புதன், 30 செப்டம்பர், 2020

ஆ. பிழைபொறுத்தான் மறைவு!

 

                            

                            ஆ.பிழைபொறுத்தான்

 தமிழ்த்தொண்டரும், திராவிட இயக்க உணர்வாளருமாகிய திரு. . பிழைபொறுத்தான் அவர்கள் இன்று (30.09.2020) காலை 7 மணிக்குக் கும்பகோணத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  ஆ. பிழைபொறுத்தான் அவர்கள் நெல்லை மாவட்டம் எட்டயபுரம் அடுத்த மேல முடிமண் என்ற சிற்றூரில் பிறந்தவர். தஞ்சை மாவட்டத்தில் ஊர்நல அலுவலராகப் பல ஊர்களில் பணிபுரிந்து, திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்தபொழுது விருப்ப ஓய்வு பெற்றவர். விடுதலை நாளிதழில் மெய்ப்புத் திருத்துநராகப் பலவாண்டுகள் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 நான் திருப்பனந்தாள் கல்லூரியில் முதுகலை மாணவனாகப் படித்துக்கொண்டிருந்தபொழுது அவர்தம் தொடர்பு ஏற்பட்டது. அன்று முதல் இந்த நேரம் வரை அவரின் தொடர்பு மிகச் சிறப்பாக இருந்தது. என் குடும்பத்தில் ஒருவராகவே ஐயா அவர்கள் விளங்கினார்கள். என் பல்வேறு தமிழ்ப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கியவர். புதுவை வாழ்க்கையில் என் பணிகளுக்கு உதவுவதற்காகவே குடந்தையிலிருந்து வருகைபுரிந்து, ஓரிருநாள் தங்கி, உதவி செய்தவர்கள். திரு. ஆ. பிழைபொறுத்தான் அவர்கள் இல்லாமல் நம் குடும்பத்தில் எந்த நிகழ்வும் நடைபெற்றதில்லை. அந்த அளவு அன்பும் பாசமும் கொண்ட பெருமகனார்.

 ஆ. பிழைபொறுத்தான் அவர்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களில் நல்ல பயிற்சியுடையவர். கவிஞர்கோ கோவை. இளஞ்சேரன் அவர்களிடம் தமிழ் கற்றவர். சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயணத்திலும் நல்ல புலமையுடையவர். சிலப்பதிகாரத்தைப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரிடம் பாடம் கேட்டவர். பேரறிஞர் ம.இலெ. தங்கப்பாவின் படைப்புகளில் ஈடுபாடு கொண்டவர். பகுத்தறிவுச் சிந்தனையுடைவர். திராவிட இயக்க உணர்வாளர்.

 தமிழ்த்தொண்டர் ஆ. பிழைபொறுத்தானை இழந்து வருந்தும் குடும்பத்தினர். நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.