்ந்திருந்த சமயங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு சமயமும் வளர்ச்சியையோ, தளர்ச்சியையோ சந்திக்க நேர்ந்தன. களப்பிரர், பல்லவ அரசர்களின் காலத்தில் சமண சமயம் செல்வாக்குப் பெற்றிருந்ததை வரலாறு சொல்கிறது. எனினும் களப்பிரர், பல்லவர்களின் வரலாறு குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவற்றுள்ளும் களப்பிரர் ஆட்சிக்காலம் இருண்ட காலம் எனும் முத்திரை குத்தப்பெற்றுத் தமிழக வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பெற்றது. இச்சூழலில் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியார் களப்பிரர் பற்றியும் சமண, பெளத்த சமயங்களின் வளர்ச்சி, செல்வாக்கு, தமிழ்ப்பணி பற்றியும் விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார். மேலும் பெளத்த, சமண சமயங்களின் செல்வாக்கு, பூசல்கள் பற்றித் தேவாரம், பெரிய புராணம் முதலான நூல்களின் வழியும் அறிய முடிகின்றது. மேலும் பிற்காலப் பல்லவர்கள், பிற்காலச் சோழ அரசர்கள் பலர் சமண, பெளத்த கோயில்களுக்கு வழங்கிய கொடைகளைக் கல்வெட்டுகள் வழியும் அறிய முடிகின்றது.

  மிகப்பெரும் எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்த சமண, பெளத்த சமயங்களின் சுவடுகள் தமிழகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன. சோழநாட்டு, தொண்டைநாட்டுப் பகுதிகளில் புத்தர், மகாவீரர் சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல சிலைகள் சமய பூசல்களால் அழித்தொழிக்கப்பட்டன. சில சிலைகள் அறியா மக்களால் வெளிநாட்டினர்க்கு விற்கப்பட்டன. காஞ்சிபுரம், செஞ்சி, செய்யாறு, வந்தவாசி, ஆரணி, விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம் சார்ந்த பகுதிகளில் சமணர்கள் பலர் இன்றும் வாழ்வதையும் தத்தம் முன்னோர்கள் வழியில் அருக வழிபாடு நிகழ்த்துவதையும் காணமுடிகிறது. திருநறுங்குன்றம் (விழுப்புரம் அருகில்), திருமலை (போளூர் அருகில்) யில் சமணக்கோயில்களில் வழிபாடு சிறப்புடன் நடைபெறுகிறது.சமணர்களின் தெய்வீகத் திருத்தலமாகக் கருதப்படும் இடம் பொன்னூர்மலையாகும். இம்மலை ஏறி வழிபாடு செய்யவும் சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாகப் பொழுதைக் கழிக்கவும் உகந்த இடமாக உள்ளது.தூய்மையாகப் பராமரிக்கப்படும் இப்பொன்னூர் மலையை எவ்வாறு அடைவது?.....

  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் 8வது கிலோ மீட்டரில் இம்மலை உள்ளது. வந்தவாசி - சேத்துப்பட்டு செல்லும் பேருந்துகளில் ஏறிப் பொன்னூர் மலை ஐ.டி.ஐ. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மலைப்பகுதியை அடையலாம். மலையடிவாரத்தில் மூன்று அறக்கொடை வழியாக இயங்கும் சமணர் கோயில்களும் தொண்டு நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் வழிபாடு நிகழ்த்துவதற்கு வசதியான பளிங்கு மண்டபங்களில் சமண முனிவர்களின் சிலைகள் உள்ளன. இவை அரிய வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. தங்குவதற்குரிய தங்குமிட வசதிகளும் உள்ளன. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுத் தங்கிச் செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் உணவு, கொறிப்புப் பண்டங்களுடன் வருவது நல்லது.

  அறக்கொடை நிலையங்களில், பொன்னூர் மலையில் தங்கித் தவம் செய்ததாக நம்பப்படும் குந்தகுந்தர் பற்றிய பன்மொழி நூல்கள் உள்ளன. விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். மேலும் சுருதகேவலி பத்ரபாகு சுவாமி சேவாதளம், விசாகசாரியார் தபநிலையம் எனும் அறநிலையங்களில் செய்யப்பெறும் சில அறப்பணிகளையும் பார்வையிடலாம். இங்குச் சமண வழிபாடு, சமயம் பற்றிய ஆய்வு நூல்களைக் கொண்ட நூலகம், இறைவழிபாடு நிகழ்த்தும் கூடம், இலவச மருத்துவமனை, மகாவீரர் உண்டுறைப்பள்ளி உள்ளன. மேலும் உயிர்த் துன்பத்தைப் போக்கும் வகையில் நலிந்த நிலையில் உள்ள மாடுகளை வாங்கிப் பாதுகாக்கும் பாதுகாப்பு இடத்தையும் பார்வையிடலாம். உண்டுறைப்பள்ளியில் எளிய குடும்பங்களைச் சார்ந்த சிறுவர் சிறுமியர்களுக்குச் சாதி வேறுபாடு பாராமல் பராமரித்துக் கல்வி வழங்குவது சிறப்பு. உயிர்களுக்கு துன்பம் தராது அறப்பணிகளைத் தொன்மைக்காலத்துச் சமணச் சான்றோர்கள் வழியில் இங்குள்ளவர்கள் இன்றும் செய்து வருகின்றனர்.

  பொன்னூர் மலையை நோக்கி...பொன்னூர் என்னும் ஊரின் எல்லையில் உள்ளதால் பொன்னூர் மலை என்று பெயர் பெற்றுள்ளது. பொன்னூரில் சமணர் குறித்த கல்வெட்டுக்கள் உள்ளதாக அறிய முடிகின்றது. பொன்னூர் சார்ந்த வங்காரம், இளங்காடு, எறும்பூர், ஆயிலவாடி முதலான சிற்றூர்களில் சமண சமயம் சார்ந்த மக்கள் உள்ளனர். மலையடிவாரத்தில் இருந்து மேலே செல்வதற்கு நல்ல படிக்கட்டு வசதி உள்ளது. கால் மணி நேரம் நடந்தால் மலையின் மேல் பகுதியை அடையலாம். படிக்கட்டுகளின் ஓரச்சுவர்களில் படிக்கட்டுகளை அமைக்க உதவியர்கள் பெயர்கள் கல்வெட்டுகளில் வெட்டப்பட்டுள்ளன. மலையின் மேலே மண்டபம் போன்ற பகுதி கட்டப்பட்டுள்ளது. இதில் குந்தகுந்தர் எனும் முனிவரின் "பாதம்' வழிபாட்டிற்கு உரியதாகக் கல்லில் வெட்டப்பட்டுள்ளது. இதன் அருகில் மகாவீரரின் சிலை உள்ளது. அமர்ந்து ஓய்வெடுக்க குளிர்ந்த நிழலுடன் இம்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அருகே சமண முனிவர்கள் தங்கியிருந்ததாக நம்பப்படும் குகைகள் உள்ளன. மேலும் சமண முனிவர்கள் வாழ்ந்ததற்கான பல தடயங்களும் காணப்படுகின்றன.

  மலைப்பகுதியில் இருந்து கீழே நோக்கும்பொழுது இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளைக் கண்டு மகிழலாம். குந்தகுந்தர் எனும் முனிவர் இங்கு தங்கித் தவம் செய்ததாக இம்மலையின் வரலாறு சொல்கிறது. இவர் ஆந்திராவில் பிறந்து காஞ்சிபுரம் முதலான இடங்களில் கல்வி பயின்று பொன்னூர் மலையில் தங்கித் தவம் செய்து இறுதி வாழ்வைச் சிரவன பெல்கோலாவில் கழித்ததாக நம்பப்படுகிறது. மகாவீரர், கெளதம கணதரருக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் வைத்துப் போற்றப்படுபவர் இவர். இவரே திருக்குறளை இயற்றியவர் என்பது சமணர்களின் கருத்தாகும். இவருக்கு ஏலாசாரியார் என்பதும் பெயராகும். திருக்குறளில் சமண சமயக் கருத்துக்கள் மிகுதியாக உள்ளன எனவும் "ஆதிபகவன்' என்பது தம் கடவுள் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

   சமணர்களின் பெருமைக்குரிய வழிபாட்டுத்தலமாக விளங்கிய பொன்னூர் மலை இடைக்காலத்தில் செல்வாக்குக் குறைந்தாலும் அண்மைக்கால முயற்சிகளால் பொலிவுபெற்ற மலையாக விளங்குகிறது. வடநாடுகளில் இருந்து வந்து மகிழ்ச்சியாக வழிபட்டு, இயற்கை அழகைக் கண்டு செல்லும் மக்களைப் பார்க்கும்பொழுது, நாம் நகரச் சந்துகளில் பொழுதைக் கழிக்காமல் விடுமுறை நாட்களில் இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று வரலாம்.

இராபர்ட்டு கால்டுவெல் (1814-1891)


கால்டுவெல் பெருமகனார்


   உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் - தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.

   வடமொழியைத் "தேவ பாஷை' எனவும் தமிழை "நீச்சபாஷை' எனவும் தாழ்த்தி, தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856, 1875 ) எனும் நூல் ஆகும். தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ்மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தியவர். தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது.

   கால்டுவெல்லின் வருகை கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது. எனினும் கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் அவரின் வரலாறு அனைவராலும் அறியத்தகுந்த வரலாறாக அமைந்துள்ளது. கால்டுவெல் அவர்கள் அயர்லாந்து நாட்டில் உள்ள "கிளாடி' எனும் ஆற்றின்கரையில் அமைந்த சிற்றூரில் பிறந்தவர்(1814). இளமையில் அறிவார்வம் கொண்ட தம் மகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் தம் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் சென்று "கிளாஸ்கோ' நகரில் வாழ்ந்தனர். 16 ஆண்டுக்குள் ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங்களைக் கால்டுவெல் கற்றுத் தேர்ந்தார். தம் மகனைக் கவின்கலைக் கல்லூரியில் பெற்றோர் சேர்த்தனர். ஓவியக்கலையைக் கால்டுவெல் கற்றுத்தேர்ந்தாலும் அதனை வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை.

   கால்டுவெல் தம் இருபதாம் அகவையில் இறைப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கத்தின் சார்பாகக் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பிய மொழிகளில் அமைந்த நூல்களையும் சமய நூல்களையும் கற்றார். இதன் பயனாக இரண்டு ஆண்டுகளில் இளங்கலைப்பட்டம் பெற்றார். அவ்வாறு படிக்கும்போது கிரேக்கமொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் டேனியல் ஸ்டான்போர்ட் அச்செம்மொழியின் பெருமையை மாணவர்களுக்கு நிறைவடையும்படிப் பயிற்றுவித்தார். கால்டுவெல் பெருமகனாருக்கு மொழியியலில் ஆர்வம் உண்டாக்கியது அப்பேராசிரியரின் வகுப்புரைகளே ஆகும்.

   இலண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச் சமயப் பணிக்கு என 1838ல் "அன்னமேரி' என்னும் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப் பயணம் செய்தார். கடலில் பயணம் செய்தபோது இவர் ஏறிவந்த கப்பல் மீது பிரெஞ்சு கப்பல் ஒன்று மோதிச் சிதைந்தது. பலர் மடிந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர். பழுதுற்ற கலத்தைப் "பிளிமத்' என்னும் துறைமுகத்தில் செப்பனிட்டனர். தென்னாப்பிரிக்கா வழியாகக் கப்பல் வரவேண்டியிருந்ததால் நான்கு மாதம் பயணம் செய்து சென்னைக்கு வந்தார். அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும் குடிமைப்பணி அதிகாரியுடன் நட்புகொண்டார். அவர் முன்பே ஆந்திராவில் பணி புரிந்ததால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார். அவர் வழியாகக் கால்டுவெல் அம்மொழிகளைக் கற்றார்.

   கடலில் பயணம் செய்தபோது கால்டுவெல்லுக்கு முன்பு இருந்த இருமல் நோய் நீங்கியது. கால்டுவெல் சென்னைக்கு வந்ததும் "துருவர்' எனும் தமிழ்கற்ற அறிஞரைக் கண்டு மகிழ்ந்தார். வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்கள் பின்னாளில் நண்பர்களாயினர். சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார். நடந்து செல்லும்போது மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறியலாம் என நினைத்தார். சிதம்பரத்தில் இருந்த நடராசர் கோயிலைக் கண்டு மகிழ்ந்தார். மயிலாடுதுறை வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில நாள் தங்கினார். டேனிஷ் மிஷ­ன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர் சென்றார். பெரியகோயிலையும் மராட்டிய மன்னர் அரண்மனையையும் கண்டு மகிழ்ந்தார். அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு உரையாடினார். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அழகையும் திருவரங்கச் சிறப்பையும் கண்டு மகிழ்ந்தார். பின்பு நீலமலை சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் தந்தையாரைக் கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி இளைப்பாறினார்.

   நீலமலையிலிருந்து இறங்கி, கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் மக்கள் அவரைப் பலவாறு இழித்தும், பழித்தும் பேசினர். ஒருநாள் நடந்து செல்லும்போது மழைவரத் தொடங்கியது. இரவுப் பொழுதில் தங்கிச்செல்ல நினைத்தார். சத்திரம், சாவடி உண்டா என வினவிய போது அரசின் சத்திரம் உள்ளது எனவும் அது ஆங்கிலேயர்க்கு இல்லை எனவும் கூறினர். மழையில் நனைந்து துன்பப்பட்ட கால்டுவெல்லைக் கண்டு மாட்டுத் தொழுவத்தில் தங்கும்படி சொன்னார்கள். சத்திரத்தில் இடம் கிடைக்காததாலும் மாட்டுத் தொழுவத்தில் தங்க மனம் விருபாததாலும் ஒரு வீட்டின் திண்ணையில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார்.

   மதுரை வந்தடைந்த பின்பு திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியர் அவர்களைக் கண்டு உரையாடினார். பின்பு நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார் (நவம்பர் 1841). பின்பு நாசரேத்தில் (நவம்பர் 28) தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒரு விரிவுரையும் செய்தார். பின்பு முதலூரில் ஞாயிற்றுக்கிழமை விரிவுரையொன்று நிகழ்த்தினார். அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம் சுற்றி அடைந்தார். அந்த ஊரே அவர் பணிபுரியும் இடமாகவும், கடைசிக் காலத்தில் நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது. இடையன்குடி என்பது பெரும்பாலும் பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். கூரைவீடுகளே மிகுதி. கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி. அங்குக் கால்டுவெல் குடியிருப்புகளையும் கோயிலையும் உருவாக்கினார். எழுதவும் படிக்கவும் மக்களுக்குக் கற்றுத் தந்தார். அப்பகுதியில் வாழ்ந்த நாடார் இன மக்களைக் கல்வியறிவுப் பெற்றவராக மாற்றினார். 1847ல் அங்கு ஆலயப்பணியைத் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் அப்பணி நிறைவுற்றது. சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார் அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடியில் ஒருவாரம் தங்கினார். 500 உருபா அன்பளிப்பாக வழங்கியதையும் அறியமுடிகிறது.

   இடையன்குடியில் மூன்று மாதம் இளவேனில் காலமாகவும் 9 மாதம் கடும் வெப்பம் நிறைந்த காலமாகவும் விளங்கும். இடையன்குடியில் வாழ்ந்தபோது வெப்பம் தாளாமல் கால்டுவெல் துன்பப்பட்டுள்ளார். அக்காலங்களில் தமிழ் இலக்கியங்களின் பக்கம் கால்டுவெல்லின் கவனம் திரும்பியது. திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்றார். உடல் வெப்பம் தணிக்க அருகே உள்ள கடற்கரையில் உவரி என்னும் காயல்பகுதிக்குச் சென்றார். உவரித்துறை பழம்பெருமை வாய்ந்ததை உணர்ந்தார். அங்கிருந்த இளஞ்சுனையில் வெயிற்காலத்தில் தங்கி வாழ்ந்தார். கோடைக் காலங்களில் திருக்குற்றாலம், அசம்புமலை, கொடைக்கானல் மலைகளில் தங்கியிருந்துள்ளார்.

   கால்டுவெல் "தமிழில் கிறித்தவ வழிபாட்டு நூல்' உருவாக்கும் குழுக்களில் இடம்பெற்று அப்பணியைச் சிறப்புடன் செய்துள்ளார். மேலும் கிறித்தவ மறைநூலை மொழிபெயர்க்கும் பன்னிருவர் குழுவில் இடம்பெற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். கால்டுவெல் தமிழகத்தின் திருநெல்வேலி பற்றி, அயல்நாட்டவரின் குறிப்புகளைக் கொண்டு வரலாற்று நூல் எழுதியுள்ளார். பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும், அரிசி என்பது கிரேக்க மொழியில் ’அருசா’ என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளையும் கால்டுவெல் செய்துள்ளார். கொற்கையின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பு அறிந்து மகிழ்ந்தார். மேலும் கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குக் கீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும் சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று குறிப்பிட்டார். பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என உணர்ந்தார்.

   மேலும் மகாவம்சம் முதலான நூல்களின் துணைகொண்டு ஈழத்தமிழக உறவுகளையும் கால்டுவெல் எழுதியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றிய பல கட்டுரைகளை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதினர். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலைத் தந்தார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனவும் குறிப்பிட்டார். மேலும் வடசொற்களை அகற்றினாலும் தமிழ்மொழி வளம் குன்றாது தழைத்து இனிது வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

   கால்டுவெல்லின் பணிகளைக் கண்ட கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்படுகிறது. அவர்தம் காலத்தில் தொல்காப்பியம் முதலான நூல்கள் பதிப்பிக்கப்படாததால் கால ஆய்வுகள் குறித்த இவர் செய்திகளில் பிழையுள்ளதை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இராபர்ட் கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சிப் பணிகளை மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தம் நூல்களில் வாய்ப்பு அமையும் இடங்களில்எல்லாம் நன்றியுடன் போற்றி மதித்துள்ளார். "திராவிடம் வடமொழிச் சார்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பலசொற்கள் தென்சொற்களேயென்றும், வடமொழியில் பல தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் கண்காணியரே... இவர் தமிழ்மொழியைச் சிறப்பாய் ஆராய்ந்தது போன்றே மலையாள மொழியைச் சிறப்பாயாராய்ந்தவர் டாக்டர் குண்டட் ஆவர். இவ்விருவர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப்பட்டுள்ளதேயயனினும் பொருந்தும் ""(ஒப்பியன் மொழிநூல், ப.84), எனவும் "....தமிழ் என்பதன் திரிபே திராவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய்நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார்.'' (தமிழ்வரலாறு, ப.33) எனவும் "கால்டுவெல் ஐயர் கடைப்பிடித்த கொடிவழி மொழிநூலையே கையாளல் வேண்டும்' (த.இ.வ. ப. 48) எனவும் பாவாணர் குறிப்பிடுவார்.

   கால்டுவெல் அவர்கள் 18 மொழிகளைக் கற்றவர். பல்வேறு வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் கற்றவர். சமய அறிவு நிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி மொழி நூலையும் வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர். இவர் இயற்றிய திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூல் அக்காலத்தில் இருந்த போர்ச்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ்வதற்குச் செய்த முயற்சிகளையெல்லாம் மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது. அக்காலத்தில் இருந்த படைத்தளபதிகள், சமயத் தொண்டர்கள் எழுதிய மடல்கள், நூல்கள், குறிப்புகள், வாய்மொழிச் செய்திகள், அகழாய்வுச் செய்திகள் இவற்றைத் துணைக்கொண்டு வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

   கால்டுவெல் தம் 29ஆம் அகவையில் நாகர்கோவிலில் வாழ்ந்த மால்ட் என்பவரின் மகளான எலிசா (21 அகவை) என்னும் மங்கையை மணந்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்தவர். இடையன்குடியில் பெண்கள் கல்விபெற எலிசா பணிபுரிந்தவர். பிணியுற்றவர்களுக்கு மருத்துவம் பார்த்தார். எலிசா வழியாகக் கால்டுவெல் பேச்சுத் தமிழைக் கற்றார். கால்டுவெல்லுக்கு மூன்று மக்கள் எனவும் நான்கு மக்கள் எனவும் கருத்து வேறுபாடு உண்டு. அம்மக்களுள் ஆடிங்கிதன் என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தவர். முதல் மகள் திருச்சியில் "வியத்தர்' என்பவரை மணந்தாள். இளைய மகள் "லூயிசா' ஆங்கிலப்படை வீரனை மணந்தாள். எனினும் (28-10-1872இல்) மறைந்தாள். கால்டுவெல் வாழ்க்கை எளிமையானது. பெரும்பாலும் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார். வெயில் கொடுமைக்கு அஞ்சி கூரைவீடுகளில் தங்கியிருப்பார். அமர்ந்து படிப்பார். காலை மாலை உலாவுவார். மூட்டைப்பூச்சிகளுக்கு அஞ்சி இரவில் பனைநாற்கட்டிலில் வீட்டு முற்றத்தில் உறங்குவார். பெரும்பான்மையான நாள்களில் சுற்று வட்டாரத்தில் சமயப்பணி புரிந்துவிட்டு ஏழாம்நாள் இடையன்குடி வருவார். தாம் பணி செய்த பகுதிகளில் 1877ஆம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருடப் பஞ்சத்தில் வாடிய மக்களுக்குப் பேருதவி செய்தார். கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது மூன்றுமுறை தம் நாடு சென்று வந்துள்ளார். ( 1. 1854-57, 2. 1873-75, 3. 1883-84).

   கால்டுவெல் திருநெல்வேலி ஆயராக கி.பி. 1877-இல் திருநிலைப்படுத்தப் பட்டார். 1891 சனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக் கொடைக்கானல் சென்று தங்கியிருந்தார். அக்காலங்களில் கொடைக்கானல் செல்வதற்குச் சரியான பாதை வசதியில்லை. அம்மை நாயக்கனூரில் இருந்து கடும் பாறை வழியாகச் சென்றார். ஒருநாள் குளிரால் நடுக்கம் கொண்டார். ஏழாம்நாள் நோய் வலுவுற்று 1891 ஆகத்து மாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு அவர் எடுப்பித்த கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.

    கால்டுவெல் பெருமகனார் தம்மைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ""நான் அயர்லாந்து தேசத்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்து நாட்டில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன். எனினும் என்வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியப்பெருநாடும், அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முழுவதுமாகக் கவர்ந்துகொண்டதால் நான் இந்தியர்களுள் ஒருவனாயினேன். இந்தியர்களுள் ஒருவராக இருந்தாலும் தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு மூலநூல் தந்ததால் தமிழ் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் கால்டுவெல் பெயரை நம் உதடுகள் ஒலிக்கும்.

உதவிய நூல்கள் :

1. இரா.பி. சேதுப்பிள்ளை, கால்டுவெல் ஐயர் சரிதம்
2. கா. மீனாட்சிசுந்தரம், ஐரோப்பியர் தமிழ்ப்பணி
3. வாழ்வியற் களஞ்சியம், தமிழ்ப்பல்கலைக்கழகம்
4. கால்டுவெல் நூல்கள்
5. பாவாணர் நூல்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமுக்கல் மலை

நெடுஞ்சாலைகள் போடுவதற்குத் தேவைப்படும் கருங்கல் சல்லிகளை அரைக்கும் இயந்திரங்கள் பேரிரைச்சல்போட...சரக்குந்துகள் சல்லிகளை ஏற்றிக்கொண்டு வேகமாகத் திரிய...மக்களின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டு நூற்றாண்டுகள் பலவற்றைக் கண்டபடி பெருமுக்கல் மலை நிற்கிறது. இயற்கைவளம் செறிந்த வரலாற்றுச் சுவடுகளை ஏந்திக்கொண்டு நிற்கும் மலையைப் பணமுதலைகள் குடைந்து எடுப்பதற்குக் கைகறைபடிந்த சில அதிகாரிகள் காவலர்களாக நின்றதை, இம் மலையின் இழந்த பகுதிகளைக் காணும் பொழுது அறியமுடிகிறது.

ஆம்! இயற்கைவளம் நிறைந்த மருதநிலப்பரப்புகளுக்கு இடையே பெருமுக்கல் மலை சுனைநீர் வசதியுடனும், இயற்கையான குகையமைப்புகளுடனும் விளங்குகிறது. எனவே தவநினைவில் வாழ்ந்த துறவிகளுக்கு விரும்பத்தக்க இடமாக இம்மலை முற்காலத்தில் இருந்துள்ளது. பின்னாளில் இவர்களின் முயற்சிகளால் கோயில் கட்டும் சூழல் அமைந்தது. தொடக்கத்தில் செங்கல்கோயில்களும், பின்னாளில் கற்றளிக் கோயில்களும் தோற்றம் பெற்றன. சோழர்கள், பாண்டியர்கள், சம்புவரையர்கள், விசயநகர அரசர்களின் காலங்களில் சிறப்புப் பெற்றிருந்த இம்மலை இன்று தம் வரலாறுகளைச் சிதைத்துக்கொண்டு, உருமாறி நிற்கின்றது.

கோட்டைகளும், பாதுகாப்பு அரண்களும் கொண்டு பெருமாள், சிவன், அம்மை, பிள்ளையார் முதலான தெய்வங்கள் இருந்த இடம் இன்று அடையாளம் காணமுடியாதபடி சிதைந்துள்ளது. கோயிலில் இருந்த சிலைகள் பலவும் சிதைக்கப்பட்டு, இடம்மாறிக்கிடந்தன. அதனை அண்மைக் காலத்தில் மக்கள் எடுத்து உரிய இடங்களில் வைத்தனர். பல இடங்களில் தடயங்கள் இருந்தாலும், சிலைகள் இல்லை. இக்கோயிலில் இருந்த கல்வெட்டுகள் பலவும் இடம்மாறிக் கிடக்கின்றன. அழகிய கட்டட அமைப்புகள், தூண்கள் சிதைந்து கிடக்கின்றன. முனிவர்கள் சிலர் தங்கி மருத்துவத்திற்குத் தேவையான மூலிகைகள் இடித்து வழங்கியது போன்ற அமைப்புக் கோயிலில் உள்ளது. உடைந்த கல்வெட்டுகளும், முற்றுப்பெறாத கல்வெட்டுகளும் மலைக்கோயிலில் பல உள்ளன.அரிய வரலாற்று உண்மைகள் பல இக்கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. எதிரிப்படையயடுப்புகளாலும், சரியான பராமரிப்பு இன்மையாலும் கோயிலும், சிலைகளும், கோட்டைகளும், கல்வெட்டுகளும் அழிபாட்டு நிலைக்குச் சென்றன.

பாழடைந்த மண்டபங்கள் போல் காட்சியளிக்கும் கோயில்களைக் கொண்ட பெருமுக்கல் மலையின் இயற்கையழகு நம்மை வியப்படையச் செய்கின்றது. திரைப்படங்கள் எடுப்பதற்குரிய வகையில் அழகு மிகுந்த இடமாக இம்மலை உள்ளது. இதனை எவ்வாறு அடைவது?விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் "பெருமுக்கல்' உள்ளது. திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் பேருந்துகளில் ஏறி 12 கி.மீ பயணம் செய்தால் பெருமுக்கல் ஊரை அடையலாம். பேருந்து நிறுத்தத்திலிருந்து இரண்டு கி.மீட்டர் தூரம் நடந்தால் மலையடிவாரத்தை அடையலாம். குறுக்கு வழியிலும் செல்லலாம். மலையடிவாரத்திற்கு நல்ல சாலை வசதியும் உள்ளது. மலையுச்சியை அடைய இரண்டு வழிகள் உள்ளன.ஒருவழியாக ஏறி இன்னொரு வழியாக இறங்குவது கூடுதலான காட்சிகளைக் காண உதவும்.

மலையடிவாரத்தில் சிவன்கோயில் உள்ளது. அழகிய வேலைப்பாடுகளும், பழைமையும் கொண்ட கோயில் சிதைந்து இருண்டுக் கிடக்கின்றது. கட்டட அமைப்புகளும், சுற்றுச்சுவர்களும் சிதைந்து பராமரிப்பு இன்றி உள்ளன. பல தொன்மையான கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. இக்கோயிலை நோட்டமிட்டபடி, மேலே மலைக்குச் செல்லும் வழியில் பிள்ளையார் சிலை ஒன்று சிதைந்து உள்ளது. (அயல்தேசத்தவர் படையயடுப்புகளில் இது சிதைந்திருக்கலாம்). மலையுச்சியை அடைய படிக்கட்டு வழிகள் உள்ளன. வழியில் உள்ள பாறைகளில் கல்வெட்டுகளையும் காணலாம். வேலைப்பாடுகளுடன் அமைந்த படிக்கட்டுப்பாதைகள் மூடப்பட்டு,புதிய பாதைகள் வழியாக மேலே செல்லலாம்.மக்கள் மலைப்பகுதியையும்,கோயில்பகுதிகளையும் சிதைக்காமல் இருப்பதற்குத் தமிழகஅரசு பாதுகாக்கப்பட்ட இடமாகக் குறிப்பிட்ட பகுதியை அறிவித்துள்ளது.

படிக்கட்டுகள் வழியாக மலையுச்சியை அடையும்பொழுது அறிவிப்புப்பலகையில் ""முதலில் செங்கல்கோயிலாக இருந்த இக்கோயில், விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி. 1118-35) கற்கோயிலாக மாற்றப்பட்டது. இக்கோயிலின் இறைவன் பெயர் தமிழில் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் என்றும், பெருமுக்கல் உடையார் என்றும், வடமொழியில் "முக்கயாசலேஸ்வரர்' என்றும் வழங்கப்படுகிறது. பாறைகளில் 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, சம்புவரைய, விசயநகரமன்னர்கள், கோயிலுக்கு வழங்கிய நன்கொடைகளைக் குறிக்கின்றன'' என்று இடம்பெற்றுள்ளது.பெருமுக்கல் எனும் ஊர் சோழர் காலத்தில் "சயங்கொண்ட சோழ மண்டலத்து ஒய்மாநாடான விசைய ராசேந்திர வளநாட்டு பெருமுக்கிலான கங்கைகொண்ட நல்லூர்' என்று அழைக்கப்பட்டது.

பெருமுக்கல் மலையின் உச்சியில் ஏறிச்சென்று காணும்பொழுது மிக நீண்டதூரம் இயற்கையழகு பரந்து விரிந்து கிடைப்பதைக் காணமுடியும. சிவன்கோயிலின் கருவறையின் பின்புறப் பகுதிகள் பீரங்கிகளால் தாக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளது. பீரங்கியில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் சிதைவுகள் மலைப்பகுதியில் சிதறிக் கிடந்ததை அண்மைக்காலம் வரை மக்கள் கண்டுள்ளனர்.பெருமுக்கல் மலையில் முன்பு சிவன்கோயில் அருகில் பெருமாள்கோயில் இருந்ததாகவும், அது முற்றிலுமாக அழிந்துவிட்டது எனவும் கூறுகின்றனர். சிவன்கோயிலைக் கட்டுவதற்குப் பொருள் உதவி புரிந்த காக்குநாயகனின் உருவமும், அவனது கட்டளையின்படி கோயிலைக் கட்டிய பெரியான் திருவனான சிறுத்தொண்டனது உருவமும், கோயில் சைவாசாரியன் திருச்சிற்றம்பலமுடையான் அன்பர்க்கரசு பட்டனது உருவமும் சிற்பங்களாக உள்ளதைக் கல்வெட்டியில் துறை அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.கோயிலை ஒட்டி இரண்டு அழகிய சுனைகள் உள்ளன. ஒன்று நீராடவும், ஒன்று குடிநீருக்காகவும் பயன்படுத்தப்பட்டது. கோயிலைச் சார்ந்து நந்தவனங்கள் இருந்துள்ளதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அதனை உறுதிசெய்துவதுபோல் நீர் இறைக்கக் கல்லில் அமைக்கப்பட்ட நீர் இறைப்பு அமைப்புகள் இன்றும் காணப்படுகின்றன.

மேலும் கோயிலில் விளக்கெரிக்க முப்பத்திரண்டு பசுக்களும், ஒரு எருதும் என்ற அடிப்படையில் பல தேவரடியார் பெண்கள் தானம் வழங்கி உள்ளனர். மேலும் "கோதையாழ்வியான புரவுவரி நங்கை' திருக்காமக்கோட்டத்தில் விநாயகப் பிள்ளையாரை எழுந்தருளுவித்ததை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. அன்றைய சமுதாயத்தில் நிலவிய நில விற்பனை முறை, நிலத்தை அளக்கும் முறை, கோயில் வழிபாட்டு முறை, கோயிலுக்கு நிலம் வழங்கியவர்களின் பெயர்கள், ஊர்ப்பெயர்கள் முதலியன பற்றி பலகல்வெட்டுகள் பேசுகின்றன. மரக்காணம் சார்ந்த ஊர் மக்கள் 30 பேர் கையயழுத்திட்டு இவ்வூர் இறைவனுக்கு நிலமும், உப்பளமும் வழங்கியுள்ளதை (கி.பி. 13 நூற்றாண்டு) ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

பெருமுக்கல் மலையில் "சீதா குகை' என்ற குகை உள்ளது. இக்குகையில் பல கீறல் உருவங்கள் காணப்படுகின்றன. இக்கீறல் உருவங்கள் கி.பி. 4000 அளவினது எனவும், பெருங்கற்காலத்தைச் சார்ந்தது எனவும், கி.பி. 6,7 நூற்றாண்டினது எனச் சிலரும் கூறுகின்றனர். இவ்வுருவங்களில் மனித உருவங்களாகச் சில தெரிகின்றன. சில அடையாளக் குறியீடுகளாகக் காணப்படுகின்றன. உண்மையறியாத நம் மக்கள் சீதைக்கு மகப்பேறு நடந்த இடம் இது எனவும், அவள் மகப்பேறு வலியால் துடித்தபொழுது கைகால் அசைத்துக் கீறியது இவ்வுருவம் எனவும் செவி வழியாகச் சொல்கின்றனர். ஆனால் சீதாகுகை என்பதைச் சொல்லாய்வு அடிப்படையிலும், இருப்பிடச்சூழலை நோக்கும் பொழுதும் சீதம் என்பது குளிர்ச்சி எனப் பொருள் கொண்டு குளிர்ச்சி பொருந்திய குகை எனப் பொருள் கொள்வதில் தவறில்லை.அதற்கு ஏற்ப வெயிற்காலங்களில் இக்குகை அமைப்பில் சில்லென்ற காற்று இனிமையாக வீசுகின்றது.

மலையின் மேல் அனுமார் கோயில் ஒன்று உள்ளது. இதில் அனுமார் சிலை உள்ளது. கதவு இல்லாமல் இக்கோயில் உள்ளது. இக்கோயிலின் சுற்றுப்புறச் சுவர்களில் அழகிய வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டு மகிழலாம். குரங்குகள் மிகுதியாக இம்மலையில் உள்ளன. கோலெடுத்தால் குரங்குகள் அடங்கும்.சுனைப்பகுதிகளில் கட்டட அமைப்புகள் சிதைந்து காணப்படுகின்றன. நந்தி உருவங்கள் பல சிதைந்து கிடக்கின்றன. கருங்கல்லில் தண்ணீர்த்தொட்டி போன்ற அமைப்பு உள்ளது. சுனைநீர் எந்தக் காலத்திலும் குறையாமல் உள்ளது. இதில் சிலைகள், பொருள்கள் கிடக்கலாம் என மக்கள் நம்புகின்றனர். இந்தச் சுனைநீரில் மக்கள் பல்வேறு அசுத்தங்களைச் செய்தாலும் அதன் தூய்மை கெடாமல் சுனைநீர் உள்ளது.

பெளர்ணமி நாள்களிலும், மாசி மகத்திலும் இக்கோயிலுக்குக் கூட்டம் அதிகமாக வருகிறது. மூலிகைகள் பல இம்மலையில் உள்ளன. இவ்வூரில் 32 கோயில்களும் 32 குளங்களும் இருந்ததாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வூரில் பழைய பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது. முகமதியர் படையயடுப்புகள், ஆங்கிலேயப் படையயடுப்புகளால் இக்கோயில் சிதிலமடைந்துள்ளதை வரலாறு குறிப்பிடுகிறது. இயற்கை எழில் வாய்ந்த இம்மலை வரலாற்று ஆய்வாளர்களுக்கும், இறைவழிபாட்டினர்க்கும், இயற்கை விரும்பிகளுக்கும் சென்று வரத்தக்க சிறந்த இடமாகும்.


' தமிழ் மாணவர்' போப் அடிகளார்


போப் அடிகளார்

  தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர்களை இருவகையில் அடக்கலாம். ஒன்று தமிழகத்தில் பிறந்து, தமிழ்மொழிக்குத் தொண்டு செய்தவர்கள். மற்றொன்று அயல்நாடுகளில் பிறந்து, தமிழின்பால் பற்று ஏற்பட்டு, அம் மொழியைக் கற்றுத் தொண்டு செய்தவர்கள். அயல்நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு வந்து தமிழ்த்தொண்டு செய்தவர்களுள் அறிஞர் போப் அடிகளார் குறிப்பிடத்தகுந்தவர். 

  போப் அடிகளார் அவர்கள் 1820 ஏப்ரல் மாதம் இருபதாம் நாள் வட அமெரிக்காவில் நோவாசுகோசியா என்ற இடத்தில் அமைந்த பிரின்சு எட்வர்ட் தீவில் பெடக் (Bedeque) என்னும் ஊரில் பிறந்தவர். இவரின் தந்தையார் பெயர் சான்போப். தாய் பெயர் கேதரின் யுக்ளோ. போப் அடிகளாரின் பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சியார்ச் யுக்ளோ. போப் அவர்களின் தந்தை இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர். வணிகம் பொருட்டுப் பிரின்சு எட்வர்ட் (வடஅமெரிக்கா) சென்றவர். வணிகத்தில் சிறந்து, புகழ்பெற்றதுடன் கிறித்தவ சமயத் தொண்டராகவும், மதப் பரப்புரை செய்பவராகவும் விளங்கியவர். 

 போப் அவர்களுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் பத்துப் பேர். அறுவர் ஆண்கள்; நால்வர் பெண்கள். அனைவரையும் இறையுணர்வு நிறைந்தவர்களாகப் பெற்றோர்கள் வளர்த்தனர். இளம் அகவை முதல் போப் அவர்கள் நல்ல கல்வியறிவுடன் நற்பண்புகள் பலவற்றையும் ஒரு சேரப் பெற்றிருந்தார். ஊக்கமும் விடா முயற்சியும் அவருக்குப் பிறவிக் குணங்களாகவே இருந்தன. கிறித்தவ சமயப்பணி புரிவதற்குக் கிரேக்கம், எபிரேயம் முதலான மொழிகள் தேவையெனக் கருதி, அவர் இளம் அகவையில் இம் மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். வெசிலியன் சங்கத்தார் தென்னிந்தியாவில் ஊழியம் செய்வதற்குப் போப் அடிகளாரைத் தகுதி எனக் கருதி 1839-ஆம் ஆண்டு தேர்ந்தெடுத்து அனுப்பினர். 

 தம் பத்தொன்பதாம் அகவையில் போப் அடிகளார் மரக்கலம் ஒன்றில் ஏறி, எட்டுத் திங்கள் செலவு செய்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். எட்டுத் திங்களும் கப்பலில் செலவு செய்யும்பொழுது நாள்தோறும் எட்டுமணி நேரம் தமிழ் மொழியையும், வடமொழியையும் கற்றார். கப்பலில் வரும்பொழுது தமிழகத்தில் உரையாற்றுவதற்குத் தகுந்தபடி சொற்பொழிவு உரை ஒன்றையும் ஆயத்தம் செய்து வந்தார். சென்னையில் "சாந்தோம்' என்னும் இடத்தில், வந்த ஒரு மாதத்திற்குள் தாம் கொண்டு வந்திருந்த கருத்துகளைத் தமிழில் சொற்பொழிவாக நிகழ்த்தினார். அச் சொற்பொழிவுக்கென எழுதப்பட்ட கையெழுத்துப்படிகள் அவர்களின் குடும்பத்தினரிடம் இன்றும் இருப்பதாக நம்பப்படுகிறது. 

  அடிகளார் சென்னையில் இருந்தபொழுது தமிழ், தெலுங்கு மொழிகளைக் கற்பதில் நாட்டம் கொண்டிருந்தார். இவ்வேளையில் வெசிலியன் சங்கத்திலிருந்து போப் அடிகளார் இங்கிலாந்து திருச்சபையில் இணைந்து பணிபுரியத் தொடங்கினார். இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்ததால் நெல்லை மாவட்டம் சாயர்புரம் எனும் ஊருக்குச் சமயப்பணி புரிய போப் அடிகளார் தம் இருபத்தியிரண்டாம் அகவையில் சென்றார். சாயர்புரம் என்பது தூத்துக்குடியிலிருந்து பதினாறு கல் தொலைவில் தென்மேற்கில் உள்ள சிற்றூர் ஆகும். சாமுவேல் சாயர் என்பவர் அவ்வூரை விலைக்கு வாங்கி வழங்கியதால் "சாயர்புரம்' எனப்பட்டது. போப் அடிகளார் காலத்திற்கு முன்பு சாயர்புரம் வளர்ச்சி பெறாத ஊராக இருந்தது. அவர் வருகைக்குப் பின்னர்க் கோயில், பள்ளி, கல்லூரி, விடுதிகள் எனப் பல கலைக்கூடங்கள் சாயர்புரத்தில் தோன்றின. 

 தமிழ்நாட்டில் கிறித்தவ சமயம் பரவ வேண்டுமெனில் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்குக் கிறித்தவ சமய உண்மைகளைக் கற்பிக்க வேண்டும் எனவும், அவ்வாறு கற்றவர்கள் குருமார்களாகப் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் எண்ணினார். எனவே "செமினரி' எனப்படும் கல்லூரியை நிறுவினார். தென்னாட்டில் கிறித்தவம் பரவ போப் அடிகளார் அடிப்படையான சில பணிகளைச் செய்தார். இதனை இடையன்குடியில் பணிபுரிந்த "கால்டுவெல்' அடிகளார் தம் நினைவுக் குறிப்புகளில் எழுதி மகிழ்ந்துள்ளார். 

   சாயர்புரத்தில் போப் அடிகளார் தோற்றுவித்த கல்லூரியின் சிறப்பை உணர்ந்து 1848 - இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் ஒரு நூல் நிலையம் அமைப்பதற்குப் பொருளுதவி செய்தது. கல்விச் சூழல் நன்றாக இருந்ததால் வெளியூர்களிலிருந்து மாணவர்கள் சாயர்புரம் வந்து கல்வி கற்றனர். போப் அடிகளார் இளமைத் துடிப்புடன் இருந்ததால் மாணவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்வார். போப் அடிகளார் தாம் தொடங்கிய கல்லூரிக்குத் தலைவராக விளங்கினார். கல்லூரியில் அவர் மொழிப் புலவராய்ப் பணியாற்றினார். தமிழ் இலக்கியம், கிரேக்கம், இலத்தின், எபிரேய மொழிகளைப் பயிற்றுவித்தார். ஆங்கிலத்தையும் போப் அடிகளார் வழியாக மாணவர்கள் கற்றனர். கணக்கு, மறைநூல் முதலியவற்றைப் பயிற்றுவிப்பதிலும் போப் சிறந்த பட்டறிவு உடையவர். 

  சாயர்புரம் "செமினரி' எனப்பட்ட கல்லூரி தமிழ், கிரேக்கம், இலத்தீனம், எபிரேயம், ஆங்கில இலக்கியம், கணக்கு, தருக்கம், மறைநூல், தத்துவம், வரலாறு எனப் பலதரப்பட்ட பாடங்களும் பயிற்றுவிக்கப்படும் பல்கலைக்கழகத் தரத்தினைப் பெற்றிருந்தது. போப் அடிகளார் இரவு பகல் பாராமல் வகுப்புகளை நடத்தியுள்ளார். இரவு நேரங்களில் எட்டு முதல் பதினொரு மணிவரை வகுப்புகள் நடத்துவது அவருக்கு வழக்கம். இரவிலும் வகுப்புகள் நடைபெற்றதால் ஆசிரியர்கள் தங்குவதற்குக் குடியிருப்புகளும், மாணவர்கள் தங்கிப் பயில விடுதிகளும் கட்டினார். எட்டு ஆண்டுகள் சாயர்புரத்தில் போப் அடிகளார் கல்விப்பணி செய்தார். "நல்ல உணவு, நல்ல கல்வி, நல்ல பிரம்பு, என்பது அவரது கொள்கை. 

  ஒரு கையில் புத்தகமும், ஒரு கையில் பிரம்புடனும் இருப்பராம். போப் அடிகளார் மாணவர்களிடம் கண்டிப்புடன் இருந்ததால் மாணவர்களை இரக்கமின்றி நடத்துவதாகப் பெற்றோர்கள் உணர்ந்து, சிலநேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதையும் அறிய முடிகின்றது. போப் அடிகளார் கல்விப்பணியுடன் சமயப்பணியும் ஆற்றியுள்ளார். இக்காலகட்டங்களில் நூலாசிரியராகப் போப் அடிகளார் விளங்கினார். 

 போப் அடிகளார் தமிழ் மொழியில் நல்ல புலமை பெறுவான் வேண்டி, மகாவித்துவான் இராமானுசக் கவிராயரிடமும், ஆரியங்காவு பிள்ளை என்ற புலவரிடமும் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். நான்கு நூல்களை அக்காலங்களில் எழுதியதாக அறிய முடிகின்றது. அந்நூல்களின் பெயர்கள் கிடைக்கின்றனவே தவிர நூல்கள் கிடைக்கவில்லை. 

  போப் அடிகளார் தம் உடல்நலம் கெட்டதால் 1849 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். பத்தாண்டுகளுக்குப் பின் அடிகளார் தம் தாய்நாட்டிற்கு மீண்டும் சென்றபொழுது அங்குத் தாம் திருமணம் செய்து கொண்டார். 1850ஆம் ஆண்டில் தம் மனைவியாரை அழைத்துக் கொண்டு இந்தியாவிற்குப் புறப்பட்டார். பல மாதங்களுக்குப் பின் இந்தியா வந்த போப் அடிகளார் தஞ்சையில் சமயப்பணி செய்ய அனுப்பப்பட்டார். 

   தஞ்சையில் கிறித்தவ சமயம் பரவ அடிகளார் பல வகைகளில் பாடுபட்டுள்ளார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் அடிகளாரின் சமயப்பணி நடைபெற்றது. அக்காலங்களில் "வேதநாயக சாத்திரி' எனும் சமயத் தொண்டருடன் போப் அடிகளார் பழகியுள்ளார். தஞ்சாவூரில் போப் அடிகளார் தங்கியிருந்த பொழுது தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியங்களையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றார். தஞ்சையில் கிறித்தவ சமயத்தைப் பற்றிப் பயிற்றுவிக்கும் கல்லூரியைத் தோற்றுவித்து 1854 முதல் அக்கல்லூரியின் தலைவராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி இன்று செயிண்டு பீட்டர் மேனிலைப்பள்ளி என்ற பெயருடன் செயல்பட்டு வருகின்றது. 

 தஞ்சையில் வாழ்ந்தபொழுது பல தமிழ் நூல்களை எழுதினார். தமிழ் இலக்கணத்தை எளிய நிலையில் படிக்கும் மாணவர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் மூன்று இலக்கண நூல்களை எழுதினார். இவற்றுள் இரண்டு, இளம் மாணவர்கள் பயிலுவதற்கு வாய்ப்பாக வினாவிடை அமைப்பில் எழுதப்பட்டன. மூன்றாவது நூல் விரிவான இலக்கண நூலாகும். மேலும் ஐரோப்பியர் தமிழ் பயிலுவதற்கு உரிய நூலொன்றையும் எழுதினார். ஆங்கில மக்கள் படிப்பதற்குப் பயன்படும் வகையில் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றும் தொகுத்தார். 

  பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாய்மொழிவழிக் கல்வி பெறுதல் வேண்டும் என்னும் கருத்துடைய போப் அடிகளார் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த நாட்டு வரலாற்று நூலைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டார். "தனிச் செய்யுட் கலம்பகம்' என்ற பெயரில் தொகைநூல் ஒன்றை உருவாக்கி மாணவர்கள் பயன்பெற அளித்தார். ஒழுக்கநெறி காட்டும் நல்ல பாடல்களின் தொகுதியாக அந்நூல் அமைந்திருந்ததால் பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி மற்றவர்களும் படித்து மகிழ்ந்தனர். செய்யுள் நூல்கள் மட்டுமன்றி உரைநடை நூல்களையும் மாணவர்கள் கற்க வேண்டி எழுதி வெளியிட்டார். போப் அடிகளார் முதன்முதல் பாடநூல் எழுதி வெளியிட்டவர் என்பது இங்கு எண்ணத்தக்கது. 

 தஞ்சாவூரில் சமயப்பணி புரிபவர்களுக்கு இடையே ஏற்பட்ட உயர்வு தாழ்வு சிக்கல்களால் அமைதியிழந்த போப் அடிகளார் தாம் ஏற்றிருந்த பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டார். அக்காலத்தில் அவர் பொருள்வளம் இல்லாதவராக இருந்தார். போப் அடிகளாரின் மனைவியும், ஐந்து மக்களும் வருந்தினர். மாட்டு வண்டிகளில் ஏறித் தஞ்சையிலிருந்து புறப்பட்டு 24-நாள் செலவு செய்து (1858 இல்) நீலமலையில் உள்ள உதகைமண்டிலம் சென்று சேர்ந்தார். அங்குப் பள்ளிகள் நிறுவி மாணவர்களுக்குக் கல்வி புகட்டினார். உதகைமண்டிலத்தில் நல்லாசிரியராகப் பணிபுரிந்ததால் மாணவர்களின் வருகை எண்ணிக்கை மிகுதியானது. உதகையில் பொது நூலகம் ஒன்று இருந்தது. அதனை விரிவுப்படுத்தி அனைவரும் கற்கும்படிச் செய்தார். 

  போப் அடிகளாரின் மறைநூல் புலமை பற்றி அறிந்து கந்தர்புரி பேராசிரியர் 1864-இல் மறைநூற் புலவர் எனும் பட்டம் வழங்கினார். உதகையில் தங்கியிருந்த பொழுது போப் அடிகளார் இந்திய வரலாற்று நூல் எழுத ஆய்வு செய்துகொண்டிருந்தார். பிற்காலத்தில் இரண்டு வரலாற்று நூல்களை எழுதினார். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு நூலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு நூலும் இருந்தன. 

   1871 ஆம் ஆண்டு சனவரி மாதம் போப் அடிகளார் பெங்களூருக்கு வந்து பிசப் காட்டன் பள்ளியின் தலைமையை ஏற்றுக் கொண்டார். மிகச் சிறப்பான கல்வியுடன், அழகிய கட்டடங்களையும், விடுதிகளையும் உருவாக்கினார். போப் அடிகளாரிடம் பயின்ற மாணவர்கள் அவர் மறைவுக்குப் பிறகு அவர் நினைவாக ஒரு கட்டடம் கட்டியுள்ளனர். பெங்களூர் பிசப்காட்டன் பள்ளிக்குச் செல்வோர் இன்றும் அக்கட்டடத்தைக் காணலாம். 

 போப் அடிகளார் தமிழகத்தின் பல பகுதிகளிலும், பெங்களூரிலும் வாழ்ந்து கல்விப் பணியும், சமயப்பணியும் புரிந்து 1882-ஆம் ஆண்டில் தமது அறுபத்தியிரண்டாம் அகவையில் இந்தியாவை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் இந்தியாவைத் தம் தாய்நாடாகப் போப் அடிகளார் எண்ணி வாழ்ந்தவர். 

  இவரை இலண்டனில் உள்ள நற்செய்திக் கழகத்தின் தலைமை நிலையத்தார் அன்புடன் வரவேற்றனர். தஞ்சையில் போப் அடிகளார் பணிபுரிய முடியாமல் போனமைக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கழகத்தார் தம்மைப் பொறுத்தருள வேண்டினர். இலண்டன் கழகத்தார் போப் அடிகளாரை மான்செசுடர் அத்தியட்ச மண்டலத்தின் நற்செய்திக் கழகத்து அமைச்சராகப் பணிபுரிய வேண்டினர். அப்பொறுப்பினைப் போப் அடிகளார் ஏற்றுக் கொண்டார். மூன்றாண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். 

 1885-ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தார் தம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிய வேண்டினர். தமிழும், தெலுங்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியதாக அப்பணி அமைந்தது. அவ்வாறு தமிழ்மொழியைக் கற்பித்து இங்கிலாந்தில் இருந்தபடியே தமிழ்ப்பணி புரிந்தார். இருபத்து மூன்றாண்டுகள் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளைப் பயில்பவர்க்கு ஆசிரியராக விளங்கினார். போப் அடிகளார் நின்று பாடம் நடத்திய இடத்தில் இன்றும் அவர் படம் இடம் பெற்றுள்ளது. போப் அடிகளார் பயன்படுத்திய நூல்கள் சில அங்கு வைக்கப்பட்டுள்ளன. போப் அடிகளாரின் பன்மொழிப் புலமை, பரந்துபட்ட அறிவு, ஆராய்ச்சித் திறமை உணர்ந்த பல்கலைக் கழகத்தார் 1886-ஆம் ஆண்டில் அவருக்கு முதுகலை எனும் பட்டம் வழங்கினர். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சிலநேரம் அவர் எபிரேய மொழியையும் பயிற்றுவிப்பார். கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமற்கிருதம், பிரெஞ்சு, செர்மன் எனப் பலமொழிகளை அறிந்த சான்றோராகப் போப் அடிகளார் விளங்கினார். 

  போப் அடிகளார் தமிழ்இலக்கியம், இலக்கணம், தமிழின் சிறப்புகள் பற்றிய பல கட்டுரைகளைப் பல ஏடுகளில் எழுதியுள்ளார். மாணிக்கவாசகர் பற்றியும், தமிழ்நீதி நூல்கள் பற்றியும் பல திங்கள் ஏடுகளில் எழுதிய அரிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கனவாம். 

 திருக்குறள் நூலினை 1886-ஆம் ஆண்டில் அனைவரும் விரும்பும் வண்ணம் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1893ஆம் ஆண்டில் "நாலடியார்' என்னும் பழைய நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். திருவாசகம் என்னும் நூலை மொழிபெயர்த்து 1900-ஏப்ரல் 24-ஆம் நாள் வெளியிட்டவர். "மணிமேகலை' என்னும் காப்பிய நூலையும் மொழிபெயர்க்கத் தொடங்கினார். ஆனால் அம்மொழிபெயர்ப்பு முற்றுப்பெறவில்லை. 1911-ஆம் ஆண்டு "சித்தாந்த தீபிகை' யில் அது வெளியானது. 

 போப் அடிகளார் தம் வாழ்வின் இறுதிக் காலத்தில் புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட் பயன் என்னும் நூல்களைப் பதிப்பித்துள்ளார். போப் அடிகளார் தமிழ்மொழி, இலக்கியம்மேல் கொண்ட பற்றின் காரணமாக இறப்பிற்குப் பின் தம் கல்லறையில் "ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்' என எழுதினால் மகிழ்வேன் என்ற எண்ணம் கொண்டிருந்தவர். (அவர் கல்லறையில் அவ்வாறு எழுதப்படவில்லை எனத் திரு. பழ. நெடுமாறன் எழுதிய குறிப்பை ஏதோ ஒரு கட்டுரையில் படித்த நினைவு உள்ளது. தவத்திரு. மதுரைஆதீனம் அவர்கள் அவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக ஒரு கூட்டத்தில் பேசக் கேட்டுள்ளேன்.) 

   போப் அடிகளாரின் தொண்டினை நினைவுகூரும் வகையில் 1906-ஆம் ஆண்டு "இராயல் ஏசியாட்டிக் சொசைட்டி' எனும் அமைப்பு அவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டியது. போப் அடிகளாரிடம் பால்மர், மாக்சுமுல்லர், மானியர் வில்லியம்சு, கவிஞர் பிரெளனிங் முதலானவர்கள் பழகி, நண்பர்களாக விளங்கினர். 

 1908 பிப்ரவரித் திங்கள் ஏழாம் நாள் வெள்ளிக்கிழமை போப் அடிகளார் உலாச் சென்று திரும்பியதும் குளிர் தாக்கியதுபோல் தோன்றியது. அதுவே நோயின் அறிகுறியாக அமைந்தது. 11-ஆம் நாள் செவ்வாய்க் கிழமை தம் உலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார். 

 தம்மை ஒரு தமிழ் மாணவராகவே சொல்ல விரும்பிய போப் அடிகளாரின் புகழ் தமிழ் வாழும் காலம் வரை நின்று நிலவும்.