நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஜூலை, 2015

அரியலூர்ப் புத்தகத் திருவிழா-2015




தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கமும்,  நேஷ்னல் புக் டிரஸ்ட்டும் இணைந்து அரியலூர் மாநகரில் அரியலூர்ப் புத்தகத் திருவிழா-2015 என்னும் பெயரில் அரியதொரு புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. சூலை 17 முதல் சூலை 26 வரை இந்தப் புத்தகக் கண்காட்சி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டுத்திடலில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

செம்மொழி நிறுவனத்தில் சீரிய பணியாற்றிய பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் பெரும் முயற்சியில் இந்தப் புத்தகக்கண்காட்சி நடைபெற உள்ளது. முதல்நாள் மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் தொடக்கவிழா நிகழ்வில் மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் விழாவினைத் தொடங்கிவைத்துச் சிறப்புப் பேருரையாற்றுகின்றார்.

திரு. சீனி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு. எ. சரவணவேல்ராஜ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையுரையாற்றுகின்றார். திரு. சந்திரசேகர் சாகமூரி இ.ஆ.ப. அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகின்றார். திரு. மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கல்வியாளர்கள், தமிழறிஞர்கள், திரைத்துறைக் கலைஞர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். உடையார்பாளையம் அரண்மனை, அரியலூர் அரண்மனை சார்ந்த அரசகுடியினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அரியலூர் மாவட்டம் கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும், தொழில் முனைவோர்களும் நிரம்பிய ஊர். இவ்வூரில் நடைபெறும் புத்தகத் திருவிழா மாணவர்கள், பொதுமக்களுக்குப் பெரும் பயன் நல்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரியலூருக்குத் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், பெரம்பலூர், சிதம்பரம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து பேருந்துகளில் பயணம் செய்யலாம். அதுபோல் சென்னை - திருச்சிராப்பள்ளி தொடர்வண்டிகள் அனைத்தும் அரியலூரில் நின்று போகும்.

திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டம் சார்ந்த பொதுமக்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இந்தப் புத்தகத் திருவிழாவை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.


மேலும் விவரங்களுக்கு: அரியலூர்ப் புத்தகத் திருவிழாவின் இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

வியாழன், 10 டிசம்பர், 2009

புதுச்சேரியில் 13 ஆம் தேசியப் புத்தகக் கண்காட்சி

புதுச்சேரியில் 13 ஆம் தேசியப் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இடம்: வேல்.சொக்கநாதன் திருமண மண்டபம்,புதுச்சேரி
நாள்: திசம்பர் 18-27

கண்காட்சியில் 94 முன்னணிப் பதிப்பாளர்களின் அரங்குகள் இடம்பெற உள்ளன.
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழ்,ஆங்கிலம்,இந்தி,பிரஞ்சு மொழி நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

உருவா 200-00 மேல் நூல் வாங்குபவர்களுக்குப் பரிசு அட்டை வழங்கப்படும்.
கல்வி நிறுவனங்களுக்கு உரிய கழிவு வழங்கப்படும்.
ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

18.12.2009 மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் தொடக்கவிழா புதுச்சேரி அரசின் கூட்டுறவுத்துறையின் அமைச்சர் மாண்புமிகு மு.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும். இவ் விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமிகு வெ.வைத்தியலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.மேனாள் கல்வியமைச்சர் திரு க.இலட்சுமிநாராயணன் அவர்கள் முன்னிலையுரையாற்றுகிறார்.தோழர் இரா.விசுவநாதன் அவர்கள் வாழ்த்துரையும் திருவாட்டி பி.தமிழரசி அவர்கள் பாராட்டுரை வழங்கவும் உள்ளனர்.

25.12.2009 இல் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டினன் அவர்கள் சிறப்புரையாற்றவும் மேனாள் கல்வியமைச்சர் திரு.க.இலட்சுமி நாராயணன் அவர்கள் தலைமை தாங்கவும் உள்ளனர்.

27.12.2009 இல் புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழா சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.கே.ஆர்.அனந்தராமன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

அனைவரும் கலந்துகொண்டு கண்காட்சியில் தேவையான நூல்களை வாங்கலாம்.


ஏற்பாடு
புதுச்சேரி கூட்டுறவுப் புத்தகச் சங்கம்,புதுச்சேரி-8
தொடர்புக்கு 98423 30358,94447 76733

கண்காட்சி நேரம்
அலுவலக நாளில் பிற்பகல் 2.00-முதல் இரவு 9.00 மணி வரை
விடுமுறை நாளில் முற்பகல் 11.00-முதல் இரவு 9.00 மணிவரை