புதன், 30 ஜூன், 2010

கோவை செம்மொழி மாநாடும் தமிழ் ஆய்வுப் போக்குகளும்


பேராசிரியர் கிரிகோரி சோம்சு தலைமையில் நான் கட்டுரை படைத்தல்

கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும்,அதன் சார்பாக ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடும் மிகச்சிறப்பாக நடந்தன.தமிழ் நாட்டரசின் சார்பில் நடந்ததால் அரசு எந்திரத்தின் அனைத்து ஆற்றலும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு மாநாடு வெற்றியுடன் நடந்தேறியது.

தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களும்,துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களும் ஆர்வமுடன் ஒன்றிணைந்து செயல்பட்டதும்,இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்,காவல்துறை உயர் அதிகாரிகள் ஒன்றுகூடித் திட்டமிட்டதும் இந்தமாநாட்டின் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்களாகும்.

மாநாட்டுக்கான இடத்தேர்வு,போக்குவரவு,தங்குமிடம்,உணவு,அரங்க அமைப்புகள், கண்காட்சிகள், சிறப்பு மலர்கள்,பொது அமர்வு,கருத்தரங்க அமர்வுகள் என மாநாட்டின் அனைத்துக் கூறுகளும் எவ்வகையான குறையும் சொல்ல முடியாதபடி இருந்தன.மாநாட்டுக்கு வந்த அனைவரும் மாநாட்டின் சிறப்பினை இவ்வாறு குறிப்பிட்டனர். "இதுபோலும் ஒரு மாநாட்டை எதிர்காலத்திலும் கூட்ட முடியாது. அந்த அளவு இந்த மாநாடு வெற்றியுடன் நடந்தேறியது". ஆம்.இதுவரை நடந்த உலகத் தமிழ் மாநாடுகள் கட்சி மாநாடகாப் பல இடங்களில் நடந்தன. ஆனால் கோவையில் எங்கும் ஆளும் கட்சியினரின் கொடிகளோ,வெட்டுருவங்களோ காணப்படவில்லை.உலகெங்கும் இருந்து வந்த அறிஞர்கள் மாநாட்டைப் போற்றிப் புகழ்ந்த வண்ணம் சென்றதைக் கேட்க முடிந்தது.

ஓரிருவருக்குத் தங்குமிடம் கிடைக்காமல் போனதையும் குறிப்பிட்டார்கள்.பெரும்பபாலும் முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் மிகச்சிறப்பான விடுதிகளில் ஒதுக்கப்பட்டிருந்தது.இது போன்ற பெரு நிகழ்வுகளில் சிறு குறைகள் தென்படுவது இயற்கைதான்.செய்திப் பரிமாற்றத்தின் இடைவெளியால் மாநாட்டு அரங்கிலிருந்து பலர் இனியவை நாற்பது கண்காட்சிக்குச் செல்ல முடியாமல் தங்கிவிட்டனர்.

தமிழுக்கும்,தமிழருக்கும் பெருமை சேர்க்கும் தமிழாய்வை உலகத் தரத்தில் செய்துவரும் பின்லாந்து பேராசிரியர் ஆசுகோ பார்ப்போலா,பேராசிரியர் சார்ச்சு கார்ட்டு,பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி, ஐராவதம் மகாதேவன்,தினமலர் கிருட்டினமூர்த்தி,கார்த்திகேசு சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கனவாகும்.

தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் உல்ரிக் நிக்கோலசு,மில்லர்,தாமசு லெமான், உள்ளிட்டவர்களை மாநாட்டில் கண்டு பேசும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கண்டு பேசவும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் இலக்கிய, இலக்கணங்களை மட்டும் ஆய்வு செய்யும் மாநாடாக இல்லாமல் தமிழர்களின் தொழில்நுட்பம்,அறிவியல்,வானியல், கட்டடக்கலை, கடலியல்,கப்பல் கலை பற்றிய செய்திகளை விளக்கும் மாநாடாகவும் இது விளங்கியது.அறிவியல் அறிஞர்கள் மயில்சாமி அண்ணாதுரை(சந்திரயான் திட்ட இயக்குநர்),நா.கணேசன்(நாசா விண்வெளி ஆய்வுமையம்,நெல்லை சு.முத்து,ஆரோக்கியசாமி பால்ராசு, ஆகியோரின் உரை கேட்கும் வாய்ப்பும் கண்டு உரையாடும் வாய்ப்பும் எனக்கு அமைந்தன.

செம்மொழி மாநாட்டுக்கு 2605 விருந்தினர்கள் உள்நாட்டிலிருந்தும்,வெளிநாட்டிலிருந்தும் வந்துள்ளனர்.இவர்கள் 92 விடுதிகளில் 1242 அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 55 தலைப்புகளில் 239 அமர்வுகளில் 913 ஆய்வுக்கட்டுரைகள் ( சூன் 24 முதல் 27 வரை ) படைக்கப்பட்டுள்ளன. 50 நாடுகளிலிருந்து 840 வெளிநாட்டுப் பேராளர்கள் வந்துள்ளதாகத் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்(தினமணி 29.06.2010).

ஆய்வுக்கட்டுரைகள் சங்க இலக்கியப் புலவர்களின் பெயரில் திருவள்ளுவர் அரங்கு,இளங்கோ அரங்கு,நக்கீரர் அரங்கம்,கபிலர் அரங்கு,பரணர் அரங்கு,ஔவை அரங்கம்,பூங்குன்றனார் அரங்கம், வெள்ளிவீதியார் அரங்கம், பெருஞ்சித்திரனார் அரங்கம்,கோவூர் கிழார் அரங்கம், சாத்தனார் அரங்கம், காக்கைபாடினியார் அரங்கம்,அம்மூவனார் அரங்கம்,மாசாத்தியார் அரங்கம், நக்கண்ணையார் அரங்கம்,மாமூலனார் அரங்கம், மாங்குடி மருதனார் அரங்கம், உருத்திரங் கண்ணனார் அரங்கம், நப்பூதனார் அரங்கம்,பிசிராந்தையார் அரங்கம்,கல்லாடனார் அரங்கம், கம்பர் அரங்கம் என்று பெயரிடப்பட்டுக் கட்டுரை படிக்க உரிய இடமாக அமைந்தன.

கட்டுரை படைக்கப்பட்ட காட்சிகள் யாவும் காணொளியில் பதிவு செய்யப்பட்டன.
கட்டுரை படைக்கப்பெற்ற அரங்கு தவிர வளாகங்களில் அமர்ந்து உரையாட நிறைய இடவசதிகள் இருந்ததால் பலரும் வெளியில் அமர்ந்தும் கலந்துரையாடினர்.வளிக்கட்டுப்பாட்டு அறை என்பதால் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தொல்காப்பியர் அரங்கில் பொது அமர்வுகளும்,ஆய்வரங்கத் தொடக்க விழாவும் நடந்தன. ஆய்வரங்கத் தொடக்க விழாவைத் தமிழ் நாட்டு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார்.

உலகெங்குமிருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் பலருடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. கனடாவிலிருந்து வந்திருந்த யோகரத்தினம்(திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்), மில்லர்,மன்னர்மன்னன்(மலேசியா)திண்ணப்பன்(சிங்கப்பூர்),இரத்தின.வேங்கடேசன்(சிங்கப்பூர்),ஆ.இரா.சிவகுமாரன்(சிங்கப்பூர்),மலேசியாவைச்சேர்ந்த பாவலர் சீனி நயினா முகம்மது, திருச்செல்வம், இளந்தமிழ், முத்து நெடுமாறன்,முரசு நெடுமாறன்,நற்குணன்,மதிவரன்,குமரன் உள்ளிட்டவர்களைக் கண்டு உரையாடினேன்.மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த திண்ணப்பன் அவர்களுக்கு அவர் ஆய்வு தொடர்பாக உதவும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.

அமெரிக்காவிலிருந்து வந்த ஆல்பர்ட்டு பெர்னான்டோவையும் இலண்டனிலிருந்து(பி.பி.சி) வந்திருந்த எல்.ஆர் செகதீசன் அவர்களையும்,பிரான்சிலிருந்து வந்த பேராசிரியர் முருகையன், பெஞ்சமின் லெபோ ஆகியோரையும் கண்டு உரையாடினேன்.

நான் பேராசிரியர் கிரிகோரி சோம்சு(ஹாங்காங்) அவர்கள் தலைமையில் தமிழ் மின் அகரமுதலிகள் என்ற தலைப்பில் செம்மொழி மாநாட்டில் கட்டுரை படித்தேன்.தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் இணையம் வளர்ச்சியும்,வாய்ப்பும் என்ற தலைப்பில் பேராசிரியர் கிருட்டினமூர்த்தி அவர்கள் தலைமையில் உரை நிகழ்த்தினேன்.

மேலும் தமிழ் இணைய மாநாட்டில் வலைப்பதிவு,தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துதல் பற்றிய என் பட்டறிவுகளைத் திரு.பத்ரி முன்னிலையில் இரவி, தேனி சுப்பிரமணியுடன் இணைந்து பகிர்ந்து கொண்டேன்.

நிறைவு விழா வரை இருந்து உலகத் தமிழர்களுடன் இணைந்து தமிழாராய்ச்சிப் போக்குகளை அறிந்து வந்தேன்.

சனி, 26 ஜூன், 2010

கனடா திருக்குறள் மொழிபெயர்ப்பாளர் யோகரத்தினம் செல்லையா


அம்மா யோகரத்தினம் அவர்களுடன் நான்

கனடாவில் வாழும் திருக்குறள் மொழிபெயர்ப்பாளர் யோகரத்தினம் செல்லையா அவர்கள் கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்க வந்துள்ளார்.அவரின் கட்டுரை நாளை காலை 10.30 மணிக்கு வெள்ளிவீதியார் அரங்கில் படிக்கப்பெற உள்ளது.வெள்ளிவீதியார் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்குத் திரு,சேம்சு ஆர்.டேனியல் அவர்கள் தலைமை தாங்குகின்றார்.யோகரத்தினம் அவர்களின் கட்டுரைத் தலைப்பு MY EXPERIENCE IN THE TRANSLATION OF THIRUKURAL.இன்று யோகரத்தினம் அம்மா அவர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.72 அகவை ஆகும் அம்மா அவர்கள் கனடாவிலிருந்து தமிழார்வம் காரணமாகக் கோவை வந்துள்ளமை மகிழ்ச்சி தருகின்றது.


யோகரத்தினம் அம்மா,கிருட்டினன்(சிங்கப்பூர்),நான்,பெஞ்சமின் லெபோ(பிரான்சு)


அம்மா யோகரத்தினம் அவர்களுடன் நான்(வேறொரு கோணத்தில்)

தமிழ் இணைய மாநாட்டு அரங்கிலிருந்து...


வலைப்பூ ஆர்வலர்கள்

தமிழ் இணைய மாநாட்டு அரங்கிலிருந்து சில படங்களை வழங்குகிறேன்.தமிழ் இணைய ஆர்வலர்களுக்குத் தனிப்பட்ட முறையில் வலைப்பூ உருவாக்கினேன்.ஆர்வமுடையவர்களைப் படத்தில் காணலாம்.மேலும் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் கலந்துகொண்ட சில நிகழ்வுப்படங்களையும், விக்கி,வலைப்பதிவு பற்றிய உரையாடல் தொடர்புடைய படத்தையும் இணைத்துள்ளேன்.


வலைப்பதிவு,விக்கிப்பீடியா பற்றிய கலந்துரையாடலில் மு.இ,பத்ரி,இரவி,தேனி சுப்பிரமணி


அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஐயா,நாசா அறிவியலாளர் நா.கணேசன்,நான்


அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ,ஆல்பர்ட்டு பெர்னான்டோ,நான்

வெள்ளி, 25 ஜூன், 2010

செம்மொழி மாநாடு மூன்றாம் நாள் நிகழ்வுகள்...


முனைவர் அலெக்சாண்டர் துபியான்சுகியும் நானும்

செம்மொழி மாநாடும், தமிழ் இணைய மாநாடும் கோவையில் தமிழக அரசின் சார்பில் மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடந்துவருகின்றன.உலகெங்கும் இருந்து பேராளர்கள் வந்து மாநாட்டு ஆய்வரங்குகளிலும் பொது அமர்வுகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். இன்று பின்லாந்து பேராசிரியர் ஆசுகோ பார்ப்போலா அவர்கள் சிந்துவெளி எழுத்துச்சிக்கல்: திராவிடத் தீர்வு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களும் துணை முதல்வர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.அதன் பிறகு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தலைமையில் பாவரங்கம் நடைபெற்றது.பின்னர் மாலை நிகழ்வில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கம் நடந்தது.

செம்மொழி மாநாட்டிலும் தமிழ் இணைய மாநாட்டிலும் பல்வேறு ஆய்வரங்குகளில் அறிஞர்கள் கட்டுரைகள் வழங்கினர்.நான் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் ஏற்பாட்டில் நடந்த பொறியியல்,தொழில்நுட்பம் சார்ந்த அமர்வில் படிக்கப்பெற்ற கட்டுரைகளைக் கேட்கச் சென்றேன். திரு.ஆரோக்கியசாமி அவர்கள் சிறிது காலத்தாழ்ச்சியுடன் வந்து தலைமை ஏற்றுக்கொண்டார். முனைவர் பார்த்தசாரதி அவர்களின் மீநுண்(நானோ) நில இயற்பியல்:அண்மையப் போக்குகளும் வருங்கால வாய்ப்புகளும் என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையும், ஆர்.வெங்கடேசன் அவர்களின் "தெற்காசியக் கடல்களின் எல்லைகள்-தட்பவெப்ப நிலை மாற்றங்களில் சவால்கள்" என்ற தலைப்பில் அரியதோர் கட்டுரையும் சிறப்பாக இருந்தன. ஆர்.வெங்கடேசன் அவர்கள் கிராமப்புறம் சார்ந்த பள்ளியில் தமிழ் வழியில் பயின்று இன்று உலகம் போற்றும் கடலியில் அறிஞராக விளங்குவது அறிந்து அவையோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

முனைவர் நா.கணேசன் அவர்கள் திராவிடவியல் ஆய்வில் ஒருங்குறி தரவுத்தளங்கள்- இணையத்தில் சிந்துவெளிச் சின்னங்களும் தமிழ்நூல்களும் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இந்த அரங்கம் முடிந்ததும் நான் வேறு சில அரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரைகளைக் கவனித்தேன்.பின்னர்ப் பகலுணவுக்குப் பிறகு நானும் பாலா பிள்ளையும் இணைந்து தமிழ் இணையத்தின் அடுத்த வளர்ச்சி நிலை பற்றி கலந்துரையாடினோம்.மனப்புற்று என்ற பாலாவின் கண்டுபிடிப்பு பற்றி என்னிடம் விவரித்தார்.மூன்று மணி நேரத்துக்கு மேல் எங்கள் உரையாடல் நீண்டது.அங்கு வந்த முகுந்துவும் ஓசை செல்லாவும் அரங்கு ஒன்றுக்குப் பாலாவை அழைத்துச்சென்று அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி அவர் பணிகளை அவைக்கு நினைவூட்டினர். அனைவரும் எழுந்துநின்று கைத்தட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

மாலை ஆறு மணிக்கு உத்தமத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு இரவு எட்டரை மணிக்குப் பேருந்தேறி அறைக்கு ஒன்பது மணியளவில் வந்தேன்.

இன்று பேராசிரியர் அலெக்சாண்டர்துபியான்சுகி(மாசுகோ) அவர்களைக் கண்டு உரையாடினேன். அவர் நான் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தபொழுது எனக்கு நன்கு அறிமுகமானவர்.அவர் வாழ்க்கை வரலாற்றை என் அயலகத் தமிழறிஞர் நூலில் எழுதியிருந்தேன். என் நூலொன்றை அன்பளிப்பாக வழங்கினேன். அதுபோல் முனைவர் சண்முகதாசு,மனோன்மணி சண்முகதாசு,சிவா பிள்ளை,பிரான்சு நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் முருகையன் அவர்களையும்,திரு.நாக இளங்கோவன் அவர்களையும், பேராசிரியர் மறைமலை அவர்களையும்,பேராசிரியர் இரா.இளவரசு,பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களையும் இலண்டன் பி.பி.சி.செகதீசன் அவர்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது.அதுபோல் உத்தமத்தின் பல முன்பின் அறியாத நண்பர்களையும் கண்டு அறிமுகம் ஆனோம்.


முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்களுடன் நான்


உமர் தம்பி அரங்கில் திரு.அ.இளங்கோவன் TACE 16 சிறப்பை எடுத்துரைத்தல்


நான், நா.கணேசன், பார்த்தசாரதி, மயில்சாமி அண்ணாதுரை


அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முசுதபா, நான், பாலா பிள்ளை

வியாழன், 24 ஜூன், 2010

செம்மொழி மாநாடு இரண்டாம் நாள் நிகழ்வுகள்-படங்கள்


மயில்சாமி அண்ணாதுரை,நான்


மயில்சாமி அண்ணாதுரை,நான்,நா.கணேசன்(நாசா விண்வெளி)


நான்,மயில்சாமி அண்ணாதுரை(என் இணையம் கற்போம் நூலுடன்),நாசா.கணேசன்

24.06.2010 செம்மொழி இரண்டாம் நாள் ஆய்வரங்கத் தொடக்கவிழா காலை 9.30மணிக்கு மிகச்சிறப்பாகத் தொடங்கி நடைபெற்றது.ஆய்வரங்கச் சிறப்பு நிகழ்வாகத் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் சிறப்புரையில் தமிழுக்குச் செய்ய வேண்டிய பணிகளைத் தமிழறிஞர்கள் ஆணையிட்டுச் சொன்னால் தமிழக அரசு செய்யக் கடமைப்பட்டிருக்கிறது என்று சொன்னதும் அரங்கில் இருந்த பன்னாட்டுத் தமிழறிஞர்களும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையில் பன்னாட்டு அறிஞர்கள் வாழ்த்துரைத்தனர்.
12.மணிக்குத் தமிழ் இணைய மாநாடு தொடங்கியது.மருத்துவர் பூங்கோதை அருணா அவர்களின் வரவேற்பும் நடுவண் அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்களின் சிறப்புரையும் கொண்டு விழா சிறப்பாக நடந்தது.

நான் இணைய மாநாடு தொடங்கும் நேரத்தில் வேறொரு அரங்கில் கட்டுரை படிக்க வேண்டியிருந்தது.சிறிது நேரம் இருந்து விட்டு என் கடமையாற்றச் சென்றேன்.
ஆங்காங்கு நாட்டுப் பேராசிரியரும் மிகச்சிறந்த அகராதியியல் அறிஞருமான கிரிகோரி சோம்சு அவர்கள் தலைமையில் தமிழ் மின் அகரமுதலிகள் என்ற கட்டுரையைக் காட்சி விளக்கத்துடன் வழங்கினேன். கட்டுரையை நாளை இணையத்தில் ஏற்றுவேன்.

அதன் பிறகு பகலுணவுக்குச் சென்றேன்.சிறந்த உணவு ஏற்பாடு.
அதன் பின்னர் நண்பர்கள் சந்திப்பு.ஆய்வரங்க நிகழ்வு உற்றுநோக்கல் என்று நேரம் போனதே தெரியவில்லை. நண்பர் முகுந்து,மயூரன் ஆகியோரைக் கண்டு உரையாடினேன்.

அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களும்,நாசா கணேசனும் தொழில்நுட்பம் சார்ந்த அரங்கில் இருந்தனர்.நா.கணேசன் அவர்கள் மிகச்சிறந்த செய்திகளை அரங்கிற்கு முன்வைத்தார். அமர்வு முடிந்ததும் நான்,மயில்சாமி அண்ணாதுரை,நா.கணேசன் ஆகியோர் உரையாடி மகிழ்ந்தோம்.என் இணையம் கற்போம் நூலை மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வழங்கினேன்.என் இணையப் பணி பற்றி நா.கணேசன் அவர்கள் எடுத்துரைத்தார். நான் மாணவர்களுக்குத் தமிழ் இணையம் பயிற்றுவிப்பதை அறிந்து மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ந்தார்.

பின்னர்த் தமிழ் இணையக் கண்காட்சி அரங்கிற்கு நானும் நண்பர் புகழேந்தியும் வந்தோம்.
அங்கிருந்த தமிழ் விக்கிப்பீடியா ஆர்வலர்களைக் கண்டு உரையாடி அவர்களிடம் இருந்து விடைபெற்று இரவு 9 மணியளவில் தங்கும் விடுதிக்கு வந்தேன்.நேரம் இன்மையால் விரிவாக எழுத முடியவில்லை.நினைவுக்குச் சில படங்களை இணைக்கின்றேன்.


நான்,பேராசிரியர் கிரிகோரி சோம்சு


பேராசிரியர் கிரிகோரி சோம்சு


நானும் சிலம்பொலி ஐயாவும்


முனைவர் ச.வே.சுப்பிரமணியனுடன் நான்


நான்,மயூரன்,முகுந்து



பதிவுலக முன்னோடிகளுடன்



கண்காட்சியைக் காண வரிசையில் காத்து நிற்கும் மக்கள்



பதிவுலக நண்பர்களுடன்(இணையக் கண்காட்சி அரங்கில்)

தமிழ் இணைய மாநாட்டுக் காட்சிகள்...


மருத்துவர் பூங்கோதை அருணா,அமைச்சர் ஆ.இராசா


முரசு.முத்தெழிலன்


பேராசிரியர் ஆனந்தகிருட்டினன் உத்தமத்தினருடன்



பார்வையாளர்கள்


மு.இ,வாசு,கல்யாணசுந்தரம்

புதன், 23 ஜூன், 2010

கோவை செம்மொழி மாநாட்டில் முதல்நாள்


கணிப்பொறி அறிஞர் பாலாபிள்ளை

கோவையில் செம்மொழி மாநாடு திட்டமிட்டபடி 23.06.2010 காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், மையநோக்கப் பாடலும் இசைக்கப்பட்டன. தமிழகத் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் உணர்வு ததும்பும் வரவேற்புரையாற்றி மக்கள் உள்ளங்களில் தமிழ்க்கனல் ஏற்றினார்.தமிழக ஆளுநர் சுர்சித் சிங் பர்னாலா அவர்கள் சிறப்பு மலரை வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினார்.பேராசிரியர் சார்ச்சு கார்ட்டு,முனைவர் வா.செ.குழந்தைசாமி,பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்க,பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் தகுதியுரையாற்றி,ஆசுகோ பார்ப்போலா அவர்களின் ஆய்வுமுயற்சிகளை நினைவுகூர்ந்தார்.

தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தலைமையுரையாற்றினார். கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினைப் பேராசிரியர் ஆசுகோ பார்ப்போலா அவர்களுக்கு இந்தியக் குடியரசுத்தலைவர் திருவாட்டி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார். நிறைவில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சிறீபதி இ.ஆ.ப.அவர்கள் நன்றியுரையாற்றினார்.

தமிழகத்திலிருந்தும் அயல்மாநிலங்களிலிருந்தும்,பிற நாடுகளிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்கள், பேராளர்கள்,தமிழ் மக்கள் எனப் பலரும் வந்திருந்தனர்.மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த பந்தலில் அனைவரும் அமர்ந்து பார்க்க வசதி இருந்தது. தொலைக்காட்சி,செய்தி ஊடகத்துறை சார்ந்தவர்கள் நேரலையாக நிகழ்வை ஒலி-ஒளி பரப்பினர்.

நான் என் புகைப்படக்கருவியைப் பாதுகாப்புக் காரணத்திற்காக அனுமதிக்க மாட்டார்கள் என நினைத்து அறையில் வைத்துவிட்டுச் சென்றதால் படம் எடுக்கமுடியவில்லை.பின்னர்தான் தெரிந்தது அனைவரும் புகைப்படக் கருவி வைத்திருந்தது.நான் என் கைபேசியில் எடுக்க முயன்றும் பயன் இல்லை.

மாநாட்டுக் கூட்டம் புறப்பட்டுச் சென்ற பிறகு கட்டுரையாளர்கள் பலரைக் கண்டு உரையாடும் பேறுபெற்றேன்.தமிழ்க்கணினித்துறை சார்ந்தும்,தமிழ் இலக்கியம்,இலக்கணத்துறை சார்ந்தும் பலதுறை அறிஞர் பெருமக்களைக் காணும் வாய்ப்பு அமைந்தது.பிறநாட்டுப் பேராளர்கள் பலர் எனக்கு அறிமுகமானவர்களாக வந்தமை மகிழ்ச்சி தந்தது.

பகலுணவுக்காகக் கொடிசியா அரங்கிற்குச் சென்றோம்.முதலில் நானும் அம்மா யோகரத்தினம் அவர்களும் அடையாள அட்டைக்குப் படம் எடுத்துக்கொண்டோம்.முன்பே எங்களுக்கு அட்டை ஆயத்தமானாலும் எங்கள் கையினுக்குக் கிடைக்காததால் நாங்கள் மீண்டும் எடுத்துக் கொண்டோம். பலரும் அடையாள அட்டை வாங்கப் பெரும் பாடுபட்டனர்.மாலை 5 மணி வரை அடையாள அட்டைக்கு முயற்சியில் இருந்தோம்.என்றாலும் நாங்கள் 5.15 மணிக்கு அரங்கை விட்டு வெளியேறி எங்கள் அறைக்கு வந்துசேர்ந்தோம்.நல்ல பேருந்து ஏற்பாடுகள் இருந்தன.

பகலுணவுக்கூடத்தில் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்கள் அறிஞர்களுடன் உடன் இருந்து உணவு ஏற்பாடுகளைக் கவனித்தமை அனைவராலும் பாராட்டும்படியாக இருந்தது.

முத்தெழிலன்(முரசு),பாலாபிள்ளை,மணி.மணிவண்ணன்,இராம.கி.செல்வா,பத்ரி,நா.கண்ணன்,
சுபாசினி, மணியம்,வெ.இராமன்,நக்கீரன்,கல்யாண்,ஆண்டவர்,டேவிட்பிரபாகர்,அண்ணாகண்ணன், பொற்கோ,மன்னர்மன்னன்,மனோன்மணிசண்முகதாசு,சண்முகதாசு,சிவாப்பிள்ளை,உள்ளிட்ட கணினி, இணையத்துறை,இலக்கியத்துறை நண்பர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பு அமைந்தது. நாளை கட்டுரைகள் படைக்கப்பட உள்ளன.நாளை நானும் கட்டுரை படிக்கிறேன்.படத்துடன் வருவேன்.


மு.இ,தெய்வசுந்தரம்,பாலா,முத்து,மணிவண்ணன்


மு.இ,மணிவண்ணன்,பாலா,முத்து,இராம.கி

தமிழ் இணைய மாநாட்டுப் படங்கள்

தமிழ் இணைய மாநாட்டு அரங்கின் சில படங்களைப் பார்வைக்கு வைக்கிறேன்.கண்டு மகிழுங்கள்.

தமிழ் இணைய மாநாட்டு அரங்க முகப்பு


கணித்தமிழ்ச் சங்க அரங்கம்


தமிழ் இணைய அரங்கு


தமிழ் இணையப் பயிற்சிக்குரிய அரங்கு


தமிழ் இணையம் பயிற்சி பெற வாருங்கள்!


தினமலர் அரங்கு


கண்காட்சி அரங்கு


இணையம் சார்ந்த சொற்களின் பட்டியல்




தமிழ் இணைய மாநாட்டில் இடம்பெற உள்ள அரங்குகளின் பட்டியல்


திருக்குறள் ஒலிப்பதிப்பு அரங்கம்

கோவை செம்மொழி மாநாட்டுப் படங்கள்...


கோவை, செம்மொழி மாநாட்டு அரங்கத்தின் முகப்பு

கோவை செம்மொழி மாநாட்டு அரங்கம், பந்தல்,மற்ற ஏற்பாடுகளைக் கண்டுவர எண்ணி இன்று(22.06.2010) மாலை 7 மணிக்கு அறையிலிருந்து புறப்பட்டு,7.30 மணியளவில் மாநாட்டு அரங்கை அடைந்தோம்.மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே நாங்கள் போக நேர்ந்தது.

போக்குவரவு காவலர்கள் நின்று போக்குவரவை ஒழுங்குப்படுத்தினாலும் மக்கள் கூட்டத்தால் மெதுவாகவே செல்லமுடிந்தது. பண்பாடு காக்கும் கொங்கு நாட்டு மக்கள் அமைதியாகத் திருவிழாவைக் காண்பவர்கள்போல் இலட்சக்கணக்கில் வந்து கண்காட்சி மண்டபம்,மாநாட்டுப் பந்தல்,அரங்கம்,வண்ணமுகப்பு,வரவேற்பு பதாகைகள்,தமிழ் இணைய மாநாடு நடக்கும் அரங்குகளைக் கண்டுகளித்தனர். உணவுக்கூடங்களில் கூட்டம் அலைமோதியது.

நான் நண்பர் மதன் அவர்களின் உந்துவண்டியில் சென்று அவருக்கு விடைகொடுத்து,பின்னர் சந்திப்போம் என்ற ஒப்புதல்படி பிரிந்தோம்.மாநாட்டு முகப்பு,உணவுக்கூடம்,கண்காட்சி அரங்கம் யாவும் மிகத்தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருக்குறள் காமத்துப்பால் உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள பல குறட்பாக்களுக்கு விளக்கம் தரும் வண்ணம் படங்கள் சிறப்புடன் வரையப்பட்டிருந்தன.அதுபோல் உணவுக்கூடமும் சிறப்புடன் அமைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த தடுப்புகள் பல உள்ளன.மக்கள் நெடுந்தூரம் நடந்த களைப்பு போக உணவுகளை வாங்கிக் குடும்பத்தினருடன் உண்டு களித்தனர்.
நான் உணவுக்கூடம், கண்காட்சி முகப்பு,கொடிசியா வளாக முகப்பு,தமிழ் இணையக் கண்காட்சி அரங்கு உள்ளிட்டவற்றைப் பார்த்து(இணைய மாநாட்டுக் கண்காட்சிப் படங்களைக் காலையில் இணைப்பேன்) மீண்டேன். நண்பர் மதன் அவர்களைத் தேடிப்பிடித்து,வண்டியை எடித்தோம். அப்பொழுதுதான் குடியரசுத்தலைவர்,முதலமைச்சர் அந்த வழியில் வருவதாகச் சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.அரை மணிநேரம் காத்திருந்தோம்.

இடையில் அம்மா யோகரத்தினம் அவர்களை நலம் வினவி,உணவு முடித்து அறையை அடைய இரவு 11.30 மணியானது.


கொடிசியா அரங்கத்திற்குள் செல்லும் முகப்பு


உந்துவண்டிகள் குவிக்கப்பட்டிருந்த காட்சி




கைவினைப்பொருள் கண்காட்சி முகப்பு


கண்காட்சி முகப்பு




கண்காட்சி அரங்கம்