வெள்ளி, 12 டிசம்பர், 2008

"பட்ட காலில் படும்" என்பார்களே அது இதுதான்...


வாய்க்காலில் உடைப்பு

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை - தமிழ்மறை

புதுச்சேரியில் பெய்த மிகை மழையால் என் வீட்டு நூலகத்தில் இருந்த நூல்கள் பல இழப்புக்கு உள்ளாயின.அது பற்றிய செய்திகளைச் சில பதிவுகளில் தெரிவித்திருந்தேன்.அந்தக் கடும் மழை புதுவையிலிருந்து 100 கல் தொலைவில் உள்ள என் பிறந்த ஊரான இடைக்கட்டு(கங்கைகொண்டசோழபுரம் அருகில்) என்னும்ஊரில் இருந்த என் நன்செய் நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.நன்கு உழுது நெல் விதைத்திருந்தேன்.சென்ற முறை சென்றபொழுது நெல் நன்றாக இருந்தாலும் தண்ணீர்இல்லாமல் பயிர் வாடி கருகும் நிலையில் இருந்தது.

அண்மையில் பெய்த மழையில் வயலுக்கு நீர் தரும் பொன்னேரி(சோழகங்கம்)ஏரி நிரம்பிக், கலுங்கு வழிந்தது.நீர்ப்பெருக்கு கட்டுக்கடங்காமல் போக சாலையை அறுத்துக் கொண்டு பள்ளம் கண்ட இடங்களில் பாய்ந்துள்ளது.எங்கள் வயலருகே இருந்த பெரிய வாய்க்கால் கரையை உடைத்துக்கொண்டு நீரின் போக்கு வயலில் நுழைந்து விட்டது.பிறகு என்ன? ஊரிலிருந்த மணலை எல்லாம் எக்கலாக அடித்துகொண்டு வயல்வெளியில் விட்டது.

அழகாக சமனாகஇருந்த வயல்வெளி இப்பொழுது மணல்மேடாகக் காட்சி தருகிறது.பயிர்கள் மீது மண் படிந்து பயிர்கள் மணலில்மூழ்கின.இதனைக் கண்ட என் அன்னையாருக்கு ஒரு கிழமையாகக் காய்ச்சல். மனம்நொந்து வருந்தியிருந்தார்.பிள்ளைகளைவிட உழவர் குடும்பத்தார்க்குப் பயிர்கள்தானே குழந்தைகள்.அழகிய நெற்பயிர் சிதைந்ததும்,வயல் மண் மேடானதுமே அவர்களின் வருத்தத்திற்குக் காரணம்.

புதுவை நிலையைஓரளவு சீர்செய்துவிட்டு இன்று காலை இடைக்கட்டு புறப்பட்டு சென்றேன்.

பேருந்தில் செல்லும் பொழுது காந்திய நெறியாளரும் இயற்கை ஈடுபாட்டாளரும்,மிகப்பெரும் செல்வந்தரும் எளிய வாழ்க்கை வாழ்பவருமான திருவாளர் ப.சாந்தசீலனார் என்னிடம் இயல்பாகத் தொலைபேசியில் உரையாடினார்.அவரிடம் புதுவையில் என் நூலகத்திற்கு ஏற்பட்ட நிலையைச் சொன்ன உடன் இழந்த நூல்களைத் தாம் வாங்கித்தருவது உள்ளிட்ட பல ஆறுதல் மொழிகளை நவின்றார்கள்.

அவர்களின் அன்புக்கு யான் யாது ஆற்ற வல்லேன்?அவர்களின் அன்பு ஒன்றே போதும் என வணங்கியபடி பேச்சை நிறைவு செய்தேன்.என்னுடம் பணிபுரியும் அன்பர்கள் பலரும் அவரிடம் வீட்டுமனை விலைக்கு வாங்கி மகிழ்ந்தனர்.அவர் பெருமையை வாயாரப் புகழ்ந்தனர்.ஆனால் அவர் நெஞ்சத்தில் அல்லவா ஓர் இடத்திற்கு நான் ஏங்கினேன்.அந்த அளவு அவர் தனித்தமிழ்ப் பற்றாளர்.தமிழ் மரபு காப்பவர்.தமிழர்களின் பண்பாட்டுச் செல்வகளை மீட்க நினைப்பவர்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்யும் போலும்!

கங்கைகொண்டசோழபுரத்தில் பேருந்திலிருந்து இறங்கியபொழுது பகல் மணி பன்னிரண்டரை. ஊர் நிருவாக அலுவலரிடம் வெள்ளப் பாழைக் குறித்து ஒரு முறையீட்டு விண்ணப்பம் வழங்கினேன்.வீட்டுவரி கட்டினேன்.அருகிலிருந்த சுண்ணாம்புக்குழியில் என் நிலங்களைப் பார்வையிட்டபடி இடைக்கட்டு ஊரில் உள்ள நிலங்களைப் பார்வையிடச் சென்றேன்.

வெள்ளப்பாழான நிலம் சென்ற ஆண்டு புதியதாக என்பெயருக்கு வாங்கப்பட்டது. வாங்கும் பொழுதே பலரும் அது பள்ளம்.வெள்ளப்பெருக்கில் தண்ணீர் மிதந்துஎக்கல் அடிக்கும் என எச்சரித்தனர்.ஆனால் அந்த நில உடைமையாளர் நல்லவர்.அவர்கள் எங்களுக்குத் தூரத்து உறவினர்.அவர்களின் மகள் திருமணத்தை ஒட்டி அந்த நிலத்தை விற்க முனைந்தபொழுது ஊரில் இருந்த பலரும் சூழல் கருதி விலையைக் குறைத்துக் கேட்டனர்.வாங்க மறுத்தனர்.

நாங்கள் அக்கம் பக்கம் உள்ள விலைக்குக் குறையாமல் கொடுத்துமன நிறைவுடன் வாங்கினோம்.நிலம் வாங்கியதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை.ஒரு பெண்ணின் திருமணத்துக்கு உதவ முடிந்ததே என்ற மன நிறைவு எனக்கு இன்றும் உண்டு.

ஊரார் சொன்ன சொற்களை மீறி வாங்கியதால் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் என் நிலைக்கு இரங்கிபேசுவர்.மழைச்சூழல் நினைத்து இப்பொழுது அனைவரும் என் செயலுக்கு ஒன்றுக்குப் பத்தாகப் பாடித் தீர்த்தனர்.அவர்களின் வசவுகள் போலவே நான் வாங்கிய வயலும் சிதைந்து கிடந்தது.


அணை கட்டித் தடுக்கவா முடியும்?


ஆறு கிடந்தன்ன அகல்பெரும் வயல்


பயிரை அழித்த மணல்பெருக்கு


பயிருக்குப் பதிலாக மணல்திட்டான வயல்


வயலில் குவிந்த மணல்


நீர் தேங்கிய வயல் பகுதி


வண்டல்மண் படிந்த வயல்

2 கருத்துகள்:

  1. திரு.இளங்கோவன்,

    முன்பு உங்கள் நூல்வயலைப் பாழ்படுத்திய மழை இப்பொழுது உங்கள் நெல்வயலையும் அழித்து விட்டது குறித்து மிக வருந்துகிறேன். தமிழகமெங்கும் புயல்மழை பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதாக அறிகிறேன்.

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    பதிலளிநீக்கு
  2. திரு.சங்கரபாண்டி ஐயாவுக்கு வணக்கம்

    எங்கள் பதிப்பகத்தின் பெயரே வயல்வெளிப் பதிப்பகம்தான்.

    வயல்வெளியையும்,வயல்வெளிப் பதிப்பகம் வெளியிட்ட நூல்களையும் மழை ஒருசேர பதம் பார்த்துவிட்டது.

    அன்புள்ள
    மு.இளங்கோவன்

    பதிலளிநீக்கு