முனைவர் இரா. இளவரசு
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள
பாரதிதாசன் உயராய்வு மையத்தின் தலைவராக விளங்கியவரும், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவரும், தமிழியக்கம் அமைப்பைக் கட்டிக் காத்தவர்களுள் ஒருவருமான
பேராசிரியர் இரா. இளவரசு அவர்கள் இன்று 22. 01. 2015 முற்பகல் 11 மணியளவில் இயற்கை எய்தினார்
என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த இருபதாண்டுகளாகப்
பேராசிரியருடன் கொள்கைவழிப்பட்ட தொடர்பினைக் கொண்டிருந்தேன். பேராசிரியர் அவர்களின்
மாண்புயர் தலைமையில் திருமணம் செய்துகொண்டேன். தந்தை மகன் வழிப்பட்ட உறவில் என்னை அழைத்து
மகிழும் அப்பெருமகனாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், கொள்கை வழிப்பட்ட சுற்றத்தினர்,
நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.
பேராசிரியர் இரா. இளவரசு அவர்களின் உடல் நல்லடக்க ஊர்வலம் நாளை 23.01.2015. பிற்பகல் 3 மணிக்கு அவர்தம் சென்னை வேளச்சேரி இல்லத்திலிருந்து புறப்படும்.
பேராசிரியர் குறித்து நான் எழுதிய கட்டுரையை
மீண்டும் தேவை கருதி வெளியிடுகின்றேன்.
பேராசிரியர் பணி என்பது வகுப்பறைக்குள் மட்டும் இல்லை. அது வெளிப்
பகுதிகளிலும் செய்ய வேண்டியது என்பதை உணர்த்திய பேராசிரியர்கள் இருவருள் ஒருவர்
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் மற்றவர் முனைவர் இரா.இளவரசு அவர்கள்.இருவரும்
இணைபிரியாக் கொள்கை நண்பர்கள் என்பது கூடுதல் செய்தி.தூய வளனார் கல்லூரிப்
படிப்புப் பருவத்தில் முகிழ்த்த இருவரின் நட்பு 'உணர்ச்சிதாம் நட்பாம் கிழமைதரும்' என்னும் தமிழ்மறைக்குச் சான்றானது.
இருபெரும் பேராசிரியர்களும் தனித்தமிழ் உணர்வு மிக்கவர்கள்.பாவாணர்
கொள்கையில் ஆழ்ந்த பற்றுடையவர்கள்.முன்னவர் சாத்தையா என்ற பெயரைத்
தமிழ்க்குடிமகனாக்கி மதுரை யாதவர் கல்லூரியில் இருந்தபடி தமிழகத்தை வலம்வந்து
தனித்தமிழ் உணர்வூட்டி யவர்கள். பின்னவர் பிச்சை என்ற பெயருடன் பிறந்து
தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணியாற்றி இளவரசாக வாழ்பவர்கள்.தமிழியக்கம்
கண்டவர்கள்.தமிழுக்காகக் களமிறங்கிப் போராடியவர்கள்.
தமிழைப் பயிற்றுவிக்கும் போர்வையில் தமிழுக்கு எதிரானவர்களாகவும்,தமிழ்ப்பற்று இல்லாதவர்களாகவும் இன்றைய தமிழ்ப்பேராசிரியர்கள் பலர்
இருக்க இவர்களுக்கு இணையாக வேறொருவர் பெயரை ஒலிக்கமுடியாதபடி தனித்தமிழ்ப்பணியால்
தன்னேரில்லாத புலவர் பெருமக்களாக இவ்விரு அறிஞர்களும் தமிழக வரலாற்று ஏடுகளில்
என்றும் நின்று புகழ் ஒளி வீசுவார்கள்.இவ்விரு பேராசிரியர்களுள் முனைவர்
இரா.இளவரசு அவர்களின் தனித்தமிழ் வாழ்க்கைப் போக்கினை இங்குப் பதிவதில்
மகிழ்கிறேன்.
(முனைவர்பட்ட ஆய்வு மாணவனாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான்
ஆய்வுசெய்த பொழுது எனக்குப் பார்வைக்குக் கிடைத்து, அதன்பிறகு பல்வேறு தனித்தமிழ் அமைப்பு சார்ந்த கலந்துரையாடல்களில்
எனக்கு அணுக்கமாகி,கொள்கைவழிப்பட்ட ஆசிரியராக மாறியவர்
முனைவர் இரா.இளவரசு அவர்கள். இவர் என் திருமணத்தை முனைவர் தமிழண்ணல், கதிர்.தமிழ்வாணன்,முனைவர் க.ப.அறவாணன் ஆகிய சான்றோர்கள்
முன்னிலையில் நடத்திப் பார்த்த பெருமகனார்.அவர்களின் தொடர்பு
கொள்கைவழிப்பட்டது.அது பற்றிய பல செய்திகளை வேறொரு சூழலில் எழுதுவேன்)
முனைவர் இரா.இளவரசு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம் இராமநாதபுரம் ஊரில் 12.06.1939 இல் பிறந்தவர். பெற்றோர் மு.இராமசாமி, அருக்காணி அம்மாள். பூவாளூர், இலால்குடி, திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, திருவனந்தபுரத்தில் கல்வி பயின்றவர். புகுமுக வகுப்பில் இவர் கணிதம் பயின்று, இளங்கலையில் பொருளியல் பயின்று தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலையில்
தமிழ் இலக்கியம் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் பயின்றவர். அறிஞர் வ. சுப .மாணிக்கனாரின் தமிழ்க் கொள்கைகளைத் தாங்கிய மாணவர் இவர்.
இவர் பேராசிரியர்களுள் இரா.இராதாகிருட்டிணன், வ.சுப.மாணிக்கம், வ.அய்.சுப்பிரமணியன் முதலியவர்கள்
குறிப்பிடத்தகுந்தவர்கள்.
இவர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்
கழகத்தில் 'பெருங்கதையின் மொழியமைப்பு' என்னும் பொருளில் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றவர்.
திருச்சி காசாமியான் உயர்நிலைப்பள்ளி, கேரளப்பல்கலைகழகம், அழகப்பா கல்லூரியில் ஆசிரியப்
பணியாற்றியதுடன் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கருவூர், சென்னையில் உள்ள தமிழக அரசுக்
கல்லூரிகளில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். தொண்டு நோக்கில்
சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க்கல்லூரி, திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி, காஞ்சி மணிமொழியார் தமிழ்க்கல்லூரிகளில் தமிழ் முதுகலை ஆசிரியராகவும்,
இ.ஆ.ப.தேர்வுகளுக்கு நடுவண் அரசு நடத்தும்
போட்டித்தேர்வு எழுதும் நடுவங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்.
முனைவர் இரா.இளவரசு அவர்களின் மேற்பார்வையில் ஒன்பதுபேர் முனைவர்
பட்டம் பெற்றுள்ளனர்.இருபது பேர் ஆய்வியல் நிறைஞர்பட்டம் பெற்றுள்ளனர்.
பேராசிரியர் பணியுடன் தமிழியக்க அமைப்புகள் பலவற்றில் இணைந்து
பணிபுரிந்தவர். அவ்வகையில் உலகத் தமிழ்க்கழகம், தமிழியக்கம், உலகத்தமிழ்க்கல்வி, கலை, பண்பாட்டுக் கழகம்,தமிழக ஈழ நட்புறவுக்கழகம், தமிழ்வழிக்கல்வி
இயக்கம்,தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்
உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து பணிபுரிந்தவர்.
உலகத்தமிழ் மாநாட்டு மலரிலும்,பல்வேறு பல்கலைக்கழகக் கருத்தரங்க மலர்களிலும் ஏடுகளிலும் சற்றொப்ப
அறுபதிற்கும மேற்பட்ட கட்டுரைகளை வடித்துள்ளார். மதுரை, சென்னை, அண்ணாமலை, பாரதியார், புதுவைப் பல்கலைக்கழகங்களில் பல
சொற்பொழிவுகள் வழங்கியுள்ளார்.
தமிழக அரசின் பரிசு, பாராட்டு, தலைநகர்த் தமிழ்ச்சங்கப் பாராட்டு, பாவேந்தர் பாசறைப் பாராட்டு, முருகாலயம் உள்ளிட்ட
அமைப்புகளின் பாராட்டைப் பெற்றவர்.
தமிழக அரசின் பாவேந்தர் புகழ் பரப்புநர்(1991),பாவேந்தர் பைந்தமிழ்ச்செல்வர், (பாவேந்தர் பாசறை) உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர்.தமிழக ஆளுநரால்
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் திட்டக்குழு உறுப்பினராக அமர்த்தப்பட்டவர். தில்லி சாகித்திய அகாதெமியின் பரிசுநூல் தேர்வுக்குழுவில்
உறுப்பினராக இண்டுமுறை கடமையாற்றியவர். தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுமைநலக் கருத்துகளை முன்வைக்கும்
தமிழியக்க அமைப்பின் பொதுச்செயலாளராகப்(1972)பணிபுரிந்தவர்.
பாவாணர் நூற்றாண்டு விழாவைத் தமிழகம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்து
பணியாற்றியதுடன் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் சென்று பாவாணர்
கொள்கைகளை முழங்கியவர். இவரின் தனித்தமிழ்ப் பணிகளைப் பாராட்டி தினமணி,முகம்,இளந்தமிழன் உள்ளிட்ட இதழ்கள் புகழ்ந்து
எழுதியுள்ளன.
முனைவர் இரா.இளவரசு அவர்கள் பாவேந்தர் பாடல்களிலும் பாவாணர்
நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவர்.அதுபோல் தமிழ் இலக்கண இலக்கியங்களில், மொழியியலில் நல்ல ஈடுபாடு கொண்டவர்கள். ஆயிரக்கணக்கான
மாணவர்களைத் தமிழ் உணர்வுடையவாராக மாற்றிக் காட்டியவர்.கடல்கடந்த நாடுகளிலும் இவர்
தமிழ் உணர்வு அறியப்பட்ட ஒன்றாகும். தமிழுக்கு எதிரான கருத்துகளை
உரைப்பவர்கள் யார் எனினும் எந்தப் பதவியில் இருப்பவர் எனினும் அஞ்சாமல்
எதிர்க்கும் ஆற்றல் உடையவர்.
தமிழ் திராவிட இயக்க உணர்வுடன் வளர்ந்தவர்.பாவேந்தரின் வெளிவராத
பாடல்களை வெளிக்கொண்டு வந்தது உட்பட இவர்தம் பாவேந்த ஆய்வுகள் குறிப்பிடத்தக்கனவாகும்.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள
பாரதிதாசன் உயராய்வு மையத்தில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் 1999-
2005 இல் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.சென்னையில் அமைதி
வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.
முனைவர் இரா.இளவரசு அவர்களின் துணைவியார் பேராசிரியர் வேலம்மாள்
அவர்கள். இவர்களுக்கு அன்பு, ஓவியன் என இரு மக்கள் செல்வங்கள். இருவருக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து பார்த்தவர் நம்
பேராசிரியர் அவர்கள்
முனைவர்
இரா.இளவரசு அவர்கள் வழங்கிய தமிழ்க்கொடை
01.விடுதலை,1970
02.இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்,1990
03.பாவேந்தரின் உலக நோக்கு,2002
04.நண்பகல் ஞாயிறு,2002
05.வரும்புயல் நாங்கள்,2002
06.நிறைந்த அன்புடன்(அணிந்துரைகள்),2002
07.அலைகள்,2002
08.பாரதிதாசன் பாடல்கள் முதற்குறிப்பு அகரவரிசை,2005
09.பாவேந்தர் பாரதிதாசனின் பழம்புதுப்பாடல்கள்,2005
இளவரசியம்(மணிவிழாமலர்),2003
முனைவர்
இரா.இளவரசு அவர்களின் இல்ல முகவரி :
4, 11 ஆம் முதன்மைச்சாலை,
விசயநகர்,
வேளச்சேரி,
சென்னை-600
042
பேசி : 044
- 22430015
செல்பேசி: + 9840460547