பரம்பரை கண்ட பாவேந்தர்



காரைக்குடிக்கு அருகில் உள்ள ஆத்தங்குடி என்னும் ஊரில் திராவிடர் கழகத்தின் கிளை தொடங்குவதற்கு ஏற்பாடாகி, மாலை 5.30 மணிக்குக் கூட்டம் தொடங்கியது. அப்பகுதியின் பெரிய மனிதர் ஒருவர் வேட்டையாடுவதில் வல்லவர். காட்டிற்குச் சென்று பறவைகளை, விலங்குகளைத் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அப்பெரிய மனிதரின் முரட்டுத்தனம் அப்பகுதி மக்களுக்கு அந்நாளில் நன்கு தெரிந்த ஒன்றாகும். அவரின் அன்புக்கு உரியவராக விளங்கிய பாவேந்தரை அழைத்துக் கொண்டு அவர் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். சிறப்புப் பேச்சாளராக வந்த பாரதிதாசனை ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களுக்கு அப்பெரிய மனிதரின் வருகை ஆறுதலாக இருந்தது. காரணம் செட்டிநாட்டுப் பகுதியில் நகரத்தார் பெருமக்கள் கோயில் திருப்பணிகளில் தம் பெரும் பொருளைச் செலவு செய்பவர்கள். அவர்கள் நடுவே கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, தமிழ் உணர்வு பற்றிப் பாவேந்தர் பேசினால் கூட்டம் நடக்காமல் போனாலும் போகலாம் என்பது இளைஞர்களின் அச்சத்திற்குக் காரணம்.

திராவிடர் கழகத்தின் இளைஞர்கள் ஆறு பேர். கோனாப்பட்டு மாணவர்கள் நான்கு பேர். ஆகப் பத்துப்பேர்தான் கூட்டத்திற்கு வந்தவர்கள். பொது மக்கள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. வந்த பத்துப் பேரும் பாவேந்தருக்குப் பாதுகாப்பாக மேடையில் ஏறி நின்றனர். மேடைக்கு எதிரில் பார்வையாளர் வரிசையில் யாரும் இல்லை. யாரைப் பார்த்துப் பேசுவது? என்றார் கவிஞர்.

"நீங்கள் பேசுங்கள்! உங்கள் பேச்சைக் கேட்க யாரும் அருகில் வரமாட்டார்கள். தொலைவில் உள்ள வீட்டுத் திண்ணைகள், மரத்தடியில் இருந்து கேட்பார்கள் என்று அந்த இளைஞர்கள் கவிஞருக்கு அமைவு கூறினார்கள். அந்தப் பத்து இளைஞர்களையும் முன்புறமாக வரிசையில் அமர்த்தித் தன்மானம், பகுத்தறிவு, தமிழ் உணர்வு பற்றிப் பாவேந்தர் உரையாற்றினார். பக்தி உணர்வாளர்களின் கோட்டையில் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்பப் பாவேந்தர் பலநாள் தங்கி இயக்கப்பணி புரிந்தவர். இவர்தம் பேச்சு, கவிதைகளில் ஈர்க்கப்பெற்ற கோனாப்பட்டு முருகு சுப்பிரமணியன், அரு.பெரியண்ணன், நாரா. நாச்சியப்பன் முதலான தமிழ் உணர்வாளர்கள் அப்பகுதியில் இருந்து உருவாகித் தமிழ்ப்பணிக்கு முன்வந்தனர். கடவுள் பற்று இல்லாத அந்த இளைஞர்களும் அவர்களின் குடும்பத்தாரும் பாவேந்தரைத் தங்கள் குடும்பக் கடவுளாக மதித்தனர். மாதக் கணக்கில் பாவேந்தர் தங்கித் தமிழ்த் தொண்டு புரியும் இடமாக அந்தப் பகுதி பின்னாளில் மாறியது.

சுப்புரத்தின பாகவதராக மயிலம் திருமுருகனின் திருவருள் வேண்டிச் சிந்துப் பாடல் இசைத்துக் கொண்டிருந்த கனக சுப்புரத்தினத்தைப் பாரதிதாசன் ஆக்கியவர் பாரதியார். பாரதியாரிடமிருந்து புதுப்பார்வையைப் பெற்ற பாரதிதாசன் எளிய சொற்கள், எளிய தொடர்கள் புதிய கற்பனைகள் கொண்டு மக்களையும் மொழியையும் இயற்கையையும் சமூகத்தையும் பாடும் கவிஞராக மாற்றம் பெறுவதற்குப் பாரதியார் காரணம் எனில் மிகையன்று. பாரதியாரிடமிருந்து பல்வேறு கவிதை நுட்பங்களை அறிந்து கொண்டாலும் பிற்காலத்தில் பாரதியாரை விடவும் சிறந்த படைப்புகளை வெளியிட்டு உத்திகளாலும், நுண்நோக்குப் பார்வையாலும், பாடுபொருளாலும், யாப்பு ஆளுமையாலும் குறிப்பிடத்தக்க கவிஞராகப் பாவேந்தர் வளர்ந்தார்.

பாரதிதாசனின் பேச்சைக்கேட்டு பலர் தமிழ் உணர்வு பெற்றனர். பாரதிதாசன் கவிதைகளைக் கற்றுப் பலர் தமிழார்வம் கொண்டனர். பாவேந்தரின் கவிதை வரிகளை மேடைகளில் முழங்கிப் பலர் அரசியல் தலைவர்களாக வலம் வந்தனர். பலர் மேடைப் பேச்சாளர்களாகப் பரிணாமம் பெற்றனர். பாவேந்தர் கவிதைகளைக் கற்றுத் தமிழ்க் கவிதைத் துறையில் பலர் புதுமை செய்தனர். அவர்தம் இல்லத்தில் தங்கிப் பாட்டு எழுதப்பயிற்சி பெற்றுப் புகழின் உச்சிக்குச் சென்ற சுரதா, வாணிதாசன், சாமிபழநியப்பன், பொன்னடியான், புதுவைச்சிவம், அண்ணாமலை, உள்ளிட்டவர்கள் தமிழ்க்கவிதைத் துறைக்கு வாடாத பாமாலைகள் பலவற்றை வழங்கியுள்ளனர்.

"நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந்தானே!'

எனத் தமிழ் வாழ்வே தன் வாழ்வாகக் கொண்ட பாவேந்தர் தம் எழுது கோலால் தமிழுக்கு உழைத்தவர்களைத் தாராளமாகப் பாராட்டினார். தமிழுக்குக் கேடு தரும் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கடுமையாகக் கண்டித்தார்.

தமிழ்ச் சமூகத்தில் தமக்குப் பிறகு தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சிக்குப் பல்வேறு கவிஞர்கள் உருவாகக் காரணகர்த்தாவாக விளங்கியவர் பாவேந்தர். பாரதியார் தமக்குப் பிறகு கவிதை வாரிசாகப் பாவேந்தரை அறிமுகம் செய்தார். பாவேந்தர் என்ற பெரும் சுடருக்கு இணையாக அவர் காலம் வரை யாரும் தமிழ்க் கவிதைத் துறையில் கோலோச்ச இயலவில்லை. அந்த அளவு அவர்தம் கவிதை ஆளுமை மேம்பட்டு விளங்கியது. பாவேந்தர் எனவும் புரட்சிக் கவிஞர் எனவும் தமிழக மக்களால் அழைக்கப் பெற்ற பாரதிதாசனை உலக அளவில் வாழும் தமிழர்கள் தங்கள் கவிஞராக அடையாளம் கண்டு கொண்டனர்.

பாரதிதாசனின் கவிதைப் பணியினைப் போற்றி மதிக்கும் முகமாகப் புதுக்கோட்டையிலிருந்து 1947இல் பொன்னி என்னும் இலக்கிய இதழ் தொடங்கப் பெற்றது. அந்த இதழ் பாவேந்தரின் சிறந்த கவிதைகளைத் தாங்கி வருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அவர்தம் கவிதையின் கருப்பொருளை மையமாகக் கொண்ட ஓவியங்களை மேல் அட்டையில் தாங்கி வெளிவந்தது. அந்த இதழ் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் இளங்கவிஞர் ஒருவரின் படைப்பை அறிமுகம் செய்தது. பாரதிதாசன் பரம்பரை என்ற தொடரை உலகிற்கு வழங்கியது பொன்னி இதழாகும். பொன்னி வெளியிட்ட தொடரில் 48 கவிஞர்கள் இடம்பெற்றனர். யாது காரணமாகவோ அத்தொடர் தொடராமல் நின்றமை தமிழ்க் கவிதை உலகிற்கு இழப்பே ஆகும். அத்தொடரில் இடம்பெற்ற கவிஞர்கள் தமிழ்க் கவிதைத் துறைக்குப் பெரும் பங்களிப்புச் செய்ததை இங்கு நன்றியுடன் சுட்டியாக வேண்டும்.

மு. அண்ணாமலை, நாரா. நாச்சியப்பன், சுரதா, முடியரசன், சாமி பழநியப்பன் (கவிஞர் பழநிபாரதியின் தந்தை) கோவை இளஞ்சேரன், வா.செ. குழந்தைசாமி (குலோத்துங்கன்), நாஞ்சில் மனோகரன், புத்தனேரி சுப்பிரமணியன், புதுவைச் சிவம் உள்ளிட்ட கவிஞர்கள் இத்தொடரில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

பாவேந்தர் தாமே தம் குயில் இதழில் பல இளம் கவிஞர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் கவிதைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். தம் காலத்திற்குப் பிறகு தமிழ்க் கவிதை உலகம் செழுமையடைய வேண்டும் என்ற நோக்கில் கவிதையில் ஈடுபாடு உடைய இளைஞர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தியதால் தமிழகத்தில் இன்று புகழ்பெற்று இருக்கும் பல கவிஞர்களை நம்மால் பெற முடிந்தது.

சமூக நடப்புகளை, இயற்கை அழகுகளை, மொழி உணர்ச்சியைப் பாடிய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் தமிழ் இலக்கிய உலகிற்குக் காப்பியங்கள், கவிதை நூல்கள், தரமான திரைப்பாட்டுகளை வழங்கிக் கவிதைக்குச் சமூகத்தில் ஓர் உயரிய இடத்தினைப் பெறச்செய்தனர்.

இன்றையத் திரைப்படக் கவிஞர்கள் அடுத்த அரசியல் தலைவர்களாகத் திரைப்படக் கதாநாயகர்களுக்கு ஆசைகாட்டும் பாடல்களை எழுதிக் கொண்டுள்ளனர். இதற்காகவே இவர்களுக்குக் கவிதைத்துறை கைகொடுக்கிறது. ஆனால் பாவேந்தரும் பாவேந்தர் மரபினரும் தமிழ்நாட்டு மக்களின் சிக்கல்களைப் பாட்டு வடிவில் வெளிப்படுத்தினர். மொழி உணர்ச்சியும் இன உணர்ச்சியும் பெறச் செய்தனர். இந்தித் திணிப்பு, வடநாட்டு ஆதிக்கம், புராண இதிகாச காப்பிய மரபுகளை எதிர்த்துத் தமிழ் உணர்ச்சி ஊட்டும் பல பாடல்களை எழுதினர். தமிழகத்தில் தமிழ்த் தேசிய உணர்ச்சி முளைவிடக் காரணமாகப் பாவேந்தர் பாடல்களும் அவர்தம் பரம்பரையினர் பாடல்களும் இருந்தன.

சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண்ணுரிமை, கடவுள் மறுப்புத் தளத்தில் தந்தை பெரியார் உரைநடையில் பேசியதை, எழுதியதைப் பாவேந்தரும் பாவேந்தர் மரபினரும் பாட்டு வடிவில் வெளிப்படுத்தினர். தமிழியக்கம் என்னும் நூலை எழுதிய பாரதிதாசன் தமிழகத்தில் தமிழுக்கு அனைத்து நிலைகளிலும் முதலிடம் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

பாவேந்தர் "கெடல் எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சிசெய்க' என ஆணையிட்டவர். "சலுகை போனால் போகட்டும் என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒரு கோடி கண்ட என் தமிழ் விடுதலை ஆகட்டும்' என்று பாடியவர். "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்றவர். "தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்' என்றவர். "எமை நத்துவாய் என எதிரிகள், கோடி, இட்டழைத்தாலும் தொடேன்' என்று தன்மானம் பாடியவர். "எப்பக்கம் புகுந்துவிடும் இந்தி அது எத்தனை பட்டாளம் கூட்டி வரும்' எனும் பாவேந்தரின் முழக்கம் பகைவர்களை மருண்டு ஓடச் செய்தன.
பாவேந்தர் சமூகத்தில் உயர்ந்த நிலைகளில் இருப்பவர்களைப் புகழ்ந்து பாடாமல் புலவன் நினைத்தால் முடி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று புரட்சிக் கவிஞராக வாழ்ந்தவர். எனவேதான் "புதுவையிலே வெடித்தெழுந்த ஊழித்தீயின் புனைபெயர்தான் பாரதிதாசன்' என்று புலவர் புலமைப்பித்தன் குறிப்பிடுவார்.

கழைக் கூத்தாடிகளையும், ஏற்றம் இறைப்பவர்களையும், வண்டி ஓட்டிகளையும், மாடு மேய்ப்பவர்களையும், பாவோடும் பெண்களையும், தறித் தொழிலாளிகளையும், உழவர்களையும், உழத்தியரையும், ஆலைத் தொழிலாளியையும், கோடாலிக்காரனையும், கூடைமுறம் கட்டுபவர்களையும், பூக்காரி, குறவர், தபால்காரர், சுண்ணாம்பு இடிக்கும் பெண்கள், ஓவியக்காரர் எனச் சமூகத்தின் அடிநிலை மக்களை, உழைக்கும் வர்க்கத்தினரைப் பாடியவர் பாவேந்தர். தொழிலாளர்களின் தோழராகவும், பாட்டாளிகளின் பாவலராகவும் விளங்கியவர். இயற்கை அழகைக் காணும்பொழுதும் அதில் உழைப்பவரின் வேதனை அவரின் மனக்கண்ணில் தெரிந்தது. உழைப்புக் கூட்டத்தை அறிமுகம் செய்யும் பொழுதும் அவர்களின் மெல்லிய காதல் உணர்வினைக்,

"கவிழ்ந்த தாமரை முகம் திரும்புமா? - அந்தக்
கவிதை ஓவியம் எனை விரும்புமா?'

என்று அவரால் பாட முடிந்தது.

ஆசிரியராக, கவிஞராக, திரைப்படப் பாடல் ஆசிரியராக, அரசியல் தலைவராக, பேச்சாளராக, உரையாளராக, இதழாளராக விளங்கியவர் பாவேந்தர். படைப்புகளின் வழியாக என்றும் நம் நினைவில் நிற்பவர். இளம் வயது காதலர்களின் உணர்வுகளைத் தூண்டி இரட்டை அர்த்த பாட்டெழுதும் திரைப்படக் கவிஞர்கள் நாணும்படியாக முதியோர் காதலின் மேன்மையைப் பாடியவர். இயற்கையைப் பாடிய வகையில் வேர்ட்ஸ் வொர்த்தை விடவும் உலக அளவில் பாவேந்தர் புகழப்படுகிறார்.

"கரும்புதந்த தீஞ்சாறாகவும், கனி தந்த நறுஞ்சுளையாகவும்', "எடுத்து மகிழ் இளங்குழந்தையாகவும்", "இசைத்து மகிழும் நல் யாழாகவும்' தமிழைக் கண்ட பாவேந்தர் இத் தமிழுக்கு எதிரான நிலைகள் தமிழகத்தில் இருப்பதைக் கண்டு பொங்கிப் பாடியவர். "வாணிகர் தம் முகவரியை வரைகின்ற பலகையிலே ஆங்கிலமா வேண்டும்?' என்று வினா எழுப்பியவர். கோயில்களில் தமிழ்ப் பாடல்கள் பாட வேண்டும் என்று முழக்கமிட்டவர். ஆட்சி மொழியாகத் தமிழ் மாற வேண்டும் என்றவர். தமிழ் வழிக் கல்வி பற்றிப் பாடியவர். சட்டத்துறையில் தமிழ் வேண்டும் என்றவர்.

புலவர்களைத் தமிழ்காக்க அழைத்தவர். மகளிரைத் தமிழ் காக்க வேண்டியவர். இதழியல் துறை சார்ந்தவர்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட அழைத்தவர். இளைஞர்கள் பெரியவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தமிழ்காக்க அழைத்த பாவேந்தரைப் போல் இன்று தமிழுக்குக் குரல் கொடுத்துப் பாட்டு இயற்ற ஆள் இல்லாத ஒரு வெற்றிடம் நிலவுகிறது.

பாவேந்தர் காண நினைத்த தமிழகம் அரைநூற்றாண்டாகியும் இன்னும் காண்பதற்குரிய அறிகுறியே இல்லை. எருசலோம் நகரில் இருந்து வந்த இயேசு நாதருக்கு நம் தமிழ் புரிகிறது. ஆனால் சிதம்பர நடராசருக்குத் தமிழ் புரியவில்லை என்கின்றனர். எனவே வழிபாட்டு மொழிக்குப் போராட்டக் களம் காண வேண்டியுள்ளது. கல்வி மொழிக்காக நீதிமன்றப் படிக்கட்டுகளில் கைகட்டி நிற்க வேண்டியுள்ளது. ஆட்சி மொழிக்காகத் தலைமைச் செயலகத்தில் ஏங்கி நிற்க வேண்டியுள்ளது. இசை மொழிக்குச் சபாக்களில் குரல் கொடுக்க வேண்டியுள்ளது.

இவையயல்லாம் நிறைவேறித் தமிழனும் தமிழும் உலக அரங்கில் முதன்மை பெறும் நாளே பாவேந்தர் விரும்பிய நாள். அந்த நாள் எந்த நாளோ?

(இன்று 29, ஏப்ரல்- பாவேந்தரின் பிறந்தநாள்)

நனி நன்றி : தட்சு தமிழ் http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0429-article-on-bharathi-dasan-by-illangovan.html

தொல்காப்பியப் பதிப்புப் படங்கள்

தமிழின் சிறப்பு உணர்த்தும் நூல்களுள் தொல்காப்பியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கணநூலாகஇதுவிளங்குகிறது. எழுத்ததிகாரம். சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று அதிகாரங்களை உடையது.1610 நூற்பாக்களை உடையது.

இந்நூல் ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதல் 1847 இல் மழவை மகாலிங்கையரவர்களால் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.திருவண்ணாமலை வீரபத்திரையரால் தமது கல்விக்கடல் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது.அதன்பிறகு சாமுவேல் பிள்ளை,சி.வை.தாமோதரம்பிள்ளை,
பவானந்தம்பிள்ளை,புன்னைவனநாதமுதலியார்,கு.சுந்தரமூர்த்தி,தண்டபாணிதேசிகர்,
ஆ.சிவலிங்கனார் உள்ளிட்ட அறிஞர்பெருமக்களால் அவ்வப்பொழுது பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

பழைய பதிப்புகளின் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று இன்று அறிவதில் இடர்ப்பாடுகள் உள்ளன. இயன்றவரை அப்பதிப்புகளைப் படத்துடன் அறிமுகம் செய்வேன்.முதற்கண் சில பதிப்புகளின் படங்ககள் மின்வருடியும், படம்பிடித்தும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலகத்தமிழர்கள் கண்டு களிப்பதுடன கருத்துகள் எழுத என் முயற்சிக்கு உதவியாக இருக்கும்.



1.மழவை மகாலிங்கையர் பதிப்பு(1847,ஆகத்து)


2.சாமுவேல் பிள்ளை பதிப்பு (1858)


3.சாமுவேல் பிள்ளை பதிப்பு (1858)


4.சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பு(1868)


5.இராசகோபாலபிள்ளை பதிப்பு( 1868)


6.சு.கன்னியப்ப முதலியார் பதிப்பு(1868)
நன்றி : 1-6 படங்கள் தொல்காப்பியப் பதிப்புகள்,ச.வே.சு


7.பவானந்தம்பிள்ளை பதிப்பு(1917)


8.பவானந்தம்பிள்ளை பதிப்பு(1917)


9.கா.நமச்சிவாயமுதலியார் பதிப்பு(1922)


10.கா.நமச்சிவாயமுதலியார் பதிப்பு(1922)


11.சி.புன்னைவனநாத முதலியார் பதிப்பு (1922)


12.சி.புன்னைவனநாத முதலியார் பதிப்பு (1922)

புறநானூறு உ.வே.சா. முதற்பதிப்பு - படங்கள்

சங்க இலக்கியமான புறநானூறு உ.வே.சா அவர்களால் 1894 இல் முதன்முதல் பதிப்பிக்கப்பெற்றது.அதன் படிகள் இன்று பார்வைக்குக் கிடைப்பதில்லை.உலகத் தமிழர்களின் பார்வைக்கு முதற்பதிப்பின் படங்கள் சில காட்சிக்கு வைக்கப்படுகின்றன.கண்டு மகிழுங்கள்.முதற் பதிப்புப் பற்றிய விரிந்த கட்டுரை விரைவில் உள்ளிடுவேன்.


முகப்புப் பக்கம்


இரண்டாம் பக்கம்


உ.வே.சா.முன்னுரை


பாடப்பட்டோர் பாட வேறுபாடு


பாடப்பட்டோர் பாட வேறுபாடு


புறநானூறு பொருளடக்கம்


புறநானூறு மூலமும் உரையும்


புறநானூறு மூலமும் உரையும்


பாடல் முதற்குறிப்பு அகராதி


அருஞ்சொல் அகராதி


புறம்.உரையில் இடம்பெறும் சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு அகராதி


சிலம்பு.உரையில் புறம்.பாடலடிகள் இடம்பெறும் இடங்கள்


சிந்தாமணி உரையில் புறம்.பாடலடி இடம்பெறும் இடங்கள்


பிழைத் திருத்தம்

படங்களை எடுத்து ஆள விரும்புவோர் இசைவுபெறுக.இணைப்பு வழங்குக.

தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்

தமிழர்கள் உலகிற்கு வழங்கிய இலக்கியக் கொடைகளுள் முதன்மையானது திருக்குறள் ஆகும்.இத் திருக்குறள் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது.ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறளை, அதன் கருத்துகளை அறிஞர்கள் பலரும் காலந்தோறும் பலவகையில் பயன்படுத்தியுள்ளனர்.

சங்கநூல்களிலும், சிலம்பு, மேகலை,கம்பராமாயணம் போன்ற காப்பியங்களிலும் திருக்குறள் கருத்துகள் பரவலாக ஆளப்பட்டுள்ளன. இடைக்காலத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள், பழந்தமிழ் நூல்களுக்கு உரைவரைந்த உரையாசிரியப் பெருமக்கள் திருக்குறளுக்கும் உரை கண்டு அந்நூலின் பயன்பாட்டுக்கு அரண்செய்தனர்.இவ்வாறு உரை கண்டவர்கள் தம் சமயம் சார்ந்தும், கொள்கை, இலக்கிய, இலக்கண பயிற்சிகளுக்கு அமையவும் உரை வரைந்துள்ளனர்.இவ்வாறு வரையப்பட்ட உரைகளுள் பரிமேலழகரின் உரை அனைவராலும் போற்றப்படுகிறது. சில உரைப்பகுதிகள் அறிஞர் உலகால் தூற்றப்படுகிறது.

பரிமேலழகர் தம் அஃகி அகன்ற அறிவு முழுவதையும் பயன்படுத்தி உரை கண்டிருப்பினும் அவர்தம் வடமொழிச்சார்பு அவருக்குத் தமிழ் அறிஞர் உலகில் எதிர்ப்பைத் தேடித் தந்தது.சிவப்பிரகாசர் உள்ளிட்ட சமயவாணர்கள் பரிமேலழகரின் உரையைக் கண்டித்துள்ளனர். வடமொழிக் கருத்துகளை நீக்கிப் பார்க்கும்பொழுது குன்றின்மேல் இட்ட விளக்காக அவர்தம் உரை விளங்கும்.

ஒருவகையில் பரிமேலழகரின் உரை கற்றவர்களை மகிழ்ச்சி அடையச்செய்தது போலத் தமிழ்ப் பற்றாளர்களையும்,தமிழகத்தில் தோற்றம் பெற்ற திராவிட இயக்க உணர்வாளர்களையும் தன் பக்கம் இழுத்தது. அவ்வுரைக்கு விளக்கமாகவும், மறுப்பாகவும் உரை வரையவும்,திருக்குறளைத் தங்கள் அறிவுஅடையாளம் காட்டும் நூலாகவும் காட்டும் போக்கைத் தமிழகத்தில் உண்டாக்கியது.இதனால் திருக்குறள் தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்களால் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலும்,பிற்பகுதியிலும் புதுப்புது கருத்துகளை உருவாக்கும் களமானது.அக்கருத்து விளக்க உரைகளை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.

பழந்தமிழ்ப்புலவர்களிடம் இருந்த திருக்குறளை எளிய மக்களும் படிக்கும் வகையில் தெளிவுரை வழங்கியவர் அறிஞர் மு.வரதராசனார் ஆவார்.இவர்தம் திருக்குறள் தெளிவுரை கோடிக்கணக்கில் விற்பனை ஆனமை இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.திருக்குறளார் முனிசாமி அவர்கள் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் திருக்குறளை நகைச்சுவையுடன் கொண்டு சேர்த்தவர்.உரை வரைந்தும் பெருமை சேர்த்துள்ளார்.

மு.வ அவர்களின் உரை வெளிவந்த காலகட்டத்தில்(1949) தமிழகத்தில் தமிழ்,திராவிட இயக்க உணர்வு மேம்பட்டிருந்தது.தமிழர்கள் தங்களின் இலக்கியப் பரப்பையும்,இலக்கணப் பெருமையையும் பேசும்பொழுது சங்க நூல்கள்,திருக்குறளை அடையாளப்படுத்தினர். அதிலுலும் திருக்குறளைத் தம் மறையாக நிலைநாட்ட முயன்றனர்.தேசிய இலக்கியமாகவும், உலக இலக்கியமாகவும் அறிஞர்களால் முன்மொழியப்பட்டது. இக் காலகட்டத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் வழியாகத் திருக்குறள் அயல்நாட்டு அறிஞர்களால் அறியப்பட்டிருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழகத்தில் அரசியல்,சமூகம், மொழி, இலக்கிய வளர்ச்சிக்குத் தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், மறைமலையடிகள்,பாவாணர்,பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழறிஞர்களும் பெரும் பங்காற்றியுள்ளனர். தந்தை பெரியாரின் அரசியல், சமூகப் போராட்டங்களால் தமிழக மக்கள் கல்வி,அறிவுநிலைகளில் மேன்மையுறத் தொடங்கினர். சமூக விழிப்புணர்ச்சியுடன் இலக்கிய,கல்விச்சூழலும் பல நிலைகளில் வளரத் தொடங்கின.

காலந்தோறும் உயர் சாதியினரின் கையில் இருந்த இலக்கிய இலக்கண நூல்கள் அனைத்தும் மக்களின் கைக்குக் கிடைத்தன.இதனால் அவரவரும் தத்தம் வாழ்க்கை, அறிவு, கொள்கை வழிப்பட்ட இலக்கியங்களை ஆராய்ந்தனர்.புதுவகை இலக்கண,இலக்கிய உத்திகளை வகுத்தனர்.இதுநாள்வரை கேள்விக்கு உட்படுத்தப்படாமல் இருந்த நூல்கள், கருத்துகள், கொள்கைகள்,விளக்கங்கள் அடித்தட்டு மக்களால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன.கல்வியறிவு கிடைத்ததுடன் அரசியலில் விடுதலைபெற்று விடுதலையாகத் தங்கள் கருத்துகளை எழுதவும் பேசவும் சூழல் வாய்த்ததால் தங்கள் கருத்துகளை உலகிற்கு வெளிப்படுத்தினர்.

அரசியல்,சமூக மாற்றங்களால் மொழி சார்ந்த இயக்கங்களும்,இனம்சார்ந்த இயக்கங்களும் கட்டமைக்கப்பட்டன. மறைமலையடிகளால் உருவாக்கம்பெற்ற தனித்தமிழ் இயக்கம்(1916 அளவில்)பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற அறிஞர்களைத் தனித்தமிழ்க் காப்பு முயற்சிக்குப் பாடுபடத் தூண்டியது.

பாவாணர் தமிழே உலகின் முதன் மொழி எனவும்,மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டமே எனவும்,தமிழிலிருந்தே பிறமொழிகள் தோன்றின எனவும் பல்வேறு இன்னல்களுக்கு இடையே தம் ஆராய்ச்சி முடிவுகளை உறுதிப்படுத்தி வெளியிட்டார். ஆரியமொழியால் தமிழ் தமிழர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதை வெளியிட்ட பிறகு தமிழகத்தில் இதுநாள் வரை மண்டிக்கிடந்த ஆரிய அடிமை உணர்வு ஆட்டம் காணத் தொடங்கியது.தமிழைப் பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் தொடங்கியதால் தமிழ் பண்டைய வளம்பெறத் தொடங்கியது.

வழக்கிலிருந்த பிற சொற்களைத் தமிழ் அறிஞர்கள் எடுத்துரைக்க அதனைத் திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மேடைப்பேச்சில்,எழுத்துரைகளில் பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வகையில் தமிழ் இலக்கணநூல்களில் இலக்கியங்களில் ஆரியக் கருத்துகள் அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டன. இதேபோல் அரசியல் சமூக நிலைகளில் பார்ப்பனர்களின் அதிகாரம், பதவிப் பெரும்பான்மை இருப்பதைக் கண்டு அரசியல் முனையில் விழிப்புணர்வு ஏற்பட்டது. மொழி அடிப்படையிலும்,அரசியல் அடிப்படையிலும் ஆரியத்தை, அதன் கொள்கைகளை, அடிப்படைக் கட்டமைப்பைக் குலைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

தமிழகத் தலைவர்கள் உயர்சாதியினரின் ஆதிக்கம் அரசியல்துறையில் இல்லாமல் செய்தது போல் மொழித்துறையில் வல்ல தமிழறிஞர்களும் திராவிட இயக்கம் சார்ந்தவர்களும் தமிழ் இலக்கியம் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டனர்.கம்பராமாயணம், பாரதம், பகவத்கீதை, பெரியபுராணம் உள்ளிட்ட நூல்களையும் நூல்களின் கருத்துகளையும் எதிர்த்தனர்.

மாற்றுக் கருத்துடைய நூல்களைக் கண்டித்த தந்தை பெரியார் திருக்குறள்,சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களைத் தொடக்கத்தில் எதிர்த்தார்.பின்னர் அதில் உள்ள பிற்போக்கான சிலபகுதிகளை மட்டும் கண்டித்துவிட்டு ஏற்கத் தகுந்த கருத்துகளை ஏற்கலாம் எனக் கருத்துச் சொன்னார். திருக்குறள் மாநாடுகள் நடத்தினார்.1948 இல் திருக்குறள் மாநாடு நடத்தி, ஐவர்குழு அமைத்து(நாவலர் பாரதியார்,புலவர் குழந்தை உள்ளிட்டவர்கள்) பகுத்தறிவு நோக்கில் திருக்குறளுக்கு உரைவரைய வேண்டியதையும் இதன் அடிப்படையில் 25 நாள்களில் புலவர் குழந்தை உரை உருவானதையும் இங்கு நினைவிற்கொள்ளவேண்டும்.

தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருநூல் திருக்குறள் எனும் போக்கு தமிழகத்தில் உருவானதும் திருக்குறளை மூலமாகவும்,உரையாகவும் பலர் பதிப்பித்தனர். அடக்கவிலையிலும், இலவயமாகவும் திருக்குறள் மக்களுக்கு வழங்கப்பட்டன. உரைகள், உரைக்கொத்துகள்,ஆராய்ச்சிக் குறிப்புகள், தெளிவுரை, விளக்கவுரை, பதவுரை, குறிப்புரை எனும் அமைப்பில் திருக்குறள் பல பதிப்புகளைக் கண்டது.ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. ஒலிவட்டுகளிலும், குறுந்தட்டுகளிலும் பதியப் பெற்றுப் பரவின.உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தும் பணியில் முன்னிற்கின்றனர்.

இவ்வாறு அனைவராலும் விரும்பப்படும் நூலாகத் திருக்குறள் மாறியதும் அறிஞர்களின் கடைசி விருப்பம் திருக்குறளுக்கு உரை வரைவது என்னும் கருத்தைத் தமிழகத்தில் உருவாக்கிவிட்டது.சமூகத்தில் தங்கள் பெயர் அனைவருக்கும் அறிமுகமானதும் அவர்கள் செய்யும் முதல் வேலையாகத் திருக்குறள் உரைவரையும் வேலை அமைந்துவிட்டது. திருக்குறளுக்கு எல்லாக் காலத்திலும் விற்பனை உள்ளதால் இதில் அனைவரும் தங்களின் தகுதிகளுக்கு ஏற்பச் செயல்படுகின்றனர்.பாவாணர்,பெருஞ்சித்திரனார் தங்களின் அறிவைப் பயன்படுத்தி இனமீட்புக்கு,மொழி மீட்புக்கு உரைகண்ட நிலைமாறி திருக்குறள்,திருவள்ளுவர் விருதுகளுக்கு இன்றைய உரைவரையும் போக்கையும் தமிழ்ச் சமூகத்தில் காணமுடிகின்றது.

இன்று வெளிவரும் உரைகளைப் பார்க்கும்பொழுது பெரும்பாலான குறட்பாவிற்கு அனைவரும் ஒன்றுபட்ட உரையே கண்டுள்ளனர்(மு.வ.உரையின் மறுபதிப்பாகவே உள்ளன).சில குறட்பாக்களுக்கு மட்டும் உரை காண்பதில் வேறுபடுகின்றனர்.தமிழ்,திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டுள்ள அறிஞர்களின் உரைகளுக்கு இடையிலும் சில தனித்த போக்கினைக் காணமுடிகின்றது.தமிழ் இயக்க உணர்வாளர்கள் கண்டுள்ள உரைகளில் ஆரிய எதிர்ப்பு,மனுமுதலிய கொள்கைகள் எதிர்ப்பு, இவற்றைக் கைக்கொண்ட பரிமேலழகர் எதிர்ப்பு, தமிழ்மரபுகாட்டல் எனும் தன்மைகள் காணப்படுகின்றன.திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் கண்டுள்ள உரைகளில் கடவுள் மறுப்பு, பெண்ணடிமைக் குறிப்புகள், விதி(ஊழ்) மறுப்பு, பார்ப்பன அடையாளம் எதிர்ப்பு உள்ளிட்ட தன்மைகள் காணப்படுகின்றன.

தமிழ்,திராவிட இயக்க உணர்வுடைய அறிஞர்கள் வரைந்துள்ள உரையில் திருவள்ளுவரின் உள்ளம் காட்டும் முயற்சியில் அவர் குறிப்பிடும் இறைவன்,ஊழ் பற்றிய சிந்தனைகளை ஏற்றும் உரை கண்டுள்ள தன்மையைப் பார்க்கமுடிகிறது.பொற்கோ அவர்களின் உரையில் வள்ளுவர் உள்ளத்தை மனத்தில்கொண்டு உரை காணப்பட்டுள்ளது.உரையில் இன்னும் உண்மைப்பொருள் விளங்காத இடங்களைப் பொற்கோ குறிப்பிட்டுச் செல்கின்றார்.இது ஒருவகை உரை வரையும் போக்காக உள்ளது.கலைஞர் உரையில் பகுத்தறிவு கண்கொண்டும், கற்பனைநயம் மிளிரவும் உரை உள்ளது.சில இடங்களில் கலைஞர் திருவள்ளுவர் கருத்துக்கு உடன்பட்டே செல்வதைக் காணமுடிகின்றது.பாவேந்தர் வரைந்த உரை(குயில் இதழில் வள்ளுவர் உள்ளம் என்ற பெயரில் 08.12.1961 -07.02.1961 வரை உரை வரைந்துள்ளார்.83 குறட்பாக்களுக்கு இவர்தம் உரை உள்ளது.)திருக்குறளின் உண்மை வடிவை மாற்றும் வகையில் அவர்தம் தமிழ்ப்பற்று மிகுந்து விடுகின்றது.

திருக்குறளுக்கு உரைகாண வேண்டிய முறைகள்

திருக்குறளின் குறட்பாக்கள் தவிர அதனை இயற்றிய திருவள்ளுவர் பற்றிய மெய்யான சான்றுகள் நமக்குக் குறைவாகவே கிடைக்கின்றன.எனவே நாம் வெளியிடும் கருத்துகளுக்குச் சான்றுகள் இல்லாததால் அறிஞர் உலகம் அவற்றை ஏற்கத் தயங்குகின்றது.எனவே நம் கொள்கை,நம் உணர்வு,நம் விருப்பம் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு திருவள்ளுவர் காலச் சமூகத்தையும்,காலப் பழைமையையும் மனதில்கொண்டே உரை வரையவேண்டும்.விளக்கம் தரவேண்டும்.

அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுவது போல் திருக்குறளுக்குத் திருக்குறளிலேயே பல இடங்களிலில் உரை உள்ளதை முதற்கண் மனத்தில் கொள்ளவேண்டும். அவர்காலத்தில் இல்லாத புராணச்செய்திகள் பிற்காலத்தில் எற்பட்டுள்ளன.பிற்காலச் செய்திகளின் அடிப்படையில் முற்கால வரலாற்றைத் திரிக்கக்கூடாது (ஐந்தவித்த இந்திரன் கதை).திருக்குறளில் ஆளப்பட்டுள்ள பல கருத்துகள்,சொற்கள் இன்றைய நிலையில் வைத்துப் பொருள் காணப்படுவதால் பல குழப்பங்களுக்கு வழி வகுக்கின்றன.திருக்குறளை உலகம் முழுவதும் பரப்பும்பணியில் திருவள்ளுவர் தவச்சாலை கண்டுள்ள இரா.இளங்குமரனாரின் வாழ்வியலுரையில் திருக்குறளுக்குப் பல இடங்களுக்குப் பொருத்தமான உரை கண்டுள்ளார்.

திருக்குறளுக்கு உரை காணும் அறிஞர்கள் திருக்குறளுக்குப் புது விளக்கம் தருவதுடன் அதிகாரத் தலைப்பு மாற்றம் செய்துள்ளமையும் காண முடிகின்றது.அதிகாரத் தலைப்புகள் தங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவராததால் மாற்றிய முறையை (கலைஞர். பாவேந்தர்)க்காணும் அதே நிலையில் இளங்குமரனார் இறைவணக்கம் எனத் தலைப்பு இட்டுள்ளதற்குக் காரணம் காட்டுகிறார்.திருக்குறளில் எந்த இடத்தும் கடவுள் என்னும் சொல்வரவில்லை எனவும் வாழ்த்து என்னும் சொல் எவ்விடத்தும் இல்லை எனவும் கூறி இறைவணக்கம் எனப் பெயரிடுகின்றார்.அதுபோலவே புதல்வரைப் பெறுதல்(7) என்னும் அதிகாரத் தலைப்பை மாற்றும்பொழுது இத்தொடர் நூலின் எவ்விடத்தும் இல்லை எனவும் மக்கட்பேறு என உள்ளதையும் குறிப்பிட்டு மக்கட்பேறு எனத் தலைப்பிட்டதைக் குறிப்பிடுகிறார்.

இரா.இளங்குமரனாரின் உரைக் குறிப்புகளில் அரிய விளக்கம் சில உள்ளன.திருக்குறள் குறட்பாவில் வரும் இறை என்னும் சொல் சாதி,மத உணர்வுகளைத் தூண்டும் நோக்குடையது அன்று.மெய்யுணர்தல்,அவா அறுத்தல்,பேரா இயற்கையாம் செம்பொருளைக் கண்டுகொள்ள வழி வகுப்பது அது என விளக்குகிறார்(தந்தை பெரியாரும் இதே கருத்தினர்.காண்க : பெரியார் சிந்தனைகள்,தொகுதி.2,பக்கம்1260-65)

கடவுள் வணக்கத்திலும் உருவ வணக்கம் இல்லை எனவும்,1330 குறட்பாக்களில் ஓர் இடத்தில்கூட கடவுள் என்ற சொல் இல்லை எனவும்,கடவுள் பெயரில் நடைபெற்ற உயிர்க் கொலையைத் திருவள்ளுவர் கண்டிக்கிறார் எனவும் பெரியார் குறிப்பிடுகின்றார் (மேலது). மேலும் அந்தக் காலத்தில் இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் எனவும் இன்றைய நிலையில் திராவிடர்க்கு ஒழுக்க நூல் குறள்தான் எனவும் பெரியார் குறிப்பிட்டுள்ளார்(மேலது).

இரா.இளங்குமரனார் திருக்குறளில் பொருள் காண அறிஞர்களுக்குக் குழ