ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

மலேசிய இதழியல்: பதிப்பாளர் வே. கிருஷ்ணன்

 


பதிப்பாளர் வே. கிருஷ்ணன் 

[மலேசியாவில் திருமகள் அச்சகத்தை நடத்திய தமிழாசிரியர் சி. வேலுசுவாமியின் தலைமகனார் வே.கிருஷ்ணன் ஆவார். இவர் திருமகள், பக்தி இதழின் வெளியீட்டாளராக விளங்கியவர். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு மலேசியாப் பதிப்பில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்து, மொழிபெயர்ப்புச் செய்திகளை அவ்விதழுக்கு எழுதி வழங்கியவர் (1970-1974). விளையாட்டு, திரைப்படச் செய்திக் கட்டுரைகளையும் எழுதியவர். மலேசியப் பதிப்பு வரலாற்றில் இவர்தம் பணிகள் நினைவுகூரப்படும் தரத்தினவாகும்]. 

மலேசியாவுக்கு நான் செல்லும்பொழுது மகிழ்ச்சியுடன் சந்திக்க நினைக்கும் நண்பர்களுள் பதிப்பாளர் வே. கிருஷ்ணன் அவர்கள் முதன்மையானவர். இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும் தமிழறிஞருமான சி. வேலுசுவாமி அவர்களின் தலைமகனார் ஆவார். 

மலேசியாவில் வாழ்ந்த சி. வேலுசுவாமி அவர்களின் தமிழ்ப்பணியை அவரின் மறைவுக்குப் பிறகே என்னால் அறியமுடிந்தது. அன்பர் வேங்கடரமணி அவர்கள் வழியாக வேலுசுவாமி குறித்த விவரங்கள் எனக்குக் கிடைத்தன. சி. வே. அவர்கள் திருக்குறளுக்கு உரை வரைந்த பெருமைக்குரியவர். இவர்தம் உரை குறித்து ஒரு அறிமுகக் கட்டுரையைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியமையும், இந்து தமிழ் நாளிதழில் வேலுசுவாமியாரின் இலக்கியப் பங்களிப்பினை அறிமுகம் செய்து ஒரு அறிமுகக் கட்டுரையை எழுதி வெளியிட்டமையும் நெஞ்சில் நிலைபெற்றுள்ளன. இப்பணிகளை அறிந்த வேலுசுவாமியாரின் மகனார் வே. கிருஷ்ணன் அவர்கள் நான் மலேசியாவுக்குச் செல்லும்பொழுதெல்லாம் என்னைக் கண்டு உரையாடுவதும் உயர்தர உணவகங்களுக்கு அழைத்துச் சென்று விருந்தோம்பி என்னை அனுப்பிவைப்பதும் வழக்கமாகும். சிலவாண்டுகளுக்கு முன்னர் வேலுசுவாமியாரின் நூல்கள் சிலவற்றை அஞ்சலில் அனுப்பிப் படித்துப் பார்க்குமாறு கூறியதை நன்றியுடன் இன்றும் போற்றுகின்றேன். வேலுசுவாமியார் தொடங்கி நடத்தி, வே. கிருஷ்ணன் அவர்களின் மேற்பார்வையில் நடந்த திருமகள் அச்சகத்தை ஒருமுறை சென்று பார்த்தமையும் நினைவுக்கு வருகின்றது. இவை யாவும் எனக்கும் கிருஷ்ணன் ஐயாவுக்கும் இடையில் அமைந்த அன்பினை வெளிப்படுத்தும் சில சான்றுகளாகும். 

சிலவாண்டுகளுக்கு முன்னர் மலேசியா செல்லும்பொழுது என் வருகையை அவருக்குத் தெரிவித்திருந்தேன். தாம் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வெளியில் அதிகம் செல்வதில்லை எனவும் எனவே இந்த முறை தங்களைச் சந்திக்க வாய்ப்புக் குறைவு என்பதுபோல் எனக்குத் தகவல் தெரிவித்திருந்தார். எனினும் என் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டு, தம் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் என்னைச் சந்திக்க வந்து, வழக்கம்போல் என்னை அழைத்துச் சென்று உணவருந்த வைத்த அப்பெருந்தகையின் அன்புக்கு இணை ஏது?.

மு.இளங்கோவன், வே.கிருஷ்ணன் 

தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைத் தேடி ஒருமுறை மலேசியாவுக்குச் சென்றபொழுது வே. கிருஷ்ணன் அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது அவரின் பணிகளை அறியும் நோக்கில்  வாழ்க்கைக் குறிப்பினை எனக்கு விடுத்துவைக்குமாறு சொன்னேன். அப்பொழுது நடைபெற்ற உரையாடலில், தாம் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு இதழில் மலேசியப் பதிப்பின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய (1970 முதல் 1974 வரை) தம் பட்டறிவைப் பகிர்ந்துகொண்டார். எனக்கு வியப்பு மேலிட்டது. தமிழ் முரசு அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். நேரக் குறைவின் காரணமாக விரிவாக எங்கள் உரையாடல் அப்பொழுதுத் தொடர இயலாமல் போனது. மலேசியப் பயணத்தை அன்றைய நாளில் முடித்தக் கையுடன் சிங்கப்பூருக்கு அப்பொழுது செல்ல நேர்ந்தது. 

சிங்கப்பூரில் தங்கியிருந்தபொழுது தமிழ்முரசு அலுவலகம் சென்று தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் (கோலாலம்பூர்) நூலினை ஆசிரியர் த. இராஜசேகர் அவர்களிடம் கையளிக்க நினைத்தேன். செம்மொழி இதழாசிரியர் அண்ணன் திரு. எம். இலியாஸ் அவர்களும் மக்கள் மனம் ஆசிரியர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களும் சந்திப்புக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். அவர்களும் தமிழ் முரசு அலுவலகத்திற்கு உடன் வந்து உதவியமை - உரையாடியமை என் வாழ்வின் இனிய பொழுதுகளாகும்.

 

எம். இலியாஸ் த. இராஜசேகர், மு.இளங்கோவன், பிச்சினிக்காடு இளங்கோ

இர்ஷாத் முஹம்மது, இராஜசேகர், மு.இளங்கோவன், பிச்சினிக்காடு இளங்கோ

 மு.இளங்கோவன், தமிழ் முரசு ஆசிரியர் த. இராஜசேகர்


மு.இளங்கோவன், தமிழ் முரசு ஆசிரியர் த. இராஜசேகர்

தமிழ் முரசு ஆசிரியர் த. இராஜசேகர் அவர்கள் எங்கள் வருகையை அறிந்து,  வாயிலில் வந்து வரவேற்று அன்புடன் அழைத்துச் சென்று உரையாடியமை என் வாழ்வில் தமிழ் தந்த பேறாக நினைக்கின்றேன். அந்நேரத்தில் தமிழ்முரசின் தமிழ்த்தொண்டு என்ற பெயரில் நூல் வெளியிட்டுள்ள நெல்லை இரா. சண்முகம் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டேன். தமிழ் முரசு ஆசிரியர் த இராஜசேகர் அவர்கள் மிக மகிழ்ந்து, தமிழ் முரசு இதழ் நூற்றாண்டை நோக்கி நடையிடும் இதழ் எனவும், இதில் தொடக்கக் காலத்தில் பணிபுரிந்தவர்களின் விவரங்கள் ஒவ்வொன்றாக இப்பொழுது கிடைத்துவருகின்றது எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தமிழ் முரசுவின் சிறப்பு வெளியீடுகளை எனக்குப் பரிசாக வழங்கி மகிழ்ந்தார்கள். அந்த நேரத்தில் நான் மலேசியாவில் தமிழ் முரசு இதழின் செய்தி ஆசிரியராக 1970 முதல் 1974 வரை  பணியாற்றிய வே. கிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தமை பற்றியும், தமிழ் முரசு இதழுக்கு அமைந்த அவரின் மொழிபெயர்ப்புப் பங்களிப்புகளையும் பகிர்ந்துகொண்டேன். இயன்றால் வே. கிருஷ்ணன் குறித்த விவரங்கள் கிடைத்தால் அனுப்பிவைக்கின்றேன் என்று கூறித் தமிழ் முரசு ஆசிரியரிடமிருந்து விடைபெற்று மீண்டேன். காலங்கள் உருண்டோடின. 

கடந்த ஆறு திங்களுக்கும் மேலாக வே. கிருஷ்ணன் அவர்களைக் குறித்த விவரங்களைக் கேட்டும் அவர்களின் உடல்நலத் தளர்ச்சியால் எனக்கு அனுப்பிவைக்க அவரால் இயலவில்லை. சில திங்களுக்கு முன்னர் மீண்டும் வே. கிருஷ்ணன் அவர்களை நேரில் கண்டு உரையாடும் வாய்ப்பு அமைந்தது. தம் தந்தையார் குறித்து ஐந்நூறு பக்க அளவில் சிறப்பு மலர் ஒன்று வெளியிட உள்ளதாகத் தெரிவித்து, அம்மலரைப் பார்வையிட்டு, வாழ்த்துரை வழங்குமாறு தெரிவித்தார்கள். தமிழகம் திரும்பிய பிறகு சிறப்பு மலரின் மென்படி மின்னஞ்சலில் வந்தது. படியெடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அன்பு மேலீட்டால் அவர்களின் கட்டளையை நிறைவேற்றும் வகையில் மலரைச் செப்பமிட்டு, வாழ்த்துரையுடன் அஞ்சலில் அவருக்கு அனுப்பிவைத்தேன். அது தொடர்பில் உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது, வே. கிருஷ்ணன் அவர்கள் மலேசிய இதழியல் வரலாற்றில் ஒரு முதன்மையான ஆளுமை என்பதை மீண்டும் அறிந்துகொண்டேன். பதிப்புத்துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பட்டறிவு பெற்றவர் என்பதையும் தெரிந்துகொண்டேன். 

வே. கிருஷ்ணன் அவர்களின் தந்தையார் சி. வேலுசாமி குறித்த சிறப்பு மலர் வெளிவந்தால் மலேசியாவில் வெளிவந்த பல இதழ்களைப் பற்றியும் அவற்றைப் பொறுப்பேற்று நடத்திய இதழாசிரியர்கள், அச்சகங்கள் குறித்த விவரங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். உண்மைகளைக் கண்டறிந்து உலகுக்கு வெளிப்படுத்தும் ஆய்வறிஞர்கள் குறைந்துவரும் தமிழகச் சூழலில் எனக்கு உரையாடக் கிடைத்த வே. கிருஷ்ணன் அவர்களிடம் பெற்ற செய்திகளை இங்குப் பதிந்துவைக்கின்றேன். 

வேலுசுவாமி கிருஷ்ணன் 

வே. கிருஷ்ணன் அவர்கள் 05. 12. 1947 இல் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பானில் வாழ்ந்த சி. வேலுசுவாமி, மு. இலெட்சுமி ஆகியோரின் தலைமகனாகப் பிறந்தவர். இவருடன் நாகேசுவரி, உமா மகேஸ்வரி, பாலச்சந்திரன், நந்தகுமார், செந்தமிழ்ச்செல்வி, முரளிதரன், ஜோதிமலர் ஆகியோர் உடன்பிறப்புகளாகப் பிறந்தனர். 

வே. கிருஷ்ணன் அவர்கள் இளம் அகவையில் ஆங்கிலப் பள்ளிகளில் பயின்று ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவராக விளங்கியவர். இவருக்குத் தமிழ், ஆங்கிலம், மலாய் மொழி நன்கு தெரியும். தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் உள்ள La Salle பள்ளியில் பயின்றவர். இடைநிலைக் கல்வியை  St John’s Institution – இல் பயின்றவர். 1963 இல் இளநிலைக் கல்வியியல் சான்றிதழ்ப் படிப்பினையும் (Lower Certificate of Education), 1965 இல் முதுநிலை கேம்பிரிட்ஜ் படிப்பினையும் (Senior Cambridge) முடித்தவர். 1967 இல் உயர்நிலைச் சான்றிதழ்ப் படிப்பைப் படித்து முடித்தவர் (Higher School Certificate). படிப்பு நிறைவுற்றதும் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி ஆசிரியராகவும், தற்காலிக ஆசிரியராகவும் மூன்றாண்டுகள் பணியாற்றியவர். 

தமிழ் முரசு அலுவலகத்தில் ஏதேனும் பணிபுரியலாம் என்று சென்று வேலை கேட்டவருக்கு, அப்பொழுது தமிழ் முரசுவின் மலேசியாப் பதிப்பின் ஆசிரியராக இருந்த இரமாகிருஷ்ணன் அவர்கள் ஆங்கிலத்தில் இருந்த சில செய்திகளைத் தமிழில் பெயர்த்து வழங்குமாறு வே. கிருஷ்ணனிடம் கூறினார். இவரும் அதனை மறுக்காமல் செய்தார். அந்தச் செய்திகள் நாளிதிழில் இடம்பெறத் தொடங்கின. அப்பொழுது மொழிபெயர்ப்புப் பிரிவில் இருந்த திரு. கேசவன் அவர்கள் வே. கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு ஆற்றலை அறிந்து, ஆலோசனைகள் வழங்கி, தமிழ் முரசு இதழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடுத்தினார். செய்திக் கட்டுரைகள் எழுதவும், முதன்மை விருந்தினர்களைச் சந்திக்கும் செய்தியாளர் சந்திப்புகளுக்குச் செல்லவுமாகத் தமிழ் முரசுவில் இவரின் பணி மிகச் சிறப்பாக இருந்தது. அவ்வகையில் இந்தியக் குடியரசுத் தலைவர் வி.வி. கிரி மலேசியாவுக்குச் சென்றபொழுது (1973 மார்ச்சு 4 முதல் 09.03.1973 வரை) அவரின் பயணம் குறித்த விரிவான செய்திகளை வெளியிடும் பொறுப்புக் கிருஷ்ணனுக்கு அமைந்தது. கோலாலம்பூரிலிருந்து பினாங்குவரை விமானத்தில் வி. வி. கிரியுடன் சென்ற செய்தியாளர் குழுவில் வே. கிருஷ்ணனும் இடம்பெற்றிருந்தார் என்பது இவரின் செய்தி சேகரிக்கும் திறனுக்குச் சான்றாகக் கொள்ளலாம்.

 

தமிழ் முரசு இதழில் வி.கிருஷ்ணன் செய்திக்கட்டுரை (09.03.1973)

   வே. கிருஷ்ணன் அவர்கள் மிகச் சிறந்த விளையாட்டு வீரர். கால்பந்து, இறகுப்பந்து விளையாடுவதில் பெரும் நாட்டம் கொண்டவர்.  எனவே இத்துறை சார்ந்த செய்திகளைத் தமிழ் முரசு இதழில் ஆர்வமாக எழுதி வெளிவரச் செய்தவர். 

அக்காலத்தில் இந்தியாவில் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் மலேசியாவுக்குச் சென்றால் அவர்களை நேர்கண்டு எழுதும் பணியையும் வே. கிருஷ்ணன் செய்துள்ளார். அவ்வகையில் "நடிகவேள்" எம். ஆர். இராதா, ஹேமமாலினி, வீணை வித்துவான் பாலச்சந்தர், எஸ். பி. பாலசுப்பிரமணியன், ஏ. எம் இராஜா, ஜிக்கி, சந்திரபாபு, சோ இராமசாமி, டனால் தங்கவேல் சரோஜா, சி.ஐ.டி. சகுந்தலா, ஆர் எஸ். மனோகர் (இலங்கேஸ்வரன் நாடகம்) முதலான கலைஞர்களைக் கண்டு உரையாடி செய்தி வெளியிட்டதை வே. கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கின்றார். 

மலேசியா, சிங்கப்பூரில் Shaw Brothers திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியிலும் திரையிடும் துறையிலும் முன்னணியில் இருந்தனர். இவர்களின் தலைமையகம் ஹாங்காகாக இருந்தது. பின்னர் 1930 அளவில் சிங்கப்பூரிலும் இவர்களின் தொழில் விரிவடைந்தது. இவர்கள் மலேசியாவின் புகழ்பெற்ற ஊர்களான கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு, சோகூர்பாரு முதலான ஊர்களில் திரையரங்குகளைக் கட்டித் திரைப்படங்களை வெளியிடும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இவர்கள் பத்திரிகையாளர்களுக்குத் திரைப்படத்தின் முதல் காட்சியைத் திரையிட்டுக் காட்டுவர். அவ்வாறு காட்டப்படும் படங்களைப் பார்த்து, வே. கிருஷ்ணன் பல திரைப்படங்களுக்கு அறிமுகம் (விமர்சனம்) எழுதியுள்ளார். அவ்வகையில் கோலாலம்பூரில் இருந்த இந்துஸ்தான் தியேட்டர் புகழ்பெற்ற திரையரங்கமாகும். 

சிங்கப்பூரிலிருந்து Indian Movi News என்ற பெயரில் திரைப்படச் செய்திகளைத் தாங்கிய இதழ் வெளியானது. அதன் ஆசிரியர் சர்மா என்பவர் ஆவார். செய்தித்தாளின் பாதிப்பகுதித் தமிழிலும் மீதிப் பகுதி ஆங்கிலத்திலும் இருக்கும். இந்த நாளிதழைத் திரைப்பட ஆர்வலர்கள் விரும்பிப் படிப்பார்கள். இதுபோன்ற இதழ்கள் வே. கிருஷ்ணன் அவர்களுக்குத் திரைத்துறைச் செய்திகளை எழுதுவதற்கு முன்மாதிரி இதழ்களாகப் பயன்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து வெளிவரும் பல்வேறு இதழ்களைப் படிக்கவும் உலகச் செய்திகளைத் தெரிந்துகொள்ளவும் வே. கிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழ்முரசு இதழ்ப்பணி பேருதவியாக இருந்துள்ளது. 

தமிழ் முரசு மலேசியப் பதிப்பு இதழில் இடம்பெற்ற திரைத்துறைச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் முதலியவற்றை எழுதுவதும், இராய்டர் நிறுவனம் ஆங்கிலத்தில் அனுப்பும் பன்னாட்டுச் செய்திகளைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்குவதும் வே. கிருஷ்ணனின் பணியாக இருந்தது. அதுபோல் மலேசியாவில் வெளியான Star, State Echo, State Times முதலான ஆங்கில நாளேட்டுச் செய்திகளைப் படித்தும் தேவையான செய்திகளை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்தவர். வே .கிருஷ்ணன் தமிழ்முரசு மலேசியப் பதிப்பு இதழில் அக்காலத்தில் பணியாற்றிய இராமகிருஷ்ணன், மொகைதீன், இராஜா, மு. சு. மணியம், கேசவன் முதலான பத்திரிகையாளர்களை நன்றியுடன் நினைவுகூர்கின்றார். 

வே. கிருஷ்ணன் அவர்கள் 1969 இல் பார்வதி அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மக்கள் செல்வமாக வாய்த்தார். 

தமிழ் முரசு இதழிலிருந்து விலகியதும் வே. கிருஷ்ணன் அவர்கள் தம் தந்தையார் நடத்தி வந்த அச்சுக்கூடத்தின் பொறுப்பினை ஏற்றார். தந்தையார் விரும்பியவாறு திருமகள், பக்தி முதலான இதழ்களின் ஆசிரியராகவும் இருந்து இதழினைத் தரமுடன் நடத்தினார். கையால் அச்சுக் கோர்க்கும் முறையிலிருந்து அச்சுத்தொழில் கணினித் துறைக்கு மாறிய பொழுது, கணினி வசதியுடைய அச்சகமாகத் தம் அச்சகத்தை மாற்றினார். பாரதி, ஸ்ரீலிபி முதலான எழுத்துருக்களைப் பயன்படுத்தி, அழகிய வண்ண அச்சில் தாம் நடத்திய இதழ்களை வே. கிருஷ்ணன் தொடர்ந்து வெளிக்கொண்டு வந்தார். அதுபோல் மலேசியாவில் வெளியிடப்பட்ட கோவில் அழைப்பிதழ்கள், சிறப்பு மலர்கள், பள்ளிப் பாட நூல்களையும், பல்கலைக்கழகத்தின் கருத்தரங்கக் கட்டுரைகளையும் அச்சிட்டு, மலேசியாவில் பதிப்புத்துறையில் புகழ்பெற்ற பதிப்பாளராக வே.கிருஷ்ணன் விளங்கி வருபவர். இவர்தம் மேற்பார்வையில் மலேசியாவில் நூற்றுக்கணக்கான நூல்கள் திருமகள் அச்சகத்தின் உதவியால் வெளிவந்துள்ளன. முதுமையும் உடல்தளர்வும் பணிசெய்ய விடாமல் தடுத்தாலும் தம்மால் இயன்ற அச்சுப் பணிகளைத் தொடர்ந்து செய்து, பிறருக்கு உதவியாக வாழ்ந்துவருகின்றார் இந்தப் பதிப்புத்துறை ஆர்வலர்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2026

திருக்குறள் தொண்டர், கவிஞானி மு. ஞானமூர்த்தி

 

திருக்குறள் தொண்டர் மு. ஞானமூர்த்தி 

    [மு. ஞானமூர்த்தி அரியலூர் மாவட்டம், கோட்டைக்காட்டில்  19. 11. 1961 இல் பிறந்தவர். திருக்குறள் கூட்டமைப்பின் தலைவராக விளங்குபவர். திருக்குறள் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுபவர். பல்வேறு மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை வாழ்வு வாழ்ந்தவர். அரிமா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பொறுப்பு வகிப்பவர். மாணவர்களுக்குத் திருக்குறள் மனப்பாடப் போட்டிகள் நடத்திப் பரிசு நல்குபவர். கம்போடியா, பிரான்சு, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தவர்]

விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மறுமலர்ச்சி மாநாட்டுக்குச் சென்றபொழுது (02. 08. 2026)  திருக்குறள் அறிஞர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. திருக்குறள் தூதர் பா. வளன் அரசு ஐயா, மணற்பாறைப் புலவர் நாவை. சிவம் ஐயா, வை. மு. கும்பலிங்கனார், ஆ. நெடுஞ்சேரலாதன், முனைவர் க. பசும்பொன், சு. குமணராசன் (மும்பை), நல்லாமூர் முனைவர் கோ. பெரியண்ணன் உள்ளிட்ட மூத்த அறிஞர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அமைந்தமை எனக்குப் பெரும் மகிழ்வைத் தந்தது. 

எங்களூரின் திருக்குறள் தொண்டர் சி. பன்னீர்செல்வம் ஐயாவின் வீறுநிறைந்த உரையையும் அந்தத் திருக்குறள் மாநாட்டில் செவிமடுத்து மகிழ்ந்தேன். திருக்குறளைப் பரப்பவும் பயிலவும் இவர்கள் மேற்கொண்டுவரும் பெரும் முயற்சிகளும் திட்டங்களும் எனக்கு வியப்பினை ஏற்படுத்தின. அகவை முதிர்ந்த நிலையிலும் பலரும் திருக்குறளைப் பயின்று, நன்னோக்கில் உலகுக்கு முன்மொழியும் செயலைத் தொடர்ந்து செய்து வருவதை அறிந்து, இப்பெருமக்களை அற்றைநாளில்  நெஞ்சாரப் போற்றி மகிழ்ந்து கொண்டிருந்தேன். 

திருக்குறள் சார்ந்து புதுவை மாநிலத்தில் நடைபெற்றுவரும் செயல்பாடுகளைச் சிறிது நேரம் அறிஞர்களுடன் மேடையில் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கும் அமைந்தது. அப்பொழுது மேடையில் வீற்றிருந்து, திருக்குறள் மறுமலர்ச்சி மாநாட்டை வழிநடத்திக்கொண்டிருந்த திருக்குறள் தொண்டர் மு. ஞானமூர்த்தி அவர்களின் வினைப்பாடுகளை உற்றுநோக்கியவாறு இருந்தேன். அனைவரையும் மேடையில் அறிமுகப்படுத்தி உரையாற்றும் அவர்தம் பாங்கும், விரல்நுனியில் தாம் சார்ந்துள்ள அமைப்பின் விவரங்களையும், தம்முடன் இணைந்து பணியாற்றும் பெருமக்களின் தகுதிப்பாடுகளையும் அறிந்துவைத்துள்ளள பெருந்திறமையும் கண்டு மலைப்புற்றேன். 

மு. ஞானமூர்த்தியாரிடம் உரையாடியபொழுது அவர்களின் திருக்குறள் ஈடுபாடு புலப்பட்டது. திருக்குறளுக்காகத் தாம் நண்பர்களுடன் இணைந்து செய்துவரும் திருகுறள் கூட்டமைப்புப் பணிகளை ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார். திருவாளர் மு. ஞானமூர்த்தி போலும் உலகம் முழுவதும் திருக்குறளுக்கு உழைக்கும் தொண்டர்கள் பலர் இருப்பினும் இவர்கள் ஆற்றிவரும் பெரும்பணிகள் பெருந்திரள் மக்களுக்குத் தெரியாமல் உள்ளமை வருத்தமளிக்கும் செய்தியாகும். இவர்களைப் போலும் உண்மைத் தமிழ்த்தொண்டர்களைக் காணும்பொழுது அவர்களை ஊக்கப்படுத்திப் போற்றுவது, இத் தமிழ்ச்சமூகத்துக்கு ஆக்கமாக அமையும். எனவே, கவிஞானி மு. ஞானமூர்த்தி அவர்களின் தமிழ் வாழ்வையும் அரும்பணிகளையும், திருக்குறள் ஈடுபாட்டினையும் உலகத் தமிழர்களுக்கு நினைவூட்டுவதில் மகிழ்கின்றேன். 

மு. ஞானமூர்த்தி அவர்கள் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் வாலசௌந்திரசோழபுரம் என்னும் கோட்டைக்காட்டில்  19. 11. 1961 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் இர. முருகேசன் – மு. ஞானாம்பாள் ஆவர். மு. ஞானமூர்த்தி அவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆலத்தியூர் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை முதுகுளம் ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்றவர். ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பெண்ணாகடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று பட்டம்பெற்றவர். தம் இளமைக்காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்து, மக்கள் பணியாற்றியவர். தம் பகுதியில் வாழும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டபொழுது நெய்வேலி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், விருத்தாசலம் முதலிய பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திப் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தவர். தமிழகத்தின் புகழ்பெற்ற சிறைக்கோட்டங்களை அறக்கோட்டமாக்கியவர். 

மு. ஞானமூர்த்தி அவர்கள் 21. 06. 1987 இல் திருமணம் செய்துகொண்டவர். இவரின் வாழ்க்கைத் துணைவியார் பெயர் ஞா. பொற்கொடி என்பதாகும் இவர்களுக்கு மூன்று பெண்கள் மக்கள் செல்வங்களாக வாய்த்துள்ளனர். அனைவரும் நன்கு கற்று உயர்நிலையில் உள்ளனர். 

. ஞானமூர்த்தி அவர்கள் போக்குவரத்துத் தொழிலில் (Transport) ஈடுபட்டு, பல குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்துவருபவர். 

மு. ஞானமூர்த்தி இலக்கியம், கவிதை, கட்டுரை, நாவல், ஆய்வு, மேடைப் பேச்சு, கருத்தரங்கம், கருத்துக்களம் (YouTube) நிகழ்வுகள், விளையாட்டு மற்றும் சமூகப்பணி ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவர். 

தொடர்புடைய தமிழ் அமைப்புகள் 

                •             உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

                •             பகுத்தறிவு இயக்கம்

                •             உலகத் தமிழ் இலக்கியச் சிறகம் — அமெரிக்கா

                •             அந்தமான் தமிழர் சங்கம் — அந்தமான்

                •             ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் — மலேசியா

                •             கம்போடியா தமிழ்ச் சங்கம் — கம்போடியா

                •             இந்தோனேசியா தமிழ்ச் சங்கம் 

முதலான அமைப்புகளுடன் இணைந்து, தமிழ்ப்பணியாற்றி வருபவர். 

மு. ஞானமூர்த்தி அவர்கள்  2015 ஆம் ஆண்டு முதல் திருக்குறள் பரப்புகைப் பணியில் ஆர்வமுடன் உழைத்து வருபவர். தம் தந்தையார் நினைவாக ஆண்டுதோறும் தம் பகுதியில் உள்ள மாணவர்கள் நூறு திருக்குறளை மனப்பாடமாகச் சொன்னால் அவர்களுக்கு ஆயிரம் உருவா பரிசு தருவதை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 ஆம் நாளில் செய்வருகின்றார்.  ஆண்டுதோறும் பல மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு திருக்குறளை ஒப்புவித்துப் பரிசுபெற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை மூன்று மாவட்டங்களை ஒன்றாக இணைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பரிசு நல்கி ஊக்குவிப்பதையும் அதுபோல் 100 விழுக்காடு தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்குப் பரிசும் சிறப்பும் நல்குவதையும் நோக்கமாக கொண்டு தம் தோழர்களுடன் செயல்பட்டு வருபவர். 

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திருக்குறள் கூட்டமைப்பில் இணைந்து, அதன் தலைவராகத் தற்பொழுது இருந்து திருக்குறள் பணிகளைத் தொய்வின்றிச் செய்துவருகின்றார். அரிமா சங்க அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டு, பொதுத்தொண்டில் ஆர்வமுடன் செயல்பட்டு வருபவர். 

மு. ஞானமூர்த்தி அவர்கள் தம் இலக்கியப் பங்களிப்பைப் பிரான்சு, கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், சீனா முதலிய அயல்நாடுகளிலும் வழங்கியவர். அந்தமானில் இவர் ஆற்றிய உரை  அந்தமான் தமிழர்களால் விரும்பிக் கேட்கப்பட்டது. 

1.       தமிழ் மொழி மற்றும் திருக்குறள் தொடர்பான கோரிக்கைகள் 

“தமிழை மத்திய அரசின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்; திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்; சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 30-08-2024 அன்று புது தில்லியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியவர். 

12-12-2024 அன்று, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கப் பேரணிகள் நடத்தப்பட்டன. 

08-02-2025 அன்று, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று உரையாற்றியவர்.

உலகத் திருக்குறள் கூட்டமைப்பில் பணி: 

“மக்களிடம் செல்; மக்களிடம் கற்றுக்கொள்; மக்களுக்குத் தொண்டு செய்” என்ற தத்துவத்தின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு, சனவரி முதல் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு உழைத்து வருபவர். 

திருக்குறளில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வது, மாணவர்களிடையே திருக்குறள் ஆர்வத்தை வளர்ப்பது, பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது, தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கான நிகழ்வுகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொடர்ந்து செயலாற்றி வருபவர். 

சமூகப்பணி 

மு. ஞானமூர்த்தி பெண்ணாடம் அரிமா சங்கத் தலைவராக இருந்தபோது, 6,500 பள்ளி மாணவர்களுக்குக் கண் பரிசோதனை நடத்தி, பார்வைக் குறைபாடு கொண்ட 150 மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு இலவசக் கண் கண்ணாடிகள் வழங்கியவர். 

திருக்குறள் வகுப்புகள் 

கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம், திட்டக்குடி, புவனகிரி, வடலூர் உள்ளிட்ட ஊர்களிலும், சென்னை வில்லிவாக்கம், கோவை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மணலூர்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலும் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் இலவசத் திருக்குறள் வகுப்புகளை நடத்தி வருபவர். 

உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் சார்பில், ஆண்டுதோறும் மார்ச்சு மாதம் 8 ஆம் நாள் மகளிர் நாளினை முன்னிட்டு மகளிர் பட்டிமன்றம், மகளிர் கவியரங்கம் ஆகியவற்றை நடத்திச், சிறப்பாகப் பங்கேற்பவர்களுக்குக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருபவர். 

மு. ஞானமூர்த்தி அவர்கள் 10 முறை குருதிக்கொடை வழங்கியுள்ளார்.

 தற்போது வகிக்கும் பதவிகள் 

                1.  தலைவர் — உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

                2.   தலைவர் — பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள்  சங்கக் கூட்டமைப்பு

3.     மாவட்டத் தலைவர் — பன்னாட்டு அரிமா சங்கம், 3241G மாவட்டம்

                4.    தலைவர் — பெண்ணாகடம் SPD இறகுப்பந்து விளையாட்டுக் கழகம் 

மு. ஞானமூர்த்தி அவர்கள் தொடர்ந்து திருக்குறள் தொண்டாற்றித் தமிழுலகத்தின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன். 

பார்க்க: உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் இணையத் தளம்


செவ்வாய், 22 செப்டம்பர், 2026

நீதியரசர் சேது. முருகபூபதி

 

நீதியரசர்  சேது. முருகபூபதி

 [சேது. முருகபூபதி அவர்கள் புதுச்சேரியில் தலைமை நீதியரசராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இராமநாதlபுரத்தில் பிறந்த இவர் திருப்புகழ்ப் பாடல்களில் ஆழ்ந்த புலமையுடையவர். திருப்புகழ்ப் பாடல்கள் குறித்தும் அருணகிரிநாதரின் அருள் வாழ்வு குறித்தும் சொற்பொழிவாற்றுவதில் ஆற்றல் பெற்றவர். புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் விளங்கியவர். சட்டத்துறை சார்ந்த பணிகளில் ஆர்வமுடன் செயல்பட்டு, உழைத்து வருபவர்] 

புதுச்சேரியில் சமயத் தமிழை நினைவுகூரும் அமைப்புகளுள் அருள்மிகு அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றம் குறிப்பிடத்தக்க அமைப்பாகும். கடந்த முப்பத்தேழு ஆண்டுகளாக இத் திருப்புகழ் மன்றம் அளப்பரும் பணிகளை ஆற்றி வருகின்றது. திருப்புகழ் மன்றம் நடத்தும் ஆண்டு விழாக்களில் புகழ்பெற்ற அறிஞர்களை அழைத்துத் திருப்புகழ்ப் பாடல்கள் குறித்துப் பொழிவாற்றச் செய்வதும் அருணகிரிநாதரின் இசைத்தமிழ்ப் பணிகளை நினைவுகூர்வதும் இவ்வமைப்பினரின் பணிகளுள் குறிப்பிடத்தக்கவையாகும். அவ்வகையில் தவத்திரு கிருபானந்தவாரியார், டி. எம். சௌந்தரராஜன் முதலான பெருமக்கள் இத்திருப்புகழ் மன்றத்தின் மேடைகளை அணிசெய்த பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். தமிழகத்தின் பல்வேறு ஆதீனங்களின் குருபீடங்களும் இம்மன்றத்தின் விழாக்களில் கலந்துகொண்டு, திருப்புகழின் திறத்தினை எடுத்துரைத்துள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றத்தின் தோற்றுநராகவும், புரவலராகவும் நீதியரசர் சேது. முருகபூபதி பணிபுரிபவர். 

நீதியரசர் சேது. முருகபூபதி அவர்கள் 15.10.1941 இல் இராமநாதபுரத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர் திரு. சேதுராமநாத பிள்ளை – பொன்னுத்தாய் ஆவர். இவர்களின் முன்னோர் இராமநாதபுரம் அரண்மனையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்கள் ஆவர். 

சேது. முருகபூபதி அவர்கள் இராமநாதபுரம் சபா நடேச ஐயர் தொடக்கப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், இராஜா உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் திருச்சி, தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பினையும் பயின்ற பிறகு மதுரைக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பினை நிறைவுசெய்தவர். சென்னைச் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பினை முடித்த முருகபூபதி 1969 முதல் 1974 வரை இராமநாதபுரத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பின்னர்ப் போட்டித் தேர்வின் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1974 முதல் 1999 வரை புதுவை மாநிலத்தில் தலைமை நீதியரசராகப் பணியாற்றி, மிக முதன்மையான வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கிப் புகழ்பெற்றவர். 

இளமையிலேயே பக்தி ஈடுபாடு இருந்தபொழுதும், இவர் மாகே என்னும் ஊரில் நீதியரசராகப் பணியாற்றச் சென்றபொழுது நண்பர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய திருப்புகழ் நூல் இவர் வாழ்க்கையை மாற்றி அமைத்தது எனலாம். நாளும் ஒரு திருப்புகழைத் தொடர்ந்து படித்து, மனத்துள் இருத்திய முருகபூபதி அவர்கள் இதுவரை இவ்வாறு பன்னிரண்டு முறை தொடர்ந்து திருப்புகழைப் படித்து முடித்துள்ளதாகப் பகிர்ந்துகொள்கின்றார். 

திருப்புகழின் சிறப்புணர்ந்து, அருள்மிகு அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றம் என்னும் அமைப்பினை நண்பர்களின் ஒத்துழைப்புடன் நிறுவிப் புதுவையில் திருப்புகழ் பரப்பும் பணியினைத் தொடர்ந்து செய்துவருகின்றார். வாழ்வில் பல்வேறு இடர்ப்பாடுகள், இன்னல்கள், இழப்புகள் ஏற்பட்டாலும் திருப்புகழ்க் கல்வி இவருக்குத் துணையாக இருந்து, தாங்கிப் பிடித்துள்ளது. தங்கள் அறிவுச் செல்வங்கள் பக்திப் பனுவல்களில் பொதிந்து கிடைப்பதை தமிழ் மக்கள் அறிந்து அவற்றைக் கற்றுத் தெளிய வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து திருப்புகழ்த் தொண்டாற்றிவரும் சேது. முருபூபதி அவர்கள் தமிழகத்திலும் பிற நாடுகளிலும் திருப்புகழ் குறித்த அரிய பொழிவுகளை ஆற்றியுள்ளார். இலங்கை, மலேசியா, பிரான்சு முதலான நாடுகளுக்குச் சென்று திருப்புகழ்ச் சுவையை மக்கள் மனத்துள் பதியவைத்த பெருமை இவருக்கு உண்டு. 

திருவண்ணாமலை அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை முதலிய அமைப்புகளில் இணைந்து திருப்புகழ் மணம் பரவ, உழைத்துவரும் நீதியரசர் முருகபூபதி அவர்களின் தமிழ் இலக்கியப் பணி தொடரட்டும்!. 

சேது. முருகபூபதி பெற்ற விருதுகளும் சிறப்புகளும்: 

1.   திருப்புகழ்ச் செம்மணி, சிறுவாபுரி முருகன் அபிசேகக் குழு, சென்னை

2.   குருவருட் செல்வர், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நூற்றாண்டு விழாக் குழு, சாத்தூர்

3.   வள்ளல் பாண்டித்துரைத் தேவர் விருது, இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம்

4.   அருணகிரிச் செல்வர், தெய்வச் சேக்கிழார் மன்றம், புதுச்சேரி

5.   சைவச் செம்மல், பன்னிரு திருமுறை பன்னாட்டு ஆய்வு மாநாடு

6.   சன்மார்க்க அறநெறி ஆய்வறிஞர், சன்மார்க்கத் திருத்தொண்டத் தொகை சான்றோர் விருது

7.   அருள்மிகு அருணகிரிநாதர் விருது, சத்துவாச்சாரி, தெய்வச் சேக்கிழார் மன்றம்

8.    திருப்புகழ் அருட்செல்வர் விருது, திருப்புகழ்ச் சபை, மதுரை. 

 

### நன்றி: மு. அருள்செல்வம், புதுச்சேரி 

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

மொழிபெயர்ப்பாளர் முனைவர் த. சித்தார்த்தன்

 

முனைவர் த. சித்தார்த்தன் 

[முனைவர் த. சித்தார்த்தன் சென்னைத் தலைமைச் செயலகத்தில் எழுத்தராகவும், அனைத்து இந்திய வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். இன்று மொழிபெயர்ப்பாளராக அறியப்படுபவர். அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருபவர். சிலகாலம் தினமலர் நாளிதழில் பணியாற்றியவர். சாகித்ய அகாதெமி, தேசிய புத்தக அறக்கட்டளை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், தடாகம் பதிப்பகம், மணற்கேணி, நவ இந்தியா பதிப்பகம், இந்திய அரசின் புத்தக வெளியீட்டுப் பிரிவு முதலிய நிறுவனங்களுக்காகப் பல நூல்களை மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். சென்னையில் வாழ்ந்து வருகின்றார்] 

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் நான் ஈடுபட்டிருந்தபொழுது, அனைத்து இந்திய வானொலி நிலையம் (AIR) உரையாற்றுவதற்கு வழங்கும்  வாய்ப்புகள் பேருதவியாக இருந்தன. அவ்வாறு வானொலி நிலையம் சென்றபொழுது (1994 ஆம் ஆண்டளவில்) நிகழ்ச்சித் தயாரிப்பளாராக இருந்த த. சித்தார்த்தன் அவர்களைச் சந்திக்கவும், உரையாடவும் சூழல்கள் கனிந்தன. மாணவப் பருவத்தில் இருந்த என்னை அன்புடன் நடத்திய விதமும், மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கி ஊக்கப்படுத்திய விதமும் என் மனத்துள் நிழலாடுகின்றன. அதனால்தான் அப்பொழுது நான் பதிப்பித்த விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூலில் நன்றி என்ற பகுதியில் த. சித்தார்த்தன் அவர்களின் பெயரைப் பதிந்து, என் அன்பை வெளிப்படுத்தியிருப்பேன்(1995). 

த. சித்தார்த்தன் அவர்கள் சென்னை வானொலியில் பணியாற்றியபொழுது மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்த நினைவும் உள்ளது. தொலைபேசி வாயிலாக அவ்வப்பொழுது உரையாடுவது உண்டு. த. சித்தார்த்தன் அவர்களுடன் அமைந்த அத்தகைய உரையாடல்கள் வழியாக அவர்தம் மொழிபெயர்ப்புப் பணிகளை அறிந்து, அதுகுறித்து எழுதுவதற்கு உரிய காலத்தை எதிர்நோக்கியிருந்தேன். அவர்தம் தமிழ் வாழ்க்கை அமைதி நிறைந்தது. அவர்தம் பணிகள் தமிழுக்கு வளம் சேர்ப்பன. தமிழிலிருந்து ஆங்கில மொழிக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் அவர் வாரி வழங்கியிருக்கும் தமிழ்க்கொடை போற்றுதலுக்கு உரியன. இவர்போலும் அமைதியாகத் தமிழ்ப் பணியாற்றிவரும் அறிஞர்களைப் போற்றுவதும் பாராட்டுவதும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆக்கமாக அமையும். 

த. சித்தார்த்தன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில்  06.06.1957 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் ந. தங்கவேலு,  பட்டம்மாள் என்பனவாகும். தந்தையார் சாலைமேம்பாட்டுப் பணிக்காகச் சாலைச் சமனி உந்து (Road roller) ஓட்டும் ஓட்டுநராக இருந்தவர். அதனால் பல ஊர்களில் அவர் பணியாற்றும் வாய்ப்பு இருந்தது. அதனால் த.சித்தார்த்தன் அவர்கள் இளம் அகவை முதல் சுவாமிமலையை அடுத்துள்ள திருவலஞ்சுழி என்னும் ஊரில் வளர்ந்தவர். திருவலஞ்சுழியில் தொடக்கக் கல்வியும் சுவாமிமலையில் உயர்நிலைக் கல்வியும் பயின்றவர். தஞ்சாவூர் சரபோசி கல்லூரியில் இளம் அறிவியல் (விலங்கியல்) பயின்ற பின்னர் கும்பகோணம் அரசு கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவர்தம் பேராசிரியர்களாக மா. இராமலிங்கம் (எழில்முதல்வன்), கு.வெ. பாலசுப்பிரமணியன் முதலனாவர்கள் விளங்கினர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர். வ. செயதேவன் மேற்பார்வையில் இளம் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவுசெய்தவர். ஒன்றரை ஆண்டுகள் தினமலர் நாளிதழில் பணியாற்றிய பட்டறிவும் இவருக்கு உண்டு. 

தமிழ்நாடு தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற போட்டித் தேர்வெழுதித் சென்னைத் தலைமைச் செயலகத்தில் எழுத்தர் பணியில் இணைந்து ஏழாண்டுகளுக்கும் மேலாக எழுத்தராகப் பணியாற்றியவர். பின்னர் நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிகழ்ச்சித் தயாரிப்பாளராகத் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் 1992 இல் பணியில் இணைந்தவர். 1996 ஆம் ஆண்டு வரை அங்குப் பணியாற்றிய பிறகு 1997 முதல் 2003 வரை சென்னை வானொலியில் பணியாற்றியவர். 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை கோவை வானொலியில் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. அக்காலகட்டத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தம் முனைவர் பட்ட ஆய்வைப் பகுதிநேரமாக நிறைவுசெய்தவர். ஊட்டி வானொலியில் பணியாற்றிய பிறகு 2014 முதல் 2017 வரை மீண்டும் சென்னை வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது சென்னையில் வாழ்ந்துவரும் த. சித்தார்த்தன் முழுமையாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றார். 

சித்தார்த்தன் அவர்களின் வாழ்நாள் பணிகளை அரசுநிலையில் அமைந்த எழுத்தர் பணி, வானொலிப் பணி எனவும், ஆர்வமாக மேற்கொண்டுவரும் மொழிபெயர்ப்புப் பணி என்றும் வகைப்படுத்திக்கொள்ளலாம். 

த. சித்தார்த்தன் அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாதெமி, தேசிய புத்தக அறக்கட்டளை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், தடாகம் பதிப்பகம், மணற்கேணி, நவ இந்தியா பதிப்பகம், இந்திய அரசின் புத்தக வெளியீட்டுப் பிரிவு முதலிய நிறுவனங்கள் இவர்தம் நூல்களை வெளியிட்டுள்ளன. இவற்றுள் புதினம், இலக்கியம், சிறுகதைகள், தொன்மக்கதைகள், குடியரசுத் தலைவர்கள், ஆளுநர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தேச வரலாறு, உடற்பயிற்சி, சாகச விளையாட்டு, பணிக் கலாச்சாரம், அறிவியல், நடப்பில் இருந்துவரும் போக்குகள் முதலிய பொருண்மைகள் குறித்து இவர்தம் நூல்கள் உள்ளன. 

சவகர்லால் நேருவின் உலக சரித்திரம் என்னும் நூல் ஓ. வி. அளகேசன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1948 இல் வெளியிடப்பட்டது. அந்த நூலில் இடம்பெற்றுள்ள வடமொழி, ஆங்கில வழக்குச் சொற்கள் நீக்கப்பட்டு, பொருத்தமான தமிழ்மொழிச் சொற்கள் சேர்த்து, மறுசீரமைக்கப்பட்டு இவரால் இந்நூல் வெளியீடு கண்டுள்ளது. குன்றக்குடி அடிகளாரின் ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

மனத்தின் குரல் 

மாண்புமிகு இந்தியத் தலைமை அமைச்சரின் மனத்தின் குரல் நிகழ்ச்சியைத் தொடக்கம் முதல் கடந்த பத்து ஆண்டுகளாக மொழிபெயர்த்து வழங்கிய பெரும் பணியையும், சரிபார்க்கும் பணியையும் த.சித்தார்த்தன் செய்துவருகின்றார். 

மத்திய அரசின் திட்டம் மாத இதழின் அதிகாரப்பூர்வமற்ற ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளாகப் பங்களித்து வருகிறார்.

த. சித்தார்த்தன் எழுதிய - மொழிபெயர்த்த நூல்கள்: 

1.           சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல் - ஆனந்த் தெல்தும்ப்டே- (மொ.பெ) த. சித்தார்த்தன் 

2.       பெண் மருத்துவர்கள் சொல்லப்படாத கதைகள் - கவிதா ராவ் - (மொ.பெ) த. சித்தார்த்தன்

3.  தனித்திருக்கும் தீவுக் கூட்டம் - பங்கஜ் ஷெக்சாரியா - தமிழில் த. சித்தார்த்தன்

4.       நவபாரத சிற்பிகள்- பங்கிம் சந்திர சட்டர்ஜி, எஸ். கே. போஸ், 2026

5.       இந்திய விடுதலை இயக்க வரலாறு (நான்கு தொகுதிகள்) தாராசந்த், 2026

6. புனிதப் பசுவும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், பிரெடிரிக் ஜே.சிமுன்ஸ்,2025

7. பேச்சு சுதந்திரம் தேசிய வாதமும் தேசத் துரோகமும், நீதிபதி ஏ.பி.ஷா, மணற்கேணி, 2025

8.   திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு வ.வே.சு ஐயர் முன்னுரை (1916 இல் வெளிவந்த வ.வே.சு.ஐயரின் ஆங்கில முன்னுரைக்கு முதன்முதல் அமைந்த மொழியாக்கம்.)

9. தந்தையரும் தனயர்களும், குர்கன் கான்ஜியன், ஆர்மீனிய நாவலின் தமிழாக்கம், 2025 சனவரி

10. நிலைமாறும் தீவுகள், ஆங்கிலத்தில் பங்கஜ் ஷெஷாரியா, 2024

11. மனம் நிறைந்த மக்கள் சேவை, ஆங்கிலத்தில் எம் எம் இராஜேந்திரன்

12. உழைப்பு தரும் ஆனந்தம், ஆங்கிலத்தில் எஸ்.ஏ. சாப்ரே

13. தண்ணீர் (ஆசிய பசிபிக் நாடுகளில் தண்ணீர்பற்றி உலவுகின்ற கதைகள்), 2001

14. மரபணு சகாப்தம், ஆங்கிலத்தில் பிமன் பாசு, 2006

15. பூந்தென்றலோ வாழ்க்கை (ஈப்ரு மொழிச் சிறுகதைகள்), 2003

16. டாக்டர் ஜாகிர் உசேன், குருஷித் ஆலம்கான், 1998 

வெளிவர இருப்பவை: 

1.   கே.ஆர்.நாராயணன் வாழ்க்கைச் சித்திரம்

2.   உடற்பயிற்சியும் உடல்நலமும்

3.   சாகசப் பயணமும்

4.   நீலவானப் பேரரசு

5.   விவேகானந்தரின் கதை (பதிப்பாசிரியர் ரோமா சட்டர்ஜி)

6.   காவல்துறை விசாரணைகளில் அறிவியல்

7.   நீங்கள் கற்பனைகூட செய்திருக்க முடியாது, ஒப்பனையின் வரலாறு 

எழுதியுள்ள நூல்கள்: 

1.   அன்றாட வாழ்வில் அறிவியல்

2.   நம்மைச் சுற்றி, சூழலியல் கட்டுரைகள் அடங்கிய நூல்

3.   சூழல்மொழி - சுற்றுச் சூழல் கட்டுரைகள் – த. சித்தார்த்தன்

4.   உயிர்ச்சொல் (மேன்மை வெளியீடு) - த. சித்தார்த்தன்

5.   உதயணகுமார காவியம் பகுப்பாய்வு, 2026

6.   Probabilistic Orientation (English) Psychology 2026