செவ்வாய், 21 ஜூலை, 2015

மரபுக்கொரு தமிழியக்கன்


                                                             
                                                       

                          புதுச்சேரியில் புகழ்பெற்ற தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன் ஆவார். கவிஞரேறு வாணிதாசனாரின் அன்புக்குரிய மாணவர். இவர்தம் பாடல்கள் தமிழ்மரபு போற்றுவன. இவர் பற்றி முன்பும் எழுதியுள்ளேன். தம் ஆசான் திறம் நினைந்து பன்மணிமாலை எனும் பாத்தொகுப்பை வழங்கியுள்ளார். நாளை வெளியீடு காண உள்ள இந் நூலுக்கு யான் வரைந்த அணிந்துரை இஃது.                                                                                              

அறத்திற்கொரு புலவன் திருவள்ளுவன்; சொல்லுக்கு ஒரு புலவன் கம்பன்; தனித்தமிழுக்கு ஓர்அரிமா பாவாணர் எனத் தனித்திறம் பெற்றோர் வரிசை நீளும்;  அவ்வரிசையில்  மரபுக்கொரு  புலவர் தமிழியக்கன் என்னுமாறு இலக்கணமரபு, இலக்கிய மரபெனத் தலைசிறந்து நிற்பவர் - எந்தை, என் ஆசானெனப்  போற்றத் தக்கவர், தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன். அகத்திலும்  புறத்திலும் மரபுவழாது ஒண்டமிழுக்கு உரம்சேர்க்கின்றவர் இவர்; இதனை, இலக்கியமாகவும், இலக்கணமாகவும் தந்துள்ள நூல்களே வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வுயர்வுக்குக் காரணமாய் அவரே இயம்புவனவாகவும், நாம் உணர்வனவாகவும், கீழ்வருவன புலப்படுத்தும்:

# தக்க பருவத்தில் கவிஞரேறு வாணிதாசனாரை ஆசானாகப் பெற்றமை;

# தனித்தமிழ் இதழ்களான தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் போன்றவற்றின் தொடர்புகள், இவற்றின் சிறப்பாசிரியரான, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நேரடித் தொடர்புகள்;

# தனித்தமிழ் அரிமா தேவநேயப்பாவாணருடன் இலக்கண இலக்கியம் சார்ந்த நேரடித் தொடர்புகள்     இவற்றால், ‘தனித்தமிழ்ப் பாவலர்' தமிழியக்கன் எனப் போற்றப்பட்டவர்.                               

தம் ஆசானாம்- கவிஞரேறு வாணிதாசனாரின், நூற்றாண்டு விழா நினைவாக இன்றவர் ஆக்கி வெளியிட்டுள்ள மரபிலக்கியமான கவிஞரேறு வாணிதாசனார் பன்மணிமாலை' என்னுமிந்நூல் பன்மணிகளாகவே  மின்னுகின்றன. இதனைப் புலவரேறு வ.கலியபெருமாள் அவர்கள் திறம்பட ஆய்வு செய்துள்ளார்; ஆதலின் யான் நூலாய்வில் புகாமல் சிலவற்றைக் கூறிக் கற்க வழிவிடுகிறேன்.

மரபிலக்கியத்தில் இரட்டை மணிமாலை, நான்மணி மாலை என்பனவே காணப்படினும், அவற்றின் வழி, பன்மணிமாலை எனும் புதிய மரபாக்கம் தான் கவிஞரோறு வாணிதாசனார் பன்மணிமாலை'. தம் ஆக்கங்களில் ஏதாவதொரு புதுமையைக் காட்டித் தம் ஆசானைப் பின்பற்றி நிற்கிறார். இயற்கையப்          போற்றுதல், புரட்சிக் கருத்துகளைப் போற்றுதல், பகுத்தறிவுக் கருத்துகளைப் போற்றுதல் போன்ற பிறவற்றிலும் புதிய, மரபுநெறி வழா முறைகளைப் பின்பற்றுவதில் தமிழியக்கன் தனித்தே விளங்குகிறார்.

இந்நூலாசிரியர் வாணிதாசனாரின் மாணவராதலின் நூல்நெடுக ஆசானின், சிறப்புகளாக அன்பு, அமைந்த பண்பு, விருந்தோம்பல், விழுதுகளை உருவாக்கும் வேட்கை, செயல், கல்விச்சிறப்பு, பாப்புனை  திறம், ஆக்கிய நூல்கள், அடைந்த சிறப்புகள், தமக்கும் ஆசானுக்கும்  உள்ள தொடர்புகள்  எனத் தம் ஆசான் சிறப்புகளையே விரிவாகக் கூறிச் செல்கிறார்.

கவிஞரேறு வாணிதாசனாரைத், தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கனார், தம் படைப்புகளின் வழி, மொழி, இனம், நாடு, பகுத்தறிவுக்கொள்கை, பொதுவுடைமைக் கொள்கை ஆகியவற்றுடன் இலக்கிய இலக்கணப் போக்கில், புதுமை, தொல்புகழ் மரபு மாறாத புலமை, இவற்றோடு தொடர்ந்து பீடுநடை போடுகிறார் என்பதை இந்தப் படைப்பாலும் அறியலாம்.

வாணிதாசனாரின் வளமான மரபுக்குத் தரமான தமிழியக்கன் எடுத்துக்காட்டாகத் திகழ்வது கண்டு, கற்போர் நெஞ்சம் களிப்புறும்; பாராட்டும்! 

வாழ்க வளர்க அவர்தம் தனிதமிழ்த்தொண்டு! 

1 கருத்து:

  1. அணிந்துரையைப் படித்ததும் நூலைப் பற்றிய முக்கியத்துவம் தெரிந்தது. நல்ல அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு